அர்ச். தோமையார் வரலாறு - தீமைக்கு நன்மை

அரசன் கேரளப்பெருமாள் சிலைகளைத் தொழுவத்தில் பக்தி உள்ளவன். அவன் குடிமக்களுள் பெரும்பாலோர் அப்போஸ்தலர் போதிக்கும் அரிய வேதத்தில் சேர விரும்பினாலும், அரசனுக்குப் பயந்து பின் வாங்கினார்கள். இது தோமையாருக்குக் கவலையை உண்டாக்கியது. இது ஒரு பக்கமிருக்க, மறுபக்கத்தில் மலையாக்கல் என்னும் இளைஞன் கிறிஸ்தவன் ஆனான் என்ற செய்தியைக் கேட்ட பிராமணர்கள் அவனைப் பல விதத்தில் துன்புறுத்த ஆரம்பித்தார்கள். 

ஒரு நாள் தோமையார் கடவுளைப் பிராத்தித்திருக்கையில் அவ்வழியே சென்ற பிராமணன் ஒருவன் அவரை ஒங்கி அடித்தான், தோமையார் அவனை ஏறெடுத்துப் பார்த்து, "மனிதா நீ என்ன செய்யத் துணிந்தாய்? என்னை அடித்த உனது கையை சீக்கிரம் இழந்து போவாய்" என்று பரிதாபத்துடன் பகன்றார். பின்னர், "சர்வ வல்லபக் கர்த்தாவே! அவனது குற்றத்தைப் பொறுத்து, அவன் ஆன்மாவை இரட்சியும் " என்று செபித்தார்.

சில நாள்களுக்குப்பின், பைத்தியங் கொண்ட ஒரு நாய் அப்பிராமணனை எதிர்த்து அப்போஸ்தலரை அடித்த அவனது கையைக் கடித்துக் கிழித்துக் குதறி விட்டது. இதைக்கேட்ட தோமையார் இரக்கத்துடன் அவனது இல்லத்திற்கு விரைந்து சென்றார். நாயால் கடியுண்ட அம் மனிதன் கடும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் கையானது வெட்டுண்டு கிடந்தது. 

அப்போஸ்தலர், அன்போடு அவனை நோக்கி, "நீ இயேசுவை நம்பி அவருடைய உதவியைக் கேட்பாயாகில் உன் கை திரும்பவும் உனக்குக் கொடுக்கப்படும்" என்றார் "மெய்யாகவே உம் கடவுளை நான் நம்புகிறேன். அவரே வாழ்வளிக்கும் கடவுள்; சர்வவல்லபமும், நித்தியமும் அவருடையதே என் குற்றத்தை மன்னிக்க எனக்காக வேண்டிக்கொள்ளும் " என்று கெஞ்சினான். 

உடனே அப்போஸ்தலர், வெட்டுண்டு போன அவன் கையை எடுத்து, அதனுடைய இடத்தில் வைத்து "என் ஆண்டவராகிய இயேசுவே! இம் மக்கள் உம்மையே தங்கள் கடவுளாகவும், ஆண்டவராகவும் நம்பும்படி உமது வல்லமையைக் காட்டியருளும்" என்று உச்சரித்துக்கொண்டே அந்தக் கையின் மேல் சிலுவை அடையாளம் இட்டு மந்திரித்தார். உடனே கை திரும்பவும் புயத்தோடு சேர்ந்து கொண்டது. காயம் முற்றிலும் மாறி விட்டது தழும்பு முதலாய் இல்லாது சரிவரக் குணமாயிற்று. 

இந்த அற்புதம் ஊரெங்கும் பரவியது. அரசன் கேரளப்பெருமாள் இதைக்கேட்டதும் . தோமையாரைத் தன்னிடம் வரவழைத்து, அரண்மனையில் இருக்கச்செய்தான். அவர் போதிக்கும் அரிய கோட்பாடுகளையும், அவரது புண்ணிய வாழ்வையும் நன்கு உணர்ந்த அரசன்; அவர் மீது அன்பும், இரக்கமும் கொண்டு, சுவிசேஷத்தைத் தனது நாட்டில் எப்பாகத்திலும் பிரசங்கிக்க அனுமதித்தான். கோவில்கள் கட்டப் பொருளும் உதவியும் அளித்தான்.

அரசன் அளித்த பொருள் உதவியால், பிராமணர்கள் குடியிருந்த முக்கிய ஊர்களாகிய கரங்கனூர், கொல்லம், க்ஷாயல், நீராணம், கொக்கமங்கலம், பாரூர், பாலையூர் என்னும் இடங்களில் தோமையார் கோவில்கள் கட்டினார்.

அப்போஸ்தலரிடம் பலர் நாள் தவறாது வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் பொறுமையோடும் அன்போடும் விவேகத்தோடும் பரிசுத்த வேதத்தைப் பிரியமாய் ஊட்டி, அவர்களை உண்மையான கடவுள் வழியில் சேர்த்தார். நாள் தோறும் பகல் நேரத்தைக் கிறிஸ்தவர்களுக்கு வேதம் போதிப்பதிலும், இரவில் ஒரு பாகத்தைச் செபத்தியானம் செய்வதிலும் செலவழித்து வந்தார். மக்கள் அவரை மிகவும் நேசித்து அவரிடம் முழு நம்பிக்கை வைத்தார்கள். அவரிடம் எவ்வளவு அன்பு கொண்டிருந்தார்கள் என்றால் அவரை 'முத்தப்பன்' அதாவது "பாட்டனார்" என்று அழைத்து வந்தார்கள்.