இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எல்லோருக்கும் முடிவு வருகிறது!

ஒரே வார்த்தையில் கூறுவதானால், எல்லோருக்கும் முடிவு வருகிறது. அந்த முடிவோடு கேந்திரமான அந்தத் தருணமும் வருகிறது. நமக்காகக் காத்திருப்பது நித்தியப் பேரின்பமா, அல்லது நித்திய சாபமா அந்தத் தருணத்தையே சார்ந்திருக்கிறது. ஓ, எவ்வளவு பயங்கரத்துக்குரிய நேரம் அது! ஓ! அந்த கணத்தைப் பற்றியும், தங்கள் தெய்வீக நடுவருக்கு அப்போது தங்கள் முழு வாழ்வின் கணக்கை ஒப்புவிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் ஒவ்வொருவரும் அடிக்கடி சிந்திப்பது எவ்வளவு நலம் பயப்பதாக இருக்கிறது! ""அவர்கள் ஞானத்தை அடைவது எப்போது? அவர்களுக்கு எப்போது அறிவு உண்டாகும்? தங்கள் இறுதிக் கதியை அடையத் தேவையானதை அவர்கள் எப்போது செய்வார்கள்?'' (உபா.32:29). உண்மையில், அப்போது அவர்கள் செல்வங்களைக் குவிப்பதில் ஈடுபட மாட்டார்கள், இந்த அழியக்கூடிய உலகில் பெரியவர்களாக அவர்கள் உழைக்கவும் மாட்டார்கள்; புனிதர்களாவது எப்படியென்றும், ஒருபோதும் முடியாத அந்த வாழ்வில் பெரியவர்களாக இருப்பது எப்படியென்றும் அவர்கள் சிந்திப்பார்கள்.

ஆகவே, நம்மிடம் விசுவாசமிருந்தால், மரணமும், ஒரு நடுத் தீர்வையும், ஒரு நித்தியமும் நமக்காகக் காத்திருக்கின்றன என்பதை விசுவசிப்போம்; கடவுளுக்காக மட்டுமே வாழ்வதற்காக நம் எஞ்சிய வாழ்வு முழுவதும் உழைப்போம். ஆகவே, இந்தப் பூமியை விட்டு விரைவில் நாம் புறப்பட வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொண்டவர்களாக, இந்த பூமியில் திருயாத்ரீகர்களைப் போல வாழ்வதில் நாம் அக்கறை கொள்வோமாக. மேலும், இவ்வாழ்வின் எல்லா விவகாரங்களிலும், மரண நேரத்தில் எப்படி நடந்து கொள்வோமோ, அதே விதமாக எப்போதும் நடந்து கொள்வதில் கவனமாயிருப்போமாக. பூமியின் மீதுள்ள காரியங்கள் (பொருட்கள்) அனைத்தும் ஒன்றில் நம்மை விட்டுச் சென்று விடுகின்றன, அல்லது நாம் அவற்றை விட்டுப் பிரிந்து செல்கிறோம். ""பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். அங்கே அந்தும் துருவும் அரிக்கிறதுமில்லை. திருடர் அங்கே கன்னமிட்டுத் திருடுகிறதுமில்லை'' (மத்.6:20) என்ற சேசுகிறீஸ்துநாதரின் வார்த்தைகளை நாம் கேட்போமாக. நம்மைத் திருப்திப்படுத்த முடியாதவையும், விரைவாக அழிந்து போகிறவையுமான உலகப் பொக்கிஷங்களை நிந்தித்து அகற்றுவோமாக. நம்மை மகிழ்ச்சியானவர்களாக ஆக்குபவையும், ஒருபோதும் முடியாதவையுமான பரலோகப் பொக்கிஷங்களை சம்பாதித்துக் கொள்வோமாக.

ஆண்டவரே, நிர்ப்பாக்கிய மனிதன் நான், இவ்வுலக நன்மைகளுக்காக, அளவற்ற நன்மைத்தனமாகிய உம்மிடமிருந்து விலகிச் சென்றேன்! புகழ் பெறவும், இவ்வுலகில் பெரும் செல்வத்தை சம்பாதிக்கவும் மட்டுமே உழைத்ததில் என் மூடத்தனத்தை நான் காண்கிறேன். என் உண்மையான மகிழ்சச்சி எது என்பதை நான் காண்கிறேன்: இப்போது முதல் உம்மை நேசிப்பதும், எல்லாவற்றிலும் உமது திருவுளத்தை நிறைவேற்றுவதுமே அது. ஓ என் சேசுவே, ஆதாயத்தின் மீதான ஆசையை என்னிடமிருந்து எடுத்து விடும்; அசட்டை செய்யப்படுவதும், தாழ்மையுள்ளதுமான ஒரு வாழ்வை நான் நேசிக்கச் செய்யும். உம்மை வேதனைப்படுத்தும் எல்லாவற்றிலும் என்னை நான் மறுதலிக்க எனக்கு பலம் தாரும். அமைதியான மனதுடன் நோய்களையும், கலாபனைகளையும், கைவிடப்படுதல்களையும், நீர் எனக்கு அனுப்பும் எல்லாச் சிலுவைகளையும் நான் ஏற்று அரவணைத்துக் கொள்ளச் செய்யும். ஓ, தேவரீர் எனக்காக மரித்தது போலவே நானும் எல்லோராலும் கைவிடப்பட்டு, உம் அன்பிற்காக இறக்க முடிந்தால் எனக்கு எவ்வளவோ நலமாயிருக்கும்! பரிசுத்த கன்னிகையே, உங்கள் திருமகனைப் பக்தியார்வத்தோடு நேசிப்பதாகிய என் உண்மையான மகிழ்ச்சியை நான் கண்டடைய உங்கள் ஜெபங்கள் எனக்கு உதவ முடியும். ஓ, எனக்காக ஜெபியுங்கள்; உங்களில் நான் என் நம்பிக்கையை வைக்கிறேன்.