இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுநாதரின் திருப்பாடுகளின் மீதான தியானம்

நம் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளைப் பற்றிய தியானம் தேவசிநேகத்தை சம்பாதித்துக் கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சேசுநாதர் இவ்வுலகில் மிகக் கொஞ்சமாகவே நேசிக்கப்படுகிறார் என்ற உண்மை, குறைந்தபட்சம் அவ்வப்போதாவது, அவர் எவ்வளவு அதிகமாக நமக்காகத் துன்பப் பட்டிருக்கிறார் என்பதையும் அவர் எத்தகைய துன்பங்களை நமக்காக அனுபவித்தார் என்பதையும் தியானிப்பதிலிருந்து அல்ல, மாறாக, மனுக்குலத்தின் அசட்டைத்தனத்திலிருந்தும், அவர்களுடைய நன்றியற்றதனத்திலும் இருந்தே எழுகிறது. "கடவுள் நமக்காக இறந்தார் என்பது மனுக்குலத்திற்கு மடமையாகத் தோன்றுகிறது'' என்று அர்ச். கிரகோரியார் குறிப்பிடுகிறார். பரிதாபத்திற்குரிய அடிமைகளாகிய நம்மை மீட்கும்படி மரணத்தைத் தழுவிக்கொள்ள சர்வேசுரன் சித்தமாயிருந்தார் என்பது மடமையாகத் தோன்றுகிறது; ஆயினும், அவர் அதைத்தான் செய்தார் என்று நம் விசுவாசம் கற்பிக்கிறது. "அவர் நம்மை நேசித்து, நமக்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தார்'' (எபே.5:2). தமது இரத்தத்தைக் கொண்டு நம் பாவங்களைக் கழுவும்படி, தமது இரத்தத்தை முழுவதுமாகச் சிந்த அவர் சித்தங்கொண்டார்: ""இவர் நம்மைச் சிநேகித்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களினின்று நம்மைக் கழுவினார்'' (காட்சி.1:5).

"என் தேவனே, நீர் எவ்வளவு அதிகமாக என்னை நேசித்தீர் என்றால், என் மீதுள்ள உமது அன்பின் வழியாக, உம்மையே நீர் வெறுக்கும் அளவுக்குச் சென்று விட்டவர் போலத் தோன்றுகிறீர்'' என்று அர்ச். பொனவெந்தூர் கூறுகிறார். மேலும், தேவ நற்கருணையில் நம் உணவாக வேண்டும் என்றும் அவர் சித்தங்கொண்டார். இங்கே, தேவதூதர்களுக்கு ஒப்பான புனிதராகிய அர்ச். தாமஸ் அக்குயினாஸ், மகா பரிசுத்த தேவத் திரவிய அனுமானத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுள் நமது ஊழியர் என்பது போலவும், நாம் ஒவ்வொருவரும் அவருடைய கடவுள் என்பது போலவும் அவர் நமக்காகத் தம்மையே தாழ்த்திக் கொண்டார் என்று கூறுகிறார்: ""அவர் மனிதர்களின் ஊழியர் என்பது போலவும், அவர்கள் ஒவ்வொருவரும் கடவுளின் கடவுள் என்பது போலவும்!'' இதன் காரணமாகவே, ""கிறீஸ்துநாதருடைய சிநேகம் நம்மை நெருக்குகிறது'' (2 கொரி.5:14) என்று அப்போஸ்தலர் கூறுகிறார். கிறீஸ்துநாதர் நம்மீது கொண்டுள்ள அன்பு நம்மை நெருக்குகிறது, ஒருவிதத்தில் அவரை நேசிக்கும்படி அது நம்மைக் கட்டாயப்படுத்துகிறது என்று அர்ச். சின்னப்பர் கூறுகிறார். ஓ என் தேவனே, மனிதர்கள் ஏதாவது ஒரு சிருஷ்டியின் மீது பாசம் கொண்டு விட்டால், அதன் மீது தங்களுக்குள்ள அன்பிற்காக அவர்கள் செய்யாமல் இருப்பது என்னவுண்டு? ஆனால், இதற்கும் அப்பால், கடவுளாகவே இருப்பவர் மீது, அளவற்ற நன்மைத்தனமும், அழகுள்ள உள்ளவர் மீது, நம் ஒவ்வொருவருக்காகவும் சிலுவையில் மரிக்கும் அளவுக்கு அவர்களை நேசித்த அவர் மீது, அவர்களுக்கு உள்ள அன்பு எவ்வளவு குறைவானதாயிருக்கிறது! ஆ, ""நானோ நம் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துவின் சிலுவையிலன்றி வேறொன்றிலும் மேன்மை பாராட்டாதிருப்பேனாக'' என்று கூறிய அப்போஸ்தலரின் முன்மாதிரிகையை நாம் பின்செல்வோமாக! புனிதரான அப்போஸ்தலர் இப்படிப் பேசினார்; என் மீதுள்ள அன்பினால் தமது திரு இரத்தத்தையும், உயிரையும் பலியாக்கும் ஒரு கடவுளைக் கொண்டிருப்பதை விட உலகத்தில் நான் பெற்றுக்கொள்வேன் என்று நம்பக் கூடிய மேலான மகிமை எது?

விசுவாசமுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டியது இதுதான். ஒருவனிடம் விசுவாசம் இருக்கிறது என்றால், கடவுளைத் தவிர வேறு எதையும் நேசிப்பது அவனுக்கு எப்படி சாத்தியமாக இருக்கும்? ஓ என் தேவனே! மூன்று ஆணிகளில், தமது கைகளிலும், பாதங்களிலும் உள்ள காயங்களில் தொங்குபவரும், முழுமையான வேதனையில், நம்மீதுள்ள அன்பிற்காக மரிப்பவருமாகிய சிலுவையில் அறையுண்ட சேசுவைக் கண்டுதியானிக்கிற ஓர் ஆன்மா, தனது முழு வலிமையோடும் அவரை நேசிக்கும்படி தான் இழுக்கப் படுவதாகவும், நெருக்கப்படுவதாகவும் உணராமல் எப்படி இருக்க முடியும்?

ஓர் ஆன்மா தேவசிநேகத்தில் எவ்வளவு குளிர்ந்ததாகத் தன்னால் இருக்க முடியுமோ, அவ்வளவு குளிர்ந்ததாக இருக்கட்டும்; அதனிடம் விசுவாசம் இருந்தால், சேசுகிறீஸ்துவை நேசிக்கும்படி உந்தப்படுவதாக உணராமல் இருப்பது அதற்கு எப்படி சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. பரிசுத்த வேதாகமத்தை மேலோட்டமாக தியானித்தாலும் கூட, தமது திருப்பாடுகளிலும், தேவநற்கருணையிலும் அவர் நமக்கு வெளிப்படுத்திய அன்பை அது நமக்கு வெளிப்படுத்துகிறது. அவரது திருப்பாடுகளைப் பொறுத்த வரை, ""மெய்யாகவே அவர் நமது பலவீனத்தைத் தாமே எடுத்துக் கொண்டு, நமது வேதனைகளைத் தாமே சுமந்து கொண்டார்'' என்று இசையாஸ் ஆகமத்தில் (53:4) நாம் வாசிக்கிறோம். அடுத்த வாக்கியம், ""நமது பாவங்களுக்காக அவர் காயப்பட்டார்; நமது அக்கிரமங்களுக்காக அவர் நொறுக்கப்பட்டார்'' என்கிறது. இவ்வாறு, வேதனைகளும், துன்பங்களுக்கும் யாருக்குத் தகுதியானவையாக இருந்ததோ, அந்தப் பாவிகளை அவற்றிலிருந்து விடுவிக்கும்படியாக, அந்த வேதனைகளையும், துன்பங்களையும் அவர் தமது சொந்த ஆளுமையில் அனுபவிக்க சேசுநாதர் சித்தங் கொண்டார். நம்மீது தமக்குள்ள அன்பிற்காக அன்றி, வேறு எதற்காக அவர் இதைச் செய்தார்? அர்ச். சின்னப்பர் கூறுவது போல, "கிறீஸ்துநாதர் நம்மை நேசித்து, நமக்காகத் தம்மையே கையளித்தார்'' (எபே.5:2). ""இவர் நம்மை நேசித்து, தமது இரத்தத்தில் நம்முடைய பாவங்களைக் கழுவினார்'' (காட்சி.1:5) என்று அர்ச். அருளப்பர் எழுதுகிறார். திவ்ய நற்கருணையாகிய தேவத்திரவிய அனுமானத்தைப் பொறுத்த வரை, அதைத் தாம் ஏற்படுத்தியபோது, ""இதை வாங்கிப் புசியுங்கள், இது என் சரீரமாயிருக்கிறது'' (1 கொரி.11:24) என்று சொன்னவர் சேசுநாதர்தான். மற்றொரு வேதாகமப் பகுதியில்:""என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னில் வசிக்கிறான், நானும் அவனில் வசிக்கிறேன்'' (அரு.6:57) என்று அவர் சொல்கிறார். விசுவாசத்தைக் கொண்டிருக்க எவனும் இதை வாசித்து விட்டு, தனது மீட்பரை நேசிக்கும்படி நெருக்கப்படாமல் எப்படி இருக்க முடியும்? அவன் மீது தமக்குள்ள அன்பின் காரணமாகத் தம் இரத்தத்தையும், தம் உயிரையுமே பலியாக்கிய பிறகு, தமது திருச்சரீரம் அவனுடைய ஆத்துமத்திற்கு உணவாகவும், திவ்விய நன்மையில் அவனைத் தம்மோடு முழுமையாக இணைக்கும் வழியாகவும் இருக்கும்படியாக, பீடத்தின் தேவத்திரவிய அனுமானத்தில் தமது சொந்த சரீரத்தை அவனுக்கு விட்டுச் சென்றவரை நேசியாதிருக்க அவனால் எப்படி முடியும்?அனுமானத்தில் தமது சொந்த சரீரத்தை அவனுக்கு விட்டுச் சென்றவரை நேசியாதிருக்க அவனால் எப்படி முடியும்?

சேசுவின் திருப்பாடுகளில் மேலும் ஒரு சுருக்கமான சிந்தனையை நாம் இங்கே சேர்க்கலாம். அவர் மூன்று ஆணிகளால் துளைக்கப்பட்டவராகத் தம்மை நமக்குக் காட்டுகிறார். அந்த ஒவ்வொரு துளையினின்றும் திரு இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. கடும் மரண வேதனையால் அவர் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார். இத்தகைய இரங்கத்தக்க நிலையில் சேசுநாதர் ஏன் தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார்? ஒருவேளை நாம் அவர் மீது தயவிரக்கம் கொள்ள வேண்டும் என்பதற்காகவா? இல்லை. நம் தயவிரக்கத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதை விட அதிகமாக, நம் நேசத்திற்குரியவராக ஆக வேண்டும் என்பதற்காகவே அவர் இவ்வளவு பரிதாபத்திற்குரிய நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்கிறார். நம்மீது அவர் கொண்டுள்ள அன்பு நித்தியமானது என்று நாம் அறியச் செய்வதே கூட, நம் அன்பைப் பெறப் போதுமான நோக்கமாக இருந்திருக்க வேண்டும்: ""முடிவில்லாத நேசத்தால் உன்னை நாம் சிநேகித்திருக்கிறோம்'' (எரே.31:3). ஆனால் நமது வெதுவெதுப்பான தன்மைக்கு இது போதாது என்று கண்டு, நமதாண்டவர், தமது ஆசைகளின்படி நாம் அவரை நேசிக்கும்படி நம்மைத் தூண்டுவதற்காக, உண்மையாகவே தமது அன்பிற்கு ஒரு நடைமுறை செயல்விளக்கம் தர அவர் திருவுளம் கொண்டார்: அவர் காயங்களால் மூடப்பட்டவராகவும், நம்மீதுள்ள அன்பிற்காகக் கொடிய வேதனையில் மரிப்பவராகவும் தம்மை நமக்குக் காட்டுகிறார். இவ்வாறு தமது துன்பங்களின் வழியாக, அவர் நம்மீது கொண்டுள்ள அன்பின் பிரமாண்டத்தையும், கனிவையும் நாம் புரிந்துகொள்ளச் செய்ய அவர் விரும்புகிறார்: ""சேசுநாதர் நம்மைச் சிநேகித்து, நமக்காகத் தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்'' (எபே.5:2).