இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருச்செபமாலையின் இராக்கினியே!

இஸ்ராயேல் படைவீரர்களிடமிருந்து தன்னை நோக்கி ஒடிவந்த சிறுவனைக் கண்டு பிலிஸ்தீயனான கோலியாத் பெரு நகை நகைத்தான்; சிறுவன் கையில் பிடித்திருந்த தடியையும், கவணையும் பார்த்துக் கோபமடைந்து: “ஓ! சிறுவனே, என்னை நாயென்று நினைத்தா தடியுடன் வருகிறாய்?” என்று இடி இடிப்பது போன்று இரைந்து வாயில் வந்தபடி சிறுவனைச் சபித்தான். 

“உன்னைக் கிழித்து உன் உடலைப் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாகக் கொடுக்கிறேன் பார்” என்று ஏளனமும் செய்தான். அதற்கு சிறுவன் தாவீது, “நீ சகல ஆயுதபாணியாக என்னை எதிர்க்க வருகிறாய்; நானோ இஸ்ராயேலரின் தேவன் பேரால் உன்னை அழிக்க வருகிறேன்” என்று வீரமொழி கூறினான். இம்மொழி கேட்டு அடிபட்ட நாகம் போல் சீறியெழுந்து தாவீதை நோக்கி விரைந்து வந்தான் கோலியாத். 

உடனே தாவீது தன் கவணில் ஒரு கல் வைத்து, அரக்கனின் நெற்றிக்குக் குறிவைத்துக் கவணைச் சுற்றிவிட, வைத்த குறி தவறாது கல் அரக்கனின் நெற்றியைத் துளைக்க அவன் தட்டுத் தடுமாறி வெட்டுண்ட மரம்போல் தரையில் சாய்ந்தான். அக்கணமே தாவீது குதித்தோடி அரக்கனின் மீது ஏறி அவனுடைய வாளை உருவி அவன் தலையை வெட்டினான். பிலிஸ்தியர் திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர். இஸ்ராயேல் வீரரோ எதிரிகளைப் பின்தொடர்ந்து அவர்களை வெட்டி வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஓர் ஆடு மேய்க்கும் சிறுவனின் கவணின் சக்தியை நினைக்க ஆச்சரியமாக இருக்கின்றது! இக்கவண் கல்லை விடவும், சகல போர்க் கருவிகளை விடவும், ஏன்--அணுகுண்டை விடவுமே சிறந்த ஆயுதம் நமக்குண்டு. திருச்செபமாலையே இவ்வாயுதம். தேவனின் தாயே இதை நமக்களித்திருப்பதால், இதன் வல்லமைக்கு அளவுண்டோ? இதன் முன் நரகக் கூளிகளும் நடுநடுங்குகின்ற பொழுது இவ்வுலக விரோதிகள் எம்மாத்திரம்? 

வானத்திலும் பூமியிலும் நம் மாதாவுக்கு அதிகாரமுண்டு என்பதற்கு ஒப்பற்ற சான்று திருச்செபமாலையின் சக்தியே. ஜெபமாலைப் பக்தியின் முக்கியத்தை அறியவும், நமது பக்தியை அதிகரிக்கவும் இப்பக்தியின் துவக்கத்தையும் பாப்புமார்களும், அர்ச்சியசிஷ்டவர்களும் இப்பக்தியைப் பற்றிக் கூறியிருப்பவைகளையும், தேவதாயே பல காட்சிகளில் வெளியிட்டுள்ளவற்றையும் நாம் சுருக்கமாக இவ்விடம் கூறுவோம்.

ஜெபமாலையின் வரலாறு

திருச்சபை சரித்திரத்திலேயே மிக வருந்தத்தக்க காலம் 13-ம் நூற்றாண்டாகும். அந்தச் சமயம், முக்கியமாய் பிரான்ஸ் தேசத்திலும், இஸ்பானியா நாட்டின் ஒரு பாகத்திலும் நல்லொழுக்கம் தேவ விசுவாசம் வெகுவாய்ப் பலங்குன்றவே, மதச் சிந்தனை, வேதப் பற்று ஏறக்குறைய அறவே சிதைந்து ஒழிந்தது என்கலாம். இதற்குக் காரணம், “ஆல்பிஜென்ஸஸ்” என்ற பிரிவினைக்காரராவார். இவர்களால் கெட்டழிந்த ஆத்துமங்கள் ஏராளம்.

இவையனைத்தும் கண்ணுற்ற அர்ச். சாமிநாதர் சொல்லொண்ணா மனவருத்தம் கொண்டார். ஒருநாள் அவர் “த லா பூயில்” என்ற கோவிலிலுள்ள தேவமாதாவின் சுரூபத்திற்கு முன் முழந்தாளிலிருந்து, “மாதாவே, ஆபத்தான அபத்தத்தில் அமிழ்ந்திருக்கும் கிறீஸ்தவர்களுக்குச் சகாயமாக வாரும்” என்று அபயமிட்டார். தன் தாசனின் அபயக் குரலுக்கு இரங்கி கன்னித் தாயார் ஜெபமாலையைக் கையில் பிடித்தவர்களாய் அவருக்குக் காட்சியளித்தார்கள்; அதை ஜெபிக்கும் விதத்தையும் அவருக்குக் கற்பித்தார்கள். மேலும், “நீ கிறீஸ்தவர்களுக்கு இச்செபத்தை வெளிப்படுத்து; இதன் வல்லமையால் வேத விரோதிகளான பிரிவினைக்காரர் தோல்வியுறுவர்; பாவிகள் மனந்திரும்புவர்” என்று கூறி விட்டு மாதா மறைந்தார்கள். இந்தப் புதிய ஆயுதத்தின் உதவியால் அன்றையவேத விரோதிகள் மத்தியில் அர்ச். சுவாமிநாதர் செய்த முயற்சிகள் பலனளித்தன. அநேக மாயிரம் பிரிவினைக்காரர் சத்திய திருச்சபையை மறுபடியும் தழுவினர்.

ஜெபமாலைப் பக்தி அன்றுமுதல் காட்டுத் தீயென எட்டுத் திசையிலும் பரவிற்று. ஜெபமாலைப் பக்தியினால் கிடைத்த வெற்றிகளிலெல்லாம் மிகப் பெரியது லெப்பான்றோ (1571) வெற்றியாகும். இவ்வரலாற்றை “கிறீஸ்தவர்களுடைய சகாயமே” என்ற தலைப்பின்கீழ் விவரித்துள்ளோம்.

ஜெபமாலையும் பாப்புமார்களும்

பரிசுத்த பாப்பரசர்களில் பலர் திருச் செபமாலைப் பக்தியைப் பாராட்டிப் பேசியுள்ளனர்; அநேக பலன்களும் அளித்துள்ளனர். 7-வது உர்பன் என்ற பாப்பானவர் ஜெபமாலை “கிறீஸ்தவ மதப் பிரசாரம்” என்றும், “வேதப் பரம்புதலின் எத்தனம்” என்றும் பகர்கிறார். 5-ம் பத்திநாதர் “அபத்தங்களின் இருளை அகற்றும் வெளிச்சம், பதிதப் புரட்டுகளை வெட்டும் வாள்” என்று கூறுகிறார். 8-ம் கிளமென்ட் “விசுவாசிகளைக் காப்பாற்றும் பாது காவல்” என்று கூறுகிறார். “தேவகோபத்தை அமர்த்தும் அரிய சாதனம், சமாதானத்தின் சின்னம், நம்பிக்கையின் ஆதாரம், பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் உறவு ஏற்படுத்தும் கருவி, வானிலிருந்து வந்த கேடயம், தேவ இரகசிய பொக்கிஷம்... ரோஜா மாலை” என்று 8-ம் கிரகோரியார் அணியணியாய் புகழ்மாரி பொழிகிறார். 5-ம் சின்னப்பர், “புதுமை செய்யும் ஜெபம், நல்லோர் நிலை நிற்கவும், பாவிகள் புத்துயிர் பெறவும் பேருதவியா யிருக்கும் சர்வ வரப்பிரசாதப் பொக்கிஷம் ஜெபமாலை” என்றுரைக்கிறார்.

ஜெபமாலைப் பக்திக்குப் புகழ்மாலை சூட்டிய பாப்பரசர்களில் முக்கியமானவர் ஒருவர் உண்டு. அவர்தான் “ஜெபமாலையின் பாப்பரசர்” என்று அழைக்கப்படும் 13-ம் சிங்கராயர், ஜெபமாலைப் பக்தியைக் குறித்து அவர் பன்னிரு நிரூபங்கள் விடுத்துள் ளார். இன்றும் வழங்கி வரும் ஜெபமாலை மாதாவின் பூசைச் செபங்களை வெளியிட்டவரும் இவரே; மேலும் இப்பக்திக்கென அக்டோபர் மாதத்தைத் தெரிந்து இம்மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவாலயத் திலும் விசுவாசிகள் ஒன்றுகூடி தேவ நற்கருணை ஸ்தாபகத் திற்கு முன்பாக ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலை ஒருங்கே ஜெபிக்கும்படி கட்டளையிட்டவரும் இவரே; தேவமாதா பிரார்த்தனையில் “திருச் செபமாலையின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்” என்னும் மன்றாட்டை சேர்த்தவரும் (24.12.1883) இவரே.

இவ்விதம் ஒவ்வொரு பாப்பரசரும் அந்தந்தக் காலங்களிலே ஒரே வாய்மொழியாக பரிசுத்த ஜெபமாலை எவ்வாறு பக்தர்களை பயங்கர ஆபத்துக்களிலிருந்தும், மூன்று விரோதிகளின் ஓயாத போராட்டத்திலிருந்தும், ஆத்தும சரீர அபாயங்களிலிருந்தும் காப்பாற்றுகிற தென்றும், பிணிகளைப் போக்குவதிலும், பாவிகளை மனந்திருப்புவதிலும், நெறி தவறியோரை நல்வழி சேர்ப்பதிலும் ஏற்றதொரு அரிய சாதனமாக விளங்குகிற தென்றும் தெளிவாக எடுத்துக் காட்டி வந்துள்ளனர்.

ஜெபமாலையும் அர்ச்சியசிஷ்டவர்களும்

ஜெபமாலைப் பக்தியின் வல்லமையை தேவமாதா விடமிருந்து நேராக அறிந்து அர்ச். சாமிநாதர் ஒருநாள் பிரசங்கத்தில் சொன்னதாவது: “திவ்விய பலிபூசை, கட்டளை ஜெபம் (யreஸஷ்ழிrதீ), என்ற இரண்டிற்கும் பிறகு பக்தியோடு ஜெபமாலை ஜெபிப்பதைவிட சேசுநாத ருக்கும் அவர் திரு மாதாவுக்கும் பிரியமான பக்தி முயற்சி வேறு ஒன்றுமில்லை.” “ஜெபமாலையைப் பக்தியோடு ஜெபிப்போமானால், அதுவே எல்லா ஜெபங்களிலும் சிறந்த ஜெபமாம்” என்று அர்ச். பிரான்சிஸ் சலேசியார் கூறுகிறார்.

பாரீஸ் நகரத்துச் சிற்றூர்களின் அப்போஸ் தலர் என்று அழைக்கப்படும் சங். லாமி (ய்r. ஸிழிதுதீ) சுவாமியார் எப்பொழுதும் ஜெபமாலையும் கையுமாக இருப்பாராம். “நீங்கள் ஜெபமாலை ஜெபித்துக் கொண்டு எங்கு சென்றாலும் எதற்கும் பயப்படத் தேவையில்லை. ஜெபமாலையின் ஜென்ம விரோதி லூசிஃபர். ஜெபமாலை ஜெபிப்பவரைக் கண்டாலோ அது கதிகலங்கிவிடுகிறது.” 

ஜெபமாலையும் ஜெபமாலை மாதாவும்

ஜெபமாலைப் பக்தி நம் மாதாவுக்கு எவ்வளவு பிரியமானது என்பதை அவர்களது வாய்மொழியாலேயே இனி எண்பிப்போம். இப்பக்தியை நமக்கு வெளியிட் டவர்கள் நம் மாதாவே. லூர்து நகர் மசபியேல் குகையில் தேவதாய் பதினெட்டு முறை காட்சி கொடுத்த போது, கையில் ஜெபமாலை ஏந்தி, ஏழை இடைச்சிறுமி பெர்னதெத்துடன் ஜெபமாலை ஜெபித்ததுடன், உலகோர் அனைவரும் ஜெபமாலை ஜெபிக்கும்படி ஏவியிருக் கிறார்கள். பார் எங்கும் பவனி வந்த பாத்திமா ஜெப மாலை மாதா அந்த மூன்று பிள்ளைகளுக்குச் சொன்ன புத்திமதிகளில் முக்கியமானவை: “நீங்கள் ஒவ்வொரு நாளும் ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்; அதைச் சரிவர ஜெபிக்க வேண்டும்... தபசு செய்யுங்கள்... ஜெபமாலை ஜெபியுங்கள்...” பாத்திமா மாதா தனது கடைசிக் காட்சியில் சூரியனைப் பம்பரம்போல் சுழலச் செய்த புதுமையே அவர்களது வல்லமையை எண்பிக்கும் மறுக்க முடியாச் சான்றாகும். மனஸ்தாப உணர்ச்சி யோடும், பாவப் பரிகார நோக்கத்தோடும் ஜெபமாலை ஜெபிப்பதே பாத்திமாச் செய்தியின் தொகுப்பும், சுருக்கமுமாகும்.

பாத்திமாவிலும், லூர்து நகரிலும், மற்றவிடங் களிலும் தேவமாதா நமக்களித்துள்ள வல்லமையுள்ள போர்க்கருவி ஜெபமாலையே! இன்றைய உலகின் சீர்கேடான நிலை மாறி சத்தியம் நிலைக்கவும், சமாதானம் தழைக்கவும், பொதுவுடமை அழியவும், நாஸ்திகம் மறையவும், பாவிகள் பாவ வழியகலவும், பதிதர் மனந் திரும்பி திருச்சபையில் சேரவும், அஞ்ஞானிகள மெய்ஞ்ஞானத்தை அடையவும் அரிய சாதனமாக இருப்பது ஜெபமாலையே. நம் மாதா காட்டும் நேரான வழி, நிச்சயமான வழி ஜெபமாலைப் பக்தியின் வழியே. ஜெபமாலை என்னும் வாடாத மலர்மாலையைத் தனக்குச் சாற்றி தனது சலுகையைத் தேடும் தாசர்களுக்கு ஜெபமாலை மாதா அடைந்து தரும் வரப்பிரசாதக் கொடைகளும் அனுகூலங்களும் ஏராளம். இதனால்தான் ஜெபமாலை மாதாவின் பெயர் கொண்ட தேவாலயங்கள் உலகெங்கும் திருயாத்திரை ஸ்தலங்களாக விளங்கு கின்றன.

நூற்று ஐம்பத்து மூன்று மணிச் செபமாலையில், நமது வேதத்தின் சகல விசுவாச சத்தியங்கள் பொதிந்த விசுவாச மந்திரமும், சர்வேசுரனே படிப்பித்த பரலோக மந்திரமும், தேவ மாதாவுக்குப் பிரியமான அருள்நிறை மந்திரமும், புது ஏற்பாட்டின் சரித்திரச் சுருக்கம் நிறைந்த சந்தோஷ, துக்க, மகிமைத் தேவ இரகசியங்களும் திரியேக தேவனின் வாழ்த்தும் அடங்கியுள்ளன. ஜெபமாலையைப் பக்தியுடன் ஜெபிக்க அதன் தேவ இரகசியங்களைத் தியானித்தலே சிறந்த வழியாம். இத்துடன் நமதன்னையின் விருப்பத்திற்கிணங்க ஒவ்வொரு பத்துமணிக்குப் பின்னும் பின்வரும் ஜெபத்தைச் சேர்ந்து ஜெபிப்போம்: “ஓ சேசுவே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்; நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும்; சகல ஆத்துமங்களையும், விசேஷமாய் யார் அதிகத் தேவையிலிருக்கிறார்களோ, அவர்களையும், மோட்சத் திற்கு அழைத்துச் செல்லும்.” 

குடும்ப ஜெபமாலை குடும்பத்தின் தனி அழகாம். குடும்பத் தில் சமாதானம் நிலைக்கவும் தேவனின் ஆசீரும் வரப்பிரசாதமும் விளங்கவும் ஏற்ற வழி குடும்பத்திலுள்ள யாவரும் ஒன்று சேர்ந்து ஜெபமாலை ஜெபிப்பதே. படித்தோரும், படியாதோரும், சிறியோரும், பெரியோரும், தனவந்தரும், தரித்திரரும், யாவரும், எங்கும், என்றும், சொல்லக் கூடிய இலகுவான ஜெபம் ஜெபமாலை. இத்தகைய ஒப்பற்ற சாதனத்தைச் சித்தமுவந்து அளித்த மாமரி அன்னையை நிதமும் நாம் புகழ்ந்தேற்றுவோம்.

“ஜெபமாலை என்னும் மலர் மாலையைத் தந்த மாமரி அன்னையே! இதோ என்றும் வாடா இம்மாலையை உமது பங்கய மலரடிகளில் சூடுகிறோம். உமக்கும் உமது திருக்குமாரனுக்கும் மிகவும் பிரியமான இச்செபத்தை அனுதினமும் நாங்கள் ஜெபிப்போம். ஏழை எமது ஜெபத்தைக் கேட்டருளும்!” 


திருச் செபமாலையின் இராக்கினியே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!