இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞானமானது மனிதருக்கு அளவில்லாத திரவியமாயிருக்கின்றது

கடவுளின் ஒரே பேறான திருச்சுதனும், பிரபஞ்சத்தின் ஆண்டவருமான சேசுநாதர் கடும் வேதனைக்கும், துன்பத்திற்கும் மத்தியில் ஓர் அவமானச் சிலுவை மீது மரிப்பதை பூமியும், வானங்களும், இயற்கை முழுவதும் அதிசயத்தோடு பார்த்தன. ஏன் அவர் இவ்வாறு மரித்தார்: ஏனெனில், ""அவர் நம்மை நேசித்து, நமக்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தார்'' (எபே.5:2). மனிதர்கள் இதை விசுவசித்தும், கடவுளை நேசிக்காமல் இருப்பது எப்படி?

ஓ, கடவளுக்கு முன்பாக நம்மைச் செல்வந்தர்களாக்குகிற தேவசிநேகத்தின் அளவிட இயலாத மதிப்பே! இது அவரது நட்பை நாம் சம்பாதிக்க உதவும் அளவில்லாத திரவியமாயிருக்கிறது. "ஞானமானது மனிதருக்கு அளவில்லாத திரவியமாயிருக்கின்றது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறவர்கள்... சர்வேசுரனுடைய சிநேகத்துக்குப் பங்காளிகள் ஆகிறார்கள்'' (ஞான.7:14). நாம் பயப்பட வேண்டிய ஒரே ஒரு காரியம் கடவுளின் நட்பை இழந்து போவதுதான்; அதைப் பெற்றுக்கொள்வதுதான் நம் ஆசைகளின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். கடவுளின் நட்பை நமக்குப் பெற்றுத் தருவது அன்பே. இதனாலேயே, அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் கூறுகிறபடி, அன்பினால் ஏழைகள் செல்வந்தர்கள் ஆகிறார்கள். அன்பில்லாமையால் செல்வந்தர்கள் ஏழைகள் ஆகிறார்கள்: ""தேவசிநேகத்தைக் கொண்டிருப்பதை விட மேலான செல்வங்கள் ஏதுமில்லை. தேவசிநேகத்தைக் கொண்டிருக்கிற ஏழை செல்வந்தனாயிருக்கிறான். தேவசிநேகமில்லாத செல்வந்தன் ஏழையாயிருக்கிறான்.''

உயர்ந்த பதவியிலுள்ள ஒரு மனிதனால் தான் நேசிக்கப்படுவதாக நினைப்பதில் ஒரு மனிதன் அனுபவிக்கும் மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது! ஆனால் கடவுள் தன்னை நேசிக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கையிலிருந்து ஓர் ஆன்மா வெற்றுக் கொள்ளும் ஆறுதல் இன்னும் எவ்வளவோ பெரியதாக இருக்கிறது! ""என்னை நேசிக்கிறவனை நானும் நேசிக்கிறேன்'' (பழ.8:17). கடவுளை நேசிக்கும் ஓர் ஆத்துமத்தில் ஆராதனைக்குரிய தமத்திரித்துவத்தின் மூன்று ஆட்களும் தங்கி வசிக்கிறார்கள். ""ஒருவன் என்னைச் சிநேகித்தால், என் வாக்கியத்தை அநுசரிப்பான்; என் பிதாவும் அவனைச் சிநேகிப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுக்குள் வாசம்பண்ணுவோம்'' (அரு.14:23). எல்லாப் புண்ணியங்களிலும் தேவசிநேகமே கடவுளுடன் நம்மை இணைக்கும் புண்ணியமாக இருக்கிறது என்று அர்ச். பெர்னார்ட் எழுதுகிறார். தேவசிநேகமே ஆத்துமத்தைக் கடளோடு பிணைக்கிற பொற்சங்கிலியாக இருக்கிறது என்று அர்ச். பொலோஞ்ஞா கத்தரீனம்மாள் அடிக்கடி கூறுவது வழக்கம். ""நேசம் நேசரை நேசிக்கப்படுபவளோடு இணைக்கும் கண்ணியாக இருக்கிறது'' என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். கடவுள் ஒருவேளை எங்கும் இருப்பவராக இல்லாதிருந்தால், அவரை நாம் எங்கே காண முடியும்? கடவுளை நேசிக்கும் ஓர் ஆத்துமத்தைக் கண்டுபிடி. அதில் கடவுள் நிச்சயமாகக் காணப்படுகிறார். அர்ச். அருளப்பர் இதுபற்றி நமக்கு உறுதி தருகிறார்: ""சிநேகத்தில் நிலைத்திருக்கிறவன் சர்வேசுரனிடத்தில் நிலைத்திருக்கிறான்; சர்வேசுரனும் அவனிடத்தில் நிலைத்திருக்கிறார்'' (1 அரு. 4:16). ஏழையாக இருப்பவன் செல்வங்களை நேசிக்கிறான், ஆனால், அந்த நேசத்தின் காரணமாக, அவன் அவற்றை அனுபவிப்பதில்லை. அவன் ஒரு சிங்காசனத்தை நேசிக்கலாம், ஆனால் அதன் மூலம் ஒரு இராச்சியத்தை அவன் சொந்தமாகக் கொண்டிருக்க முடியாது. ஆனால் கடவுளை நேசிக்கிற மனிதன் அவரைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறான். ""அவன் சர்வேசுரனில் நிலைத்திருக்கிறான், சர்வேசுரனும் அவனில் நிலைத்திருக்கிறார்.'' 

ஓ என் சேசுவே, ஏராளமான விசேஷ ஒளிகளையும், வரப்பிரசாதங்களையும் பெற்ற பிறகும் உம்மை அடிக்கடி நோகச் செய்யும் அளவுக்கு நான் பெரும் நீசனாக இருக்கிறேன். புனிதர்கள் எதனால் பற்றியெரிந்தார்களோ, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட தீச்சுவாலைகளால் பற்றியெரிய இனியும் நான் தகுதியற்றவன். நரகநெருப்பிற்கே நான் தகுதியானவன். ஆயினும், தேவரீர் உம்மை நேசிக்கும்படி எனக்குக் கட்டளையிடுவதால், நான் உமக்குக் கீழ்ப்படிவேன். சேசுவே, என் முழு இருதயத்தோடு நான் உம்மை நேசிப்பேன்.

அன்பு தான் செல்லும் வழியில் எல்லாப் புண்ணியங்களையும் ஈர்க்கிறது என்றும், அது கடவுளோடு நம்மை அதிக நெருக்கமாக இணைக்கும்படியாக அனைத்தையும் வழிநடத்துகிறது என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் கூறுகிறார். இதன் காரணமாக, தேவசிநேகத்திடமிருந்தே எல்லாப் புண்ணியங்களும் பிறப்பதால், அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் அதை ""சகல புண்ணியங்களின் தாய'' என்று அழைத்தார். இதனாலேயே அர்ச். அகுஸ்தினார் வழக்கமாக: ""நேசி, அதன்பின் நீ விரும்புவதைச் செய்'' என்று சொல்வார். கடவுளை நேசிப்பவனால் நன்மையானதை மட்டுமே செய்ய முடியும்; அவன் தீமை செய்கிறான் என்றால், தான் கடவுளை நேசிப்பதை நிறுத்தி விட்டான் என்பதை அவன் காட்டுகிறான். அவன் கடவுளை நேசிப்பதை நிறுத்தி விடும்போது, எந்தக் காரியத்தாலும் எந்த ஆதாயத்தையும் அவன் பெற்றுக்கொள்வது இல்லை. எனக்குள்ளதையெல்லாம் ஏழைகளுக்கு நான் பகிர்ந்தளித்தாலும், என் சரீரத்தை நெருப்புக்குக் கையளித்தாலும், என்னிடத்தில் தேவசிநேகம் இல்லையென்றால், நான் ஒன்றுமில்லை என்று அப்போஸ்தலர் கூறுகிறார்: ""என் ஆஸ்திபாஸ்திகள் எல்ல்லாவற்றையும் நான் ஏழைகளுக்குப் போஜனமாகப் பகிர்ந்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கும்படி கையளித்தாலும் என்னிடத்தில் தேவசிநேகமில்லாவிட்டால், எனக்குப் பிரயோசனம் ஒன்றுமில்லை'' (1 கொரி.13:3).

நாம் இவ்வாழ்வின் வேதனைகளை உணர்வதிலிருந்தும் நேசம் நம்மைத் தடுத்துக் காப்பாற்றுகிறது. தேவசிநேகம் தேனைப் போன்றது, அது மிகக் கசப்பானவற்றையும் இனிப்பாக மாற்றுகிறது என்று அர்ச். பொனவெந்தூர் கூறுகிறார். கடவுளை நேசிக்கும் ஓர் ஆத்துமத்திற்கு, அவருக்காகத் துன்புறுவதை விட அதிக இனிமையான காரியம் வேறு என்ன இருக்க முடியும்? சந்தோஷமாகத் துன்பங்களை அரவணைத்துக் கொள்ளும்போது தான கடவுளை மகிழ்விப்பதையும், தனது வேதனைகள் பரலோகத்தில் தனது நித்திய மகுடத்தில் மிகுந்த பிரகாசமுள்ள மணிக்கற்களாக இருக்கும் என்றும் அது அறிந்திருக்கிறது. நம் மீதுள்ள அன்பிற்காகத் தம்மைப் பலியாக ஒப்புக்கொடுக்கும்படி நமக்கு முன் சிலுவை சுமந்து சென்றுள்ளவரும், தமது முன்மாதிரிகையைப் பின்பற்றும்படி நம்மை அழைப்பவருமான சேசுகிறீஸ்துநாதரைக் கண்டுபாவித்து மனமுவந்து துன்பப்பட்டு இறக்க விரும்பாதவன் யார் இருக்க முடியும்? ""யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னைத்தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்செல்லக் கடவான்'' (மத்.16:24). இந்த நோக்கத்திற்காகவே, நம் மீதுள்ள அன்பிற்காக மரணம் வரைக்கும், அதுவும், அவமானமுள்ள சிலுவை மரணம் வரைக்கும் தம்மைத் தாழ்த்த அவர் திருவுளங்கொண்டார். ""தம்மைத்தாமே தாழ்த்தி, மரணமட்டுக்கும் அதாவது சிலுவை மரண மட்டுக்கும் கீழ்ப்படிதலுள்ளவரானார்'' (பிலிப்.2:8).

ஓ சேசுவே, நான் இதையெல்லாம் விசுவசித்திருக்கிறேன், ஆயினும் நான் உம்மை நேசியாமல் இருந்தது மட்டுமல்ல, மாறாக, நான் உம்மை அடிக்கடி நோகச் செய்திருக்கிறேன். தேவரீர் என்னை மன்னித்தருளும். இனி ஒருபோதும் நான் உம்மை நோகச் செய்யாமல், எப்போதும் உம்மை நேசிக்கும்படியாக, நீர் எனக்காக அனுபவித்த கொடிய மரணத்தை எப்போதும் நான் நினைவில் கொண்டிருக்கச் செய்யுமாறு உம்மை மன்றாடுகிறேன். அர்ச். மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, சேசுவை நேசிக்க எனக்கு உதவுங்கள்; நான் உங்களிடம் கேட்கும் ஒரே உபகாரம் இதுவே .