வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு - தோற்றுவாய்

கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகர் என வேளாங்கண்ணி வழங்கப்படுகிறது. பிரான்சு நாட்டு லூர்து நகரைப் போலவே வேளாங்கண்ணியிலும் அன்னை மரியின் அருளால் புதுமை நலன்கள் கொழிப்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு முழுவதும் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள். ஆண்டுத் திருவிழாக் காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 10 இலட்சம் மக்கள் வரை வந்து திரளுகின்றனர்.

வாய்மொழியாக மக்கள் மக்களுக்குச் சொல்லிப் பரவி வந்த புனித ஆரோக்கிய அன்னையின் வரலாறு, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுத்து வடிவு பெறத் தொடங்கியது. பேரருள் திரு மோன்சிஞ்ஞோர் மோத்தாவாஸ் அடிகள் மக்களைக் கேட்டு அறிந்த வரலாற்றை எழுதி, 'வேளாங்கண்ணி அர்ச். ஆரோக்கியமாதா சங்க்ஷேபம்' என்னும் பெயரில் வெளியிட்டார். அதை அடிப்படையாகக் கொண்டு, மைலாப்பூர் மறை மாவட்ட ஆயர்கள், நாகைப் பங்குத் தந்தையர், பிறகு வேளாங்கண்ணிப் பங்குத் தந்தையர் ஆகியோரின் பட்டியல்களையும் சேர்த்து 'A History of The Shrine' எனும் ஆங்கில நூலை வெளியிட்டார், அருள் தந்தை சாந்தோஸ் அடிகள்.

இதைத்தான் தமிழாக்கம் செய்து, மேலும் சில செய்திகள், செபங்களுடன் 'திருத்தல மான்மியம்' என்ற நூலை பேரருள் திரு அ. குழந்தை நாதர் அவர்கள் வெளியிட்டார்கள், இதனைச் சுருக்கமாக அழகுத் தமிழில் எழுதி 'அணி நகரில் காட்சி தரும் அன்னைமரி' எனும் பெயரில் திரு. சு. குழந்தை நாதன் 1958-இல் வெளியிட்டார்.

இப்போது காலத்தின் தேவைக்கேற்ப பல புதிய செய்திகளை வரலாற்று அடிப்படையில் இணைத்து, திருப் பயணிகளுக்குப் பயன்படும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை உருவாக்க, தஞ்சை மேதகு ஆயர் அவர்கள், குருக்கள் சிலர் அடங்கிய குழு ஒன்றை ஏற்படுத்தினார். அவர்கள் அதைத் தயாரித்துக் கொண்டிருந்தபொழுது, திரு சு. குழந்தை நாதனும் திருத்தல வரலாறு தயார் செய்வதை அறிந்து அவருடைய உதவியையும் ஏற்று, இந்நூலைத் தஞ்சை ஒளி நிலையம் வெளியிடுகிறது. திருத்தல வரலாற் றையும், வேளை நகர் விவரங்களையும் மக்கள் அறிந்து பயன் பெறுவர் என நான் நம்புகிறேன். 

மோன்சிஞ்ஞோர் தாமஸ்வாஸ், 
பங்குத் தந்தை

வேளாங்கண்ணி, 
24-3-1981.