அர்ச். தோமையார் வரலாறு - பல்லாயிரம் பக்தர்கள்

இந் நற்செய்தி எங்கும் பரவிற்று. குடிமக்கள் வியப்பும் மலைப்பும் கொண்டனர். அப்போஸ்தலருடைய அமிர்த மொழிகளைக் கேட்க ஆவலாய் அவரை விடாது பின் தொடர்ந்தார்கள். அவர் மீது பற்றுதல் கொண்டவர்களின் தொகை அமோகமாக அதிகரித்தது. 

அன்னோர் எல்லாரையும் கொள்ளத் தக்க மண்டபம் ஆங்கில்லாது போயிற்று. ஆதலால் ஊருக்கு வெளியே, கஞ்சோ (காஸி) மலை அடிவாரத்தில் அவர்களை அழைத்துச் சென்று போதித்தார். 

அக்கும்பலில் இருந்த நோயாளரைப் புறம்பாக்கி, அவர்கள் பால் இரங்கி, வானத்தை ஏறெடுத்துப்பார்த்துக் கரங்களை விரித்து, "எமது ஆண்டவரும் கடவுளுமாகிய இயேசு கிறிஸ்துவே! உமது திருப்பெயரால் நாங்கள் கேட்பதை அளிப்பதாகத் திருவுளம் பற்றி இருக்கிறீர். இதோ! இங்குக் குழுமியிருக்கும் குருடர்களுக்குக் கண் பார்வை கொடுத்தருளும்; செவிடருக்குச் செவி அளித்தருளும். பற்பல பிணிகளால் வாதைப்படுவோர் குணமடைந்து மகிழ்வார்களாக. அதன் பலனாக, பிதா சுதன் பரிசுத்த ஆவியாகிய மூன்றாட்களும், ஏக தேவனும், சர்வ வல்லபரும், நித்தியருமாயிருக்கும் கடவுளை ஒருமனப்பட்டு விசுவசிக்கும்படியாக, இயேசு தேவனே! உமது பேரால் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்" என்று மன்றாடினார். 

அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும், "ஆமென்” என்று முடித்தார்கள். உடனே மேகங்கருக்க, இடி முழங்கிற்று. மக்கள் தலை குப்புறத் தரையில் வீழ்ந்தனர் எங்கும் மெளனமாயிருந்தது. 

"எழுந்திருங்கள் மக்களே தேவன் உங்கள் மீது கருணை கூர்ந்து அருள் செய்து உங்கள் பிணிகளையெல்லாம் குணப்படுத்தி விட்டார். அவருக்கு நன்றி கூறுவீர்களாக'' என்று உரைத்தார் அப்போஸ்தலர். 

எல்லாரும் எழுந்தார்கள். நோயாளிகள் எல்லாரும் குணம் அடைந்திருந்தார்கள். ஆகவே, சகலரும் வானத்தை அண்ணார்ந்து பார்த்த வண்ணம் தத்தம் இருதயத்தினின்று பொங்கிய நன்றியைக் காட்ட ஒரே குரலாய்த் துதி பாடினர். ஏற்பட்ட நற்சமயத்தை நழுவவிடாது தோமையார் அரியதொரு பிரசங்கம் அவர்களுக்குச் செய்தார். 

அதைக்கேட்டு அவரைப் பின்பற்ற மனம் ஒத்தவர் பலர். அவர்களுக்குச் சில நாள் அளவாகத் தக்க போதனை சொல்லி, அவர்களை மெய்ம்மறையில் சேர்த்தார். இப்படி ஞான தீட்சை பெற்றவர்களில், பெண்களும் சிறுவருமன்றி ஆண்கள் மட்டும் ஒன்பதினாயிரமாம்.