நாகப்பட்டினத்தில் டச்சுக்காரர்கள்

நாகப்பட்டின மக்கள் டச்சுக்காரர்களை ஓல்லாந்துக்காரர் என்று அழைப்பர். 1660-ஆம் ஆண்டு, டச்சு வணிகர் கூட்டம் நாகப்பட்டினத்தை முற்றுகையிட்டுப் போர்த்துக்கீசியரின் கோட்டையைக் கைப்பற்றியது. கத்தோலிக்க மக்களிடம் வெறுப்புக் காட்டிய டச்சுக்காரர்கள் மறைப்பணியாற்றி வந்த குருக்கள் அனைவரையும், போர்த்துக்கீசியரின் கோட்டைப் பகுதியிலிருந்து வெளியேற்றினர். அவர்களின் தீராப் பகை, மக்களிடையே நிலவிய அமைதியைக் குலைத்தது.

இந்தியாவில் டச்சுக்காரர்கள் முதலில் தங்களது ஆதிக்கத்துக்குள் கொணர்ந்த இடம் நாகப்பட்டினமாகும், அதற்குப் பின்னர் அவர்கள் இலங்கைத் தீவைக் கைப்பற்றினர். அங்கும் அவர்கள் கத்தோலிக்கரைக் கொடுமைப்படுத்தினர் என்பதை இலங்கையின் அப்போஸ்தலரான அருள்மிகு ஜோசப் வாஸ் வாழ்விலிருந்து அறிகிறோம். திருப்பலியையும், மரியாளின் வணக்கத்தையும் டச்சுக்காரர்கள் ஏற்றுக்கொள்ளாததே அதற்குக் காரணமாகும்.

நாகப்பட்டினத்தில், பிரான்சீஸ்கு சபையினர் தங்களது இல்லத்தைக் கோட்டைக்கு வெளியே, விஜய நகர அரசின் எல்லைக்குள் கட்டினர். அங்கு அமலோற்பவ அன்னைக்காக ஆலயம் ஒன்றை எழுப்பினர். 1662-ஆம் ஆண்டு அருள் திரு பிரான்சீஸ்கு ஓரியஸ்ட் என்பவர் ஆலயத்தையும், இல்லத்தையும் கட்டி முடித்தார். 1977-ஆம் ஆண்டு சிதைந்த நிலையிலிருந்த இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டது. 

'மாதரசி மாதா - கோவில்' என்ற பழமை வாய்ந்த ஆலயம் இதுவே. நாகப்பட்டினப் பங்கு ஆலயத்திலிருந்து அரை கி. மீட்டர் தொலைவில், இரண்டாம் கடற்கரைச் சாலையில் இவ்வாலயம் உள்ளது. பங்கு ஆலயத்தின் வடக்குத் திசையில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இது போர்த்துக்கீசியரால் கட்டப்பட்டதாகும். பங்கின் ஆலயம் முதலில் போர்த்துக்கீசியரால் கட்டப்பட்டு, பின்னர் இயேசு சபையினரால் விரிவுபடுத்தப்பட்டது. இப்பகுதி உயர்ந்த கோபுரத்தைக் கொண்டுள்ளது. இவ்வாலயம் லூர்து அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

நாகப்பட்டினத்தில் 1771-ஆம் ஆண்டு டச்சுக்காரர்களின் இறுதிக்காலம் எனலாம். அப்போதைய பங்குக் குரு அருள் திரு ரொசாரியோ அடிகளார் 4000 கத்தோலிக்கரைக் கண்காணித்து வந்தார். மரியன்னையின் பக்தி மக்களின் உள்ளங்களில் வளர்ந்து கொண்டே வந்தது என்பதை அங்கு அன்னையின் பெயரில் கட்டப்பட்ட ஆலயங்கள் அறிவிக்கின்றன. 1783-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சி வரவே, நாகப்பட்டினம் மீண்டும் நல்ல நிலையை அடைந்தது.