இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அவர் ஊமையாயிருந்த ஒருவனைப் பிடித்திருந்த பேயைத் துரத்தினார்!

ஒரு மனிதன் பாவத்தில் விழுமுன், அவன் தான் செய்கிற தீமையையும், கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்வதால் தன் மீதே தான் இழுத்து விட்டுக் கொள்கிற அழிவையும் அவன் காணாதிருக்குமாறு, அவனைக் குருடாக்கி விடப் பசாசு உழைக்கிறது. பவத்திற்குப் பிறகு, வெட்கத்தின் காரணமாக, பாவசங்கீர்த்தனத்தில் அவன் தன் குற்றத்தை மறைக்கும்படி அது அவனை ஊமையாக்கி விட முயல்கிறது. ஓ, சபிக்கப்பட்ட வெட்கமே! எவ்வளவு அதிகமான பரிதாபத்திற்குரிய பாவிகளை நீ நரகத்திற்கு அனுப்புகிறாய்! அவர்கள் இரட்சணியத்தை விடத் தங்கள் வெட்கத்தைப் பற்றி அதிகமாக நினைக்கிறார்கள்!

"ஆண்டவரே, என் உதடுகளைச் சுற்றி ஒரு கதவை அமைத்தருளும்'' (சங்.140:3). நம் வாய் புறணிக்கும், தேவதூஷணங்களுக்கும், முறையற்ற எல்லா வார்த்தைகளுக்கும் எதிராக எப்போதும் மூடியிருக்கும்படியாகவும், நாம் கட்டிக் கொண்ட பாவங்களை சங்கீர்த்தனம் செய்வதற்காக அது திறக்கப் படும்படியாகவும் அதற்கு ஒரு கதவை அமைப்பது அவசியம் என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். இந்தப் பரிசுத்த வேதபாரகர் தொடர்ந்து: ""இவ்வாறு அது அழிவின் கதவாக இல்லாமல், கட்டுப்பாட்டின் கதவாக இருக்கும்'' என்கிறார். கடவுளையோ, அல்லது நம் அயலானையோ காயப்படுத்தக் கூடிய வார்த்தைகளைப் பேச நாம் தூண்டப்படும்போது மவுனமாயிருப்பது ஒரு புண்ணியச் செயலாகும்; ஆனால் பாவங்களை சங்கீர்த்தனம் செய்வதில் மவுனமாயிருப்பது ஆத்துமத்தின் அழிவாகும். நாம் கடவுளை நோகச் செய்த பிறகு, நம் வாயை மூடி வைக்கவும், நம் குற்றத்தைப் பாவசங்கீர்த்தனத்தில் வெளிப்படுத்தாமல் தடுக்கவும் பசாசு கடுமையாக உழைக்கிறது. அர்ச். அந்தோனினுஸ் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார். ஒரு பரிசுத்த வனவாசி ஒரு முறை, பாவசங்கீர்த்தனம் செய்ய விரும்பிய சிலருக்கு அருகில் பசாசு நின்று கொண்டிருந்ததைக் கண்டார். அவர் பசாசிடம் அவன் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று கேட்டார். எதிரி அவருக்கு மறுமொழியாக: ""பாவசங்கீர்த்தனத்திற்குச் செல்லும் இவர்களிடமிருந்து முன்பு நான் அகற்றிய ஒரு காரியத்தை இப்போது அவர்களில் நான் புதுப்பிக்கிறேன். அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த போது, அது பற்றி வெட்கப்படுவதை நான் அவர்களிடமிருந்து அகற்றினேன். இப்போது அவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்வது பற்றி அச்சம் கொள்ளும்படி அதை நான் அவர்களில் மீண்டும் புதுப்பிக்கிறேன்'' என்றது. ""என் மடமையால் என் புண்கள் சீழ் வைத்தும் அழுகியும் இருக்கின்றன'' (சங்.37:6). சீழ்வைத்த, அழுகிய புண்கள் உயிருக்கு ஆபத்தானவை. பாவசங்கீர்த்தனத்தில் மறைக்கப்பட்ட பாவங்கள் ஆத்துமத்தைக் கொல்லக் கூடிய ஞானப் புண்களாக இருக்கின்றன. இவை சீழ் வைத்த, அழுகிய புண்களாக ஆகின்றன.

நாம் பாவத்தைத் தவிர்க்கும்படியாக, கடவுள் அதை வெட்கத்துக்குரியதாக ஆக்கினார், தங்கள் பாவங்களைப் பற்றி பாவசங்கீர்த்தனத்தில் தங்களையே குற்றஞ்சாட்டுவோர் அனைவருக்கும் மன்னிப்பை வாக்களிப்பதன் மூலம் அவர் பாவசங்கீர்த்தனம் செய்ய நமக்கு நம்பிக்கை தருகிறார். ஆனால் இதற்கு நேர்மாறானதைப் பசாசு செய்கிறான்; பிற்பாடு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை நமக்குத் தருவதன் மூலம் அவன் பாவம் செய்ய நம்பிக்கை தருகிறான்; ஆனால் பாவம் செய்யப்பட்ட பிறகு, அதை நாம் பாவசங்கீர்த்தனத்தில் சொல்லாமல் தடுப்பதற்காக அவன் நம்மில் வெட்க உணர்வைத் தூண்டுகிறான்.

பாவம் செய்திருக்கிற அனைவருக்கும் நான் சொல்கிறேன்: இவ்வளவு பெரியவரும், இவ்வளவு நல்லவருமான ஒரு சர்வேசுரனை நோகச் செய்ததற்காகத்தான் நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஆனால் நீங்கள் கட்டிக்கொண்ட பாவங்களை சங்கீர்த்தனம் செய்வதற்கு நீங்கள் வெட்கப்படக் காரணமேயில்லை. சேசுகிறீஸ்து நாதரின் திருப்பாதங்களின்மீது கண்ணீர் சிந்தி, தான் ஒரு பாவி என்பதைப் பலருக்கு மத்தியில் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அர்ச். மரிய மதலேனம்மாளுக்கு அது அவமானத்துக்குரிய காரியமாக இருந்ததா? தனது பாவசங்கீர்த்தனத்தின் மூலம் அவள் ஓர் அர்ச்சியசிஷ்டவள் ஆனாள். தம் பாவங்களை சங்கீர்த்தனம் செய்தது மட்டுமின்றி, உலகம் முழுவதும் அவற்றை அறிந்து கொள்ளும் விதமாக அவற்றைப் பற்றி ஒரு புத்தகமே எழுதிய அர்ச். அகுஸ்தினாருக்கு அது ஓர் அவமானமாக இருந்ததா? மிகப் பல ஆண்டுகளாக ஒரு துர்மாதிரிகையான வாழ்வு நடத்தியபின் பாவசங்கீர்த்தனம் செய்வது அர்ச். எகிப்து மேரிக்கு வெட்கத்தைத் தந்ததா? தங்கள் பாவசங்கீர்த்தனத்தின் மூலம் இவர்கள் புனிதர்களாக ஆகியிருக்கிறார்கள், இன்று திருச்சபையின் பீடத்தின் மகிமைக்கு இவர்கள் உயர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு உலக நீதிமன்றத்திற்கு முன் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனிதன் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகிறான்; ஆனால் சேசு கிறீஸ்துவின் நீதிமன்றத்தில் தங்கள் பாவங்களை அறிக்கை யிடுபவர்கள் மன்னிப்புப் பெறுவதோடு, நித்திய மகிமையின் முடியையும் பெறுகிறார்கள். ""பாவசங்கீர்த்தனத்திற்குப் பிறகு, மனந்திரும்பியவர்களுக்கு ஒரு கிரீடம் வழங்கப்படுகிறது'' என்கிறார் அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர். ஒரு புண்ணால் பாதிக்கப் பட்டிருப்பவன், தான் குணமடைய விரும்பினால், அதை ஒரு மருத்துவரிடம் காட்டவேண்டும். இல்லாவிடில் அது சீழ் வைத்து, மரணத்திற்குக் காரணமாகி விடும். ""மருத்துவன் தான் அறியாத ஒரு தீமையைக் குணப்படுத்த முடியாது'' என்று திரிதெந்தீன் பொதுச் சங்கம் கூறுகிறது. அப்படியிருக்க, உங்கள் ஆத்துமங்கள் பாவத்தால் புண்பட்டுப் போயிருந்தால், அதைப் பாவசங்கீர்த்தனம் செய்ய வெட்கப்படாதீர்கள்; இல்லாவிடில் நீங்கள் இழக்கப்படுவீர்கள். ""உன் ஆத்துமத்திற்காக உண்மையைச் சொல்ல வெட்கப்படாதே'' (சர்வப்.4:24). ஆனால் இன்னின்ன பாவத்தை சங்கீர்த்தனம் செய்ய நான் மிகவும் வெட்கப்படுகிறேன் என்று நீ சொல்கிறாய். நீ இரட்சிக்கப்பட விரும்பினால், இந்த வெட்கத்தின்மீது நீ வெற்றி கொள்ள வேண்டும். ""ஏனெனில் பாவத்தை விளைவிக்கிற செட்கம் உண்டு, மகிமையையும், வரப்பிரசாதத்தையும் கொண்டு வரும் வெட்கமும் உண்டு'' (சர்வப்.4:25). இந்த வார்த்தைகளின்படி வெட்கத்தில் இரு வகைகள் இருக்கின்றன: ஒன்று ஆன்மாக்களைப் பாவத்திற்கு இட்டுச் செல்கிறது, அது, பாவசங்கீர்த்தனத்தில் அவர்கள் தங்கள் பாவங்களை மறைக்கும்படி செய்யும் வெட்கமாகும்; மற்றொன்று தன் பாவங்களை சங்கீர்த்தனம் செய்வதில் ஒரு கிறீஸ்தவன் உணரும் கலக்கம் ஆகும். இந்தக் கலக்கம் அவனுக்கு இவ்வாழ்வில் கடவுளின் வரப்பிரசாதத்தையும், மறுவுலகில் மோட்ச மகிமையையும் அவனுக்குப் பெற்றுத் தருகிறது.

ஓநாயால் தாக்கப்படும்போது, தன் கதறல்கள் மூலம் ஆடு உதவியைத் தேடாதபடி ஓநாய் அதன் கழுத்தைக் கவ்விக் கொள்கிறது என்று அர்ச். அகுஸ்தீனார் சொல்கிறார். இவ்வாறு, அது பாதுகாப்பாக அதைத் தூக்கிச் சென்று, அதன்பின் கடித்து விழுங்குகிறது. பசாசும் சேசுகிறீஸ்துநாதரின் ஆடுகளிடம் இதே முறையில்தான் செயல்படுகிறது. பாவத்திற்குத் தங்களைக் கையளிக்க அவர்களைத் தூண்டியபின், அவர்கள் தங்கள் குற்றத்தை சங்கீர்த்தனம் செய்யாதபடி அது அவர்களுடைய குரல்வளையைக் கவ்விப் பிடித்துக் கொள்கிறது. இவ்வாறு அவன் அவர்களைப் பாதுகாப்பாக நரகத்திற்கு இழுத்துச் சென்று விடுகிறான். சாவான பாவம் செய்து விட்டவர்களுக்குப் பாவசங்கீர்த்தனத்தைத் தவிர இரட்சணியமடைய வேறு வழியில்லை. ஆனால் பாவசங்கீர்த்தனம் செய்தாலும், அதில் தன் பாவங்களை மறைப்பவனும், பச்சாத்தாபமாகிய நீதிமன்றத்தைக் கடவுளை நோகச் செய்யவும், தன்னை இருமடங்கு சாத்தானின் அடிமையாக ஆக்கிக் கொள்ளவும் பயன்படுத்துபவனுமாகிய மனிதனுக்கு என்ன இரட்சணிய நம்பிக்கை இருக்க முடியும்? மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உட்கொள்வதற்குப் பதிலாக, விஷத்தை உட்கொள்ளும் நோயாளி குணமடைவான் என்று நாம் எப்படி நம்ப முடியும்? ஓ சர்வேசுரா! பாவசங்கீர்த்தனத்தில் தங்கள் பாவங்களை மறைப்பவர்களுக்கு, அந்தத் தேவத்திரவிய அனுமானம் அவர்களது பாவத்தின் கொடிய விஷத்தோடு, தேவத் துரோகமாகிய தீமையின் குற்றத்தையும் சேர்க்கும் கருவியாக அன்றி வேறு எப்படி இருக்க முடியும்!