சாலமோனின் ஜெபம்!

191. என் பிதாக்களின் தேவனே இரக்கத்தின் கர்த்தரே உமது வார்த்தையால் சகலத்தையும் சிருஷ்டித்தவரே! உம்மால் உண்டாக்கப்பட்ட சிருஷ்டியை ஆள்வதற்கு உமது ஞானத்தால் மனிதனை ஏற்படுத்தினீரே அவன் நேர்மையோடும் நீதியோடும் பூமியை நடத்துவதற்கும், இருதய நேர்மையோடு நீதி செலுத்து வதற்கும் அவனை நியமித்தீரே உமது சிம்மாசனத்தண்டையில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்குத் தந்தருளும்.

உமது ஊழியர்களிலிருந்து என்னை அகற்றி விடாதேயும். ஏனென்றால் நான் உமது ஊழியன், உமது ஊழியக்காரியின் குமாரன். நான் பலவீனன், சொற்ப ஜீவியமுள்ளவன், உமது கட்டளைகளை கண்டுபிடித்துத் தீர்மானிப்பதற்கு அற்ப யோசனையுள்ளவன். உள்ளபடி மனுமக்களில் வெகு புத்திக் கூர்மையுள்ளவன் எவனாயிருந்தாலும், உம்முடைய ஞானம் அவனிடம் இல்லாமல் போனால் அவன் ஒன்றுமில்லாதவனாகப் பாவிக்கப்படுவான். 

192. உமது சிருஷ்டிகளை அறியும் ஞானம் உம்முடனிருக்கிறது. நீர் உலகத்தை உருவாக்கினபோது, உம்மிடமிருந்து உமது கண்களுக்குப் பிரியமானது எவையென்றும், உமது கட்டளை களின் கருத்து என்னவென்றும் அது அறிந்திருக்கும்.

என்னுடன் இருக்கவும், உமக்குப் பிரியமானது இன்ன தென்று நான் தெரிந்துகொள்ள என்னுடன் உழைக்கவும், ஞானத்தை உமது பரிசுத்த மோட்சத்தினின்றும், மகிமை சிம்மா சனத்தினின்றும் அனுப்பும். ஏனெனில் அவைகளையெல்லாம் அது தெரிந்து கொண்டு கண்டுபிடித்திருக்கிறது. அது என் வேலைகளில் என்னைக் கிரமமாய் நடத்தித் தனது அதிகாரத்தால் என்னைக் காப்பாற்றும்.

அப்பொழுதல்லவா என் செயல்கள் உமக்குப் பிரியமான தாகும். நான் உமது பிரஜைகளை நீதியாய் நடத்துவதன்றி என் பிதாவின் சிம்மாசனத்திற்குப் பாத்திரவான் ஆவேன். உள்ளபடி சர்வேசுரனுடைய யோசனையை அறியக் கூடிய மனிதன் யார்! அவருடைய சித்தம் இன்னதென்று கண்டுபிடிக்கக் கூடியவன் யார்!

மனிதர்களுடைய எண்ணங்கள் பயனற்றவைகளும், எங்கள் முன் யோசனைகள் திடமற்றவைகளுமாயிருக்கின்றன. ஏனெனில் அழிந்து போகும் சரீரம் ஆத்துமத்தை மந்தப்படுத்துகின்றது, இந்த மண் வீடாகிய சரீரம் பல கவலைகளினால் ஆத்துமத்தின் யுக்தியை குறைவுபடுத்துகிறது. பூமியில் சம்பவித்தவைகளை நாங்கள் எளிதில் கண்டுபிடிக்கிறதில்லை. எங்கள் கண்முன் இருப் பவைகளைப் பகுத்தறிவது எங்களுக்குக் கடினம் எனில், பரலோகத்தைச் சார்ந்தவைகளை ஆராய்ந்து கொள்பவன் யார்? நீர் ஞானத்தைத் தராமல் போனால், உன்னதப் பரமண்டலங் களில் நின்று உம்முடைய இஸ்பிரீத்து சாந்துவானவரை நீரே அனுப்பாமல் போனால், உமது யோசனையை அறிபவன் யார்! இஸ்பிரீத்து சாந்து அல்லவா பூமியிலுள்ளவர்களுடைய வழியைச் செம்மைப்படுத்துகிறவர் அவரிடத்தில் அல்லவா உமக்குப் பிரிய மானது எவையென்று மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கர்த்தரே ஆதிமுதல் உமக்குப் பிரியமா யிருந்தவர்கள் யாரோ, அவர்கள் எல்லோரும் ஞானத்தினாலே தான் குணமடைந்தார்கள். 

193. வாய்ச் செபத்தோடு மன ஜெபத்தை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அது மனதுக்கு ஞான வெளிச்சம் தருகிறது, இருதயத் தைப் பற்றியெரியச் செய்கிறது. ஞானமானவரின் குரலைக் கேட்கவும் அவரது இன்பங்களைச் சுவைக்கவும், அவரது திரவியங்களைச் சொந்தமாகக் கொண்டிருக்கவும் தேவையான வல்லமையை ஆத்துமத்திற்குத் தருகிறது.

என்னைப் பொறுத்த வரை, நித்திய ஞானமாகிய கடவுளின் இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு பரிசுத்த ஜெபமாலை சொல் வதன் மூலமும், அதன் பதினைந்து தேவ இரகசியங்களைத் தியானிப்பதன் மூலமும் வாய்ச் செபத்தையும், மனச் செபத்தையும் ஒன்றிப்பதைவிட நல்ல வழி எதுவும் எனக்குத் தெரியவில்லை .