மாசற்றவர்கள், பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பியவர்கள்

மாசற்றவர்கள்!

சரியாக இந்தக் கணத்தில், அந்தக் கரையின் மறு முனையில், ஒரு மிகக் கவர்ச்சியான, முக்கோண வடிவமுள்ள வண்டி ஒன்று தோன்றியது. அது வார்த்தைகளால் வருணிக்க முடியாத அளவுக்கு மிக அழகாக இருந்தது. அதன் மூன்று சக்கரங்களும் எல்லாத் திசை களிலும் சுழன்றன. மூன்று கம்பிகள் அதன் மூலைகளிலிருந்து எழுந்து, ஒன்றுசேர்ந்து, மிக அழகாக நூற்பின்னல் வேலை செய்யப் பட்டிருந்த ஒரு விருதுக் கொடியைத் தாங்கி நின்றன. அந்தக் கொடியில் “இன்னோசெந்த்ஸியா - மாசற்றதனம்” என்ற வார்த்தை பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த வண்டியைச் சுற்றிலும் விலையுயர்ந்த துணியாலான ஓர் அகன்ற திரை தொங்க விடப்பட்டிருந்தது. அதில், 'அத்யுத்தோரியோ தேயி ஆல்த்திஸிமி, பாத்ரிஸ் எத் ஃபீலியி, எத் ஸ்பீரித்துஸ் சாங்க்தி - பிதா, சுதன், பரிசுத்த ஆவியாகிய மகா உந்நதரான சர்வேசுரனின் உதவியுடன்' என்ற வாசகம் காணப்பட்டது.

பொன்னும், இரத்தினங்களும் மின்ன, அந்த வண்டி சிறுவர் களின் நடுவில் வந்து நின்றது. உத்தரவு கொடுக்கப்பட்டவுடன் இளம் சிறுவர்களில் ஐநூறு பேர் அதனுள் ஏறினார்கள். எண்ண முடியாத அந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களில் இந்த ஒரு சில நூறு பேர் மட்டுமே இன்னும் மாசற்றவர்களாக இருந்தார்கள். 


பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பியவர்கள்

எந்த வழியாகச் செல்வது என்று டொன் போஸ்கோ தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்க, ஓர் அகன்ற, சமதளமான, ஆனால் முட்கள் நிறைந்த ஒரு சாலை அவர் முன் திறந்தது. திடீரென வெண்ணாடை அணிந்தவர்களும், ஆரட்டரியில் இருந்த போது உயிர் துறந்தவர்களுமான ஆறு முன்னாள் மாணவர்களும் அங்கே தோன்றினார்கள். அவர்கள் மற்றொரு மிக அழகான கொடியைப் பிடித்திருந்தார்கள். அதில் “பெனித்தெந்த்ஸியா - தவம்” என்று வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சிறுவர் கூட்டத்தின் முன்பாகத் தங்களை இருத்திக் கொண்டார்கள். இந்தக் கூட்டம் முழு வழியையும் நடந்தே கடக்க வேண்டியதாக இருந்தது. புறப்படலாம் என்று சமிக்ஞை காட்டப்பட்டதும், பல குருக்கள் அந்த வண்டியின் முன்பக்கத்தைப் பிடித்துக் கொண்டு வழிகாட்டியபடி செல்ல, வெண்ணாடை அணிந்த ஆறு சிறுவர்களும், ஒட்டு மொத்த சிறுவர் கூட்டமும் அவர்களைப் பின்தொடர்ந்தது. வண்டியில் இருந்த சிறுவர்கள் “லௌதாத்தே புவேரி தோமினும் - குழந்தைகளே, ஆண்டவரைப் புகழுங்கள்” (சங்.112:1) என்ற பாடலைப் பாடத் தொடங்கினார்கள். அவர்களுடைய குரல்கள் வர்ணிக்க முடியாத இனிமையுள்ளவையாக இருந்தன.

டொன் போஸ்கோ அவர்களுடைய பரலோக இசையால் வசீகரிக்கப்பட்டவராக, தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தார். ஆனால் ஏதோ உள்ளுணர்வால், எல்லாச் சிறுவர்களும் பின்தொடர்ந்து வருகிறார்களா என்று பார்ப்பதற்காக அவர் திரும்பினார். ஆனால் மிக ஆழமாக வருத்தமடையும்படியாக, பலர் பள்ளத்தாக்கிலேயே தங்கி விட்டதையும், இன்னும் பலர் திரும்பிச் சென்று விட்டதையும் அவர் கவனித்தார். இதனால் இருதயம் உடைந்தவராக, தம்மைப் பின்தொடரும்படி இந்தச் சிறுவர்களை வற்புறுத்தும்படியாகவும், வழியில் அவர்களுக்கு உதவும்படியாகவும் திரும்பிச் செல்ல விரும்பினார். ஆனால் அப்படிச் செய்ய முடியாதபடி, அவர் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டார். “அந்தப் பரிதாபத்திற்குரிய சிறுவர்கள் இழக்கப்பட்டு விடுவார்கள்” என்று அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

"அவர்களுடைய நிலை இன்னும் மோசமானது” என்று அவருக்குச் சொல்லப்பட்டது. “அவர்களும்தான் அழைப்பைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் உன்னைப் பின்செல்ல மறுத்து விட்டார்கள். அவர்கள் தாங்கள் பயணிக்க வேண்டிய சாலையைக் கண்டார்கள். அவர்களுக்கும் இரட்சிக்கப்பட வாய்ப்பிருந்தது.”

டொன் போஸ்கோ வற்புறுத்தினார், கெஞ்சினார், இரந்து மன்றாடினார். ஆனால் பயனில்லை.

“நீயும் கீழ்ப்படிய வேண்டும்” என்று அவருக்குச் சொல்லப் பட்டது. ஆகவே அவர் தொடர்ந்து நடக்க வேண்டியதாயிற்று.