இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரி நமக்கு அவசியமாயிருப்பது ஏன்?

7. (1) மாமரி மட்டுமே கடவுளிடத்தில் தனக்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வரப்பிரசாதத்தைக் கண்டடைந்திருக்கிறார்கள். பிதாப்பிதாக்களும், தீர்க்க தரிசிகளும் பழைய ஏற்பாட்டின் அர்ச்சிஷ்டவர்கள் அனை வரும் இந்த வரப்பிரசாதத்தைக் கண்டடையவில்லை.

8. (2) எல்லா வரப்பிரசாதங்களுக்கும் காரண கர்த்தாவையே மாமரி தன் உதரத்தில் கற்ப்பந்தரித்து அவருக்கு உயிரளித்தார்கள். ஆகவே வரப்பிரசாதத்தின் மாதா என்று அழைக்கப்படுகிறார்கள். Mater gratiae.

9. (3) உத்தமமான ஒவ்வொரு கொடையும், ஒவ்வொரு வரப்பிரசாதமும், அவற்றின் அடிப்படை மூலத்திலிருந்து வருவதுபோல், அவை புறப்படும் ஸ்தானமாகிய பிதாவாகிய சர்வேசுரன் மரியாயிடம் தம் குமாரனை ஒப்படைத்தபோது, வரப்பிரசாதங்கள் யாவற்றையுமே அவர்களிடம் ஒப்படைத்துவிட்டார். அதெப்படியென்றால் அர்ச். பெர்னார்ட் உரைப்பது போல், "தம் திருக்குமாரனோடும், அத்திருக்குமாரனிலும் கடவுள் தம் சித்தத்தையே மரியாயிடம் கொடுத்து விட்டார்."

10. (4) கடவுளின் சகல வரப்பிரசாதங்களும் கொடை களும் மரியாயின் கரங்கள் வழியாகவே கொடுக்கப்படும் படியாக கடவுள் மரியாயை தம் வரப்பிரசாதங்களின் பொக்கிஷதாரியாகவும், ஆண்டு நடத்துகிறவராகவும், விநியோகிப்பவராகவும் தெரிந்து கொண்டார். மேலும் அர்ச். பெர்னார்டின் என்பவர் படிப்பிப்பது போல், அவற்றின் மீது தான் பெற்றுள்ள அதிகாரத்தின்படி, நித்திய பிதாவின் வரப்பிரசாதங்களையும், சேசுகிறீஸ்துவின் புண்ணியங்களையும், பரிசுத்த ஆவியின் வரங்களையும் மாமரி, தான் விரும்புகிறவர்களுக்கு, தான் விரும்புகிற சமயத்தில், தாம் விரும்பும் அளவில் கொடுக்கிறார்கள்.

11. (5) இயற்கை நியதிப்படி ஒரு குழந்தைக்கு தந்தையும், தாயும் இருப்பது போலவே வரப்பிரசாத நியதிப்படி திருச்சபையின் உண்மையான ஒரு குழந்தைக்கு கடவுள் தந்தையாகவும், மாமரி தாயாகவும் இருப்பது அவசியம். கடவுளைத் தன் தந்தையாகக் கொண்டிருப்பதாகப் பெருமையுடன் கூறும் ஒருவன் மாமரிமீது ஒரு உண்மையான குழந்தைக்குரிய அன்பு கொண்டிராவிட்டால் அவன் ஒரு ஏமாற்றுக்காரனாயிருக்கிறான்; அவனுடைய தகப்பனும் பசாசுதான்.

12. (6) தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் சிரசாகிய சேசு கிறீஸ்துவை மாமரி உருவாக்கியபடியால் அந்த சிரசில் அங்கங்களாகிய கிறீஸ்தவர்களை உருவாக்குவதும் மாமரியின் அலுவலேயாம். ஏனென்றால் அங்கங்கள் இல்லாத சிரசையோ, சிரசு இல்லாத அங்கங்களையோ ஒரு தாய் உருவாக்குவதில்லை. 

ஆகவே வரப்பிரசாதமும் உண்மையும் நிறைந்தவரான சேசு கிறீஸ்துவின் அங்கமாக ஆக விரும்புகிற ஒருவன், சேசு கிறீஸ்துவின் வரப்பிரசாதத்தின் மூலம் மரியாயிடம் உருவாக வேண்டும். சேசு கிறீஸ்துவின் உண்மையான அங்கங்களாயிருக்கும் தன் பிள்ளைகளுக்கு அளிக்கும் பொருட்டு மாமரி அவ்வரப்பிரசாதத்தைப் பூரணமாகப் பெற்றுள்ளார்கள்.