இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞான உணர்த்துதல் - முகவுரை.

அதிசயிக்கத்தக்க கல்வியறிவினாலும் அருந்தவ நன்னிலையினாலும் அலங்காரமுற்ற செந்தமிழ்ச் செய்யுளின் சிறந்த மாட்சிமையினாலும் இத்தேசம் எங்கும் மங்கா ஒளி பொருந்திய புகழோடு விளங்கிய வீரமாமுனிவர் இந்தப் புத்தகத்தை எழுதினார் என்கிற செய்தியை முன்னமே சிலர் அச்சில் பதித்துப் பிரசித்தப் படுத்தினார்கள்.

இதனை எழுதியவர் அவர்தானா அல்லது வேறொரு அறிஞரா என்று சிலருக்கு சந்தேகம் இருந்தாலும், தமிழ் இலக்கணப் புலமையில் தேறிய விற்பன்னர் அநேகர் இந்தப் புத்தகம் வீரமாமுனிவர் எழுதியது என்று நிச்சயித்தது, இதனை முக்கியப்படுத்துகிறதற்குப் போதுமென்று எண்ணுவதுமன்றி, இதனில் அடங்கிய ஆத்தும மருந்தாகும் சுகிர்த போதகம் யாருக்கும் அதன் மேல் தகுந்த விருப்பத்தையும் ஞானப் பயனையும் உண்டாக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை.

ஏக மெய்யான கடவுளால் படைக்கப்பட்டு உத்தம ஒழுக்கத்தினால் நித்திய மோட்ச மகிமைக்கும், அளவற்ற ஆனந்த பாக்கியத்துக்கும் பாத்திரவான்கள் ஆகும் பொருட்டு, இவ்வுலகமாகிய அந்நிய நாட்டில் சில நாளுக்கு வைக்கப்பட்ட மனிதர் பசாசின் தந்திரத்தினாலும், இவ்வுலகத்தின் இழிவுள்ள பொய்யான சுகங்களினாலும் மதிமயங்கி, தங்களைப் படைத்த கர்த்தாவையும், தங்களுக்கு நியமிக்கப்பட்ட மேலான கதியின் பேரின்பத்தையும் மறந்து, பாவச் சேற்றில் அமிழ்ந்து, நித்தியக் கேட்டிற்கு உள்ளாகப் போகிறார்கள்.

இதைக் கண்டு மனம் இரங்கி இந்நூலை இயற்றிய வேத அறிஞர், அவர்களுடைய மயக்கத்தைத் தெளிவித்து, பாவத்திலும், அதனால் வருகிற நித்திய சாவிலும் நின்று நீங்கி, அவர்கள் ஆத்துமம் மீட்படையத்தக்கதாக மனிதர்களின் ஆத்துமத்தின் ஞான மேன்மையையும், உத்தம கதியையும் காண்பித்து, அவைகளைப் போக்கடிக்கிற பாவத்திலுள்ள கொடூரம், கேடு முதலிய தின்மைகளை வெளிப்படுத்தி, அதை உடனே பரிகாரம் செய்ய வேண்டியதென்று இதிலே தெளிவாய்க் காட்டுகிறார்.

மனிதர்களை மயக்குவிக்கிற இவ்வுலக வாழ்வுகள் அநித்தியமும், விழலும், அழிவும் ஒழிய வேறொன்றுமில்லை என்றும் அவைகளை மனிதர் சுகிக்கிற வேளையில் பயங்கர மரணம் அவர்களைத் தொடர்ந்து, அவர்களுடைய மாயச் சுகமெல்லாம் அழித்து ஒழித்து, அவர்களைத் தேவ நீதியின் தீர்வைக்குக் கொண்டு போய்விடுமென்றும், அப்போது பாவிகள் ஆதரவு இல்லாமல் மிகவும் திகிலடைந்து, தங்கள் அசுத்த அக்கிரமங்களினால் வெட்கிப் புலம்பி பய நடுக்கத்தோடு நிற்க, பரம கர்த்தர் தமது பயங்கரமுள்ள நீதியோடு அவர்கள் நடத்தையெல்லாம் பரிசோதித்து, அவர்கள் தமக்குச் செய்த நன்றிகெட்ட தோஷத் துரோகங்களுக்குத் தக்க தீர்வை விதிப்பாரென்றும் வெளியரங்கமாகக் காண்பிக்கிறார்.

பின்னும் நரகத்தைத் திறந்தாற் போலே அதன் பாதாளங்களில் பாவிகளை வாதிக்கிற அணையாத நெருப்பின் கொடூரத்தையும், எண்ணிக்கையும் முடிவுமில்லாத மற்ற நிர்ப்பந்த வேதனையையும் வெளிப்படுத்துகிறார். கடைசியாய் நல்லோர்களுக்கு மோட்சத்திலுள்ள ஆனந்த பேரின்ப பாக்கியத்தையும், அதன் அதிசயமான சிறப்பு ஒளி அலங்காரத்தையும் கண்முன்பாக வைத்துக் காட்டியது போல மிகவும் உருக்கமுள்ள விதமாய் விவரித்து உரைக்கிறார்.

இப்புத்தகத்தை எழுதிய ஞானி தமது புலமைத் திறத்தைக் காட்ட விரும்பாமல் அன்புள்ள தாயானவள் தன் பிள்ளைக்குப் பால் ஊட்டி வளர்த்து நடத்துகிறது போல, இதிலே மிகுந்த அன்பினால் யாவருக்கும் பரம் வேத வாக்கியங்களை ஞானப் பாலாக ஊட்டி, மேலான உணர்ச்சிகளை வெளியரங்கமாகத் தெளிவித்து, எல்லோரையும் பேரின்ப பரகதியின் உத்தம நெறியில் நடப்பிக்க விரும்பி இதனை எழுதித் தந்தார்.

ஆகையால் சத்தியத்தையும், மோட்ச பேரின்பத்தையும் விரும்பி, சகல நிர்ப்பாக்கியங்களுக்கும் காரணமான பாவ துர்க்குண வெள்ளத்திற்கு அணைகட்டி வைத்து அடைக்கவும், சகல பாக்கியத்துக்கு நெறியாகிய புண்ணிய வழியில் உங்களை நிறுத்தி நடப்பிக்கவும் நியமிக்கப்பட்ட இந்த உத்தம புத்தகத்தை தக்க பக்தி கவனத்தோடு வாசித்து ஆராய்ந்து இரட்சணியம் அடைவீர்களாக.

இதனை யாவரும் எளிதில் வாசித்து உணர வேண்டி, இலக்கண விதிப்படி எழுத்துக்களும் சொற்களும் மிகுந்த புணர்ச்சி விகாரங்கள் இன்றிச் செந்தமிழுடன் கொடுந்தமிழ் மொழிகளும் சில வாக்கியங்களில் ஒருமையில் பன்மையும், பன்மையில் ஒருமையும் பிரயோகிக்கப்பட்டுள்ளன.