இரை தேடி அலைந்த ஓநாய்

மீளவும், அர்ச். சின்னப்பர், தாம் மனந்திரும்புவதற்கு முன், கிறீஸ்துவின் திருச்சபையைத் துன்புறுத்துவதையே நோக்கமாகக் கொண்டு இரை தேடித் திரியும் ஓநாயைப் போல் எங்கும் சுற்றித் திரிந்தார். தம் எதிர்கால தெய்வீக எஜமானருடைய கைவேலையாகிய திருச்சபையை எப்பாடுபட்டாவது அழித்தே தீர்வது என்ற ஒரேயொரு எண்ணம் மட்டுமே அவரை ஆக்கிரமித்திருந்தது.

தமது இந்தத் தீய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும்படியாக, அவர் இரட்சகரைப் பின்செல் வோரைக் கைது செய்யவும், அவர்களைத் தண்டிக்கவும் அதிகாரம் பெற்று தமாஸ்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வாக்குக்கெட்டாத கருணையுள்ள வார்த்தைகளை சேசுநாதர் அவரிடம் பேசினார்: “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?'' என்று.

அந்தக் கொடூரமுள்ள மனிதரின் இருதயத்தை இந்த வார்த்தைகள் ஊடுருவி, அந்த ஓநாயை ஒரு செம்மறிப் புருவையாகவும், வெறுப்பை நேசமாகவும், துன்புறுத்துபவ ராக இருந்தவரை அப்போஸ்தலராகவும் மாற்றின.

சின்னப்பர் நடுக்கமுற்றவராகவும், மனஸ்தாபத்தால் நிறைந்தவராகவும், தாழ்ச்சியோடு, “ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டுமென்று தேவரீர் சித்தமாயிருக்கிறீர்?'' என்று கேட்டார்.

“நீ எழுந்து பட்டணத்துக்குள்ளே போ. நீ செய்ய வேண்டியது இன்னதென்று அங்கே உனக்குச் சொல்லப் படும்'' என்று நமதாண்டவர் அவருக்குப் பதிலளித்தார்.

சேசுநாதர் சின்னப்பரோடு பேசிக் கொண் டிருந்தார். நேரடியாகவே அவர் சின்னப்பரிடம், அவர் என்ன செய்ய வேண்டுமென்று தாம் விரும்புகிறார் என்பதைச் சொல்லியிருக்க முடியும், அல்லது சின்னப்பரின் ஆத்துமத்தை ஒளியால் நிரப்பி, தமது திருச்சித்தத்தை அவருக்கு வெளிப்படுத்தியிருக்கவும் அவரால் முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, அவர் சின்னப்பரைத் தமது ஊழியராகிய அனனியாவிடம் அனுப்பினார்.