இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே!

உலகின் வடிவை, கடலின் ஆழத்தை, காற்றின் வேகத்தை, மின்சாரத்தின் சக்தியை நிர்ணயித்துள்ளனர் அறிஞர். ஆனால் “தாய்” என்ற இரு எழுத்துக்களாலான வார்த்தையின் நிறை சக்தியை, பொருளின் ஆழத்தை, அதன் அகலத்தை, அதன் பரப்பை அளந்து அறியக் கூடியவர் யாரோ? 

வானத்து விண்மீன்களைப் போல எண்ணிலடங்கா மக்கள் நிறைந்த இப்பரந்த உலகில் நாம் குழந்தைகளாக இருந்த பொழுது நமது தாயைவிட நமக்கு அறிமுகமானவர் வேறு யார்? 

குழந்தைக்கு ஊண், உறக்கம், நாடகம், நாட்டியம், வேடிக்கை, விளையாட்டு சகலமும் அதன் தாயே. குழந்தையின் விளையாட்டுப் பொம்மையும், மருந்தும், விருந்தும், உற்ற நண்பனும், கைதேர்ந்த வைத்தியனும், குருவும் ஏன் அதன் ஆலயம் கொண்ட அன்புக் கடவுளும் அதன் தாயே. தாயின் பெருமையே பெருமை.

ஆம். “தாய்” என்னும் சொல் இனிமை மிக்க சொல். நமது வாழ்க்கையில் எதிர்ப்படும் எத்தனையோ பொருட்களை, எத்தனையோ சிருஷ்டிகளை நாம் நேசிக் கிறோம். அவைகளின் மேல் நமது அன்பைப் பொழிகிறோம். அவைகளும் அன்புக்கு அன்பு காட்டுகின்றன. இவ்வன்பு எல்லாவற்றிலும் தூய்மையான அன்பு, இனிமை பொருந்திய அன்பு, நமது இருதயங்களைக் கொள்ளை கொள்ளும் அன்பு, “தாயன்பு.” 

தாய் ஒருத்தியே நம்மை முற்றிலும் அறிந்து நேசிப்பவள். தாயன்பின் தனிப் பெருமையை நிரூபித்தல் அவசியமன்று. நமது அனுபவமே அதற்குப் போதிய சான்று. தன்னையே தியாகம் செய்து, தன்னுடல் அமுதை அளித்து வளர்த்த தன் மகவிடம் ஓர் தாய் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்: அன்பு; அன்புக்குப் பிரதியன்பு. நமது அன்பிற்குப் பாத்திரமான வள் நம் தாய். நமது அன்பைப் பெற அவளுக்கே முதல் உரிமை உண்டு; தாயன்பின் தனி உரிமை இது.

நம்மைப் பெற்றெடுத்த தாயைவிட பன்மடங்கு அன்புள்ள ஒரு தாய் உண்டு. எனவே நமது அன்பைப் பெறவும் அவர்களுக்குப் பன்மடங்கு அதிக உரிமை உண்டு. மனுவுருவெடுத்த நாதன் சேசுவை ஈன்ற தேவதாய் அத்தாய். அவர்கள் நமது பூலோகத்தாய் நம்மை நேசிப்பதை விட ஆயிரமாயிரமுறை அதிகமாக நேசிக்கின்றார்கள். பெற்ற தாய் நம்மை மறந்தாலும் நம்மை மறக்காதவர்கள் தேவதாய். தாய் தூற்றினும் நம்மை ஆற்றித் தேற்றுபவர்கள் இவர்கள். எனவே நம் அன்பிற்கு முற்றும் உரியவர்கள் தேவதாய்.

அர்ச். கன்னிமாமரி கிறீஸ்துநாதரின் தாய் என்னும் சத்தியத்தை எல்லோரும் அறிவர். அவர்கள் நமக்கும் தாய் என்னும் உண்மையையோ அநேகர் அறியார்; அறிந்தும் அதைச் சிந்திப்பவரோ வெகு சிலர். 

தேவமாதா சேசுநாதரைப் பெற்றெடுத்த போதே நமக்கும் தாயானார்கள். எவ்விதமெனில் சேசுநாதர் நமது ஞான சரீரத்தின் (Mystical body) சிரசு; நாம் அத்திருச்சிரசின் அங்கங்கள். தேவமாதா ஞான சரீரத்தின சிரசாகிய சேசுநாதரை ஈன்றபொழுதே, அதன் அங்கங்களாகிய நம்மையும் ஈன்றார்கள். 

மேலும், சேசுநாதர் தமது தாயை நமக்குத் தந்த போது, தாய்க்குரிய அன்பையும் அவர்களுக்குத் தந்தருளினார். அவ்விதமே நம்மைத் தம் தாயின் பிள்ளைகளாகச் செய்தபோதே அத்தாய் மட்டில் பிள்ளைக்குரிய அன்பையும் நமக்குத் தந்தருளினார். அவர்களுடைய அன்பு நம் எல்லோரையும் அரவணைக்கிறது. அன்று கல்வாரியில் நல்ல கள்ளன் மனந்திரும்பிப் பரகதி அடையப் பிரார்த்தித்தது அவர்களுடைய தாயன்புதான். 

அப்போஸ்தலர்களுக்கு ஆறுதல் அளித்ததும் அவ்வன்புதான். முதல் கிறீஸ்தவர்களைப் பாதுகாத்ததும் அவ்வன்பே. மரித்து, ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்கு ஆரோபணமான பிறகும் நம்மை மறவாமல் நமக்காகப் பரம பிதாவிடம் மனுப் பேசுவதும் தேவதாயின் தாய்ப் பாசம்தான்.

தன் வயிற்றுப் பிள்ளைகளைப் போல் எண்ணி நம்மை நேசிப்பதால், அவர்கள் நமக்குச் செய்ய மறுப்பது ஒன்றுமில்லை. ஆத்தும சத்துருக்களோடு நாம் செய்யும் அனுதினப் போராட்டத்தில் நமக்கு உறுதுணை ஈந்து, நம்மை அவர்கள் கையிலிருந்து காப்பாற்றுகிறவர்கள் அவர்கள்; ஆபத்தில் நம்மைப் பாதுகாக்கிறார்கள்; துன்பத்தில் தேற்றுகிறார்கள். ஆத்தும இரட்சணிய அலுவலில் வழிகாட்டுகிறார்கள். 

தேவதாய் நம் மீது வைத்திருக்கும் அன்பு, கருணை, கவலை எவ்வளவென்றால் அவர்களை அண்டினோர், அவர்களுடைய உதவியை நாடினோர், உதவி அடையாமல் போனதில்லை. இதற்கு தேவதாயின் பக்தரான அர்ச். பெர்நார்து சாட்சி பகருகிறார். “மிகவும் இரக்கமுள்ள தாயே, உமது அடைக்கலமாக ஓடி வந்து உமது உபகார சகாயங்களை இரந்து மன்றாடின ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை.” 

நமக்கு வரும் ஒவ்வொரு வரப்பிரசாதமும் தேவதாய் வழியாகவே வருகிறதென்று திருச்சபை போதிக்கிறது. எனவே நம்மைப் படைத்துக் காப்பாற்றி வரும் சர்வேசுரன் மட்டில் நாம் நம்பிக்கை கொள்ளுவது போல நமது பரலோக அன்னை யின் உதவியிலும் தளரா நம்பிக்கை வைத்தல் முறையே.

தேவதாய் நம் தாய். பெற்ற தாயினும் பன்மடங்கு அன்புடைய தாய். அவர்கள் வழியாகவே சகல தேவ வரங் களும், உதவி ஒத்தாசைகளும் நம்மை வந்தடைகின்றன. இவ்விதம் “தாய்” என்ற முறையிலும், “வரப்பிரசாதத்தின் வாய்க்கால்” என்ற முறையிலும் அவர்கள் நமது அன்புக் குப் பாத்திரமானவர்கள் என்று கூறினோம். இனி, அவர்கள் தனது ஆத்தும சரீர அழகின் மேன்மையாலும் மானிடரின் அன்பைப் பெறத் தகுதியுள்ளவர்கள் என்பதை எடுத்துக் காட்டுவோம். 

“சர்வேசுரனுக்கு அடுத்தாற் போல் அழகு மிக்கவர் நீரே; தூதர், அதிதூதர் முதலிய நவ விலாச சம்மனசுக்களின் அழகு உமக்கு முன் மங்குகிறது” (Serm. de laudibus Virg.) என்று அர்ச். எபிபானியுஸ் மாமரியின் அழகை வர்ணிக்கிறார். பரிசுத்த தூதர்களின் அழகே மங்குகிறதென்றால் பாவக் கறை பிடித்த மனிதனின் அழகு என்னவாகும்?

மரியாயின் இத் தனி அழகு அவர்களது ஆத்துமத்திலிருந்தும், சரீரத்திலிருந்தும் புறப்படுகிறதென்று சொல்லலாம். தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்திலுள்ள ஒரு ஆத்து மத்தின் அழகு நமது கண்களைப் பறிக்க வல்ல காந்தி யுடையது; ஏனெனில் நமது ஆத்துமம் தேவனின் சாயலைக் கொண்டது. பாவமற்ற ஒரு ஆத்துமத்தின் அழகே இத்தன்மையது என்றால், பாவமே இல்லாது புண்ணியங்கள் பல ஜொலிக்கும் ஒரு தூய ஆத்துமத்தின் அழகு எத்தகையதோ! 

இவ்விரு ஆத்துமங்களைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்து, பாவ நிழலே படியாததும், சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்றதும் தேவனின் விசேஷ அன்பைப் பெற்றதுமான ஓர் ஆத்துமத்தின் அழகு எத்தன்மையதோ! அதன் அழகு செளந்தரியத்தை வர்ணித்துரைக்கவும் இயலுமோ? படைக்கப்பட்ட சிருஷ்டிகளில் இவ்வழகைப் பெற்றவர்கள் ஒருவர் மட்டுமே. அவர்கள்தான் தேவதாய்; நமது தாய்!

சுபாவத்துக்கு மேலான இவ்வழகின் இருப்பிடம் கன்னிமரியாயின் ஆத்துமம். அவர்கள் உற்பவித்த போதே ஜென்மப் பாவ தோஷமின்றி உற்பவித்தார்கள். அத்துடன் அவர்களது ஆத்துமம் சகல தேவ வரங்களும் சகல புண்ணி யங்களும் நிறைந்தொளிர்ந்தது. இத்தகைய ஆத்துமத்தின் இருப்பிடம் அவர்களது சரீரம். மனித அவதாரமெடுத்த தேவனைத் தாங்கி இருந்ததும் இச்சரீரமே; உலக இரட்சகருக்குப் பாலமுதூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்ததும் கன்னிமரியாயே. 

இயற்கையாகவே கன்னிமரியம்மாள் எழில் மிக்கவர்கள் என்று பலர் கூறுகின்றனர். இவ்விதம் தேவனின் விசேஷ அருளால் ஆத்தும சரீர அழகில் மனிதருள் ஒப்புவமையற்றவர்கள் கன்னிமாமரி. அழகான பொருட்களை இயற்கையாகவே விரும்பும் நாம், சகல பொருட்களிலும் தலைசிறந்த அழகு வாய்ந்த கன்னிமரியாயை விரும்பி நேசிப்பது இயற்கையே.

நமது அன்பிற்கு முழு உரிமையுள்ளவர்கள் நம் தாய், நம் மோட்சத்தாய். நமது அன்பிற்கு முற்றிலும் தகுதி உள்ளவர்கள் அவர்கள். எனினும் அவர்களது அன்பின் தன்மையை உணராது உலக சிருஷ்டிகளின்மேல் தகாத அன்பு கொண்டிருப்போமானால், நமது தவறை உணர்ந்து அன்னையின் அன்பில் வளர ஆவன செய்வோம். 

நிழல் போல மறையும் உலகப் பொருட்களின் அன்பில் தகாத ஆசை வையாது, நிலையுள்ள அன்பின் இருப்பிடமான தேவனிடம் நம்மை இழுத்துச் செல்லும் தேவ தாயின் அன்பில் ஆசைகொள்ளுவோம். நாம் அவர்களை நேசிக்கிறோம் என்பதை நமது கிரியைகளில் காண்பிப் போம். அவர்களுக்கு உகந்த கற்பு, கீழ்ப்படிதல், தாழ்ச்சி முதலிய புண்ணியங்களை நாமும் அனுசரிப்போம்.

“தாயே! தேவதாயே! எங்கள் தாயே! தேவனின் விசேஷ அன்பையும் அருளையும் பெற்றவர் நீரே! தேவனால் எங்களுக்குத் தாயாகத் தந்தருளப்பட்டவர் நீரே! நாங்கள் உமது பிள்ளைகள். எங்கள் அன்பைப் பெற உரிமையுள்ளவர் நீரே. உமது ஆத்தும சரீர அழகு எங்களை உமதுபால் இழுக்கின்றது. 

உலகமோ நீர்க்குமிழி போல நிலையற்ற அன்பில் எங்களை வசீகரிக்கின்றது. உலகப் பொருட்களில் நாங்கள் தகாத பற்றுதல் வைக்காதிருக்க உமது அன்பால் எங்களை உம்மிடம் சேர்த்தருளும். உம்மை என்றும் நேசிக்க ஆசிக்கின்றோம். உம்மைப்போல ஆன்ம அழகை நேசிக்கவும், உமது உதவியால் எங்கள் ஆத்தும அழகை நாளுக்கு நாள் அதிகரிக்கவும், உமது அன்பை எங்கள் மீது பொழிந்தருளும், அம்மா!!” 


மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!