இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரி வழியாகவே பரிசுத்த ஆவியானவர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை உற்பத்தியாக்குகிறார்

13. (7) பரிசுத்த ஆவி மரியாயை வரித்துக் கொண்டு, தன் தலைசிறந்த கைவேலையாகிய அவதரித்த வார்த்தையான சேசுகிறீஸ்துவை மரியாயிலும், மரியாயின் வழியாகவும், மரியாயிடத்திலும் தோற்றுவித்தார். தன் பத்தினியான மரியாயை பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் எதையும் மறுத்ததில்லை. ஆகவே இப்பொழுதும், அவர் ஒரு பரம இரகசியத் தன்மையில் -ஆனால் உண்மையான முறையில் - தெரிந்து கொள்ளப்பட்டவர்களை மரியாயிடத்திலும், மரியாயின் வழியாகவும் தோற்றுவிப்பதைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

14. (8) நம் ஆன்மாக்களுக்கு உணவூட்டுவதற்காகவும் அவைகளைக் கடவுளில் வளரச் செய்வதற்காகவும், அவைகளின்மீது ஒரு தனி உத்தியோகத்தையும், வல்லமை யையும் மாமரி பெற்றுள்ளார்கள். அர்ச். அகுஸ்தீன் இப்படிக் கூட கூறுகிறார்:* முன்குறிக்கப்பட்டவர்கள் அனைவரும் இவ்வுலக வாழ்வின்போது மரியாயின் உதரத்துள் மறைந்து இருக்கிறார்கள். இந்த நல்ல தாய் நித்திய வாழ்வுக்கு அவர்களைப் பெற்றெடுக்கும் வரையிலும் அவர்கள் உண்மையான பிறப்படைவதில்லை. ஆகவே, குழந்தையானது தாயிடமிருந்து தன் எல்லா போஷணையையும் பெற்றுக் கொள்வது போல முன்குறிக் கப்பட்டவர்கள் தங்கள் சகல ஞான போஷணையையும், பலத்தையும் மரியாயிடமிருந்தே பெற்றுக் கொள் கிறார்கள். தாய் தன் குழந்தையின் பலவீனத்துக்குத் தக்க உணவூட்டுவது போல மரியாயும் ஊட்டுகிறார்கள்.

15. (9) என் மகளே! "யாக்கோபில் நீ வாசஞ்செய் -- In Jacob inhabita” என்று பிதாவாகிய சர்வேசுரன் மரியாயை நோக்கியே உரைத்தார். அதாவது யாக்கோபு என்பவரால் முன் அடையாளமாகக் காட்டப்பட்ட என்னுடைய முன்குறிக்கப்பட்டவர்களிடம் உன் வாசஸ்தலம் இருப்பதாக என்றார். சுதனாகிய சர்வேசுரன், "என் அன்புத் தாயே! இஸ்ராயேலில் உங்கள பிதிர் உரிமை யைக் கொள்ளுங்கள் - In Israel haereditare' என்று மரியாயிடமே கூறினார். பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன், "என் பிரமாணிக்கமுள்ள பத்தினியே! என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களிடம் வேரூன்றுவாயாக - In electis meis mitte radices" என்று மரியாயிடமே சொல்லியுள்ளார். ஆகவே, தெரிந்தெடுக்கப்பட்டு முன்குறிக்கப்பட்டவர்கள் யார் யாரோ, அவர்களுடன் மாமரி இருந்து அவர்கள் ஆன்மாவில் வாசஞ் செய்வார்கள். அத்தகையோர் ஆழ்ந்த தாழ்ச்சியிலும், எரிகின்ற அன்பிலும் எல்லாப் புண்ணியங்களிலும் மாமரி தங்கள் ஆன்மாவில் வேரூன்ற விட்டுக் கொடுப்பார்கள். 

எண் 15: கடவுள் எங்குமிருப்பது போலல்லாது, மாமரி நல்லவர்களின் ஆன்மாக்களைக் காண்பதாலும், அவற்றில் செயல் புரிவதாலும் அன்பின் ஐக்கியத்தாலும் அவ்வான்மாக்களில் வாசஞ்செய்கிறார்கள்.

(a) தேவதாய் கடவுளிலே நம்மைக் காண்கிறார்கள். நம் ஆன்மாக்களின் தாயாக இருக்கிறார்கள். தன் பார்வையாலும் நினைவாலும் நம் ஆன்மாவின் மிக அந்தரங்கங்களையும் ஊடுருவிப் பார்க்கிறார்கள்.

(b) தேவ அன்னை நம்மிடத்திலும், நம்மாலும் செயல்புரிகிறார்கள். நாம் அடையும் சகல வரப்பிரசாதங்களுக்கும் மத்தியஸ்தியும் அவற்றை வழங்குகிறவர்களும் அவர்களல்லவா? தங்களுடைய மன்றாட்டாலும், புண்ணியங்களாலும் முன்மாதிரிகையாலும், இன்னும் நமக்களிக்கும் ஆலோசனையாலும் நம்மை நடத்திக் கொண்டு செல்லும் முறையாலும் அவர்களுக்கு நம்மீது ஒரு செயல்பாட்டுத் தன்மை உள்ளது.

(c) சுபாவத்துக்கு மேலான அன்பின் நிலை ஒன்று உள்ளது. தேவ இஷ்டப்பிரசாத நிலை என்று அது அழைக்கப்படுகிறது. நமதாண்டவராகிய சேசு கிறீஸ்துவுடனும் நம் ஞான அன்னையாகிய மரியாயுடனும் நாம் கொள்ளும் பரம அன்பின் ஐக்கியம் அதனுள் அடங்கியுள்ளது. "அன்பானது நேசிப்பவரை தன் நேசரிடமும், நேசிக்கப்படுகிறவரை நேசிக்கிறவரிடமும் வாசஞ்செய்யச் செய்கின்றது" என்று அர்ச். தாமஸ் அக்வினாஸ் கூறுகிறார். (la ll ae qu. 28) சாதாரண இயல்பில் இப்படியானால் சுபாவத்துக்கு மேலான தன்மையில் இது எவ்வளவோ அதிக உண்மையாகும். * Sermo 208 inter opera S. Augustini.

16. (10) மரியாயைக் கடவுளின் உயிருள்ள அச்சு என்று அழைக்கிறார் புனித அகுஸ்தீன். --Forma Dei -- மாமரி அவ்வாறே இருக்கின்றார்கள். அவர்களிடத்தில் மட்டுமே கடவுள், தம் கடவுள் தன்மையின் இலட்சணம் எதையும் இழக்காமலே உண்மையான மனிதனானார். அவர்களிடம் மட்டுமே சேசுகிறீஸ்துவின் வரப்பிரசாதத்தால், மனித சுபாவத்துக்கு எவ்வளவு கூடுமோ அவ்வளவுக்கு, மனிதன் கடவுளாக உருவாக்கப்பட முடியும்.

அர்ச். அகுஸ்தீ ன்: Tract de Symbolo ad catechemenos.

சிற்பி ஒருவன் உயிருள்ளது போன்ற சிலையை அல்லது உருவத்தைச் செய்ய இரு வழிகள உள்ளன. அவன் தன் தொழில் திறமையையும் அறிவையும், தன் சக்தியையும் தேவையான கருவிகளையும் உபயோகித்து அவ்வுருவத்தை ஏதாவதொரு கடினமான உருவமற்ற பொருளிலிருந்து செதுக்கி எடுக்கலாம், அல்லது உருக்கப்பட்டு இளகிய அல்லது இளக்கமான பொருளை ஒரு அச்சில் வார்க்கலாம். முதலில் குறிப்பிட்ட முறை நீண்டதும் கடினமானதும், பல விபத்துக்களுக்குட்பட்டதுமாகும்: தவறாகக் கொடுக்கப்பட்ட சுத்தியல் அல்லது உளியின் அடி ஒன்று முழு வேலையையும் கெடுத்து விடக் கூடும். இரண்டாவது முறை சுருக்கமானது, எளிதானது, மெதுவானது. அச்சு மட்டும் சுத்தமானதாகவும், உருவத்தை அப்படியே பிரதிபலிப்பதாகவும் இருக்கு மானால் அதற்குக் கொஞ்ச உழைப்பும் குறைந்த செலவுமே தேவை; அதோடு உபயோகிக்கப்படும் பொருள் உருவம் ஏற்கக் கூடியதும், கலைஞனின் கரத்தை எதிர்க்காததாயும் இருப்பது அவசியம்.

17. பரிசுத்த ஆவியால் செய்யப்பட்ட கடவுளின் மேலான அச்சு மாமரியேயாம். தெய்வ மானிட ஐக்கியத் தால்* (Hypostatic Union) உண்மையான கடவுள் மனிதனை உருவாக்கவும், வரப்பிரசாதத்தினால் மனித தெய்வத்தை உருவாக்கவுமே இந்த அச்சு. இந்த அச்சில் கடவுள் தன்மையின் ஒரு அம்சம் கூட குறைப்படவில்லை. யார் யார் அதனுள் வார்க்கப்பட்டு, உருவாக்கப்பட தன்னை விட்டுக் கொடுக்கிறார்களோ, அவர்கள் மெய்யங் கடவுளாகிய சேசு கிறீஸ்துவின் சகல அம்சங்களையும் பெற்றுக் கொள்கிறார்கள். 

தெய்வ மானிட ஐக்கியம் என்பது கிறீஸ்துநாதரிடத்தில் தேவ, மானிட சுபாவங்கள் ஒரே தெய்வ ஆளிடம் ஒன்றித்திருந்ததைக் குறிக்கும்.

பரிசுத்த தமத்திரித்துவ மூன்று ஆட்களும் தேவ இஷ்டப்பிரசாதத்தால் நம் ஆன்மாவில் உறைந்த போதிலும், கிறீஸ்து நாதர் நம்மில் வாழ்கிறார் என அர்ச். சின்னப்பருடன் நாமும் சொல்லுகிறோம். இது சேசுவின் மனித சுபாவம் நம்மிடத்தில் பிரசன்னமாக இருக்கிறது என்ற கருத்தில் அல்ல, அவருடைய மனித சுபாவத்தின் பிரசன்னம் நற்கருணை என்னும் தேவ திரவிய அனுமானத்தை நாம் பெற்றுக் கொள்ளும்போதுதான் கிடைக்கிறது. சேசு கிறீஸ்து நாதர் நம்மிடம் வாழ்கிறார் என்பது அவரிடம் பூரணமாய் நிறைந்துள்ள வரப்பிரசாத வாழ்வில் நாம் பங்கடைகிறோம் என்பதனாலேயே, நம் அங்கங்களாயிருக்கிற ஞான சரீரத்தின் சிரசு சேசு கிறீஸ்துவாயிருக்கிறபடியால் அவரிடமிருந்தே நாம் ஞான உயிரைப் பெற்றுக் கொள்கிறோம். அவருடைய சொந்த செயல்பாட்டினாலேயே அவ்வுயிர் நம்மிடம் வளர்க்கப்படுகிறது. மேலும் வரப்பிரசாதத்தாலும் சுவீகாரத்தாலும் நாம் பிதாவாகிய சர்வேசுரனின் பிள்ளைகளாக அவருடைய "குமாரனுடைய சாயலுக்கு ஒத்தவர்களாவதற்கு முன்னியமகம் பண்ணப் பட்டிருக்கிறோம்'' (உரோ. 8:29).

இந்த வேலை மென்மையுடன், மனித பலவீனத்திற்கு ஏற்ற முறையில் அதிக வேதனையும், உழைப்பும் இல்லாமலும், நிச்சயமான முறையிலும், எல்லா மாயைகளிலிருந்து விடுபட்டதாயும் நடத்தப்படுகிறது. ஏனென்றால் பசாசானது மரியாயை ஒருபோதும் அணுகியதில்லை . ஒருபோதும் அணுகவும் செய்யாது. இறுதியாய், ஒரு பரிசுத்தமான பழுதற்ற முறையில், பாவமான ஒரு சிறு கறையின் நிழல் கூட இல்லாமல் அது நடைபெறுகிறது.

18. உருவாகும் தன்மையை முழுவதுமாய் பெற்று, முற்றிலும் பற்றற்று, முழுப் பணிதலுடன், தன் சொந்தத் திறமையில் நம்பிக்கை கொள்ளாமல், பரிசுத்த ஆவியின் செயலினால் அச்சு வார்க்கப்படும்படி தன்னையே மரியாயிடத்தில் ஊற்றிவிடும் ஒரு ஆன்மாவுக்கும், சிற்பியைப் போல் தன் சொந்தத் திறமையினாலும், சாமர்த்தியத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளவர்களிடம் அதிக சாதாரணமாய்க் காணப்படும் வழிகளின் மூலம் தன்னிடத்தில் சேசு உருவாக்கப்படும் ஒரு ஆன்மாவுக்கும் உள்ள வேறுபாடுதான் எவ்வளவு! இப்பிந்திய முறையில் எத்தனை கறைகள், குறைபாடுகள், மயக்கங்கள்! எவ்வளவு இருள், எவ்வளவு மனித இயல்பு! ஆனால் முந்திய முறை எவ்வளவு புனிதமானது! எவ்வளவு மோட்ச தன்மை யுள்ளது! எவ்வளவுக்கு கிறீஸ்துவைப் போல் இருக்கின்றது!

19. கடவுள், மகா பரிசுத்த கன்னி மாமரியிடம் இவ்வளவு மேலாய் உயர்வடைந்திருப்பது போல் அவர் தமக்குள்ளோ, தமக்குப் புறம்பாகவோ உயர்வடையும் ஒரு சிருஷ்டி இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப் போவதுமில்லை. மோட்சத்திலுள்ள அர்ச்சிஷ்டவர்களும், கெருபின் தூதர்களும், ஏன மிக உயர்ந்த செராபின்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல. 

கடவுளின் மோட்சமும் கடவுளின் சுதன் தன் அற்புதங்களை நிகழ்த்தி, தன் உடமையாக்கி, அதில் தன் மகிழ்வைக் காணும்படி வந்துள்ள உரைத்தற்கரிய அவருடைய உலகமுமாயிருப்பது மாமரியே! யாத்ரீகனான மனிதனுக்கு கடவுள் ஒரு உலகத்தை உண்டு பண்ணியிருக்கிறார். நாம் வாழும் உலகம் அது. மனிதனின் மகிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு ஒரு உலகத்தைப் படைத்திருக்கிறார். அது மோட்சம். கடவுள் தமக்கெனவே ஒரு உலகத்தைச் செய்துள்ளார், அதை அவர் மரியா என்றழைத்தார்! 

மரியாயென்னும் இவ்வுலகம் பெரும்பாலான பூவுலக மனிதர்களுக்குத் தெரியாது. மேலே மோட்சத்திலுள்ள சம்மனசுக்களுக்கும், அர்ச்சிஷ்டவர்களும் கூட அதைக் கண்டுபிடிக்க இயலாது. அவர்கள், கடவுளைத் தங்களுக்கு மிக மேலாய் உயர்த்தப்பட்டவராயும் அவருடைய உலகமான மரியாயில் மறைந்தவராயும் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்து இடைவிடாமல் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

20. மரியாயின் இரகசியத்தை பரிசுத்த ஆவியானவர் இப்பூமியில் எந்த ஆன்மாவுக்கு வெளிப்படுத்தி அதைக் கண்டுபிடிக்கும் வரப்பிரசாதத்தைக் கொடுப்பாரோ,

எந்த ஆன்மா அடைக்கப்பட்ட இத்தோட்டத்தினுள்ளே செல்லும்படி அவர் அதைத் திறந்து கொடுப்பாரோ,

வரப்பிரசாதத்தின் ஜீவிய தண்ணீரை ஆழ்ந்த பருகுதலாகப் பருகும்படி இம்முத்திரையிடப்பட்ட சுனையில் அள்ள எந்த ஆன்மாவை அதனிடம் வரச்செய்வாரோ, அந்த ஆன்மா பாக்கியம் பெற்றது, ஆயிரந்தடவை பாக்கியம் பெற்றது!

இந்த அன்பிற்குரிய சிருஷ்டியிடத்திலே அந்த ஆன்மா கடவுளைக் கண்டு கொள்ளும் - கடவுளை மட்டுமே கண்டு கொள்ளும். அளவற்ற பரிசுத்தராயும் உயர்வுடை யவராயும் இருக்கிற கடவுளை, அதே சமயத்தில் தன் பலவீனத்துக்கு ஏற்ப தன்னை சமப்படுத்திக் கொள்கிறவராகவும் கண்டு கொள்ளும். கடவுள் எங்கும் பிரசன்னராய் இருப்பதால், அவரை எல்லா இடத்திலும், நரகத்திலும் கூட கண்டுகொள்ள முடியும். ஆனால் சிருஷ்டிகளான நாம் நமக்கு அதிக அருகாமையிலும், நம் பலவீனத்திற்கு அதிக ஏற்ற முறையிலும் அவரைக் காண்பது மரியாயிடத்திலன்றி வேறு எங்குமல்ல. காரணம், இதற்கெனவே அவர் மரியாயிடம் வந்து வாசஞ் செய்தார். வேறு எல்லா இடத்திலும் கடவுள் பலவான்களின் அப்பமாகவும் சம்மனசுக்களின் அப்ப மாகவும் இருக்கிறார்: மரியாயிடத்திலோ அவர் குழந்தைகளின் அப்பமாயிருக்கிறார்.