அர்ச். தோமையார் வரலாறு - இரு அரசர்கள் மனம்திரும்புதல்

கரங்கனூர் அரசனாகிய கேரளப்பெருமாள் தோமையார் மீது மிக்க அன்பு கொண்டிருந்ததோடு, அவர் போதனைகளை அடிக்கடி கேட்டுத் திருப்தியடைந்திருந்தான். சன்னஞ் சன்னமாக வேத ஒளி அவன் இருதயத்தில் வீசவே, இயேசுவை முற்றும் விசுவசிக்கத் தொடங்கினான். சரியான கிறிஸ்தவன் ஆவதற்கு ஞானஸ்நானம் பெறவேண்டியிருந்ததால் அதைத் தனக்கு அளிக்கும்படி அப்போஸ்தலரைக் கேட்டேன். 

அவனது நல்ல உள்ளத்தையும் உறுதியான விசுவாசத்தையும் கண்ட தோமையார் அவனுக்கும், அவனது குடும்பத்தோர் அனைவருக்கும் ஞானதீட்சை கொடுத்தார். அரசன் அந்துரு (பிலவேந்திரர்) என்றும், அவன் மருமகன் பேதுரு (இராயப்பர்) என்றும் அழைக்கப்பட்டனர். அரசன் மனந்திரும்பிய செய்தியறிந்த பலர் அவர் வழி நடக்கத் துணிந்தனர். 

ஆகவே, நானூறு பேர்களை அப்போஸ்தலர் நல்ல ஆயன் மந்தையில் சேர்த்தார். அவர்களுள் முப்பத்திரண்டு குடும்பங்கள். நம் பூரி பிராமணர் குலத்தைச் சேர்ந்தவர்கள். அது முதல் கொண்டு கரங்கனூர் ஒரு கிறிஸ்துவப் பட்டணம் ஆயிற்று அதற்கு 'மகா தேவ பட்டணம்' என்னும் பெயர் சூட்டினார்கள்.

அப்போஸ்தலர் நாளுக்கு நாள் ஆத்தும இரட்சணிய அலுவலில் வெற்றி பெறுவதைக் கண்ட நரகக் கூளியானது மனஞ் சகியாது, அவரைத் தொலைத்து விட வழி தேடியது. ஒரு நாள் அவர் தன்னந் தனிமையாய் அடுத்த கிராமத்திற்குப் பிரயாணம் செய்கையில், கோபவெறி கொண்ட பொறாமைக்காரர்கள் அவரை வழிமறித்துக் கல்லால் அடித்துக் கடுங்காயப் படுத்தினர். 

அதனால் அவர் மூர்ச்சையாயினார். இதைக்கண்ட எதிரி அவர் மரித்துவிட்டார் என்று எண்ணி, வழியிலேயே அவரைக் கிடத்திவிட்டு ஓடினர் அவ்வழியே வந்த கிறிஸ்தவன் ஒருவன் அப்போஸ்தலரின் நிலையைக் கண்டு பதை பதைத்தான்; தன் இல்லத்துக்குத் தூக்கிச் சென்று அவருக்குப் பரிவுடன் சிகிச்சை அளித்தான். அவரும் குணமடைந்தார்.

பகைவர் அவரைத் தொலைக்க மாயவலைகள் வீசிக் கொண்டிருந்த போதிலும், அவரது புனித வாழ்வும் புதுமைகளும், அவ்வூரில் மட்டுமல்ல, இலங்கைத் தீவிற்கும் பறந்து சென்றன. யாழ்ப்பாணத்து அரசனாகிய பெரிய பெருமாள் அப்போஸ்தலரைக் காண இந்தியாவிற்குப் பயணமானார். மலையாளத்திற்கு வந்து தோமையாரைக் கொல்லத்தில் சந்தித்தார். 

அப்போஸ்தலரைக் கண்டதும், "உலக இரட் சகரின் அப்போஸ்தலரே! கீழ்த்திசையில் அற்புத விண் மீனைக் கண்டு அதைப் பின் பற்றிப் பெத்லேகேமில் திருக் குழந்தையாகிய மெசியாவைத் தரிசித்து வந்த மூன்று ஞானிகளுள் ஒருவன் யான். அக் குழந்தையைப் பார்த்தது முதல் என் இதயம் அவரிடமே செல்கின்றது ஆதலால் அவரின் வரலாற்றைக் கூறி என்னையும் மெய்ம்மறையிற் சேர்த்துக் கொள்ள மன்றாடுகிறேன்" என்று கெஞ்சிக் கேட்டார்.

தோமையார் அவர் விண்ணப்பத்துக்கு இசைந்து திவ்ய இரட்சகரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் போதனைகளையும் அவருக்கு நன்கு உணர்த்திய பின் அவருக்குக் கஸ்பார் எனும் பெயரிட்டு, ஞானஸ்நானங் கொடுத்து அனுப்பினார். அவரோ, தமது நாடு சென்ற பிறகு, அரசியல் தொல்லைகளைப் பொருள் படுத்தாது சுவிசேஷத்தை மக்களுக்குப் போதித்துப் பல்லோரை மனந் திரும்பினார். கடைசியாக மெய்வேதத்திற்காக இரத்தமுஞ் சிந்தினார்.