இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உங்கள் அர்ச்சிப்பே சர்வேசுரனுடைய சித்தமாக இருக்கிறது

நித்திய இரட்சணியத்தைத் தேடுவதில், அர்ச். சின்னப்பர் நமக்குக் கூறுவது போல, நாம் ஒருபோதும் ஓய்ந்து விடக் கூடாது, மாறாக, உத்தமதனத்தின் பாதையில் நாம் தொடர்ந்து ஓட வேண்டும், அப்போதுதான் நாம் பரிசை வெல்லவும், அழியாத மணிமுடியை நம்முடையதாக்கிக் கொள்ளவும் முடியும். ""ஆகையால் அதைப் பெற்றுக்கொள்ளும்படி ஓடுங்கள்'' (1 கொரி. 9:24). இதில் நாம் தவறுவோம் என்றால், தவறு முழுவதும் நம்முடையதுதான், ஏனெனில் அனைவரும் பரிசுத்தரும், உத்தமருமாயிருக்க வேண்டுமென்று கடவுள் சித்தமாயிருக்கிறார்.

"உங்கள் அர்ச்சிப்பே கடவுளின் சித்தமாக இருக்கிறது'' (1 தெச. 4:3). எந்தக் கலையிலும், விஞ்ஞானத்திலும் உன்னத நிலையை அடைய வேகமுள்ள ஆசை இல்லாமல் அந்த நிலையை அடைவது சாத்தியமேயில்லை என்பது போலவே, அர்ச்சியசிஷ்டதனத்தின் மீது பலமான, ஆர்வமிக்க நாட்டங்கள் இல்லாமல், எந்த மனிதனும் ஒரு நாளும் ஒரு புனிதனாக ஆக முடியாது. ""கடவுள் சாதாரணமாக, தம் அன்பிற்காகத் தாகம் கொண்டிருப்பவர்களுக்கே தமது விசேஷ நன்மைகளைத் தருகிறார்'' என்று அர்ச். தெரேசம்மாள் அவதானிக்கிறாள். ""உம்மால் சகாயம் பெறுகிற மனிதன் பாக்கியவான்; தான் விரும்பிய இடத்தில் ஏறக் கண்ணீர்க் கணவாயிலே தன் இருதயத்தில் படிகளை ஏற்படுத்திக்கொண்டான்.. . . . புண்ணியத்தின்மேல் புண்ணியம் பண்ணிக்கொண்டு போவார்கள்'' (சங்.83:5,6). உத்தமதனத்தின் ஏணியில் ஏறத் தன் ஆத்துமத்தில் தீர்மானித்திருக்கிற மனிதன் பேறுபெற்றவன்: அவன் கடவுளிடமிருந்து அபரிமிதமான உதவியைப் பெறுவான், புண்ணியத்திற்கு மேல் புண்ணியம் செய்து கொண்டே செல்வான். இதுவே புனிதர்களின், குறிப்பாக அர்ச். அவெல்லினோ பெலவேந்திரரின் செயல்முறையாக இருந்தது. அவர் ""கிறீஸ்தவ உத்தமதனத்தின் வழியில் தொடர்ந்து முன்னேறிச் செல்வதை'' ஒரு வார்த்தைப்பாட்டின் மூலம் தமது கடமையாக்கிக் கொண்டார். ""கடவுள் இந்த உலகிலும் கூட ஒவ்வொரு நல்ல ஆசைக்கும் சன்மானம் தருகிறார்'' என்று அர்ச். தெரேசம்மாள் கூறுவது வழக்கம். நல்ல ஆசைகளின் மூலம்தான் புனிதர்கள் குறுகிய காலத்தில் அர்ச்சியசிஷ்டதனத்தின் பக்திக்குரிய ஓர் உயர்ந்த நிலைக்கு வந்து சேர்ந்தார்கள். ""நீதிமான் கொஞ்சக் காலம் சீவித்தும் நெடும் சீவியத்தின் புண்ணியப் பலன்களை அடைந்தான்'' (ஞான.4:13). இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்த அர்ச். ஞானப் பிரகாசியார் எத்தகைய உத்தமதனத்தை சம்பாதித்தார் என்றால், அவரைப் பரலோகப் பேரின்ப நிலையில் கண்ட அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள், அவரது மகிமை மிகப் பெரும்பாலான புனிதர்களின் மகிமைக்குச் சமமானதாகத் தோன்றியது என்று அறிக்கையிட்டாள். அந்தக் காட்சியில் அவர் அவளிடம்: ""கடவுள் எந்த அளவுக்கு நேசிக்கப்படத் தகுதியுள்ளவராக இருக்கிறாரோ, அந்த அளவுக்கு அவரை நேசிக்க வேண்டுமென்று என் வாழ்வின் போது நான் கொண்டிருந்த ஆர்வமிக்க ஆசையின் பலன்தான் என்னுடைய இந்த மேலான அர்ச்சியசிஷ்டதனத்திற்கான காரணம்; அவருக்குத் தகுதியுள்ள அளவற்ற முறையில் அவரை நேசிக்க என்னால் இயலாததால், பூலோகத்தில் நான் ஒரு தொடர்ச்சியான அன்பின் வேதசாட்சியத்தை அனுபவித்தேன். அதற்காகத்தான் இப்போது நான் அனுபவிக்கும் மிக மேலான மகிமைக்கு நான் உயர்த்தப்பட்டிருக்கிறேன்'' என்று கூறினார்.எந்த அளவுக்கு நேசிக்கப்படத் தகுதியுள்ளவராக இருக்கிறாரோ, அந்த அளவுக்கு அவரை நேசிக்க வேண்டுமென்று என் வாழ்வின் போது நான் கொண்டிருந்த ஆர்வமிக்க ஆசையின் பலன்தான் என்னுடைய இந்த மேலான அர்ச்சியசிஷ்டதனத்திற்கான காரணம்; அவருக்குத் தகுதியுள்ள அளவற்ற முறையில் அவரை நேசிக்க என்னால் இயலாததால், பூலோகத்தில் நான் ஒரு தொடர்ச்சியான அன்பின் வேதசாட்சியத்தை அனுபவித்தேன். அதற்காகத்தான் இப்போது நான் அனுபவிக்கும் மிக மேலான மகிமைக்கு நான் உயர்த்தப்பட்டிருக்கிறேன்'' என்று கூறினார்.

"நம் எண்ணங்கள் ஆசை கொள்வனவாக இருக்க வேண்டும்; பெரிய ஆசைகளிலிருந்துதான் நம் முழு நன்மையும் வரும்'' என்று அர்ச். தெரேசம்மாள் கூறுகிறாள். மற்றொரு இடத்தில், ""நம் ஆசைகளை நாம் குறைத்துக் கொள்ளக் கூடாது, மாறாக, தொடர்ச்சியான முயற்சியின் மூலம், அவருடைய வரப்பிரசாதத்தால் அர்ச்சியசிஷ்டதனத்திற்கும், புனிதர்களின் பேரின்ப நிலைக்கும் நாம் வந்து சேர்வோம் என்று கடவுளில் நாம் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்'' என்று அவள் சொல்கிறாள். மீண்டும் அவள்: ""தங்கள் சொந்த பலத்தில் நம்பிக்கை கொள்ளாத தாராளமுள்ள ஆத்துமங்களிலேயே தேவ மகத்துவம் திருப்தி அடைகிறது'' என்கிறாள். இந்த மாபெரும் புனிதை தன்னுடைய முழு அனுபவத்திலும், ஒரு சில நாட்களிலேயே தைரியமுள்ள ஆன்மாக்கள் அடைந்த புண்ணியத்தின் உயர்நிலையைக் கோழையான ஒரு கிறீஸ்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னும் அடைந்ததைத் தான் கண்டதில்லை என்று கூறுகிறாள். புனிதர்களின் வரலாறுகளை வாசிப்பது ஆத்துமத்தினுள் தைரியத்தைப் பெருமளவில் தூண்டிக் கொள்ள உதவியாக இருக்கிறது.

குறிப்பாகப் பெரும் பாவிகளாயிருந்து, பிற்பாடு பெரும் புனிதர்களாக மாறிய அர்ச். மரிய மதலேனம்மாள், அர்ச். அகுஸ்தினார், அர்ச். பெலாஜியா, அர்ச். எகிப்து மரியம்மாள் மற்றும் குறிப்பாக அர்ச். கோர்ட்டோனா மர்கரீத்தம்மாள் போன்ற புனிதர்களின் வரலாறுகளை வாசிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக அர்ச். கோர்ட்டோனாவின் வரலாற்றை வாசிப்பது நல்ல பலனைத் தரும். இவள் பல ஆண்டுகளாக நித்திய அழிவின் பாதையில் இருந்து வந்தாள், என்றாலும் அப்போதும் கூட, அர்ச்சியசிஷ்டதனம் அடைய வேண்டும் என்ற ஆசை அவளிடம் நிறைந்திருந்தது; தனது மனந்திரும்புதலுக்குப் பிறகு இவள் எவ்வளவு வேகமாக உத்தமதனத்திற்குப் பறந்து சென்றாள் என்றால், இவ்வுலக வாழ்விலேயே தான் பரலோக மகிமைக்கு முன்குறிக்கப்பட்டவள் என்பதை மட்டுமின்றி, பக்திச்சுவாலகர்களிடையே தனக்கு ஓர் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் ஒரு வெளிப் படுத்தலின் மூலம் இவள் அறிந்து கொண்டாள்!

ஓ என் சேசுவின் தெய்வீக இருதயமே! மனிதர்கள் மீது அளவற்ற நேசமும், அவர்களில் இருப்பதில் இன்பமும் கண்ட திரு இருதயமே! அவர்களை நேசிப்பதற்காகவே சிருஷ்டிக்கப்பட்ட இருதயமே! நீர் அவர்களால் இவ்வளவு அதிகமாக அவமதிக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் எப்படி சாத்தியம்? நான் எவ்வளவு பரிதாபமானவன்! நானும் கூட, அந்த நன்றியற்ற ஆன்மாக்களில் ஒருவனாக இருந்திருக்கிறேன்; நானும் கூட, பல ஆண்டுகள் உலகில் உம்மை நேசிக்காமல் வாழ்ந்திருக்கிறேன்; ஓ என் சேசுவே, எவ்வளவோ நேசத்திற்குரியவரும், உம்மை நான் நேசிக்கச் செய்வதற்கு இதற்கு மேல் எதையும் செய்ய முடியாது என்னும் அளவுக்கு என்னை நேசித்துள்ளவருமாகிய உம்மை நேசிக்காமல் இருந்த பாவத்தை எனக்கு மன்னித்தருளும். உமது அன்பை நீண்ட காலமாகப் புறக்கணித்து வந்ததற்குத் தண்டனையாக, இனி ஒருபோதும் உம்மை நேசிக்கவே முடியாத அந்த நிர்ப்பாக்கியமான நிலைக்கு (நரகத்திற்குத்) தீர்வையிடப்பட நான் தகுதியுள்ளவனாக இருந்திருப்பேன். ஆனால் வேண்டாம், என் சேசுவே; உமது அன்பிலிருந்து நித்தியத்திற்கும் விலக்கப்படும் தண்டனையைத் தவிர வேறு எல்லாத் தண்டனைகளையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். உம்மை நேசிக்கும் வரத்தை எனக்குத் தந்தருளும். அதன்பின் நீர் விரும்புகிறபடியெல்லாம் என்னை நடத்தும். ஆமென்.

உத்தமதனத்தின் ஓர் உயர்ந்த நிலையை அடைய ஆசிப்பது, அல்லது புனிதர்களைக் கண்டுபாவிக்க விரும்புவது, நம்மில் பெரும் ஆங்காரமாக இருக்கும் என்று நாம் நம்பச் செய்யப் பசாசு முயல்கிறது என்று அர்ச். தெரேசம்மாள் கூறுகிறாள். அவள் மேலும் தொடர்ந்து, அர்ச்சியசிஷ்டதனம் அடைவதற்கான பலத்த ஆசை ஆங்காரத்திலிருந்து பிறப்பது என்று மதிப்பது மிகப் பெரும் மாய்கையாக இருக்கிறது, ஏனெனில் உத்தமதனத்தின் பாதையில் தைரியத்தோடு நடக்கத் தீர்மானிப்பதில் தன் மீது நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு, அப்போஸ்தலரோடு சேர்ந்து, ""என்னை பலப்படுத்துகிறவரைக் கொண்டு எதையும் செய்ய என்னால் கூடும்'' (பிலிப்.4:13) என்று கூறும் ஓர் ஆன்மாவுக்கு, அது ஆங்காரமாக இராது. தனியாக என்னால் எதையும் செய்ய முடியாது; ஆனால் கடவுளின் உதவியோடு எதையும் செய்ய என்னால் முடியும். ஆகவே, அவரது வரப்பிரசாதத்தைக் கொண்டு, புனிதர்கள் அவரை நேசித்தது போல நானும் அவரை நேசிக்க ஆசை கொள்வேன் என்று பிரதிக்கினை செயகிறேன்.

அனைத்திலும் அதிக உயர்வான புண்ணியத்தை அடைய ஏக்கம் கொள்வது அடிக்கடி மிகுந்த பலனுள்ள காரியமாக இருக்கிறது --சகல புனிதர்களையும் விட அதிகமாகக் கடவுளை நேசிப்பது, சகல வேதசாட்சிகளுக்கும் மேலாக, கடவுளின் அன்பிற்காகத் துன்பப்படுவது, மனிதர்கள் தரும் எல்லாக் காயங்களையும் தாங்கிக் கொண்டு, அவர்களை மன்னிப்பது, ஒரே ஒரு ஆத்துமத்தையாவது இரட்சிப்பதற்காக எப்பேர்ப்பட்ட கடுஞ்சோர்வையும் அரவணைத்துக் கொள்வது, இது போன்ற உத்தமமான பிறர்சிநேகச் செயல்களைச் செய்வது--இதுதான் அந்த அனைத்திலும் மேலான புண்ணியமாகும். ஏனெனில் இந்தப் பரிசுத்த ஆவல்களும், ஆசைகளும், அவற்றின் நோக்கம் ஒருபோதும் எட்டப்படாமலே போனாலும், முதலாவதாக, அவை கடவுளின் பார்வையில் மிகுந்த பேறுபலனுள்ளவையாக இருக்கின்றன. அவர் வக்கிரமும், தீய நாட்டங்களும் உள்ள ஓர் இருதயத்தை அருவருப்பது போலவே, நல்ல மனதுள்ள மனிதர்களில் மகிமையடைகிறார். இரண்டாவதாக, வீரத்துவமுள்ள அர்ச்சியசிஷ்டதனத்தின் மீது ஆவல்கொள்ளும் வழக்கம், சாதாரணமான, எளிய புண்ணியமுள்ள செயல்களைச் செய்ய ஆத்துமத்தைத் தூண்டுகிறது, அதை உற்சாகப்படுத்துகிறது. இதன் காரணமாக, காலையில் அந்நாளின் போது தன்னால் முடிந்த வரை அதிகமாகக் கடவுளுக்காக உழைப்பது என்று தீர்மானிப்பதும், எல்லாச் சிலுவைகளையும், எதிர்ப்புகளையும் பொறுமையோடு தாங்கிக் கொள்வது என்று பிரதிக்கினை செய்வதும், நிலையான ஞான ஒடுக்கத்தை அனுசரிப்பதும், தேவசிநேகச் செயல்களைத் தொடர்ந்து செய்வதும் மிகவும் முக்கியமானது. இதுவே பக்திச்சுவாலகர்களுக்கு ஒப்பான அர்ச். பிரான்சிஸ் அசிசியாரின் செயல்முறையாக இருந்தது. ""சேசுநாதரின் வரப்பிரசாதத்தைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்ய அவர் தீர்மானம் செய்தார்'' என்று அர்ச். பொனவெந்தூர் கூறுகிறார். ""ஆண்டவர் நல்ல ஆசைகளிலும், அவற்றின் நிறைவேற்றத்திலும் மிகுந்த மகிழ்ச்சி கொளகிறார்'' என்று அர்ச். தெரேசம்மாள் வலியுறுத்திக் கூறுகிறாள். ஓ, உலகத்திற்கு ஊழியம் செய்வதை விட, கடவுளுக்கு ஊழியம் செய்வது எவ்வளவு நல்லது! உலகப் பொருட்களை சம்பாதிப்பதற்கும், உலக செல்வத்தையும், பட்டம் பதவிகளையும், மனிதர்களின் பாராட்டுக்களையும் சம்பாதிப்பதற்கும், ஆர்வத்தோடு அவற்றின் பின்னால் ஏக்கம் கொண்டு மூச்சிரைக்க ஓடுவது போதாது; இல்லை, அவற்றின் மீது ஆசை கொள்வதும், அவற்றைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அவை இல்லாத நிலையை அதிக வேதனைக்குரியதாக ஆக்குகின்றன. ஆனால் கடவுளின் செல்வங்களையும், அவரது ஆதரவையும் சொந்தமாக்கிக் கொள்வதற்கு, அவரது வரப்பிரசாதத்தையும் அன்பையும் ஆசை கொண்டு தேடுவதே போதுமானது.செல்வங்களையும், அவரது ஆதரவையும் சொந்தமாக்கிக் கொள்வதற்கு, அவரது வரப்பிரசாதத்தையும் அன்பையும் ஆசை கொண்டு தேடுவதே போதுமானது.

ஓ என் சேசுவே, ""உன் முழு இருதயத்தோடு உன் தேவனாகிய ஆண்டவரை நேசிப்பாயாக'' (மத்.22:37) என்று நீர் சொல்கிறீர். ஆகவே, நான் என் முழு ஆத்துமத்தோடு உம்மை நேசிப்பது உம் சித்தமாக இருக்கிறது. நான் வேறு எதையுமன்றி உம்மை மட்டும் என் முழு பலத்தோடும் நேசிக்க ஆசை கொள்வேன். ஓ என் சேசுவின் நேசமுள்ள திரு இருதயமே, பூமியின் மீது பற்றியெரியச் செய்யும்படி நீர் வந்த அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நெருப்பை என் ஆத்துமத்தில் பற்ற வைத்தருளும். என் இருதயத்தில் இன்னும் உயிரோடு இருப்பவையும், உமக்கு முழுவதும் சொந்தமாக விடாமல் என்னைத் தடுப்பவையுமான எல்லா உலகப் பற்றுகளையும் அழித்து விடும். ஓ என் அன்புள்ள இரட்சகரே, இது வரை உம்மை மிக அதிகமாக வேதனைப்படுத்தி வந்த ஓர் இருதயத்தின் அன்பை உதறி விடாதேயும். ஆ, நீர் என்னை மிக அதிகமாக நேசித்து வந்திருக்கிறீர் என்பதால், உமது அன்பு இல்லாமல் ஒரே ஒரு கணம் கூட நான் வாழ அனுமதியாதேயும்! ஓ என் சேசுவின் நேசமே, நீயே என் நேசம்! நான் உம்மை எப்போதும் நேசிப்பேன் என்றும், நீரும் என்னை எப்போதும் நேசிப்பீர் என்றும், இந்தப் பரஸ்பர அன்பு ஒருபோதும் இல்லாமல் போகாது என்றும் நம்புகிறேன்.

மரியாயே, அழகுள்ள நேசத்தின் மாதாவே, உங்கள் திருமகன் மனிதர்களால் நேசிக்கப்படுவதைக் காண விரும்புகிற அன்புள்ள தாயாரே, நான் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ, அப்படியே இனி எப்போதும் நான் முழுவதும் அவருடையவனாக இருக்குமாறு, உங்கள் சேசுவோடு என்னை சேர்த்துக் கட்டி அவரோடு என்னை ஒன்றித்து விடுங்கள்.