இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பாவிகளுக்கு அடைக்கலமே!

ஒவ்வொரு பொருளும் தன்னை உண்டாக்கியவனுக்குச் சொந்தம். மறுக்க முடியாதவோர் உண்மை இது. குயவனுக்கு அவன் செய்த மட்பாண்டமும், சிற்பிக்கு அவன் செதுக்கிய சிலையும், விதை விதைத்து தண்ணீர்விட்டு வளர்த்தவனுக்கு மரமும் சொந்தம்; பெற்றோருக்கு தாங்கள் பெற்ற பிள்ளைகள் மீது இதைவிட அதிகச் சொந்தம் உண்டு. ஆயினும் பெற்றோரும் மற்ற எம்மனிதனும் எப்பொருளையும் ஒன்றுமில்லாமை யினின்று உண்டாக்குவதில்லை. ஆனால் கடவுள் மனிதனை ஒன்றுமில்லாமையினின்று உருவாக்கியுள்ளார். எனவே, மனிதர் தம் பொருட்களின் மீது பாராட்டும் சொந்தத்தைவிட, மனிதர் மட்டில் கடவுளுக்குள்ள சொந்தம் மிகப் பெரிது.

மனிதன் தன்னை உண்டாக்கிய கடவுளுக்கு முற்றிலும் சொந்தம்; இதைத் தனக்குக் கடவுளால் அருளப் பட்ட புத்தியால் கண்டு, அங்கீகரித்து, தனது சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிந்து நடக்க கடமைப்பட்டுள்ளான் மனிதன். எவ்விதம் ஒரு உத்தம புதல்வன் தன் தகப்பனின் விருப்பங்களுக்கும், கட்டளைகளுக்கும் ஏற்ப நடக்கக் கடமைப்பட்டுள்ளானோ, அது போன்று மனிதனும் தன் நல்ல தகப்பனாகிய கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடத்தல் கடன். 

இவை யாவும் சர்வேசுரன் நமக்கருளிய பத்துக் கற்பனைகளில் அடங்கியுள்ளன. இத்துடன் நின்றுவிடுதல் சரியன்று. நமது திவ்விய இரட்சகர் தமது இரக்கத்தால், மானிடர் மோட்சம் ஏக வழிகாட்டியாயிருக்கும்பொருட்டு ஏற்படுத்தியுள்ள திருச்சபையில் சேர்ந்து அதன் ஒழுங்குகளின் பிரகாரம் நடத்தல் அவசியம். இதுவே திருச்சபையின் போதனை. சுருங்கக் கூறின், சர்வேசுரன் அருளிய பத்துக் கற்பனைகளையும், திருச்சபையின் கட்டளைகளையும் அநுசரிப்பதினால் மனிதன் கடவுளுக்குத் தன் கீழ்ப்படிதலைக் காட்டுகிறான். இதில் தான் புண்ணியம் அடங்கியுள்ளது; மோட்சம் செல்ல வழி இதுதான். இவற்றை மீறி நடத்தலே பாவமெனப்படும். 

ஆகவே, சர்வேசுரனுக்குக் கீழ்ப்படியாமையே பாவமாகும்: நாம் பாவத்தைக் கட்டிக் கொள்ளும்போது நமது குற்றத்தை நமக்கு எடுத்துக் காட்டுவது மனச்சாட்சி; மனச்சாட்சி என்பது, எதை நன்மை எது தீமை எனவும், புண்ணியமெது, பாவமெது எனவும் நமக்கு எடுத்துக் காட்டவும், குற்றம் செய்தவிடத்து அது குற்றமென்பதை நமக்கு இடித்துணர்த்தவும், புண்ணியம் செய்தவுடன் நமக்கு மன அமரிக்கையும் ஞான சந்தோஷமும் தரும் படியாகவும் சர்வேசுரனால் நமக்களிக்கப்பட்ட ஒரு சத்துவம் (Faculty) என்க.

பாவம், சாவான பாவம், அற்பப் பாவமென இரு வகைப்படும் என ஞானோபதேசத்தில் படித்து அறிந்திருக்கிறோம். சாவான பாவத்தை ஒரு மனிதன் கட்டிக் கொள்ளும்போது, சர்வேசுரனுக்கு விரோதியாக மாறுகிறான்; சர்வேசுரனை நோக்கித் தான் செல்ல வேண்டிய பாதையினின்று விலகி, சிருஷ்டிகளை நோக்கி நடக்கிறான்; நரகத்திற்குப் பாத்திரவானாகிறான். நம்மை நரகத்தில் தள்ள ஒரே ஒரு சாவான பாவம் மட்டும் போதும்.

கடவுள் மனிதனைத் தமக்காக உண்டுபண்ணினார். ஆனால் மனிதனோவென்றால் அவ்வுண்மையை முற்றிலும் மறந்து, சொற்ப நிமிஷங்கள் தனக்கு கிடைக்கும் அற்ப இன்பத்தின் பொருட்டு பாவம் கட்டிக் கொள்ளுகிறான்; இன்பத்தை நாடும் தன் இருதய ஆவல் முழுவதையும் பூர்த்தி செய்யக் காத்திருக்கும் கடவுளை நிராகரிக்கிறான். நடப்பது என்ன? நரகத்திற்குப் பாத்திரவான் ஆவதோடு, மனச்சாட்சியின் கொடிய வேதனைக்கும் ஆளாகிறான். அவன் தேடிய அற்ப சந்தோஷம் புகைபோன்ற மறைய, புழுப் போன்று அவனது மனச்சாட்சி அவனை அரிக்கின்றது; மனவேதனை அதிகரிக்கின்றது. 

மனச்சமாதானத்திற்கு அலைந்து அதைச் சிருஷ்டிகளில் கண்டடைய முயலுகிறான். ஆனால் அது அவனைவிட்டுத் தூர விலகிச் செல்லுகிறது. மனச்சாட்சியின் குத்துதலோ அதிகரித்துக் கொண்டு போகிறது. அதைச் சற்றே மறந்திருக்க சிற்றின்பங்களை நாடுகிறான்; ஆனால் அந்தோ! அவனது மனவேதனை குறைவதற்குப் பதிலாய் இன்னும் அதிகரிக்கிறது. எங்கும் நிறைந்த சர்வேசுரனின் ஊடுருவும் விழி நோக்குக்குத் தப்பிக்கத் தன்னாலானதெல்லாம் செய்கிறான். ஆனால் அவன் எங்கு சென்றாலும், அங்கெல்லாம் அது அவனைப் பின்தொடருகிறது. 

அலுத்துச் சலித்த பாவி சர்வேசுரனை நோக்கி, “உமது இஸ்பிரீத்துக்கு மறைவாக நான் எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தை விட்டு நான் எங்கே ஒளிவேன்? நான் வானத்தில் ஏறினால் நீர் அங்கே வீற்றிருக்கிறீர். நான் பாதாளத்தில் இறங்கினால் அங்கேயும் இருக்கிறீர்... சில விசை இருள்கள் என்னை மூடிக் கொள்ளுமென்றேன்; ஆனால் இரவும் நான் விரும்பிவைகளை உமக்கு வெளிப்படுத்தப் பிரகாசமுள்ளதாய்த் தானே இருக்கும்” (சங். 138:7,8,11) என்று புலம்புகிறான்.

சிற்றின்பத்தை நாடியதால் பாவி கண்ட பலன் இதுதான். இதுதான் அவன் நிலைமை. இந்நிலையிலுள்ள பாவிகளில் ஒரு சாரார் தங்கள் பாவ வழியை விட்டு, மீண்டும் கடவுளுக்கு உகந்தவர்களாக ஆசிக்கின்றனர்; மற்றொரு சாரார் அதற்குப் பதிலாய் மீண்டும் மீண்டும் பாவச் சகதியில் ஆழமாய் அமிழ்கின்றனர். இவ்விரு சாராருக்கும் நம் அன்னை அடைக்கலமாக இருக்கிறார்கள். பின்னவர் மனந்திரும்பத் தன்னால் கூடுமானதெல்லாம் செய்கிறார்கள் தேவதாய். லூர்து நகரிலும், பாத்திமா விலும் காட்சியளித்த நமதன்னை, “பாவிகளுக்காக ஜெபியுங்கள், அவர்களுக்காகத் தபசு செய்யுங்கள்” எனக் கேட்டுக் கொண்டது, பாவிகளின் மனந்திரும்புதலுக்காக அவர்கள் காட்டும் சிரத்தையை நமக்கு எடுத்துக் கூறுகிறதல்லவா?

பாவத்தில் விழுந்த மற்றொரு சாரார் மீண்டும் கடவுளுடன் சமாதானமாக ஆசிக்கின்றனர். ஆயினும் தாம் துரோகம் செய்த கடவுளை அண்டிப் போய் மன்னிப்புப் பெற அஞ்சி நடுங்குகின்றனர். கடவுளின் கரைகாணா நீதி அவர்களுக்குத் திகிலை வருவிக்கிறது. திவ்விய சேசு தங்களுடைய இரட்சணியத்தின் பொருட்டு மனிதாவதாரமெடுத்து, பாடுபட்டு, தமது இரத்தமெல்லாம் சிந்தி மரித்ததும், அவருடைய இரக்கப் பெருக்கமும் அவர்களுக்குத் தெரியும். 

திவ்விய சேசு, “ஊதாரிப் பிள்ளை,” “காணாமற் போன ஆடு” முதலான உவமைகளினாலும், பாவத்தில் ஜீவித்தவர்கள் மட்டில் தாம் நடந்து கொண்ட விதத்தினாலும், பாவிகள்மீது தமக்குள்ள அளவற்ற இரக்கத்தைக் காட்டியுள்ளார் என்பதையும் அவர்கள் அறிவர்; பாவிகளைத் தேடியே தாம் இவ்வுலகிற்கு வந்ததாக அவர் உரைத்ததும் அவர்களுக்குத் தெரிந்ததே. இருந்தபோதிலும், அவரிடம் சென்று மன்னிப்புக் கேட்கப் பயப்படுகின்றனர். அப்படியே அவர்கள் தங்கள் பயத்தை நீக்கி மன்னிப்படைய ஆண்டவ ரிடம் செல்ல முயன்றாலும், அவர்களுடைய பாவ நாட்டங்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றன. பாவ அலைகளின் மத்தியிலும், சோதனைகள் மத்தியிலும் துரும்பு போல் தத்தளிக்கின்றனர்.

இச்சமயத்தில் திருச்சபை அவர்களுக்கு ஆறுதலளிக்க வருகிறது. கடவுளிடம் அவர்களுக்காக மனுப்பேசி பாவ மன்னிப்புப் பெற்றுத் தர வல்லவர் ஒருவர் இருக்கிறாரென்றும், தங்கள் சோதனைகளை ஜெயிக்க வேண்டிய தேவ உதவியைப் பெற்றுத் தரத் தயாராக ஒருவர் இருக்கிறாரென்றும் கூறி அவர்களுக்குத் தைரியம் வருவிக்கிறது. தேவதாயே அப்பேருபகாரி என்றும், அவர்கள் “பாவிகளுக்கு அடைக்கலம்” என்றும் எப்பேர்ப்பட்ட பாவியையும் அவர்கள் நிராகரிப்பதில்லை என்றும் எடுத்துக் கூறி அவர்களிடம் செல்லுமாறு அவர்களை ஏவுகின்றது.

ஆம், மெய்யாகவே தேவதாய் “பாவிகளுக்கு அடைக்கலம்,” மரண தண்டனை விதிக்கப்பெற்ற குற்ற வாளிகள் ஓடி ஒளியும்படியாக பழைய ஏற்பாட்டில் பல அடைக்கல நகர்கள் (உஷ்மிஷ்eவி லிக்ஷூ reக்ஷூற்ஆe) இருந்ததாக அறிகிறோம். (எண். 35-ம் அதிகாரம்; உபா. 19-ம் அதிகாரம்; ஜோசுவா:20-ம் அதிகாரம்). புதிய ஏற்பாட் டில் நித்திய நரக தண்டனைக்கு ஆளாகும் நிலையி லிருக்கும் பாவிகள் அடைக்கலம் புக ஓர் புகலிடம் உண்டு. மரியன்னையே அப்புகலிடம். (“தாவீது இராஜாவின் உப்பரிகையே” என்ற தலைப்பின் கீழ் இதைப் பற்றி விரிவாகக் காண்க).

அர்ச். ஜெர்மானூஸ், மாமரி அன்னையைச் “சகல பாவிகளுக்கும் எப்போதும் கைவரப் பெறும் அடைக்கலம்” (The Refuge ever ready for all sinners) என்று அழைக் கின்றார். அர்ச். ஆன்செல்ம், மாமரி அன்னையை நோக்கி உரைப்பதாவது: “உலகம் இகழ்ந்து தள்ளும் பாவியை நீர் தாய்க்குரிய வாஞ்சையோடு அரவணைக்கிறீர். பாவிக ளைக் கடவுளோடு சமாதானம் செய்து வைக்கும் வரை அவர்களை விட்டு விடுகிறீரில்லை.” “பாவிகளின் ஒரே நம்பிக்கை நீரே” (Sermo. de. Annunt.) என்கிறார் அர்ச். அகுஸ்தீன். “பாவக் கடலில் அடிபட்டுக் கலங்கும் பாவிக்குத் தஞ்சம் நீரன்றி வேறு யார்?” (De Laudib. B.V.) என்பது அர்ச். எப்ரேம் என்பவரது மொழிகள்.

எனவே நாம் எவ்வளவு பெரிய பாவிகளாயிருப்பினும், நம்பிக்கையுடன் நம் நல்ல தாயை அண்டிச் செல்லுவோம். எப்பேர்ப்பட்ட பயங்கரத்துக்குரிய சோதனைகளாலும் தாக்கப்பட்ட போதிலும் நமதன்னையை நோக்கிக் கூக்குரலிடுவோம். எதையாவது கண்டு பயந்த குழந்தை, அன்னையிடம் ஓடிச் சென்று, அவளது முந்தானையால் தன் முகத்தை மறைத்துக் கொள்வது போல, நாமும் நமது துன்ப துயரங்களிலும், சோதனை தந்திரங்களிலும் அன்னையை அண்டிச் சென்று அவர் களது அடைக்கலமென்னும் முந்தானையால் நம்மை மறைத்துக் கொள்ளுவோம். அன்னையிடம் அடைக்கலம் புகுந்த பாவி நரக தண்டனைக்கு ஆளாக மாட்டான் என்பது உறுதி.

பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கும்படி இப் பேர்ப்பட்ட தாயை நமக்குக் கொடுத்த இரக்கமுள்ள தேவனுக்கு நன்றி கூறுவோம். 

“பரிசுத்த மரியாயே! நீரே பாவிகளுக்கு அடைக் கலம். “உலகம் ஒருங்கே உதறித் தள்ளிவிடினும், உம்மை இரந்து மன்றாடும் பாவியை இன்னுமோர் தடவை வேண்டிக் கொள்ளும்படி விட்டுவிடாதேயும் மாமரியே; ஆனால் உமது தாய்க்குரிய தயையால் அணைத்து நித்தியகால நீதிபதியான கடவுளோடு ஐக்கியப்படுத்தியருளும்” (In Psalt) என்று உமது தாசர் அர்ச். பெர்நார் தோடு நாங்களும் சேர்ந்து உம்மை வேண்டுகிறோம். சோதனைகளோடு நாங்கள் செய்யும் போராட்டத்தில் எங்களுக்கு உதவி புரியத் தீவிரமாய் வாரும்; பாவங்களையும் பாவச் சமயங்களையும் நஞ்சென விலக்க எங்களுக்கு அருள் பெற்றுத் தாரும்.” 


பாவிகளுக்கு அடைக்கலமே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!