கோப வெறியுள்ள ஒரு நாய்!

சுவாமி ரூஃபினோ 1864 ஏப்ரல் மாதத்தின் காலக்கிரமப் பதிவேட்டில் பின்வருமாறு விவரிக்கிறார்: இந்த சமயத்தில் ஆரட்டரியில் P_______ என்ற ஒரு சிறுவன் இருந்தான். திருவருட்சாதனங்கள் பெறுவதிலோ, ஜெபிப்பதிலோ அவனுக்கு அக்கறையே இருந்ததில்லை. அவன் கட்டாயத்தால் மட்டுமே அங்கே இருந்தான். ஒரு நாள் டொன் போஸ்கோ அவனைத் தனியாக அழைத்துச் சென்றார்.

“ஏன் எப்போதும் வெறிபிடித்த ஒரு நாய் உன்னைப் பார்த்து கடுங்கோபத்தோடு உறுமிக் கொண்டு உன்னைக் கடிக்க வருகிறது?” என்று அவர் அவனிடம் கேட்டார்.

“நான் எந்த நாயையும் பார்க்கவில்லையே.”

“ஆனால் நான் பார்க்கிறேன்! என்னிடம் சொல், உன் மனசாட்சியில் எப்படி உணர்கிறாய்?” 

சிறுவன் தலை கவிழ்ந்தான்.

“தைரியம் கொள். என்னோடு வா. எல்லாம் சரியாகி விடும்” என்றார் டொன் போஸ்கோ.

அந்தச் சிறுவன் டொன் போஸ்கோவின் நண்பன் ஆனான். இப்போது நன்மை செய்வதில் அவன் தீர்மானமாயிருக்கிறான்.

ஏப்ரல் 13 மாலையில் தியானம் முடிந்த போது, சில சிறுவர்கள் அந்த தியானத்தைத் தங்கள் ஆன்ம நலனுக்காக நன்றாகப் பயன்படுத்தவில்லை என்பது பற்றி டொன் போஸ்கோ வருத்தம் தெரிவித்தார். 

“இந்த ஒரு சில நாட்களின் போது, உங்கள் ஒவ்வொருவரின் பாவங்களும் என் முன்பாக எழுதப்பட்டிருந்தது போல, நான் அவற்றைத் தெளிவாகக் கண்டேன். ஒரு சிலர் தங்கள் பொதுப் பாவசங்கீர்த்தனத்தின்போது, என் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக, தங்கள் பாவங்களை என்னிடம் சொல்ல முயன்றபோது மட்டுமே சற்று குழப்பம் இருந்தது. இது உங்கள் சொந்த நன்மைக்காக இந்த ஒரு சில நாட்களின் போது, ஆண்டவர் எனக்குத் தந்த ஓர் ஒப்பற்ற வரப்பிரசாதமாக இருந்தது. 

இப்போது மிக அநேகமாக, என் அறிவுரையைப் பின்பற்றாத சிலர், அவர்களுடைய மனச்சான்றுகளையும் என்னால் வாசிக்க முடிகிறதா என்று கேட்பார்கள். துர்ப்பாக்கியமான விதத்தில், இல்லை என்பதுதான் என் பதில். அவர்கள் தங்கள் வாய்ப்பை இழந்து விட்டார்கள்!”