அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - முதல் கனவு

1815-ஆம் ஆண்டில் பிறந்த ஜான் போஸ்கோ, இத்தாலியின் பியெத்மோன்ட் மாகாணத்திலுள்ள ஒரு சிறு கிராமமாகிய பெக்கியின் வயல்களில் சுதந்திரமாக ஓடியாடி விளையாடியபடி தமது குழந்தைப் பருவத்தைக் கழித்தார். ஒரு சிறு இடைச் சிறுவனாக, அவர் தம் இளம் தோழர்களுடன் விளையாடுவார், தீமையிலிருந்து அவர்களை வெளியே இழுத்து, புண்ணியத்தை நோக்கி அவர்களை நடத்திச் செல்வார்.

1823-ல் காஸ்தெல்நுவோவோ நகரிலுள்ள பள்ளிக்குச் செல்ல அவர் விரும்பினார். அது ஒரு சில மைல்கள் தொலைவில் இருந்தது. ஆனால் கல்வியறிவற்ற அவரது இருபது வயது சகோதரன் அவரைத் தடுத்தான். ஏனெனில் வயல்களிலும், திராட்சைத் தோட்டத்திலும் வேலை செய்வதற்கு அவனுக்கு ஆட்கள் தேவையாயிருந்தனர். இவன் ஜான் போஸ்கோவின் தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தவன்.

ஆனால் 1824-1825 குளிர்காலத்தின் போது, பியெத் மோன்ட்டின் பனிபடர்ந்த வயல்கள் வேலைகள் எதுவும் இருக்க வில்லை. ஆகவே ஜான் போஸ்கோவின் தாய் அவரைப் பக்கத்துக் கிராமத்திலுள்ள ஒரு பள்ளிக்கு அனுப்பினாள். 

அங்கே ஒரு குரு அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார். இவர் மிகுந்த பக்தியுள்ளவர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஜான் போஸ்கோவுக்கு ஞான உபதேசம் கற்றுக் கொடுத்து, அவரை முதல் பாவசங்கீர்த்தனத்திற்குத் தயாரித்தார். இந்தக் குருவின் வழிகாட்டுதலின் கீழ் ஜான் போஸ்கோ ஜெபம் மற்றும் ஒறுத்தலின் மூலம் ஆன்மாவில் கடவுளின் அருளைக் காப்பாற்றிக் கொள்ள அவசியமான வழிகளைக் கற்றுக் கொண்டார்.

வாசிக்கத் தெரிந்த பிறகு, ஜான் போஸ்கோ அடிக்கடி புத்தகமும் கையுமாகத்தான் காணப்பட்டார். ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் சென்று அவற்றைக் கண்காணித்துக் கொண்டிருக்கும்போதும் கூட, அவர் புத்தகங்கள் வாசிப்பதில் கருத்தாயிருந்தார். ஒரு முறை, சில இடையச் சிறுவர்கள் தங்கள் விளையாட்டில் ஜான் போஸ்கோவை சேர்த்துக் கொள்ள விரும்பினார்கள். 

ஆனால் அவர் மறுத்து விடவே, அவர்கள் அவரை அடித்து விட்டார்கள். அவர்களைத் திருப்பி அடித்திருக்க அவரால் முடியும், என்றாலும் மன்னிப்பே அவருடைய பழிவாங்குதலாக இருந்தது. அவர் அவர்களிடம் சாந்தமாக: "என்னால் விளையாட முடியாது, ஏனெனில் நான் படிக்க வேண்டும்; நான் ஒரு குருவாக விரும்புகிறேன்” என்றார்.

அதன்பின் அவர்கள் அவரைத் தொந்தரவு செய்யவில்லை. அவருடைய பொறுமையையும், சாந்த குணத்தையும் கண்டு வியந்த அவர்கள், அவருடைய நண்பர்களாகி விட்டார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஜான் போஸ்கோ அவர்களுக்கு ஞான உபதேசம் கற்றுக் கொடுத்தார். நம் திவ்விய அன்னையின் பாடல்களைப் பாட அவர்களுக்குப் பயிற்சியளித்தார்.

அதன்பின், ஜான் போஸ்கோவுக்கு ஒன்பது வயதான போது, அவர் ஒரு கனவு கண்டார். அது, அவருடைய உழைப்பு மிகுந்த எதிர்கால வாழ்வில், தேவ பராமரிப்பின்படி, சிறுவர்களுக்காக அவர் செய்ய வேண்டியிருந்த மிக நீண்ட பணியை அவருக்கு வெளிப் படுத்தியது. அவரே இந்தக் கனவைத் தமது "மாணவர் விடுதியின் நினைவுக்குறிப்புகளில்” விவரிக்கிறார்.

பாப்பரசரிடமிருந்து நேரடியான உத்தரவைப் பெற்று, ஜான்போஸ்கோ, தமது “அர்ச். பிரான்சிஸ் சலேசியார் மாணவர் விடுதியின் நினைவுக்குறிப்புகளை” எழுதினார். தமது சலேசிய சபையினருக்கான கையெழுத்துப் பிரதிக்கு ஒரு சுருக்கமான முன்னுரை எழுதிய பிறகு, அவர் பின்வரும் கனவை விவரிக்கிறார்: பகுதி 1 : இயேசு கட்டளையிடுகிறார்

எனக்கு சுமார் ஒன்பது வயதிருக்கும்போது, நான் ஒரு கனவு கண்டேன். அது என் எஞ்சிய வாழ்நாள் முழுவதிலும், என்மீது ஓர் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. கனவில், நான் என் வீட்டின் அருகில், ஒரு மிகப் பெரிய விளையாட்டுத் திடலில் இருந்தேன். அங்கே குழந்தைகளின் கூட்டம் ஒன்று உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தது. சிலர் சிரித்துக்கொண்டும், மற்றவர்கள் விளையாடிக் கொண்டும் இருந்தனர். பலர் சபித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பேசிய அருவருப்பான வார்த்தைகளால் நான் எந்த அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன் என்றால், நான் அவர்கள் நடுவே ஓடிச் சென்று, முரட்டுத்தனமாக அவர்களைப் பிடித்து உலுக்கி, அசுத்த வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்தும்படி அவர்களைப் பார்த்துக் கத்தினேன். 

அதே நேரம் ஒரு மனிதர் அங்கே தோன்றினார். அவர் ஒரு கணவானைப் போல உடை உடுத்தி யிருந்தார். ஆண்மை மிக்கவராகவும், சிறந்த ஆளுமையுள்ள கம்பீரத் தோற்றமுள்ளவ ராகவும் இருந்தார். அவர் பாதம் வரை நீண்டிருந்த ஒரு வெண்ணிற மேற்போர்வையை அணிந்திருந்தார். அவருடைய முகம் எத்தகைய ஒளியால் சுடர் வீசிக் கொண்டிருந்தது என்றால், அவரை நேருக்கு நேராகப் பார்க்க என்னால் முடியவில்லை. அவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்து, அந்தச் சிறுவர்களின் தலைவனாய் ஆகும்படி என்னிடம் சொன்னார். அவர் மேலும் தொடர்ந்து:

“அடிகளால் அல்ல, மாறாக, கனிவையும், கருணையையும் கொண்டு, நீ உன்னுடைய இந்த நண்பர்களை வெற்றி கொள்ள வேண்டும். ஆகவே இப்போதே பாவம் அசங்கியமானது என்றும், புண்ணியம் அழகானது என்றும் அவர்களுக்குக் காட்டத் தொடங்கு” என்றார்.

குழப்பமடைந்தவனாகவும், அச்சம் கொண்டவனாகவும், நான் அவரிடம், நான் இன்னும் ஒரு சிறுவன்தான் என்றும், பரிசுத்த வேதத்தைப் பற்றி இந்த இளைஞர்களிடம் பேச என்னால் முடியாது என்றும் பதில் கூறினேன். அந்தக் கணத்தில் சண்டை , கூச்சல்கள், சாபமிடுதல் எல்லாம் நின்று விட, அந்தச் சிறுவர் கூட்டம் பேசிக் கொண்டிருந்த அந்த மனிதரைச் சுற்றி ஒன்றுகூடியது. கிட்டத்தட்ட என்னையும் அறியாமல், நான் அவரிடம்:

“ஆனால் இந்த அளவுக்கு சாத்தியமே இல்லாததாகத் தோன்றுகிற ஒரு காரியத்தைச் செய்யும்படி நீர் எப்படி எனக்கு உத்தரவிட முடியும்?” என்று கேட்டேன்.

“இந்த அளவுக்கு சாத்தியமே இல்லாதது என்று தோன்றுகிற இந்த காரியத்தைக் கீழ்ப்படிதல் உள்ளவனாக இருப்பதன் மூலமும், அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலமும் நீ சாதிக்க வேண்டும்.”

“ஆனால் எங்கே? எப்படி?”

“நான் உனக்கு ஓர் ஆசிரியையைத் தருவேன். அவர் களுடைய வழிகாட்டுதலின் கீழ் நீ கற்றுக்கொள்வாய். அவர்களது உதவியின்றி, அறிவு எனப்படும் எல்லாமே மூடத்தனமாக மாறி விடும்.”

“ஆனால் நீர் யார்?”

“யாரை ஒரு நாளில் மூன்று முறை வாழ்த்தும்படி உன் தாய் உனக்குக் கற்பித்திருக்கிறாளோ, அவர்களுடைய மகன் நான்.”

“என் தாயின் அனுமதி இல்லாமல், நான் அறியாத மனிதர்களிடம் பேசக் கூடாது என்று என் அம்மா சொல்லியிருக் கிறார்கள். ஆகவே, தயவு செய்து, உமது பெயரைச் சொல்லும்.”

“என் தாயாரிடம் கேள்.”