இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆண்டவர் சின்னஞ்சிறியவராகவும், மிக அதிகமாக நேசிக்கப்படத்தக்கவராகவும் இருக்கிறார்

மனிதர்களின் அன்பை அதிக எளிதாகவும், அதிக விசையோடும் தம்மிடம் இழுத்துக் கொள்ளுமாறு, தேவ சுதன் ஓர் இனிய சிறு குழந்தையின் வடிவத்தில் தம்மை உலகிற்கு வெளிப்படுத்த விரும்பினார். சிறு குழந்தைகள் மனிதர்களால் உடனடியாக நேசிக்கப்படுகிறார்கள். அவர்களைக் காண்பதும், அவர்களை நேசிப்பதும் ஒரே காரியம்தான். இவ்வாறு, மனிதர்கள் தம்மைக் கண்டு அஞ்சாமல், அவர்கள் தம்மை நேசிக்க வேண்டுமென்று விரும்பிய அவரும் ஒரு குழந்தையாகவே பிறக்க விரும்பினார்.

"ஓ ஆத்துமங்களே, இந்தச் சிறு குழந்தையானவரை நேசியுங்கள். ஏனெனில் அவர் அளவுக்கு மீறி நேசிக்கப்படத் தக்கவராக இருக்கிறார்! ""'ஆண்டவர் மகத்துவமுள்ளவரும், மிகவும் புகழப்படத் தக்கவருமாயிருக்கிறார் (சங்.144:3). ஆண்டவர் சிறியவரும் மிகவும் நேசிக்கப்படத் தக்கவருமாயிருக்கிறார்! ஆம், இந்தக் கடவுள் நித்தியத்திலிருந்தே இருக்கிறவராக இருக்கிறார், ""ஆண்டவர் மகத்துவமுள்ளவரும், மிகவும் புகழப்படத் தக்கவருமாயிருக்கிறார் என்று'' தாவீதரசர் பாடியுள்ளது போல, தமது மகத்துவத்திற்காக அவர் எல்லாப் புகழ்ச்சிக்கும், வணக்கத்திற்கும் தகுதியுள்ளவராக இருக்கிறார்'' என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார். ஆனால் இப்போது நாம் பால் தேவைப்படுபவரும், தாமாக இயங்க முடியாதவரும், குளிரால் நடுங்குபவரும், முனகி அழுபவரும், தம்மை எடுத்துக் கதகதப்பாக்கித் தேற்ற ஒருவரைத் தேடுபவருமாக அவரைப் பார்க்கிறோம்; ஆ, இப்போது உண்மையாகவே அவர் நம் இருதயங்களால் மிகவும் நேசிக்கப்படத் தக்கவராக ஆகியிருக்கிறார்! ""ஆண்டவர் சின்னஞ்சிறியவராகவும், அளவுக்கு அதிகமாக, நேசிக்கப்படத்தக்கவராகவும் இருக்கிறார்!'' நாம் நம் கடவுளாக அவரை ஆராதிக்க வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் இவ்வளவு நேசத்திற்குரியவரும், இவ்வளவு அதிகமாக நேசிப்பவருமாகிய ஒரு கடவுளுக்கு நாம் காட்டும் வணக்கத்தோடு நம் நேசமும் போட்டி போட வேண்டும்.

ஒரு குழந்தை மற்ற குழந்தைகளோடு இருப்பதிலும், மலர்களை வைத்திருப்பதிலும், தன்னை நேசிப்பவர்களின் கரங்களில் இருப்பதிலும் இன்பம் காண்கிறது என்று அர்ச். பொனவெந்தூர் நமக்கு நினைவுபடுத்துகிறார். புனிதர் சொல்ல வருவது என்னவெனில்: நாம் இந்தத் தேவ குழந்தையை மகிழ்விக்க விரும்பினால், நாமும் குழந்தைகளாகவும், எளியவர்களாகவும், தாழ்ச்சியுள்ளவர்களாகவும் வேண்டும்; புண்ணியம், சாந்தம், ஒறுத்தல் மற்றும் பிறர்சிநேகத்தின் மலர்களை அவருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும்; நம் அன்பின் கரங்களில் அவரை நாம் தூக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

மேலும், அர்ச். பெர்னார்ட் தொடர்ந்து, ""ஓ மனிதா, உன்னையே முழுவதுமாகக் கடவுளுக்குக் கொடுப்பதற்கு முன்பாக, நீ இன்னும் வேறு எதைக் காண விரும்புகிறாய்? எத்தகைய உழைப்போடும், நேசப் பற்றுதலோடும் உன் சேசு பரலோகத்திலிருந்து உன்னைத் தேடி இறங்கி வருகிறார் என்று பார். இன்னும் பிறந்தும் பிறவாதிருக்கையிலேயே அவரது மழலைப் பிதற்றல்கள் உன்னை அழைப்பதைக் கேள். ஆத்துமமே, ஆத்துமமே, உன்னைத்தான் நான் தேடுகிறேன்; உனக்காக, உன் அன்பைப் பெறுவதற்காகத்தான் நான் மோட்சத்திலிருந்து பூமிக்கு வந்திருக்கிறேன்'' என்று அவர் சொல்வதாகத் தோன்றுகிறது.

ஓ சர்வேசுரா, மிருகங்களும் கூட, நாம் அவற்றிற்குக் கருணை காட்டினால், நாம் அவற்றிற்கு உணவளித்தால், அதற்காக அவை நம்மிடம் நன்றிபாராட்டுகின்றன. அவை நம் அருகில் வந்து, தங்களுக்கேயரிய முறைகளில் நம்மோடு உறவாடுகின்றன, நாம் நெருங்கி வரும்போது, மகிழ்ச்சியின் அடையாளங்களைக் காட்டுகின்றன. அப்படியிருக்க, தம் சுயத்தை நம் மீது பொழிந்துள்ளவரும், நமக்காக மோட்சத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்து, நம்மை இரட்சிக்கவும், நம்மால் நேசிக்கப்படவும் ஒரு சிறு குழந்தையாக ஆனவருமாகிய அதே சர்வேசுரனிடம் நாம் இவ்வளவு நன்றியற்றவர்களாக இருப்பது எப்படி? ஆகவே, ""வாருங்கள், பெத்லகேமின் குழந்தையானவரை நாம் நேசிப்போமாக'' என்பது அர்ச். பிரான்சிஸ் அசிசியாரின் பரவச நிலைக் கூக்குரலாக இருக்கிறது; இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியில் நம் இருதயங்களைத் தம்மோடு ஒன்றிக்கத் தேடியவரான சேசுகிறீஸ்து நாதரை நாம் நேசிப்போமாக.

"முக்கியமாக, இக்காரணத்திற்காகவே, அதாவது, கடவுள் மனிதனை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை அவன் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே சேசுநாதர் வந்தார்'' என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்.

ஆனால் என் சேசுவே, நீர் ஏற்கனவே வந்து விட்ட இக்காலத்திலும் கூட எத்தனை மனிதர்கள் உண்மையாகவே உம்மை நேசிக்கிறார்கள்? நீசனாயிருக்கிற நான் உம்மை இது வரை எவ்வளவு குறைவாக நேசித்து வந்திருக்கிறேன் என்று நீர் அறிவீர்! உமது அன்பை நான் எவ்வளவு இழிவுபடுத்தியிருக்கிறேன் என்பதை நீர் அறிவீர்! ஓ, அதற்காக நான் துக்கத்தினால் மரிப்பேன் எத்துணை நலமாயிருக்கும்! என் பிரியமுள்ள மீட்பரே, உம்மை நிந்தித்ததற்காக நான் மனம் வருந்துகிறேன். ஆ, என்னை மன்னித்து, உம்மை நேசிக்கும் வரத்தை எனக்குத் தந்தருளும்!

சேசுநாதரின் அன்பிற்காக நாம் நம் அயலாரையும், நம்மை நோகச் செய்பவர்களையும் கூட நேசிக்க வேண்டும். மெசையா ""எதிர்காலப் பிதா'' என்று இசையாஸால் அழைக்கப்படுகிறார் (9:6). இனி, இந்தப் பிதாவின் மகன்களாக இருக்கும்படியாக, நாம் நம் எதிரிகளை நேசிக்கவும், நம்மைக் காயப்படுத்துவோருக்கு நன்மை செய்யவும் வேண்டுமென்று சேசுநாதர் நமக்கு அறிவுறுத்துகிறார். ""உங்கள் எதிரிகளை சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர் களுக்கு நன்மை செய்யுங்கள்...(அப்போது) பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு (ஏற்ற) பிள்ளைகளாயிருப்பீர்கள்'' மத்.5:44,45). இதற்கு அவரே சிலுவையின் மீது நமக்கு முன்மாதிரிகை தருகிறார், தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காகத் தமது பரலோகப் பிதாவிடம் மன்னிப்பைக் கேட்கிறார்.

"தன் எதிரியை மன்னிக்கிறவன், தனக்குக் கடவுளின் மன்னிப்பைப் பெறாமல் போக முடியாது'' என்று அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் கூறுகிறார். ""மன்னியுங்கள், நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்'' (லுக்.6:37) என்ற தெய்வீக உறுதிப்பாடும் நமக்கு உள்ளது. ஒரு துறவி இருந்தார். அவருடைய வாழ்வு அவ்வளவு சிறப்பானதாக இருக்கவில்லை. ஆனால் தம் இறப்பின்போது, தம் பாவங்களுக்காக அவர் புலம்பியழுதார் என்றாலும் மிகுந்த நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அவரிடம் இல்லாமல் இருக்கவில்லை. ""ஏனெனில், எனக்குச் செய்யப்பட்ட தீமைக்கு நான் ஒருபோதும் பழிவாங்கியதில்லை'' என்றார் அவர். ""நான் ஆண்டவரை நோகச் செய்தேன் என்பது உண்மைதான், ஆனால் தன் பகைவர்களை மன்னிப்போரை அவரும் மன்னிக்கிறார். நான் என்னை நோகச் செய்தவர்கள் அனைவரையும் மன்னித்து விட்டேன், ஆகவே, கடவுளும் இவ்வாறே என்னை மன்னிப்பார் என்று நான் உறுதியா யிருக்கிறேன்'' என்றார் அவர்.

ஆனால், ஓ என் சேசுவே, எனக்கு மன்னிப்பு மட்டும் போதாது; நீர் என் அன்பிற்குத் தகுதியுள்ளவராக இருக்கிறீர். நீர் மரணம் வரைக்கும் என்னை நேசித்திருக்கிறீர்; மரணம் வரைக்கும் நானும் உம்மை நேசிப்பேன். ஓ அளவற்ற நன்மைத்தனமே, என் முழு ஆத்துமத்தோடு நான் உம்மை நேசிக்கிறேன்; என்னை விட அதிகமாக நான் உம்மை நேசிக்கிறேன். உம் அன்பிற்காக என் அயலானை நான் நேசிக்கிறேன். ஆம், என் சேசுவே, உம்மை நான் நேசிக்கிறேன்; என் பொக்கிஷமும், என் வாழ்வும், என் அன்பும், என் சர்வமுமான உம்மை நான் எப்போதும் நேசிப்பேன்.