இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே!

பிறர் வகிக்கும் அந்தஸ்து காரணமாக அவர்களுக்கு நாம் செலுத்தும் சங்கையும் மரியாதையுமே வணக்க மெனப்படும். நமது இவ்வுலக நலம் (Temporal welfare) நாடி உழைக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். நமது ஆன்ம நலம் (Spiritual welfare) நாடி அரும்பாடுபடும் திருச்சபை அதிகாரிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். இவர்கள் நமது இகபர உபகாரிகள். நமது உபகாரிகளுக்கு மரியாதை, வணக்கம், நன்றி செலுத்துதல் நமது கடன். அவ்விதமே, மரியன்னையின் மாட்சியையும், மகிமையையும், கடவுளுக்கும் அவர்களுக்குமுள்ள தொடர்பையும் நமக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பையும் சற்று நோக்கினால், நாம் அவர்களுக்கு எத்தகைய வணக்கம், மரியாதை செலுத்த வேண்டு மென்பது தெள்ளத் தெளிவாகும்.

அன்னை அமல உற்பவி; பாவமில்லாமல் உற்பவித்தவர்கள். பாவ மாசில்லாது வாழ்க்கை நடத்தியவர்கள்; “என் பேரில் குற்றஞ்சாட்டக் கூடியவன் யார்?” என்று தனது குமாரனைப் போல் மாதாவும் சொல்லக் கூடுமாயிருந்தார்கள். அவர்கள் சர்வேசுர னுடைய அருட்கொடைகளால் பூரணமானவர்கள். அவர்களது ஆன்ம அழகுக்கு ஈடு இணை இல்லை.

அவர்களது மாசறு கற்பை என்னவென்று சொல்லுவது?! யூத மக்கள் என்றும் கேள்விப்படாத ஒரு அதிசய காரியத்தை மாதா செய்கிறார்கள்; இளம் வயதிலேயே தன் கற்பு முழுவதையும் கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறார்கள்; என்றும் கன்னியாக இருக்க விரதம் (vow) பூணுகிறார்கள்; இவ்விரதத்தில் மாதா எத்துணை மன உறுதியுடன் இருந்தார்களென்றால், அதைக் காப்பதற்காக கடவுளின் தாயாகும் பேற்றைக் கூட விட்டுவிடத் தயாராயிருந் தார்கள். கன்னிமைக்குப் பழுது ஏற்படாதென்று தேவ தூதன் தெரிவித்தவுடன் அன்னை அவரது வார்த்தைகளை உறுதியாய் விசுவசித்து கடவுளின் திருவுள்ளத்திற்குச் சிரம் பணிகிறார்கள்; கடவுளின் தாயாகிறார்கள்; இதை விட மேலான மகிமை எந்த சிருஷ்டிக்கும் கொடுக்கப் பட்டுள்ளதோ? இதைவிட மேலான மகிமை இருக்கவும் கூடுமோ?

மாதா தன் வாழ்க்கை முழுவதையும் சேசுவோடு செலவழித்தார்கள்; கடவுளைத் தன் கண்முன் கண்டார் கள்; அவரது திருமுகத் தரிசனத்தில் அவர்கள் சதா இன்பம் அனுபவித்தார்கள்; கடவுளை நேசித்தார்கள்; கடவுளுக் காக வாழ்ந்தார்கள்; கடவுள் மயமாகவே இருந்தது அவர்களுடைய வாழ்க்கை.

மாதாவின் இரும்பையொத்த மன வலிமை அவர்களது பெருமைக்கு மற்றோர் எடுத்துக்காட்டு. சிலுவை சுமந்து செல்லும் தன் குமாரனைச் சந்திக் கிறார்கள்; அவரோடு கல்வாரிக்குச் செல்லுகிறார்கள். தன் மகவு தண்ணீர்த் தாகத்தால் மடிவதைக் காணச் சகியாத ஆகார் அதை ஒரு மரத்தடியில் கிடத்தி விட்டு ஓடியதைப் போன்று (ஆதி.21) மாதா தன் மகன் படும் வேதனையையும் அனுபவிக்கும் நிந்தை அவமானங்களையும் காணச் சகியாது ஓடிவிடவில்லை; ஆனால் சிலுவையடியில் நிற்கிறார்கள்; உறுதியுடன் நிற்கிறார்கள். தன் நேச குமாரனின் மரணத்தினால்தான் மனுக்குலம் ஈடேற்றமடைய வேண்டுமென்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். ஆகவே தன் மகனை நமது இரட்சணியத்திற்காக, பரம பிதாவுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கிறார்கள். தன் உயிரினும் மேலாக மதித்து நேசித்த தன் மகவை நம் நலம் கருதி தியாகம் செய்கிறார்கள். தாய்நாட்டின் நலம் கருதி தம் புதல்வரைத் தியாகம் செய்யத் துணிந்த தாய்மாரை உலகம் உச்சியில் வைத்துக் கொண்டாடுகிறது. “வீரத் தாய்மார்” என்று பட்டம் சூட்டி அவர்களைக் கனப்படுத்துகிறது; சரித்திரத்தில் அவர்களது வீரச் செயல் பெரிதும் புகழ்ந்து பேசப்படுகிறது. இதோ! ஒரே ஒரு நாட்டின் நலத்தை மாத்திரமல்ல, அகில உலகின் நலத்தையே கருதி, தன் ஒப்பற்ற புதல்வனை--தன் கடவுளைத் தியாகம் செய்கிறார்கள் நம் மாதா-- இவர்களன்றோ உண்மையில் வீரத்தாய்? இவர்களன்றோ நமது அன்புக்கும், வணக்கத்துக்கும் புகழ்ச்சிக்கும் முற்றிலும் உரியவர்கள்?

அன்னையின் மோட்ச மகிமையும், அவர்கள்பால் நமது வணக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. பிறப்பில் மட்டுமல்ல, ஜீவியத்தில் மட்டுமல்ல; மரணத்திலும் அன்னையை மகிமைப்படுத்துகிறார் தேவன். ஏனைய மானிடரைப்போல, மரித்தபின் அவர்களது சரீரம் மண்ணோடு மண்ணாக மக்கி மறையவில்லை. வானவர் புடைசூழ மிக்க மகத்துவ பிரதாபத்துடன் தேவமாதா ஆத்தும சரீரத்தோடு மோட்சத்திற்கு எடுத்துக் கொள் ளப்படுகிறார்கள். விண்ணுலக மண்ணுலக அரசியாக முடிசூட்டப்படுகிறார்கள்; சகல அர்ச்சியசிஷ்டவர் களுக்கும் சம்மனசுக்களுக்கும் மேலாக அவர்களை உயர்த்துகிறார் தேவன். சகல வரப்பிரசாதங்களுக்கும் மத்தியஸ்தியாக நியமிக்கிறார்.

இத்தகைய மகிமை நிறைந்த மாதாவை நாம் வணங்கிப் போற்றி, அவர்களை நேசிப்பது நமது கடனல்லவா? கடவுளின் திருவுளமும் இதுவே; அன்று பாத்திமாவில் காட்சியளித்தபோது, மாதாவே இதை நமக்கு எடுத்துக் கூறியிருக்கிறார்கள்: நரகத்தின் கோரக் காட்சியை பாத்திமாவில் சிறுவர்களுக்குக் காட்டியபின் மாதா கூறுகிறார்கள்: “பரிதாபத்திற்குரிய பாவிகள் செல்லும் நரகத்தைப் பார்த்தீர்கள். அவர்களை இரட்சிப்பதற்காக ஆண்டவர் இவ்வுலகில் என் மாசற்ற இருதய பக்தியை ஸ்தாபிக்க விரும்புகிறார்...” “பிதாவையும், மாதாவையும் சங்கித்திருப்பாயாக” என்று போதித்த சேசு, அதைத் தாமே நடைமுறையில் காட்டினார்; தம் மாதாவை அவர் கனப்படுத்தினார். இப்போதும் அவர்களை மோட்சத்தில் கனப்படுத்துகிறார். சாலமோன் இராஜா தன் அன்னைக்கு எவ்வாறு மரியாதை காண்பித் தார் என்று படித்துள்ளோம்; தனது சிம்மாசனத்தினின்று எழுந்து தனது அன்னை முன் சென்று அவளை வரவேற்று தமது சிம்மாசனத்தருகில் வலது புறத்தில் மற்றொரு சிம்மாசனம் அமைத்து அதில் தன் அன்னையை அமர வைத்தார் (3 அரசர் 2:19). சாலமோன் மன்னர் தனதன்னைக்கு இவ்வளவு மரியாதை காண்பித்தா ரென்றால், மன்னாதிமன்னர் சேசுநாதர் தமது மாசற்ற திருமாதாவை எவ்வளவு மகிமைப்படுத்தியிருப்பார், இன்றும் மகிமைப்படுத்துகிறார் என்று ஒருவாறு ஊகிக் கலாம். சேசுவின் அன்னை நமது அன்னையும்தான்; ஆகையால் அன்னைக்குரிய அன்பும், வணக்கமும் அவர்களுக்குச் செலுத்துவது பிள்ளைகளின் கடமை என்று சொல்லத் தேவையில்லை.

மாமரியன்னைக்கு நாம் வணக்கம் செலுத்த வேண்டுமென்று சொல்லும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. பதிதர் பிதற்றுவதுபோல அவர்களை நாம் ஒரு தேவதையாகக் (Goddess) கருதி ஆராதனை செய்வதில்லை. அங்ஙனம் செய்வது பெரும் துரோகமாகும். ஆராதனை (Latria) கடவுள் ஒருவருக்கு மாத்திரமே உரியது; சிருஷ்டிகர் ஒருவருக்கு மாத்திரமே உரியது; வேறு எவருக்கும் இதில் பங்குபாகமில்லை; எனவே சிருஷ்டிகளுக்கு இவ்வித வணக்கம் செலுத்தப் படலாகாது; அன்னையும் ஒரு சிருஷ்டியே; ஆகவே நமதன்னைக்கு நாம் இத்தகைய ஆராதனையைச் செலுத்துவதில்லை; செலுத்தவும் கூடாது. ஆனால் மாதா சிருஷ்டிகளுள் மேலான சிருஷ்டி; அர்ச்சியசிஷ்டவர் களுக்கும், சம்மனசுக்களுக்கும் இராக்கினி அவர்கள்; எனவே அவர்களுக்குச் செலுத்தப்படும் வணக்கத்தை விட (Dulia) மேலான வணக்கம் (Hyperdulia) தேவமாதாவுக்குச் செலுத்த வேண்டும்.

“ஓ! எங்கள் மாதாவே! எம் அன்புக்கும் வணக்கத்திற்கும், புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய மாதாவே! இதோ உமது பிள்ளைகள் உம்மைச் சூழ்ந்து நிற்கின்றோம். உமது மகிமைப்பிரதாபத்தைக் குறித்து உம்மை நாங்கள் வாழ்த்திப் போற்றுகிறோம்; வணங்கி வந்திருக்கிறோம். நீங்கள் எங்கள் வணக்கத்துக்கு முற்றும் உரியவர்களென்று நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு வணக்கம் செலுத்தி உம்மீது பக்தி கொண்டிருப்பது எமது கடமையென் பதையும் உணர்கிறோம். ஆனால், இக்கடமையை நிறைவேற்ற எத்தனையோ விசை தவறியிருக்கிறோ மென்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்ளுகிறோம். இனிமேலாக, இக்கடமையை எங்களால் இயன்ற மட்டும் பிரமாணிக்கமாய் அனுசரிப்பதாக இதோ உமக்கு வாக்களிக்கிறோம்; இதில் எங்களுக்கு உதவி புரியும் தாயே!” 


மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!