இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுள் ஞான நன்மைகளை நமக்குத் தந்தருள்வதாக வாக்களித்திருக்கிறார், உலக நன்மைகளை அல்ல!

நம் ஜெபங்களைக் கேட்பதாக நம் ஆண்டர் தந்துள்ள வாக்குறுதி, உலக நன்மைகளுக்கான நம் மன்றாட்டுகளுக்குப் பொருந்தாது, மாறாக, அது அவசியமான, அல்லது ஏதோ ஒரு விதத்தில் ஆத்தும இரட்சணியத்திற்குப் பயனுள்ளதாக இருக்கிற, ஞான ரீதியான வரப்பிரசாதங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதைப் பற்றி சிந்திப்போம். சேசுநாதரின் திருப்பெயராலும், அவருடைய பேறுபலன்களின் வழியாகவும் நாம் கேட்கும் வரப்பிரசாதங்களை மட்டுமே பெற்றுக் கொள்வோம் என்றுதான் நாம் எதிர்பார்க்க முடியும். ""ஆனால்,'' அர்ச். அகுஸ்தினார் சொல்வது போல, ""நம் இரட்சணியத்திற்கு ஆபத்தான எதையும் நாம் கேட்கிறோம் என்றால், இரட்சகரின் திருப்பெயரால் நாம் கேட்கிறோம் என்று சொல்லப்பட முடியாது.'' இரட்சணியத்திற்கு ஆபத்தான எதையும் இரட்சகரிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது. கடவுள் அதைத் தருவதில்லை, தர முடிவதுமில்லை. ஏன்? ஏனெனில் அவர் நம்மை நேசிக்கிறார். நோயாளியின் மீது மதிப்பு வைத்துள்ள மருத்துவன், அவனுக்கு நல்லதல்ல என்று தான் நினைக்கும் உணவை அவன் சாப்பிட அனுமதிக்க மாட்டான். எத்தனை மனிதர்கள் தாங்கள் ஏழைகளாக அல்லது நோயாளிகளாக இருந்திருந்தால், தாங்கள் செய்யும் பாவங்களைச் செய்யாதபடி தடுக்கப்பட்டிருப்பார்கள்! பலர் உடல் நலத்தை அல்லது செல்வங்களைக் கேட்கிறார்கள், ஆனால் கடவுள் அவர்களுக்கு அவற்றைத் தருவதில்லை, ஏனெனில் அவை அவர்களுக்குப் பாவ சந்தர்ப்பமாக, அல்லது குறைந்தபட்சம், தம் ஊழியத்தில் அவர்கள் வெதுவெதுப்பாக இருப்பதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று அவர் காண்கிறார். ஆகவே, நாம் இந்த உலகக் கொடைகளைக் கேட்கும்போது, ""அவை எங்கள் ஆத்துமங்களுக்குப் பலனுள்ளதாக இருந்தால்'' என்ற நிபந்தனையையும் நம் ஜெபத்தோடு எப்போதும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் அவற்றை நமக்குத் தரவில்லை என்று நாம் காணும்போது, நம்மை நேசிப்பதாலும், நாம் கேட்கும் காரியங்கள் நம் ஞான நலனுக்கு ஆபத்தானதாக மட்டுமே இருக்கும் என்பதாலுமே அவர் அவற்றை நமக்குத் தர மறுக்கிறார் என்பதில் நாம் உறுதியாய் இருப்போமாக.

கடவுளின் வரப்பிரசாதத்தை விலக்கி விட நம்மைத் தூண்ட முயலும் சில சோதனைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்படி கடவுளிடம் நாம் அடிக்கடி ஜெபிக்க வேண்டும். ஆனால் அவரோடு நம் ஆத்துமம் அதிக நெருக்கமாக ஒன்றிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக, கடவுள் சில சமயங்களில் நம்மை அவற்றிலிருந்து விடுவிப்பதில்லை. நம்மைக் காயப்படுத்தி, கடவுளிடமிருந்து நம்மைப் பிரிப்பவை சோதனைகளோ, நாம் வெறுக்கிற கெட்ட எண்ணங்களோ அல்ல, மாறாக தீமைக்கு நாம் சம்மதிப்பதே ஆகும். கடவுளின் வரப்பிரசாத உதவியால் ஆத்துமம் ஒரு சோதனையை எதிர்த்து நிற்கும்போது, அது உத்தமதனத்தின் பாதையில் வேகமாக முன்னேறுகிறது. அர்ச். சின்னப்பர் அசுத்தப் பாவ சோதனைகளால் தாம் மிக அதிகமாகத் துன்புறுத்தப் பட்டதாகவும், அவற்றிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கடவுளிடம் தாம் மும்முறை ஜெபித்ததாகவும் நமக்குக் கூறுகிறார்: ""என்னைக் கொட்டும் பேய்த் தூதனாகிய ஒரு கொடுக்கு என் மாம்சத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் இது என்னைவிட்டு அகலும் படிக்கு மும்முறை ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்.''

அதற்கு ஆண்டவர் தந்த பதில் என்ன? என் வரப்பிரசாதத்தைக் கொண்டிருப்பதே உனக்குப் போதுமானது என்று ஆண்டவர் அவருக்குக் கூறிவிட்டார்: ""என் வரப்பிரசாதமே உனக்குப் போதும்'' (2 கொரி.12:7-9). இவ்வாறு, நம்மைத் தாக்கும் சோதனைகளில், அவற்றிலிருந்து நம்மை விடுவிக்கும்படியாக, அல்லது அவற்றை எதிர்த்து நிற்க நமக்கு உதவும்படியாக நாம் அவரிடம் மன்றாட வேண்டும். இப்படி நாம் ஜெபிக்கும்போது, அவற்றை எதிர்த்து நிற்கக் கடவுள் நமக்கு ஏற்கனவே உதவி செய்து கொண்டிருக்கிறார் என்பதில் நாம் முற்றிலும் உறுதியாக இருக்க வேண்டும்: ""துன்ப நேரத்தில் நீ நம்மைக் கூவியழைத்தாய், கடும் புயலின் இரகசிய ஸ்தலத்தில் நாம் உன் குரலைக் கேட்டு, உன்னை விடுவித்தோம்'' (சங்.80:8). நமது மேலதிக நன்மைக்காகக் கடவுள் நம்மை அடிக்கடி புயலின் நடுவில் விட்டு விடுகிறார்; ஆனால் இன்னும் கூட அவர் நம் மன்றாட்டை இரகசியத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார், எதிர்த்து நிற்கவும், தேவ சித்தத்திற்கு அமைந்திருக்கவும் நம்மைப் பலப்படுத்த அவர் தமது வரப்பிரசாதத்தை நமக்குத் தருகிறார்.

இரட்சணியத்திற்கு அவசியமில்லாத சகல உலகக் கொடைகளும் நிபந்தனையின் பேரிலேயே கேட்கப்பட வேண்டும்; கடவுள் அவற்றை நமக்குத் தரவில்லை என்று நாம் கண்டால், நம் மேலதிக நன்மைக்காகவே அவற்றைக் கடவுள் நமக்குத் தர மறுக்கிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் ஞான வரங்களைப் பொறுத்த வரை, அவற்றை அவரிடம் நாம் கேட்கும்போது, அவர் அவற்றைத் தந்தருளுகிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நாம் நம்மை நேசிப்பதை விடக் கடவுள் நம்மை அதிகமாக நேசிக்கிறார் என்று அர்ச். தெரேசம்மாள் கூறுகிறாள். கடவுளின் வரப்பிரசாதத்தைப் பெறுவதற்கு நமக்குள்ள ஆசையை விட, அதை நமக்குத் தருவதற்குக் கடவுள் அதிக ஆசை கொண்டுள்ளார் என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்: ""கடவுளின் உபகாரங்களைப் பெற்றுக்கொள்ள நீ ஆசைப்படுவதை விட அதிகமாக, அவற்றை உன் மீது பொழிய அவர் சித்தமாயிருக்கிறார்.'' அவருக்குப் பின் அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள் இது பற்றிக் கூறும்போது, ஜெபிக்கும் ஆன்மாவுக்குத் தாம் ஒரு விதத்தில் கடன்பட்டிருப்பதாகக் கடவுள் உணர்கிறார். அவர் அதனிடம்: ""ஆன்மாவே, வரப்பிரசாதத்தை என்னிடம் கேட்டதற்காக நான் உனக்கு நன்றி கூறுகிறேன்'' என்று சொல்பவரைப் போலத் தோன்றுகிறார். ஏனெனில் அப்போது ஆத்துமம் தனக்கு நன்மை செய்யும் ஒரு வாய்ப்பைத் தருகிறது, இவ்வாறு, அனைவருக்கும் தமது வரப்பிரசாதத்தைத் தரும் அவரது ஆசையையும் அது திருப்தி செய்கிறது. எந்த வரங்களைத் தருவதில் கடவுள் மிக அதிகமான இன்பம் காண்கிறாரோ, அந்தக் காரியங்களை ஓர் ஆன்மா கேட்கும்போது, கடவுள் அவற்றை அதற்குத் தராமல் இருப்பது எப்ப நிகழ முடியும்? ஆத்துமம் அவரை நோக்கி: ""ஆண்டவரே, செல்வங்களையோ, உலக மகிமைகளையோ, நன்மைகளையோ அன்றி, உமது வரப்பிரசாதத்தையே நான் இரந்து மன்றாடுகிறேன். பாவத்திலிருந்து என்னை விடுவியும்; ஒரு நல்ல மரணத்தை எனக்குத் தந்தருளும்; எனக்கு மோட்சத்தைத் தந்தருளும்; எனக்கு உமது அன்பைத் தந்தருளும்'' என்று கேட்கும்போது, அர்ச். பிரான்சிஸ் சலேசியார் கூறுவது போல அது எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஜெபத்தில் கேட்க வேண்டிய வரமாக இருக்கிறது. ""உமது திருச் சித்தத்திற்குப் பணிந்திருக்கும் வரத்தை எனக்குத் தந்தருளும்''--ஓர் ஆத்துமம் இப்படி ஜெபிக்கும்போது, கடவுள் அதன் ஜெபத்தைக் கேட்க மறுப்பது எப்படி சாத்தியமாகும்? ஓ என் தேவனே, நீர் விரும்பும் விதத்தில் செய்யப்படும் ஜெபங்களை நீர் கேட்கவில்லை என்றால், வேறு எந்த ஜெபத்தைத்தான் நீர் கேட்பீர் என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்: ""இவற்றை நீர் கேட்கவில்லை என்றால், எதைத்தான் நீர் கேட்பீர்?'' மேலும், இவ்வகையான ஞான வரங்களை நாம் கேட்கும்போது, அவற்றைப் பெற்றுக் கொள்ளும் ஆசை கடவுளிடமிருந்து மட்டுமே நமக்கு வர முடியும் என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார்; ஆகவே இப்புனிதர் கடவுளை நோக்கித் திரும்பி, ""இந்த ஆசையைத் திருப்தி செய்ய உமக்குச் சித்தமில்லை என்றால், அவற்றை வேறு என்ன காரணத்திற்காகத் தந்திருக்கிறீர்?'' என்று கேட்கிறார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக சேசு கிறீஸ்துநாதரின் வார்த்தைகள், ஞான வரங்களுக்காக நாம் ஜெபிக்கும்போது, நம் நம்பிக்கைக்கு உயிரூட்ட வேண்டும்: ""நீங்கள் தீயோராயினும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கொடைகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, உங்கள் பரம பிதாவானவர் தம்மை வேண்டிக்கொள்கிறவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நல்ல இஸ்பிரீத்துவைத் தந்தருளுவார்'' (லூக்.11:13). தீமையாலும், சுய நேசத்தாலும் நிறைந்திருக்கிற நீங்கள், உங்கள் குழந்தைகள் கேட்கிற நன்மையான காரியங்களைத் தர மறுக்க முடியாதவர்களாக இருக்கிறீர்கள் என்றால், எந்த ஒரு உலகத் தகப்பனும் தன் குடும்பத்தை நேசிக்க முடிவதற்கும் மேலாக உங்களை நேசிக்கிற உங்கள் பரலோகப் பிதாவானவர், நீங்கள் தமது ஞானக் கொடைகளைக் கேட்கும்போது, அவற்றை எவ்வளவு அதிகமாக உங்களுக்குத் தந்தருள்வார்!திரும்பி, ""இந்த ஆசையைத் திருப்தி செய்ய உமக்குச் சித்தமில்லை என்றால், அவற்றை வேறு என்ன காரணத்திற்காகத் தந்திருக்கிறீர்?'' என்று கேட்கிறார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக சேசு கிறீஸ்துநாதரின் வார்த்தைகள், ஞான வரங்களுக்காக நாம் ஜெபிக்கும்போது, நம் நம்பிக்கைக்கு உயிரூட்ட வேண்டும்: ""நீங்கள் தீயோராயினும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கொடைகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, உங்கள் பரம பிதாவானவர் தம்மை வேண்டிக்கொள்கிறவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நல்ல இஸ்பிரீத்துவைத் தந்தருளுவார்'' (லூக்.11:13). தீமையாலும், சுய நேசத்தாலும் நிறைந்திருக்கிற நீங்கள், உங்கள் குழந்தைகள் கேட்கிற நன்மையான காரியங்களைத் தர மறுக்க முடியாதவர்களாக இருக்கிறீர்கள் என்றால், எந்த ஒரு உலகத் தகப்பனும் தன் குடும்பத்தை நேசிக்க முடிவதற்கும் மேலாக உங்களை நேசிக்கிற உங்கள் பரலோகப் பிதாவானவர், நீங்கள் தமது ஞானக் கொடைகளைக் கேட்கும்போது, அவற்றை எவ்வளவு அதிகமாக உங்களுக்குத் தந்தருள்வார்!

ஆகவே, நாம் இரட்சிக்கப்பட விரும்பினால், நாம் ஜெபிப்போம், எப்போதும் ஜெபித்துக் கொண்டே இருப்போம். ஜெபமே நமக்கு அனைத்திலும் இன்பமான வேலையாக இருக்கட்டும்; ஜெபம் நம் முழு வாழ்வினுடையவும் பயிற்சியாக இருக்கட்டும். நாம் குறிப்பிட்ட வரப்பிரசாதங்களுக்காக ஜெபிக்கும் போது, தொடர்ந்து ஜெபிப்பதற்கான வரப்பிரசாதத்தைக் கேட்க ஒருபோதும் மறவாதிருப்போம்; ஏனெனில் நாம் ஜெபிப்பதை எப்போதாவது விட்டு விடுவோம் என்றால், நாம் இழக்கப்படுவோம். ஜெபத்தை விட அதிக எளிதானது எதுவுமில்லை. ""ஆண்டவர் என் அருகில் நில்லும்! ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும்! ஆண்டவரே, உமது நேசத்தை எனக்குத் தாரும்!'' என்று இது போன்ற ஜெபங்களைச் செய்வதற்கு நமக்கு எந்தச் செலவும் இல்லை! இதை விட அதிக எளிதானது என்ன இருக்க முடியும்? ஆனால் இதை நாம் செய்யாவிடில், நாம் இரட்சிக்கப்பட முடியாது. ஆகவே, நாம் ஜெபிப்போம், மாமரியின் பரிந்துரையின் கீழ் எப்போதும் தஞ்சமடைவோம். ""வரப்பிரசாதத்தைத் தேடுவோம், அதை மாமரியின் வழியாகத் தேடுவோம்'' என்கிறார் அர்ச். பெர்னார்ட். மாமரியிடம் நாம் நம்மை ஒப்படைக்கும்போது, அவர்கள் நம் ஜெபத்தைக் கேட்கிறார்கள். நமக்கு வேண்டிய எதையும் அவர்கள் பெற்றுத் தருகிறார்கள் என்பதில் உறுதியாயிருப்போம். ""வழிகளோ, சித்தமோ அவர்களிடம் ஒருபோதும் குறைவுபட முடியாது'' என்று அதே புனிதர் கூறுகிறார். மேலும் அர்ச். அகுஸ்தினார் தம் திவ்ய அன்னையைப் பார்த்து இப்படிக் கூறுகிறார்: ""ஓ மிகுந்த பக்தியுள்ள இராக்கினியே, உம்முடைய மன்றாட்டின் உதவியைக் கேட்ட எவனும் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் யாரும் கேள்விப் பட்டதில்லை.'' ""ஆ, இல்லவேயில்லை, மாமரியிடம் வேண்டிக் கொள்பவன் இரட்சணியத்தைக் கண்டடைகிறான்; ஆகவே அவன் அவர்களை, ""தன்னை மன்றாடுவோரின் இரட்சணியம்'' என்று அழைக்கிறான்'' என்று அர்ச். பொனவெந்தூர். நாம் ஜெபத்தை ஒருபோதும் அசட்டை செய்யாதிருப்போமாக.

நித்திய பிதாவே, நான் தாழ்ச்சியோடு உம்மை ஆராதிக்கிறேன், என்னைப் படைத்து, சேசுநாதரின் வழியாக என்னை இரட்சித்துள்ளதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை ஒரு கிறீஸ்தவனாக்கியதற்காகவும், ஞானஸ்நானமாகிய தேவத் திரவிய அனுமானத்தில் என்னை உமது குழந்தையாக சுவீகரித்துக் கொண்டதற்காகவும், மிகுந்த உண்மையுள்ள மனதோடு நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் எண்ணற்ற பாவங்களைச் செய்த பிறகு, என் மனஸ்தாபத்தை ஏற்றுக் கொண்டு, நான் தாழ்ச்சியோடு நம்புகிறபடி உமக்கு எதிராக நான் செய்த எல்லாப் பாவங்களையும் மன்னித்ததற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இந்தப் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படுகிறேன், ஏனெனில் அவை அளவற்ற நன்மைத் தனமாகிய உம்மை வேதனைக்குள்ளாக்கின. நீர் என்னைக் காத்திருக்கவில்லை எனில், நான் மீண்டும் விழுந்திருக்கக் கூடிய பல பாவங்களிலிருந்து என்னைப் பாதுகாத்ததற்காக உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன். ஆனால் என் எதிரிகள் என்னைத் தங்கள் அடிமையாக்கும்படி இன்னும் போராடுகிறார்கள், இனியும் போராடுவார்கள். நீர் என்னை இடைவிடாமல் பாதுகாத்து, உமது எனக்கு உதவி செய்யாவிடில், பரிதாபத்திற்குரிய சிருஷ்டியாகிய நான் பாவத்திற்குத் திரும்பிச் சென்று நிச்சயமாக உமது வரப்பிரசாதத்தை இழந்து போவேன். ஆகவே, சேசுநாதருடைய அன்பைப் பார்த்து, என் மரணம் வரையிலும் எனக்குப் பரிசுத்த நிலைமை வரத்தைத் தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறேன். உமது திருச்சுதனான சேசுநாதர், தமது திருப்பெயரால் நாங்கள் எதைக் கேட்டாலும் அதை நீர் தருவீர் என்று வாக்களித்திருக்கிறார். அவருடைய பேறுபலன்களின் வழியாக, நானும், நீதிமான்கள் அனைவரும் இனி ஒருபோதும் உமது அன்பிலிருந்து பிரிக்கப் படாமலும், காலத்திலும், நித்தியத்திலும் உம்மை என்றென்றும் நேசித்துக் கொண்டும் இருக்க எங்களுக்குத் தேவையான வரப்பிரசாதத்தைத் தந்தருளும்படி உம்மை இரந்து மன்றாடுகிறேன். மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, எனக்காக சேசுவை மன்றாடுங்கள்.