ஒரு பயங்கரமுள்ள ஆலங்கட்டிப் புயல்!

கறுப்பும் சிவப்புமான ஆலங்கட்டிகள் அசுத்ததனமும், அகங்காரமும்

நாங்கள் எல்லோரும் சற்று தூரம் பின்வாங்கினோம். நாங்கள் நின்ற இடத்திலிருந்து, அந்தத் திராட்சைகள் வீங்குவதை நாங்கள் கண்டோம். அவற்றின் பொன்னிறமும், நீட்டமான அமைப்பும் அப்படியே இருந்தாலும், அவை ஓடற்ற நத்தைகளைப் போன்ற அருவருப்பான திரள்களாக மாறின. மீண்டும் வழிகாட்டி கத்தினார்: “இப்போது நன்கு கவனியுங்கள்; ஆண்டவர் பழிவாங்குகிறார்.” உடனடியாக வானம் இருண்டது. ஓர் அடர்த்தியான மூடுபனி திராட்சைச் செடியை எங்கள் பார்வையிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொண்டது. அந்த இருளின் ஊடாக மின்னல் வெட்டியது, இடி முழங்கியது, அச்சமூட்டும் இடிமுழக்கங்கள் விளையாட்டு மைதானமெங்கும் தாக்கின. திராடசைக் கிளைகள் கடுங்காற்றின்கீழ் வளைந்தன, இலைகள் எல்லாம் உதிர்ந்து போயின. இறுதியாக ஒரு ஆலங்கட்டிப் புயல் திராட்சைச் செடியைத் தாக்கியது. நான் ஓடிவிட முயன்றேன். ஆனால் என் வழிகாட்டி என்னைப் பிடித்துக் கொண்டார். “ஆலங்கட்டி மழையைப் பாருங்கள்” என்றார் அவர்.

நான் கவனித்தபோது, ஆலங்கட்டிகள் முட்டைகளின் அளவுக்கு பெரிதாக இருந்ததையும், அவை ஒன்றில் கறுப்பாக அல்லது சிவப்பாக இருந்ததையும், ஒரு மரச் சுத்தியலைப் போல், அவற்றின் ஒரு முனை கூர்மையாகவும், மறு முனை தட்டையாகவும் இருந்ததையும் கண்டேன். எனக்கு மிக அருகில் இருந்தவை கறுப் பாக இருந்தன. ஆனால் அவற்றிற்கு அப்பால் சிவப்பான ஆலங் கட்டிகளை என்னால் காண முடிந்தது.

“இது மர்மமாயிருக்கிறது. இவை போன்ற ஆலங்கட்டிகளை நான் பார்த்ததேயில்லை” என்று நான் வியந்தபடி கூறினேன்.

“இன்னும் அருகில் வாருங்கள். அப்போது வேறு ஒன்றையும் காண்பீர்கள்” என்று அந்த அந்நியர் கூறினார்.

நான் அவருக்குக் கீழ்ப்படிந்து இன்னும் அருகில் சென்றேன். ஆனால் மிக அருவருப்பான ஒரு துர்நாற்றம் உடனே என்னைப் பின்வாங்கச் செய்தது. ஆனால் அந்த மனிதர் என்னை வற்புறுத்தவே, நான் அவற்றில் ஒன்றை எடுத்து ஆராய முயன்றேன், ஆனால் அதன் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், உடனேயே அதைக் கீழே போட்டு விட்டேன். “என்னால் எதையும் பார்க்க முடியவில்லை” என்றேன்.

“மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்” என்று அவர் பதிலுக்குக் கூறினார்.

என் அருவருப்புணர்வை மேற்கொண்டு, நான் ஒரு கறுப்பு ஆலங்கட்டியை எடுத்து, அதன் மீது, “அடக்கமின்மை ” என்ற வார்த்தையை வாசித்தேன்.

அதன்பின் நான் சிவப்பு ஆலங்கட்டிகள் இருந்த இடத்திற்கு நடந்து சென்றேன். அவை பனிக்குளிர்ச்சியாக இருந்தாலும், விழுந்த இடங்களில் எல்லாம் அவை நெருப்பைப் பற்ற வைத்தன. நான் அவற்றில் ஒன்றைக் கையிலெடுத்தேன். அது இன்னும் மிக மோசமான வாடை வீசிக்கொண்டிருந்தது. ஆனாலும் அதன் மீது “அகங்காரம்” என்று எழுதியிருந்ததை என்னால் அதிக எளிதாக வாசிக்க முடிந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளால் ஒரு விதத்தில் சங்கடமடைந்தவனாக, “அப்படியானால், இவைதான் இந்த இல்லத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இரண்டு முக்கியமான தீமைகளா?” என்று நான் கேட்டேன்.

''உங்கள் இல்லத்தில் மட்டுமல்ல, மாறாக உலகம் முழுவதிலும் பெரும்பாலான ஆன்மாக்களை அழிக்கும் இரண்டு முக்கியமான தீமைகள் இவைகள்தான். உரிய காலத்தில், இவற்றின் காரணமாக எத்தனை பேர் நரகத்திற்குள் அமிழ்ந்து போவார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள்.”

“அப்படியானால், இந்தத் துர்க்குணங்களை என் மகன்கள் அருவருத்துத் தள்ளும்படி செய்ய, நான் அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும்?”

“நீங்களே அதை விரைவில் கண்டுபிடிப்பீர்கள்'' என்று சொன்ன அவர் என்னிடமிருந்து அகன்றார். இதனிடையே, ஆலங்கட்டிகள் இடி மின்னல்களுக்கிடையே கோபவெறியோடு திராட்சைச் செடியைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருந்தன. திராட்சைகள் இப்போது கூழாக மாறியிருந்தன. ஆலைகளில் திராட்சை மிதிப்பவர்களின் பாதங்களால் ஒரு கொப்பரையில் மிதித்து நசுக்கப்பட்டவை போல அவை தோன்றின. அந்தச் சாற்றின் துர்மணம் காற்றை எவ்வளவாக அசுத்தப்படுத்தியது என்றால், மூச்சு விடுவதே கடினமாகி விட்டது. ஒவ்வொரு திராட்சையும் தனக்கே யுரிய ஒரு நாற்றத்தை வெளியிட்டது. அந்தத் துர்வாடைகள் ஒவ்வொன்றும், பாவங்களின் எண்ணிக்கையையும், வகையையும் பொறுத்து, மற்றதை விட அதிக அருவருப்பானதாக இருந்தது.

இனியும் அதைத் தாங்க முடியாதவனாக, நான் என் கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு, என் அறைக்குப் போகத் திரும்பினேன். அப்போதுதான் நான் தன்னந்தனியாக இருப்பதை உணர்ந்தேன். சுவாமி ஃப்ரான்செஸியா, சுவாமி ருவா, சுவாமி காலியேரோ, மற்றும் எல்லோருமே ஓடி விட்டிருந்தார்கள். அந்த அமைதியிலும், தனிமையிலும் நான் எவ்வளவு பயந்து போனேன் என்றால், அங்கிருந்து தலைதெறிக்க ஓடத் தொடங்கி னேன். இந்த இடத்தில் நான் விழித்துக் கொண்டேன்.

நீங்களே காண்பது போல இது மிகவும் அருவருப்பான ஒரு கனவு. ஆனால் மறுநாள் இரவில் நிகழ்ந்தது இதை விட மோசமான தாக இருந்தது. அதைப் பற்றி விரைவில் உங்களுக்குச் சொல்வேன். இந்தக் கனவுகள் குறித்துக் காட்டுபவை தற்போதைக்கு உங்களால் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கலாம். உரிய காலத்தில் நான் அவற்றை விளக்குவேன். இப்போது தாமதமாகி விட்டது. ஆகவே உறங்கச் செல்லுங்கள்.

டொன் போஸ்கோவுக்கு வெளிப்படுத்தப்பட்ட அந்தக் கனமான பாவங்கள் அந்தக் குறிப்பிட்ட வருடத்தை மட்டும் சேர்ந்தவையல்ல, மாறாக, அவை எதிர்கால வருடங்களையும் சேர்ந்தவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் தம்முடைய கடந்த கால, நிகழ்கால ஆரட்டரி மாணவர்களை மட்டுமல்ல, மாறாக, உலகெங்கிலுமுள்ள தம் பள்ளிகளில் கல்வி கற்க இருக்கும் தமக்குத் தெரியாத இன்னும் எண்ணற்ற மாணவர் களையும் கண்டார். இதே போல, இசையாஸ் ஆகமத்திலுள்ள கனிகளற்ற திராட்சையின் உவமையும் பல நூற்றாண்டுகளுக்குப் பொருந்துகிறது.

மேலும், “எல்லாச் சிறுவர்களும் தற்போதைக்கு நீங்கள் இப்போது காணும் விதமாக இல்லை. என்றாலும், அவர்கள் தங்கள் வழிகளைத் திருத்திக் கொள்ளாவிடில், ஒருநாள் அப்படி ஆகி விடுவார்கள்” என்ற வழிகாட்டியின் வார்த்தைகளையும் நாம் ஒரு கணம் கூட மறந்து விடக் கூடாது. தீமையின் பாதை நரக பாதாளத்திற்கு நம்மை இட்டுச் சென்று விடும். 

திராட்சைச் செடியின் தோற்றத்திற்குப் பிறகு, ஓர் அந்நியர் காட்சியில் தோன்றியதையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அவர் டொன் போஸ்கோவால் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ளப்படாவிட்டாலும், பிற்பாடு அவருடைய வழிகாட்டி யாகவும், விளக்கம் தருபவராகவும் செயல்பட்டதை நாம் காண்கிறோம். இந்தக் கனவுகளையும், மற்ற கனவுகளையும் விவரிக்கும்போது, டொன் போஸ்கோ அவ்வப்போது அவரை “ஓர் அன்னியர்” என்று அழைத்தார். அவருடைய கனவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்ததை நமக்கு இந்த வார்த்தை சித்தரித்துக் காட்டுகிறது. இந்த உலகிற்கு அன்னியராக இருக்கிற அவர் சுபாவத்துக்கு மேலான ஒரு பரலோகத் தலையீட்டை மிகத் தெளிவாகக் குறித்துக் காட்டுகிறார்.

டொன் போஸ்கோ எங்களிடம் கொண்டிருந்த அந்நியோந் நியத்தை எங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, இந்த “அந்நியரைப்” பற்றி நாங்கள் அடிக்கடி அவரிடம் கேட்டோம். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பது போன்ற ஒரு தெளிவான பதிலை அவரிடமிருந்து நாங்கள் பெறவில்லை என்றாலும், வேறு சில யூகக் குறிப்புகளிலிருந்து, இந்த வழிகாட்டி எப்போதும் ஒரே ஆள்தான் என்பதை நாங்கள் உறுதியாக அறிந்து கொள்வோம். அவர் ஒரு தேவதூதராகவோ, இறந்த ஒரு மாணவராகவோ, புனித பிரான்சிஸ் சலேசியாராகவோ, புனித சூசையப்பராகவோ அல்லது வேறு யாராவது ஒரு புனிதராகவோ இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் டொன் போஸ்கோ தெளிவாகக் குறிப்பிட்டபடி, லூயிஸ் கொமோல்லோ (இவர் டொன் போஸ்கோவின் சக குருமாணவராக இருந்தார்.), டோமினிக் சாவியோ, மற்றும் லூயிஸ் கோல்லே (1881-ல் டொன் போஸ்கோவால் மரணத்திற்கு ஆயத்தம் செய்யப்பட்ட பரிசுத்தரான ஒரு பிரெஞ்ச் இளைஞர் இவர்.) ஆகியோர் வழிகாட்டிகளாக செயல்பட்டிருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களோடு வேறு ஆட்களும் தோன்றியிருக் கிறார்கள்.