இவ்வெளிப்படுத்தலின் காரணம்

சேசு கூறுகிறார்: (28.4.1947)

என்னைப் பற்றிய நிகழ்ச்சிகளையும், என் வார்த்தை களையும் நான் விளக்கிக் கூறும்படி என்னைத் தூண்டிய காரணம் : நேசிக்கும் பலி ஆன்மாவான "சின்ன அருளுக்கு "* என்னைப் பற்றிய துல்லியமான அறிவை அளிப்பதினால் ஏற்படும் மகிழ்ச்சியாகும். அதோடு இன்னும் அநேக காரணங்களும் உள்ளன.

ஆனால் அந்தக் காரணங்களையெல்லாம் இயக்குவது : போதிக்கிறதும், போராடுவதுமாகிய திருச்சபை மட்டில் எனக்கிருக்கிற அன்பும் என் ஆவலுமேயாம். என்னைப் பற்றிய அறிவு மேலே ஏறிச் செல்ல உதவுகிறது. என் வார்த்தை சீவியமாயிருக்கின்றது.

முக்கியமான காரணங்களைக் கூறுகிறேன்:

18, ஜனவரி, 1947 தேதியிட்ட என் உரையில் அவை கூறப்படுகின்றன. அந்தக் காரணமே மிகவும் முக்கியமானது : நீங்கள் அழிந்து வருகிறீர்கள்; நான் உங்களைக் காப்பாற்ற விரும்புகிறேன்.

இந்நூல் எழுதப்படுவதன் மிக ஆழ்ந்த காரணம் : இந்நாட்களில் என் புனித பிரதிநிதி 10 - ம் பத்திநாதரால் கண்டனம் செய்யப்பட்ட நவீனமானது, மேலும் மேலும் கேடான போதனைகளால் கெட்டுப் போயிற்று. என் பதிலாளால் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிற திருச்சபை, கீழே வருவன வற்றை மறுக்கிறவர்களை எதிர்த்துப் போராட , மேலும் கூடுதலான காரணங்கள் அதற்குக் கொடுக்கப்பட வேண்டும். நவீனத்தால் மறுக்கப்படுகிறவைகளாவன:

* ''சின்ன அருள்' என்பது மரியா வால்டோர்ட்டா . இது நம் ஒவ்வொருவரையும் குறிக்கும்.

- வேத சத்தியங்கள் சுபாவத்திற்கு மேலானவை.

- கிறிஸ்துவின் தெய்வீகம். கிறிஸ்து கடவுளும் மனிதனுமாயிருக்கிறார் என்னும் உண்மை . விசுவாசத்தாலும், (சுவிசேஷம், அப்போஸ்தலர் நடபடி, அப்போஸ்தல நிருபங்கள், பாரம்பரியம் ஆகிய) அவரைப் பற்றிய வரலாற் றாலும் கொடுக்கப்படும் உண்மை அது.

- சின்னப்பருடையவும், அருளப்பருடையவும் போதனைகளும், நிசேன், எபேசுஸ், கால்செடோன் ஆகிய பொதுச் சங்கங்களின் போதனைகளும், நான் என் வாயால் போதித்த உண்மையான சத்தியங்களே.

- அளவுக்குள் அடங்காதது என்னுடைய ஞானம். ஏனென்றால் அது தெய்வீகமானதும் உத்தமமானதுமாகும்.

- ஏக, பரிசுத்த , பொது, அப்போஸ்தலிக்க திருச் சபையின் தேவ திரவிய அனுமானங்களைப் பற்றிய சத்தியங்கள் தெய்வீக ஆரம்பமுடையவை.

- சுவிசேஷமானது. என்னால் எல்லா மனிதருக்கெனவும் கொடுக்கப்பட்டது. அது தொடர்ந்து உலகமனைத்திற்கும் கால முடிவு வரையிலும் இருக்கும்.

- ஆதி முதலே என்னுடைய போதனை அதன் இயல்பிலேயே உத்தமமானது. ஒன்றன்பின் ஒன்றாக வரும் உருவ மாற்றங்களினால் அது உருவாக்கப்படவில்லை. அது இருக்கிறபடியே அது கொடுக்கப்பட்டது. கிறிஸ்துவின் போதனை வரப்பிரசாத காலத்தினுடையது - பரலோக இராச்சியத்தினுடையது - உங்களிடத்திலே சர்வேசுரனுடைய இராச்சியத்திற்குரியது - தெய்வீகமானது - உத்தமமானது - மாற்ற முடியாதது - கடவுளுக்காகத் தாகமாயிருக்கிற அனைவருடையவும் சுவிசேஷம் அது.

ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், ஏழு மகுடங்களையும் கொண்ட பறவை நாகமே ! வானத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கான நட்சத்திரங்களை உன் வாலால் இழுத்துக் கீழே போடுகிறாய். ஆம், பூமிக்கும் கீழே போடுகிறாய் என்று சொல்கிறேன். ஸ்திரீயை உபத்திரவப்படுத்துகிற நாகமே, உனக்குச் சொல்கிறேன்:


I

சமுத்திரத்தின் மிருகங்களுக்கும், பூமியின் மிருகங் களுக்கும் சொல்கிறேன் : பலர், மிகப் பலர், இந்த மிருகங்களை, அவற்றின் தோற்றத்தால் கவரப்பட்டும், அவற்றின் ஆச்சரியச் செயல்களால் இழுக்கப்பட்டும் வணங்குகிறார்கள். இப்படி வணங்கப்படும் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆகாயத்தின் நடுவில் பறந்து, நித்தியமான சுவிசேஷத்தை அகலத் திறந்து பிடித்துள்ள என்னுடைய சம்மனசானவரை நீங்கள் எதிர்த்து நின்று பாருங்கள். இதுவரையிலும் மூடப்பட்டிருந்த அதன் பக்கங்களையும் அவர் திறந்து பிடித்துக் கொண்டி ருக்கிறார். எதற்காக? அதன் ஒளியால் ஏழு தாடைகளை யுடைய பெரிய சர்ப்பத்திடமிருந்து மனிதர்கள் காப்பாற்றப் படும்படியாக அந்தப் பாம்பு தன் இருளில் அவர்களை மூழ் கடிக்கத் தேடுகிறது. நான் திரும்பி வரும் பொழுது, நீடித்து நிலைத்திருப்பவர்களின் இருதயங்களில் விசுவாசத்தையும் சிநேகத்தையும் நான் காணும்படியாக, அப்படிப் பட்டவர்களின் தொகை சாத்தானுடையவும், மனிதர் களுடையவும் வேலையால் இவ்வளவுதான் இருக்கும் என்று ஒருவன் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் அது கூடுதலாயிருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும்படியாக.

II

குருக்களிடத்திலும், விசுவாசிகளிடத்திலும், சுவிசே ஷத்தின் மீதும், கிறீஸ்து சம்பந்தப்பட்ட அனைத்தின் மீதும், ஒரு கூர்மையான அன்பை ஏற்படுத்துவதற்காக, முதன்முதலில் என் தாயின் மட்டில் அவர்களுடைய அன்பு புதுப்பிக்கப்படும். உலகத்தின் இரட்சண்ய இரகசியம் என் அன்னையின் மன்றாட்டில் அடங்கியிருக்கிறது. என் அன்னையான அவர்கள் தான் சபிக்கப்பட்ட பறவை நாகத்தின் மேல் வெற்றி கொண்டவர்கள். அவர்கள் மட்டில் உங்களுடைய புதுப்பிக்கப்பட்ட அன்பாலும், புதுப்பிக்கப்பட்ட விசுவாசத் தாலும், அறிவாலும், நீங்கள் அவர்களுடைய வல்லமைக்குத் துணை செய்யுங்கள். மாமரி , இரட்சகரை உலகிற்குக் கொடுத்தார்கள். உலகமும் அவர்களிடமிருந்தே மீண்டும் இரட்சண்யத்தைப் பெற்றுக் கொள்ளும்.

III

ஞானப் போதகர்களுக்கும், ஆன்ம வழிகாட்டிகளுக்கும், அவர்களின் அலுவலில் உதவுவதற்காக, நான் வாழ்ந்த உலகத்தில் இருந்த பலதரப்பட்ட ஆன்மாக்களையும், அவர்களைக் காப்பாற்ற நான் கையாண்ட பலதிறப்பட்ட வழிமுறைகளையும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் எல்லா ஆன்மாக்களுக்கும் ஒரே வழிமுறையை மட்டும் கடைப்பிடிப்பது அறிவீனமாகும்.

தானாகவே உத்தமதானத்தை நோக்கித் திரும்பும் நியாயவானான ஒரு மனிதனை அவ்வுத்தமதனத்தை நோக்கிக் கவர்ந்திழுக்கும் முறைக்கும், பாவத்திலிருக்கிற ஒரு விசு வாசியை அல்லது புறவினத்தானான ஒரு மனிதனை உத்தமதானத்திற்குக் கவர்ந்திழுக்கும் முறைக்கும் வேறுபாடு உள்ளது. உங்கள் போதகர் கண்டுபிடித்தது போல் நீங்களும் சரியாகக் கண்டுபிடிப்பீர்களானால், உங்கள் நடுவிலும் புறவினத்தார் பலர் இருக்கிறார்கள். அதாவது, தங்கள் வலிமை, இறுமாப்பு, அல்லது பொன், அல்லது இச்சை அல்லது தங்கள் அறிவுடைமையால் ஏற்படும் ஆங்காரம் ஆகிய விக்கிரகங்களை, உண்மையான கடவுளுக்குப் பதிலாக ஏற்றுக் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். நவீன காலத்தில் மனந்திருப்பப்பட வேண்டியவர்களான, கிறிஸ்தவக் கருத்தை ஏற்றுக் கொண் டாலும் கிறிஸ்துவின் இராச்சியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டுமென்பதை ஏற்காதவர்களை, அதாவது பிரிந்து போன சபைகளில் இருப்பவர்களை இரட்சிப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை வேறாக இருக்கிறது. ஒருவரையும் இகழ்ந்து ஒதுக்கக் கூடாது - விசேஷமாக தவறிப்போன இந்த ஆடுகளை, ஆயரான சேசுவின் ஆசை நிறைவேறும்படியாக, அவர்களை நேசித்து, ஒரே மந்தைக்குக் கொண்டு வர முயலுங்கள்.

சிலர் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது இப்படி மறுப்புப் பேசக் கூடும் : ''உரோமையர்களுடனும், கிரேக்கர் களுடனும் சேசுநாதர் தொடர்பு கொண்டிருந்ததாக சுவிசேஷத்திலிருந்து புலப்படவில்லை. அதினிமித்தம் இப்புத் தகத்தை நாங்கள் ஒதுக்குகிறோம்" என்று. எத்தனையோ விஷயங்கள் சுவிசேஷத்தில் கூறப்படவில்லை. அநேக காரியங்கள் சுவிசேஷத்தில் மவுனத் திரைக்குப் பின் இருப்பதாக மட்டும் கண்டுபிடிக்கப்படுகின்றன. சுவிசேஷகர்கள், மாற்ற முடியாத தங்கள் யூத மனப்பான்மையின் காரணமாக, தாங்கள் ஆமோதிக்காத நிகழ்ச்சிகளின் மேல் அந்த மவுனத் திரையை இட்டார்கள். நான் செய்த சகலத்தையும் நீங்கள் அறிந்திருப்பதாக நினைக்கிறீர்களா?

இதோ நான் உங்களுக்குச் சொல்கிறேன்: என் பகிரங்க வாழ்வைப் பற்றிய இந்த விரிவுரையை நீங்கள் படித்து ஏற்றுக் கொண்ட பிறகும் கூட, என்னைப் பற்றிய அனைத்தையும் நீங்கள் அறிய மாட்டீர்கள். நான் அலுவல் புரிந்த எல்லா நாட்களைப் பற்றியும், ஒவ்வொரு நாளிலும் நான் ஆற்றிய எல்லா செயல்களைப் பற்றியும், என் சின்ன அருள் உங்களுக்கு அறிவிக்கும்படி அவைகளை நான் அவளுக்கு உணர்த்தி யிருந்தால், அவையெல்லாவற்றையும் பற்றி எழுதும் களைப்பினாலேயே அவளை நான் சாகடித்திருப்பேன். "சேசு நாதர் செய்தருளிய வேறு அநேகம் காரியங்களும் உண்டு, அவைகள் ஒவ்வொன்றாக எழுதப்படுமானால், எழுத வேண்டிய புத்தகங்களை உலகமே கொள்ளமாட்டாதென எண்ணுகிறேன்'' என்று அருளப்பர் சொல்கிறார். மிகைப்படுத்திக் கூறாமல் இதோ நான் உங்களுக்குச் சொல்கிறேன். என்னுடைய ஒவ்வொரு செயலும், என் எல்லா தனிப் போதனைகளும், ஓர் ஆன்மாவைக் காப்பாற்ற நான் செய்த செபங்களும், தவ முயற்சிகளும், இவையெல்லாம் எழுதப் பட்டால், என்னைப் பற்றிய புத்தகங்களை வைப்பதற்கு உங்கள் மிகப் பெரிய நூல் நிலையம் ஒன்றின் சாலைகள் எல்லாம் தேவைப்படும். மேலும் இதோ நான் உங்களுக்குச் சொல்கிறேன். என்னைப் பற்றி இவ்வளவு சொற்பமாக அறிந்து, ஏறக்குறைய எப்போதுமே ஆபாசத்தாலும், தப்பறையாலும் அசுத்தமடைந்த பிரசுரங்களை இவ்வளவு பெரிதாக வணங்குவதை விட, என்னைப் பற்றிய நூல்களை வைப்பதற்கு இடமளிப்பதற்காக, உங்கள் பயனற்ற, தூசி படிந்த, விஷமான, அறிவு நூல்களை எரித்து விடுவது உங்களுக்கு அதிக பயனுடையதாயிருக்கும்.

IV

மனித குமாரனுடையவும், மரியாயினுடையவும் சாயல் களை அவற்றின் உண்மைப்படி மீண்டும் நிலை நாட்டும்படியாக.

அவர்கள் மாம்சத்தாலும், இரத்தத்தாலும் ஆதாமின் உண்மையான பிள்ளைகளாயிருந்தார்கள் - ஆனால் மாசற்ற ஆதாமின் பிள்ளைகள். நம்முடைய முதல் பெற்றோர் தங்கள் நிறைவான மனிதத்தன்மையை கீழே இறக்கிக் கொண்டு வராதிருந்தால், மனித பிள்ளைகளும் எங்களைப் போலவே இருந்திருப்பார்கள். அதாவது, மனிதனாக, இரட்டை இயல்பு களைக் கொண்ட கடவுளின் சாயலாகவும், பாவனையாகவும் இருக்கிற ஞான இயல்பும், சரீர இயல்பும் ஒருங்கிணைந்த சிருஷ்டி. முதல் பெற்றோரின் புலன்கள் உத்தமமாயிருந்தன. மிகுந்த செயலூக்கம் பெற்றிருந்தாலும் அவை அறிவுக்கு அடங்கியிருந்தன. புலன்கள் என்னும்போது ஆன்மப் புலன்களையும், சரீரப்புலன்களையும் உட்படுத்தியே கூறுகிறேன்.

இவ்விதமே மரியம்மாளிடம் தன் பத்தாவின் மீதும், தன் திருக்குமாரனின் மீதும் முழுமையான உத்தம அன்பு காணப்பட்டது. தன் பத்தாவிடமும், குமாரனிடமும் மரியாயிக்கு இருந்த அன்பு ஆத்மீகமானதே தவிர சரீரப் புலன் சம்பந்தமானதல்ல. மிக மிகுதியானது சேசு மீது அவர்கள் கொண்டிருந்த அன்பு. ஒரு உத்தம ஸ்திரீ தன்னிடம் பிறந்த குழந்தையை தன் எல்லா உத்தமதனங் களோடு நேசித்த அன்பு அது. மரியாயைப் போலவே ஏவாளும் நேசித்திருக்க வேண்டும். அதாவது அந்த மகன் தன் லெளகீக மகிழ்ச்சியாக இருப்பதைப்பற்றியல்ல, ஆனால் அவன் சிருஷ்டிகரின் பிள்ளையாயிருக்கிறான் என்பதற் காகவும், மனித குலத்தைப் பலுகச் செய்யும்படி அவர் இட்ட கட்டளையை தான் நிறைவேற்றுவதற்காகவுமே.

மரியம்மாள், தன்னுடைய குமாரன் உருவகமாக அல்ல, உண்மையிலேயே தேவ சுதன் என்று அறிந்திருந்த ஒரு உத்தமம் விசுவாசியின் ஊக்கத்தோடு நேசித்தார்கள். சேசுவின் மேல் மாதாவுக்கு இருந்த அன்பு, அதிகப்படியான பாசமுள்ளதா யிருந்தது என்று எண்ணுகிறவர்களுக்கு நான் கூறுகிறேன்:

மாதா யார் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும். மாதா மாசற்றவர்கள். அதனால் அவர்களின் அன்பும் மாசற்றதா யிருந்தது : கடவுளிடத்திலும், தன் உறவினரிடத்திலும், தன் பத்தாவிடத்திலும், தன் குமாரனிடத்திலும், தன் அயலாரி டத்திலும் அவர்கள் கொண்ட அன்பு மாசற்றது. அவர்கள் என்னைத் தன் வயிற்றில் பிறந்த மகன் என்று கண்டது மாத்திரமல்லாமல், வேறு யாராகவும் என்னைக் கண்டார்கள் . என்று அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கடைசியில், மாதா எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் சிந்திக்க வேண்டும். எபிரேய இனம்; கீழை நாட்டு வம்சம்; இக்காலத்திற்கு மிகவும் முற்பட்ட காலம். இவற்றின் காரணமாகவே சில மிகைப்பாடான வார்த்தைப் பிரயோ கங்கள், அதிகப்படியானவையாக உங்களுக்குத் தோன்றக் கூடும். சாதாரணமாகப் பேசும் போது கூட, கிழக்கத்திய எபிரேய மொழிப் பிரயோகம் அலங்காரமும் ஆடம் பரமும் கொண்டிருக்கும். அக்காலத்திய அவ்வினத்தாரின் எழுத்துக் களெல்லாம் இதை எண்பிக்கின்றன. இந்தக் கீழை நாட்டுத்தன்மை காலப்போக்கிலும் கூட அதிகம் மாறி விடவில்லை .

இருபது நூற்றாண்டுகளுக்குப் பின் இப்பக்கங்களை நீங்கள் ஆராய வேண்டியிருக்கிறது. வாழ்க்கையின் கேடுகெட்ட தன்மை எவ்வளவோ அன்பைக் கொன்று விட்ட இப்போது, உங்கள் காலத்து வறண்ட, மேற்போக்கான பெண்ணுக்கோப்பாக, நாசரேத்தின் மரியம்மாளை உங்களுக்கு நான் காட்ட வேண்டுமென்று எதிர்பார்க் கிறீர்களா? மரியம்மாள் இனிமையும் தூய்மையும் அன்பும் கொண்ட இஸ்ராயேலின் நங்கை; கடவுளின் பத்தினி ; சர்வேசுரனின் கன்னித்தாய். மாமரி தான் இருக்கிறபடியே இருக்கிறார்கள். அவர்களை, மிதமிஞ்சி இயல்புக்கெதிராக உயர்த்தப்பட்ட பெண்ணாகவோ அல்லது உங்கள் காலத்துக்கேற்ற பனி போல் உறைந்து போன சுயநலமி யாகவோ மாற்ற முடியாது.

மாதா மீது சேசு கொண்டிருந்த அன்பு அதிகப்படியான பாசமாயிருந்தது என்று கருதுகிறவர்களுக்குச் சொல்கிறேன் : அவர்கள் இதைச் சிந்திக்கட்டும். சேசுவிடம் கடவுள் இருந்தார். அந்த ஏக திரித்துவமான கடவுள் மரியாயை நேசிப்பதிலே தம் ஆறுதலை அடைந்தார். மனுக்குலம் முழுவதின் துயரத்திற்கும் மாதா அவருக்கு ஈடு செய்தார்கள். அவருடைய மோட்சங்களுக்கு பிரஜைகளைக் கொடுக்கிற அவருடைய சிருஷ்டிப்பிலே மறுபடியும் அவர் மகிமை பெறக் கூடிய கருவியாக மாதா இருந்தார்கள். இறுதியாக அவர்கள் இதைச் சிந்திக்கட்டும்: எந்த சிநேகமும், அது ஒழுங்கீனத்தை ஏற்படுத்தும்போது - அப்போது மாத்திரமே குற்றமுள்ளதாகிறது. அதாவது அந்த சிநேகம் கடவுளின் சித்தத்திற்கு எதிராகவும், ஆற்ற வேண்டிய கடமைக்கு எதிராகவும் போகும்போது.

இப்பொழுது சிந்தியுங்கள்: மாதாவின் சிநேகம் அப்படிச் செய்ததா? என்னுடைய அன்பு அப்படிச் செய்ததா? கடவுளின் சித்தம் அனைத்தையும் நிறைவேற்ற விடாமல் மாதா சுயநலமாய் என்னை வைத்துக் கொண்டார்களா? அல்லது நான் என் தாய் மட்டில் ஒழுங்கற்ற அன்பினால் என் அலுவலைப் புறக்கணித்தேனா? இல்லையே! இரு அன்புகளுக்கும் ஒரே ஆசைதான் இருந்தது : உலகின் இரட்சண்யத்திற்காக கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவது. மாதா தன் குமாரனுக்குப் பிரியாவிடை கொடுத்து அவரை பகிரங்க போதனை என்ற சிலுவைக்கும், கல்வாரியின் சிலுவைக்கும் அனுப்பி வைத்தார்கள். குமாரனும் தம் தாய்க்குப் பிரியாவிடை அளித்து, அவர்கள் இணை மீட்பராகும் பொருட்டு, தனிமைக்கும் வாதைக்கும் அவர்களைக் கையளித்தார். எங்கள் மனித சுபாவத்தைப் பொருட்படுத்தாமல் இப்படி நாங்கள் செய்த போது, எங்கள் மனித சுபாவம் கீறிக் கிழிக்கப்பட்டதை உணர்ந்தோம். எங்கள் இருதயங்களும் துயரத்தால் நொறுங்கிப் போயின. இதுவா பலவீனம்? இதுவா உணர்ச்சி வசப்படுதல்? ஓ மனிதர்களே! நேசிக்க அறியாதவர்களே! இது உத்தமமான அன்பு. அன்பையும், அன்பின் குரல்களையும் அறியாதவர்களே!

இப்புத்தகத்திற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது சில விளக்கங்கள் தரப்பட வேண்டியுள்ளன. சில விஷயங்களை, அநேக சந்தர்ப்பங்கள் இருளால் மூடியுள்ளன. அதனால் சுவிசேஷ சித்திரத்தின் பிரகாசத்தில் இருண்ட இடங்களாக அவை காணப்படுகின்றன. ஒரு நிகழ்ச்சிக்கும், இன்னொன்றிற்கும் முறிவு போல் காணப்படும் சில விஷயங்கள் இப்படி மறைக்கப்பட்ட அம்சங்கள்தான். சில அம்சங்கள் கண்டுபிடிக்க முடியாதவையாகத் தோன்றுகின்றன. அவற்றைக் கண்டுகொள்ள முடிவது, எழுந்துள்ள வேறு சில சூழ்நிலைகளைச் சரியாக அறிய உதவும் திறவுகோல்களாகும். மேலும், மன்னிக்கும்படியும், சாந்தத்துடனும், தாழ்ச்சியுடனும் இருக்கும்படியும் எப்போதும் நான் சொல்லி வந்த போதனைகளுக்கு மாறுபட்டதாகத் தெரியும் என் இறுக்கத்தைக் கண்டு பிடிக்கவும் அவை உதவும். பிடிவாதமுள்ள, மனந்திரும்ப முடியாத என் எதிரிகளுடன் நான் அப்படி இறுக்கமா யிருந்தேன். சர்வேசுரன் நல்லவர் என்பதற்காக, அவருடைய பொறுமையைச் சாக்காக வைத்துக் கொண்டு அவரைச் சோதிக்கிறவர்களிடம், தம் இரக்கம் அனைத்தையும் பயன்படுத்திய பின் தமது சொந்த மகிமைக்காக ''உங்களுக்கு இவ்வளவுதான்'' என்று என்னால் சொல்ல முடியும் என்பதை நீங்கள் எல்லாரும் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும். கடவுள் பழிக்கப்பட மாட்டார். இது ஞானமுள்ள ஒரு முதுமொழி.

V

என்னுடைய பாடுகளின் பலவகைப்பட்ட வாதை களையும், நீடிப்பையும் பற்றி துல்லியமான அறிவைப் பெறவும் இந்நூல் உதவும். என் இரத்தப் பாடுகளின் உச்சம் சில மணி நேரங்களில் நடந்து முடிந்தது. ஆனால் அது எனக்கு அனுதின சித்திரவதையாக ஆண்டாண்டுகளாக என்னை அரித்துத் தின்று வந்தது. அது வர வர அதிகரித்துக் கொண்டே வந்தது. அது என் தாயின் பாடுகளுடன் இணைந்திருந்தது. அதே கால அளவுக்கு அவர்களின் இருதயம் துயர வாளால் ஊடுருவக் குத்தப்பட்டிருந்தது. இந்த அறிவால் எங்களைக் கூடுதல் நேசிப்பதற்கு உங்களைத் தூண்டவும் இது உதவும்.

VI

என் வார்த்தையின் சக்தியையும், அதன் வெவ்வேறான விளைவுகளையும் காட்டவும் இப்புத்தகம் உதவும். என் வார்த்தையைப் பெற்றுக் கொள்கிறவன் நல்ல மனமுடை யோரின் கூட்டத்திலிருக்கிறானா, அல்லது ஆசாபாச மனமுடையவர்களின் கூட்டத்திலிருக்கிறானா என்பதைப் பொறுத்தது அந்த விளைவு . ஆசாபாச மனம் ஒரு போதும் சரியாயிராது.

அப்போஸ்தலர்களும், யூதாஸும் இந்த இரு எதிர் தரப்பினரின் உதாரணங்களாயிருக்கிறார்கள். அப்போஸ் தலர்கள் மிகக் குறைபாடுள்ளவர்கள், கரடு முரடுகள், கல்வியில்லாதவர்கள், வன்முறையுள்ளவர்கள், ஆயினும் நல்மனமுடைவர்கள். யூதாஸ், பெரும்பான்மை அப்போஸ் தலர்களை விட அதிகம் கற்றவன். தலைநகரிலும், தேவாலயத் திலும் வாழ்ந்தவனாதலால் நாகரீக முடையவன். ஆனால் தீய மனமுடையவன். அப்போஸ்தலர்கள் நன்மைக்கு மாற்ற மடைந்து உயர்ந்ததையும், யூதாஸ் தீமைக்கு மாற்றமடைந்து கீழிறங்கியதையும் கவனியுங்கள்.

உத்தமதானத்திற்கு மாற்றமடைந்த இப்பதினொரு பேரையும் எல்லாரும் கவனிக்க வேண்டும். ஆயினும் அவர்களை விசேஷமாய்க் கவனிக்க வேண்டியவர்கள் யாரென்றால், தங்களுடைய மனப்பார்வையின் ஒரு கோளா றினால் அர்ச்சிஷ்டவர்களின் உண்மையான இயல்பைப் புரட்டிக் காண்கிற பழக்கம் பெற்று விட்டவர்களே. கடினமாக, மிகவும் கடினமாக மறைந்த சக்திகளுக் கெதிராகப் போராடி அர்ச்சிஷ்டதனத்தை அடைகிற ஒருவனை, இவர்கள் இயற்கைக்கு எதிரானவனாக, அபிலாசைகளும், உணர்ச்சிகளும் இல்லாதவனாக ஆக்கி, அதனால் பேறுபலன் களும் இல்லாதவனாக்கி விடுகிறார்கள். காரணம் : ஒழுங்கற்ற புலனாசைகளையும், சோதனைகளையும் வெற்றி கொள்பவதின் பயன் தான் பேறுபலன். கடவுளின் அன்பிற்காகவும், இறுதிக் கதியாகிய அவரை அடைந்து, நித்தியத்திற்கும் அவரைச் சுகிப்பதற்காகவும் அவ்வெற்றி அடையப் பெறுகிறது. கடவுள் மட்டும்தான் மனந்திருப்புதலைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறவர்கள் இதைக் கவனிப்பார்களாக. மனந்திரும்பு வதற்கான உதவியைக் கடவுள் கொடுப்பார். ஆனால் அவர் மனிதனுடைய சுயாதீனத்திற்கு வலுவந்தம் செய்ய மாட்டார். ஒரு மனிதன் மனந்திரும்ப விரும்பாவிட்டால், மனந்திரும்ப மற்றவர்களுக்கு உதவியாயிருக்கிறவைகள் அவனிடத்தில் வீணாகின்றன.

இந்த சந்தர்ப்பத்தை ஆராய்ந்து பார்க்கிறவர்கள் என் வார்த்தையின் பலதிறப்பட்ட விளைவுகளை, மனிதத் தன்மையான மனிதனிடத்தில் மட்டுமல்ல, ஞான மனிதனிடத்திலும் சிந்தித்துப் பார்க்கட்டும். அதை ஞான மனிதனிடத்தில் மட்டுமல்ல, மனிதத்தன்மையான மனிதனின் டத்திலும் எண்ணிப் பார்க்கட்டும். நல்ல மனதோடு என் வார்த்தை ஏற்றுக் கொள்ளப் படும் போது அது இரு தரப்பாரையும் மாற்றியமைக்கிறது; வெளியரங்க, உள்ளரங்க உத்தமதானத்திற்குக் கொண்டு செல்கின்றது.

அப்போஸ்தலர்கள் தங்கள் தெரியாத்தனத்தாலும், என் தாழ்ச்சியினாலும் மனுமகனுடன் மிஞ்சிய விதமாய் நெருங்கிப் பழகினார்கள். அவர்கள் மத்தியில் நான் ஒரு நல்ல குரு; அதற்கு மேலில்லை. தாழ்ச்சியும் பொறுமையுமுள்ள போதகர் - அவருடன் உரிமையோடு, சில சமயம் அதிகப் படியான உரிமையோடு நடந்து கொள்ள அனுமதி இருந்தது. ஆயினும் அவர்களின் பாகத்தில் அது மரியாதைக்குறை அல்ல. அது தெரியாத்தனம். அது மன்னிக்கப்பட வேண்டியது.

அப்போஸ்தலர்கள் ஒருவரோடொருவர் வாக்குவாதம் பண்ணுவார்கள். சுயநலம் கொண்டவர்கள். தங்களுடையவும் என்னுடையவும் சிநேகத்தைப் பற்றிப் பொறாமைப் படுவார்கள். ஜனங்கள் மட்டில் பொறுமையிழப்பார்கள். தாங்கள் அப்போஸ்தலர்கள் என்பதைப்பற்றி சற்று ஆங்காரம் கொண்டிருந்தார்கள். ஜனக் கும்பல்களுக்கு தங்களை அசாதாரண சக்தி உடையவர்களாகச் சுட்டிக்காட்டக் கூடிய ஆச்சரியமான திறமைகளுக்கு ஆசைப்பட்டார்கள். இப்படியிருந்த அவர்கள் மெதுவாக ஆனால் தொடர்பறாமல் புதிய மனிதர்களாய் மாறுகிறார்கள். தங்கள் ஆசாபாசங்களை அடக்கியாளுகிறார்கள். முதலில் என்னைப் போல் ஆவதற்காகவும் என்னைப் பிரியப்படுத்தவும் அப்படிச் செய்தார்கள். பின்னர் என்னுடைய உண்மையான "என் " னோடு அவர்கள் பழக்கப்பட்ட போது தங்கள் நடத்தையை மாற்றிக் கொண்டார்கள். தங்கள் அன்பையும் மாற்றினார்கள். என்னை தெய்வீக ஆண்டவராகக் கண்டார்கள், நேசித்தார்கள், நடத்தினார்கள். விசேஷமாய் என் உயிர்ப்பிற்குப் பிறகு அவர்கள் மனித குமாரனை ஒரு நண்பராக நடத்திய நண்பர் குழுவாக இருந்தார்களா? இல்லை. அப்படி அவர்கள் இல்லை. அவர்கள் முதலாவதாக அரசரின் பிரதானிகள். அதன் பிறகு கடவுளின் குருப்பிரசாதிகள். அவர்கள் முழுவதும் மாற்றமடைந்து முற்றிலும் வேறாகி விட்டார்கள்.

முன் கூறப்பட்டது போல், அப்போஸ்தலர்களின் சுபாவம் வலிமையானது என்று எண்ணி, அது இயற்கைக்கு மாறுபாடானது என்று முடிவு கட்டுகிறவர்கள் இதைச் சிந்திக்க வேண்டும். நான் ஒரு கடுமையான வைத்தியனல்ல. அகங்காரமுள்ள அரசனுமல்ல. மற்ற மனிதர்களைத் தனக்குத் தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பிடும் ஆசானுமல்ல. நான் மக்களுக்குத் தயாளம் காட்டுகிறேன். கச்சாப் பொருள்களை வைத்து உருவங்கொடுக்கவும், வெற்றுப் பாத்திரங்களை எல்லா வகையான உத்தமங்களினால் நிரப்பவும் ஆசித்தேன். அதன் மூலமாக, கடவுளால் எல்லாம் கூடும் என்றும், ஒரு கல்லிலிருந்து ஆபிரகாமுக்கு ஒரு மகனை அவரால் எழுப்பக்கூடும் என்றும், என் வாசனையைப் பெரும்பாலும் இழந்துவிட்ட தங்கள் கல்வியைப் பற்றி கர்வங்கொண்ட ஆசான்களை வெட்கிப் போகச் செய்யக்கூடிய ஒரு ஆசானாக, ஒன்றுமில்லாத ஒருவனையே உருவாக்க முடியுமென்றும் நிரூபிக்க விரும்பினேன்.

VII

இறுதியாக : யூதாஸின் மறைபொருளை உங்களுக்குக் காட்டுவதற்காக. சர்வேசுரன் ஒரு அசாதாரணமான முறையில் சலுகை காட்டிய ஓர் ஆன்மாவின் வீழ்ச்சியின் மறைபொருள் அதுவாகும். மிகவும் கூடுதலாக அது மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. அது உங்கள் சேசுவின் இருதயத்தை வேதனைப்படுத்துகிற காயமாயிருக்கிறது.

கடவுளின் ஊழியர்களாகவும் பிள்ளைகளாகவும் இருந்தவர்கள் எப்படி பசாசுக்களாகவும், கடவுளைக் கொலை செய்கிறவர்களாகவும் மாறுகிறார்கள் என்று காட்டவும் அது உதவுகிறது. அவர்கள் வரப்பிரசாதத்தைக் கொலை செய்வதனால் தங்களிடத்தில் கடவுளைக் கொலை செய்கிறார்கள். இந்த அறிவானது, ஒருவன் பாதாளத்திற்குள் விழுகிற பாதைகளில் நீங்கள் கால் வைக்காதபடி உங்களைத் தடுக்க வேண்டும். மேலும் பாதாளத்தை நோக்கிப் போகிற விவேகமற்ற ஆட்டுக் குட்டிகளைத் தடுத்து நிறுத்த முயலும் போது, நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும் அது உங்களுக்குக் கற்றுத் தர வேண்டும். யூதாஸின் கொடூரமான, ஆயினும் சாதாரண சாயலை ஆராய உங்கள் அறிவைப் பயன்படுத்துங்கள். நீங்கள் ஒருவனிடம் அல்லது இன்னொருவனிடம் காண்கிறதும் போராட வேண்டியுள் ளதுமான எல்லாத் தலையான தீமைகளும், சர்ப்பங்களைப் போல் கொந்தளிக்கிற ஒரு கூட்டுக் குழப்ப நிலையே ஆகும். நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கிய பாடம் இதுவே. ஏனென்றால் ஞானாசிரியர்கள், ஞான வழிகாட்டிகள் என்கிற உங்கள் ஊழியத்தில் உங்களுக்கு அதிகம் உதவும் பாடம் இது. வாழ்க்கையின் எல்லா அந்தஸ்துகளிலும் எத்தனை மக்கள் யூதாசைப் பின்பற்றி தங்களை சாத்தானுக்குக் கொடுத்து, நித்திய மரணத்தைச் சந்தித்து வருகிறார்கள்!

இவ் வேழு காரணங்களுக்கும் பொருத்தமான ஏழு பாகங்களைக் கொண்டிருக்கிறது இப்புத்தகம்.

I  மறைந்த வாழ்க்கை (பரிசுத்த கன்னிகையின் அமலோற்பவம் முதல் அர்ச். சூசையப்பரின் மரணம் வரை.)

II பகிரங்க வாழ்க்கையின் முதல் ஆண்டு.

III பகிரங்க வாழ்க்கையின் இரண்டாம் ஆண்டு.

IV பகிரங்க வாழ்க்கையின் மூன்றாம் ஆண்டு. திருப்பாடுகளுக்கு ஆயத்தம் : (தெபேத் தொடங்கி நிசான் வரை. அதாவது லாசரின் அவஸ்தையிலிருந்து பெத்தானி யாவில் அருந்தப்பட்ட இரா உணவு வரை.)

V திருப்பாடுகள் (லாசரிடம் விடை பெறுதலிலிருந்து என் அடக்கம், உயிர்ப்பு ஞாயிறின் காலை வரையிலும்).

VII உயிர்ப்பிலிருந்து இஸ்பிரீத்து சாந்துவின் வருகை வரையிலும்.

மேலே காட்டியுள்ளபடி பாகங்கள் அமைக்கப்பட வேண்டும். ஏனென்றால் அதுவே சரியானது.

சரி. இனி? உங்கள் ஆண்டவருக்கு என்ன சொல் கிறீர்கள்? நீங்கள் என்னுடன் பேசவில்லை. ஆனால் உங்கள் உள்ளத்தில் பேசுகிறீர்கள். மேலும் உங்களுக்குக் கூடுமா யிருந்தால் மாத்திரம் சின்ன அருளுடன் பேசுகிறீர்கள். ஆனால் இவ்விரு சந்தர்ப்பங்களிலும் நான் உங்களிடத்தில் காண விரும்புகிற நீதியோடு நீதியோடு நீங்கள் பேசவில்லை. ஏனென்றால் சின்ன அருளைத் துயரப்படுத்தும்படி அவளிடம் பேசுகிறீர்கள். ஒரு கிறீஸ்தவ சகோதரிக்கும், கடவுளின் ஒரு கருவிக்கும் உரித்தான பிறர் சிநேகத்தைக் காலால் மிதிக்கிறீர்கள். நான் மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: என்னுடைய கருவியாயிருப்பதென்பது அமைதியான மகிழ்ச்சி அல்ல. அது தொடர்ச்சியான களைப்பும் முயற்சியுமாகும். அது அனைத்திலும் துயரப்படுவதாகும். காரணம், உலகமானது குருவுக்கு எதைக் கொடுத்ததோ, அதையே சீடர்களுக்கும் கொடுக்கிறது. அது துயரம்தான். மேலும் குருக்களாவது, அதிலும் முக்கியமாக உடன் சகோதரர்களாகவது, தங்கள் சிலுவைகளுக்கடியில் நடந்து முன் செல்லும் இந்த சிறிய வேத சாட்சிகளுக்கு உதவி செய்ய வேண்டும். அதிலும் நீங்கள் உங்கள் உள்ளங்களில் உங்களுடனேயே பேசி, ஒரு முறைப் பாட்டை, ஆங்காரமுள்ள பொறாமையுள்ள அவிசுவாசமான இன்னும் மற்றப்படியான முறைப்பாட்டைக் கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் முறையீடுகளுக்கும் உங்கள் துர்மாதிரிகை யடைகிற ஆச்சரியத்திற்கும் நான் பதில் தருவேன்.

கடைசி இராப் போஜன மாலை வேளையில் என்னை நேசித்திருந்த பதினொரு பேரிடமும் நான் கூறினேன் : "தேற்றுகிறவர் வரும் பொழுது அனைத்தையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்" என்று. நான் பேசிய போது, அங்கிருந்த வர்களையும் அவர்களோடு உள்ளத்தால், சத்தியத்தை ஆசிக்கிற சித்தத்தையும் கொண்டிருந்து, என் சீடர்களாயிருக்கப் போகிறவர்களையும் எப்போதும் மனதில் கொண்டிருந்தேன். பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வரப்பிரசாதத்தால் கடவுளை ஞாபகப்படும் திறனை உங்களுக்குள் புகட்டியுள்ளார். அதற்கென ஜென்மப் பாவத்தினால் ஏற்படும் மடமையிலிருந்து ஆன்மாக்களை விடுவிக்கிறார். இருட்டுகளிலிருந்து நீக்குகிறார். இந்த இருட்டுகள் ஆதாமின் துயர வாரிசின் காரணமாக, சர்வேசுரனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆன்மாக்கள் அவருடைய தரிசனையையும் ஞான அறிவையும் சுகிக்க விடாமல் அவருடைய பிரகாசத்தை மூடி மறைக்கின்றன. பரிசுத்த ஆவியானவர்தம்மால் நடத்தப்பட்டு, சர்வேசுரனுடைய பிள்ளைகளாயிருக்கிறவர் களுடைய இருதயங்களுக்கு, நான் கூறியுள்ள சுவிசேஷ போதனையாயிருப்பவற்றை "ஞாபகமூட்டி " போதகர் என்ற தம் அலுவலை முற்றுப் பெறச் செய்கிறார். இங்கே ஞாபக மூட்டுதல் என்பதற்குப் பிரகாசிக்கச் செய்தல் என்பது பொருள். ஏனென்றால் சுவிசேஷ வார்த்தைகளை ஞாபகப்படுவதென்பது, அதன் கருத்து கண்டுணரப்படாவிட்டால், ஒன்றுமற்றதாகிறது.

சுவிசேஷத்தின் உட்பொருளாயிருப்பது சிநேகமே. அந்த சிநேகமாயிருக்கிற அன்பினால், அதாவது பரிசுத்த ஆவியினால் அது கண்டுணரச் செய்யப்பட முடியும். சுவிசேஷத்தை உண்மையிலேயே எழுதியவர் அவராகையால், அதை அர்த்தப்படுத்துகிறவரும் அவர் ஒருவரே. ஏனென்றால் ஒரு நூலை இயற்றியவர், அதை வாசிக்கிறவர்கள் அதைக் கண்டுபிடிக்கச் செய்வதில் வெற்றி பெறாவிட்டாலும், அவர் ஒருவரே அதன் உட்பொருளை அறிபவர், கண்டுபிடிப்பவர். ஆயினும் எந்த ஒரு மனிதத் திறமையிலும் குறைபாடுகள் மலிந்திருப்பதால் ஒரு மனித நூலாசிரியர் வெற்றி பெறாத இடங்களிலும் மிக உத்தம ஞானமுள்ள ஆவியானவர் வெற்றி பெறுகிறார். ஆகவே கடவுளின் பிள்ளைகளின் ஆன்மாக் களுடைய மிக உள்ளரங்கங்களில், சுவிசேஷத்தை ஞாபக மூட்டி, விளக்கம் கூறி முழுமையாக்குபவர் சுவிசேஷத்தின் ஆசிரியராகிய பரிசுத்த ஆவியே.

''என் நாமத்தினாலே பிதாவானவர் அனுப்பப் போகிற தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்து சாந்துவானவர் சகலத்தையும் உங்களுக்குப் படிப்பித்து, நான் உங்களுக்குச் சொன்ன யாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்" (அரு. 14:26).

"சத்திய இஸ்பிரீத்து சாந்துவாகிய அவர் வரும்போது சகல சத்தியங்களையும் உங்களுக்குப் படிப்பிப்பார். ஏனெனில் அவர் தாமாகப் பேசாமல், கேள்விப்பட்ட யாவையும் பேசி, வரப் போகிறவைகளையும் உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னை மகிமைப்படுத்துவார். ஏனெனில் என்னுடைய தினின்று பெற்றுக் கொண்ட உங்களுக்கு அறிவிப்பார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள். ஆகையால் அவர் என்னுடையதினின்று பெற்றுக்கொண்டு உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்" (அரு. 16:13-15).

ஆயினும் நீங்கள், சுவிசேஷத்தின் உண்மையான ஆசிரியராயிருக்கிற பரிசுத்த ஆவியானவர் இந்தப் புத்தகத்தில் கூறப்படுகிறதை ஏன் கூறவில்லை என்றும், அருளப்பர் தம் சுவிசேஷ இறுதி வசனத்தில் நிகழ்ந்ததாக நம்மைக் கண்டுபிடிக்க வைக்கிறவற்றையும் ஏன் பரிசுத்த ஆவி ஞாபகமூட்டவில்லை என்று அறியக்கூடவில்லையே என்றும் மறுப்புச் சொன்னால் அதற்கு என் பதில் : சர்வேசு ரனுடைய சிந்தனைகள் மனிதருடைய சிந்தனைகளிலிருந்து வேறுபட்டவை. அவை எப்போதும் நீதியானவை. அவற்றைக் குறை கூறக்கூடாது என்பதே.

மேலும் நீங்கள் கடவுளின் வெளிப்படுத்தல் கடைசி அப்போஸ்தலரோடு முடிந்து விட்டதென்றும், "ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை சர்வேசுரன் அவன் மேல் கூட்டி வைப்பார்" (காட்சி. 22:18) என்று அந்த அப்போஸ்தலரே கூறியிருப்பதால், அதனுடன் கூட்டுவதற்கு வேறு எதுவும் இல்லை என்றும், எல்லா வெளிப்படுத்தல் களுக்கும் அது செல்லுமென்றும், அவற்றின் கடைசி நிறைவு அருளப்பரின் காட்சியாகமம்தான் என்றும் மறுப்புச் சொன்னால், அதற்கு நான் கூறும் பதில் : இந்தப் புத்தகத்தினால் கடவுளின் வெளிப்படுத்தலுடன் எதுவும் கூட்டப்படவில்லை; இயற்கைக் காரணங்களாலும் தேவ சித்தத்தினாலும் ஏற்பட்ட இடைவெளிகள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. மேலும், பல வண்ணப் பட்டைச் சித்திரத்தில் உடைந்த அல்லது உதிர்ந்த பட்டைகளை மீண்டும் பொருத்தி முழு அழகுடன் மிளிரச் செய்வது போல என்னுடைய தெய்வீக அன்பின் சாயலை மீண்டும் சீர்ப்படுத்துவதில் நான் மகிழ விரும்புகிறேன். அதையும் இந்த நூற்றாண்டிலே, மனுக்குலம் இருட்டும் பயங்கரமும் நிரம்பிய பாதாளத்தில் தன்னையே வீசியெறியும் இத்தருணத்தில் செய்யத் தீர்மானித்தேன். அதை நான் செய்வதை நீங்கள் தடை செய்யலாமா?

ஒருவேளை, உள்ளத்தில் மந்தமும், பலவீனமும், மேலேயிருந்து வரும் ஒளிகளுக்கும், குரல்களுக்கும் அழைப்பு களுக்கும் செவிடாயுமிருக்கிற நீங்கள், அது தேவையில்லை என்பீர்களோ?

உங்களிடம் இருக்கிற ஒளி உங்கள் இரட்சகரைக் "கண்டுகொள்ள போதுமானதாயில்லாததால், அந்த ஒளியை புதிய பிரகாசங்களால் அதிகரிப்பதற்காக நீங்கள் உண்மையிலே என்னை வாழ்த்த வேண்டும். வழியையும், சத்தியத்தையும், சீவனையும் கண்டுகொள்ளுதல், என் காலத் திலிருந்த நீதிமான்களின் ஞான உணர்வு உங்களிடம் எழும்புவதை உணர்ந்து கொள்ளுதல், இந்த அறிவால் அன்பில் உங்கள் உள்ளங்களின் புதுப்பித்தலை அடைந்து கொள்ளுதல் - இவையே உங்களின் இரட்சண்யமாயிருக்கும். ஏனெனில் இது உத்தமதானத்தை நோக்கி எழும்புவதாகும்.

உங்களை நான் "இறந்தவர்கள்'' என்று கூறவில்லை. ஆனால் உறங்குகிறவர்கள், கிறக்கமுற்றிருக்கிறவர்கள் என்கிறேன் - குளிர்காலத்தில் உறக்கத்திலிருக்கிற தாவரங்களைப் போல. தெய்வீக சூரியன் தன் பிரகாச ஒளியை உங்களுக்குத் தருகின்றது. விழிப்படையுங்கள்! தன்னையே உங்களுக்குத் தருகிற சூரியனை வாழ்த்துங்கள்! அது உங்கள் மேற் பரப்பி லிருந்து உள் ஆழம் வரைக்கும் அனலூட்டி, உங்களை எழுப்பி, உங்களை மலர்களாலும், கனிகளாலும் நிரப்பும்படி அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.

எழுங்கள்! என் கொடையை நோக்கி வாருங்கள்!

''எடுத்து அருந்துங்கள். எடுத்துப் பருகுங்கள்'' என்று நான் அப்போஸ்தலர்களிடம் கூறினேன்.

''சர்வேசுரனுடைய வரத்தையும், எனக்குத் தாகத்துக்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னாரென்பதையும் அறிந்திருந்தால், நீயே அவரிடத்தில் ஒரு வேளை கேட்டி ருப்பாய். அவரும் உனக்கு ஜீவ ஜலத்தைக் கொடுத்திருப்பார்'' என்று சமாரிய ஸ்திரீயிடம் நான் சொன்னேன்.

அதை இப்பொழுதும் சொல்கிறேன் : பண்டிதர் களுக்கும், சமாரித்தர்களுக்கும் சொல்கிறேன். காரணம், இவ்விரு முனைகளிலிருப்பவர்களுக்கும் அது தேவைப் படுகிறது. பண்டிதர்கள் போதிய ஆகாரமில்லாமல் தங்கள் பலமிழந்து போகாமலும், கடவுளுடையவும், கடவுள் - மனிதனுடையவும், போதகருடையவும், இரட்சகருடையவும் அறிவு இல்லாமல் தளர்ந்து, சுபாவத்துக்கு மேலான உணவின்றிப் போகாதிருக்கும்படியாகவும் அது தேவைப் படுகிறது. சமாரித்தரும் அத்தேவையிலிருக்கிறார்கள். ஏனென்றால், ஆன்மாக்கள் சுனைகளிலிருந்து தூரத்தில் மடியும் போது அவர்களுக்கு ஜீவிய தண்ணீர் தேவைப் படுகிறது. இவ்விரு தரப்பினருக்கும் இடையிலிருப் பவர்கள்தான் பெருங்கூட்டமாயிருக்கிறார்கள். அவர்கள் பெரிய பாவிகளல்லர். சோம்பலாலும், வெதுவெதுப்பினாலும், அர்ச்சிஷ்டதனத்தைப் பற்றிய தவறான கருத்தினாலும், நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டுவிடக்கூடாதென்ற மிஞ்சிய பயத்தாலும், அனுசாரங்களைக் கடைப்பிடித்து மேலோட் டமான அனுஷ்டானங்களின் குவியலில் சிக்கி, வீர வைராக்கியமான, செங்குத்தான, மிக செங்குத்தான பாதையில் ஓர் அடியெடுத்து வைக்கத் துணிவில்லாததால், எந்த முன்னேற்றமும் காணாதிருக்கிற அவர்கள், இப்புத்தகத்தின் மூலம் தங்கள் அசைவற்ற நிலையிலிருந்து வெளியே வரக்கூடிய ஆரம்ப ஊக்கத்தைப் பெற்று, அதன்பின், வீர வைராக்கியப் பாதையிலே புறப்பட்டுச் செல்லும்படியாக அது தேவைப்படுகிறது.

இந்த வார்த்தைகளை உங்களுக்குச் சொல்கிறேன். இந்தப் போஜனத்தையும், இந்த ஜீவிய தண்ணீராகிய பானத்தையும் உங்களுக்குத் தருகிறேன். என் வார்த்தையே ஜீவியமாக இருக்கிறது. ஜீவியத்தில் நீங்கள் என்னுடன் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். சாத்தானுடைய விஷ நாற்றம் ஆத்துமத்தின் ஜீவ சக்தியை அழித்து விடுகிறதால், அதற்கொரு ஈடுகட்டும்படியாக, என் வார்த்தையை நான் அதிகரிக்கிறேன்.

என்னை ஒதுக்காதீர்கள். நான் உங்களை நேசிப்பதால் உங்களுக்கு என்னையே கொடுக்க ஆவலாயிருக்கிறேன். என்னுடைய இந்த ஆவல் அணைக்கப்படக்கூடாத்தா யிருக்கிறது. பரலோக திருமணத்தின் விருந்திற்கு உங்களை ஆயத்தப்படுத்துவதற்காக என்னையே உங்களுக்குத் தர ஆர்வமாய் விரும்புகிறேன். நீங்கள் சோர்ந்து போகாதபடிக்கும், செம்மறியானவரின் திருமண விழாவிற்கு அலங்கரிக்கப்பட்ட ஆடைகளை நீங்கள் அணிந்து கொள்வதற்கும் உங்களுக்கு நான் தேவைப்படுகிறேன். நான் உங்களிடத்தில் இருப்பதால், நீங்கள் கண்ணிகளும், புதர்களும், பாம்புகளும் நிறைந்த பூமியாகிய பாலைவனத்தின் துன்ப துரிதங்களை சேதமடை யாமல் கடந்து செல்லவும், நெருப்புச் சுவாலைகளை மேற்கொள்ளவும், சாகாமலே விஷ ஜந்துக்கள் மேல் மிதிக்கவும் நஞ்சை உட்கொள்ளவும் உங்களுக்குக் கூடுமாயிருக்கும்படி நான் உங்களுக்குத் தேவைப்படுகிறேன்.

நான் மேலும் கூறுகிறேன். இந்த நூலைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆம். பெற்றுக் கொள்ளுங்கள். இதை மூடி வைக்காதீர்கள். இதைப் படியுங்கள். படிக்கச் செய்யுங்கள். ''ஏனென்றால் காலம் சமீபமாயிருக்கின்றது. பரிசுத்தமா யிருக்கிறவன் இன்னும் பரிசுத்தமாவானாக!' (காட்சி. 22:10-11).

நான் நெருங்கி வருவதாக இப்புத்தகத்தில் காண்கிறவர்களுக்கும், அது நிறைவேறும்படி ஊக்கப் படுத்துகிறவர்களுக்கும் உங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துவின் வரப்பிரசாதம் உங்கள் பாதுகாப்பாக வருவதாக! உங்கள் அன்பின் கூக்குரல்: ''ஆண்டவராகிய சேசுவே வாரும்" (காட்சி. 22:20) என்று ஒலிப்பதாக!

இதன்பின் சேசு எனக்குத் தனிப்பட்ட முறையில் கூறியது:

இப்புத்தகத்தின் முகவுரையாக அருளப்பர் சுவிசேஷத்தின் முதல் அத்தியாயம் 1 முதல் 18-ம் வசனம் வரையிலும், அது இருக்கிறபடியே கொடு.

இப்புத்தகத்தில் கூறப்பட்ட யாவற்றையும் தேவ ஆவியானவரால் உனக்குக் கூறப்பட்டபடியே, நீ எழுதியது போலவே, அருளப்பரும் அதை எழுதினார். அதனுடன் எதையும் கூட்டவோ, அதிலிருந்து எதையும் எடுக்கவோ வேண்டியதில்லை - பரலோக மந்திரம் ஜெபத்திலிருந்தும், இராப் போஜனத்திற்குப் பின் நான் செய்த ஜெபத் திலிருந்தும் எதுவும் கூட்டவோ, குறைக்கவோ வேண்டி யில்லாதது போல. இவற்றின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தெய்வீக இரத்தினமாயிருக்கின்றது, அதைத் தொடக் கூடாது. இவற்றைப் பற்றி செய்யப்படக் கூடிய காரியம் ஒன்றே ஒன்றுதான் : பரிசுத்த ஆவியானவர் அவற்றை முழு அழகுடனும் ஞானத்துடனும் உங்களுக்கு விளக்கி யருளும்படி மன்றாடுங்கள்.

என்னுடைய பகிரங்க வாழ்வு தொடங்கும் பகுதிக்கு நீ வரும் போது, அருளப்பர் சுவிசேஷம் முதல் அதிகாரத்தின் 18 - ம் வசனம் முதல் 28-ம் வசனம் வரையிலும், அதோடு சேர்த்து லூக்காஸ் சுவிசேஷத்தின் 3 - ம் அதிகாரம், 3-ம் வசனம் முதல் 18 - ம் வசனம் முடிவு வரையிலும் அவை ஒரே அத்தியாயம் போல் காணப்படும்படியாக சேர்க்க வேண்டும். சுருங்கப் பேசும் தவசியும், கடின விரதமுமுடைய முன்னோடியானவர் அதிலே காணப்படுகிறார். அதைத் தவிர்த்த வேறு எதுவும் சொல்லப்பட வேண்டாம். அதற்குப் பின் என் ஞானஸ்நானத்தைப் பற்றி எழுது. அப்படியே நான் இடைக்கிடையில் உனக்குக் கூறுவது போல் செய்து கொள்.

இப்போது உன் களைப்பெல்லாம் தீர்ந்தது. இனி அன்பும் அனுபவிக்க வேண்டிய சன்மானமும் இருக்கின்றன.

ஆன்மாவே, உனக்கு நான் என்ன சொல்வேன்? 'இனி, ஆண்டவரே, உம்முடைய ஊழியக்காரியான என்னைக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்?'' என்று என்னில் இழக்கப்பட்ட உள்ளத்துடன் நீ கேட்கிறாய்.

நான் உன்னிடம் இப்படிக் கூற முடியும்: “இம்மட்கலத்தை உடைத்து அதன் சாரத்தை நான் இருக்கிற இடத்திற்குக் கொண்டு செல்வேன். அதுவே நம் இருவரின் மகிழ்ச்சியாயிருக்கும். ஆயினும் நீ இன்னும் சொற்பக் காலம் சற்றுக் கூடுதலாக இங்கிருந்து, உன்னில் வாழும் கிறிஸ்துவின் வாசனையாக இருக்கிற நறுமணங்களை நீ வீசுவது எனக்குத் தேவையாயிருக்கிறது. ஆதலால் நான் அருளப்பனுக்குச் சொன்னதைப் போலவே உனக்கும் சொல்வேன் : "நான் உன்னை எடுத்துக் கொள்ள வரும் வரையிலும் நீ இங்கேயிருக்க நான் விரும்பினால், அப்படியிருப்பதைப் பற்றி உனக்கு என்ன?''

சோர்ந்து போகாத என் சிறு குரலே உனக்கு சமாதானம்! சமாதானம் வருவதாக! உனக்கு சமாதானமும், ஆசீர்வாதங்களும், போதகர் உன்னிடம் : "நன்றி" என்று கூறுகிறார். ஆண்டவர் உன்னிடம் "ஆசீர்வதிக்கப்படுவாயாக!'' என்கிறார். சேசு, உன் சேசு, உன்னிடம் : "நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன். ஏனென்றால் என்னை நேசிக்கிறவர்களுடன் இருப்பது எனக்கு ஆனந்தமாயிருக்கிறது” என்று சொல்கிறார்.

சின்ன அருள், என் சமாதானம் உனக்கு! என் மார்பில் வந்து இளைப்பாறுவாயாக!

இந்த வார்த்தைகளோடு புத்தக வேலையைத் திட்டமிடும் ஆலோசனைகளும் முடிவுக்கு வருகின்றன. இறுதி விளக்கங்களும் தரப்பட்டுவிட்டன.

(Sign) Viareggio
Maria Valtarta 28 ஏப்ரல் 1947.
மரியா வால்டோர்ட்டா.