அர்ச். தோமையார் வரலாறு - நாராங்கோட்டையின் சரித்திர ஆராய்ச்சி

அப்போஸ்தலரது பிந்திய நடவடிக்கைகளைத் தொடர்ந்து சொல்லு முன் நராங் கோட்டையைப் பற்றிய சில விவரங்களை ஆராய்வது உசிதமாகும். நாராங்கோட்டை தற்போது சிந்துவுக்குத் தலை நகரமாய் விளங்கும் ஹைதராபாத் என்பது பொது அபிப்பிராயம். 

1834 ஆம் ஆண்டு கொந்தபோரஸ் அரசனின் பெயர் கொண்ட சில நாணயங்கள் ஆப்கனிஸ்தானில் அகப்பட்டன. அதற்குப் பின் அவைபோன்ற வேறு சில, காபுல், கந்தா ஹார்சீயஸ் தான், வடக்குப் பஞ்சாப், மேற்குப் பாஞ்சாப் நாடுகளிலும் கண்டெடுக்கப்பட்டன. 

இந் நாணயங்கள் கிறிஸ்துவுக்குப் பின் முதல் நூற்றாண்டில் வழங்கப்பட்டுள்ளன என்பது தொல் பொருள் ஆராய்ச்சி வல்லுநர் துணிபு. ஆகவே, கொந்த போரஸ் தோமையார் காலத்திலுள்ள ஓர் அரசன் என்று தெரிய வருகின்றது. அந்த அரசனின் அரசில், கீழ் ஆப்கனிஸ்தான் பாஞ்சாபின் ஒரு பாகம். இண்டஸ் (சிந்து) நதிவரையிலுமுள்ள சிந்து நாடுகளெல்லாம் அடங்கியிருந்தன வென்பது வரலாறு. ஆகவே இவ்விரு ஆதாரங்களும் தோமையார் சிந்துவுக்கு வந்த உண்மையை எண்பிக்கின்றன.

சிந்துவின் வட பாகத்தில் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் என்பதற்கு யாதொரு அடையாளமும் காணப்படவில்லை. ஆனால் தென் பாகத்திலோ அடையாளங்கள் பலவுள. ஆதலால் தென் பாகத்திலேயே தோமையார் மதப்பிரசாரஞ் செய்து உழைத்தாரென்று துணிவாகக் கொள்ளலாம். அவரது போதனையால் கிறிஸ்தவர்கள் பெருக, திருச்சபை எந்த அளவு ஒளி விட்டது என்பதற்குப் புனித தமசீன் அருளப்பரே அத்தாட்சி. 

அவர் சொல்லுகிறதாவது: "புனித வனத்துச் சின்னப்பரும் புனித வனத்து அந்தோனியாரும் தெபெய்தா எனும் வனாந்தரத்தில் தம் சீடர்களோடு செப தபஞ் செய்து, உத்தம வாழ்வு வாழ்ந்திருக்கையில், இண்டஸ் நதியின் பக்கத்திலுள்ள வனாந்தரத்தில் இந்திய தபோதனர்கள் பெரும்பான்மையோர் ஜீவித்தனர்'' என்பதே. இக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் புனித பாலாம் ஒருவர் என்பதும் அவரது கொள்கை. 

சிந்துவில் மனந்திரும்பின கிறிஸ்தவ சந்ததியின் கதி என்ன ஆயிற்றென்று நாம் அறிய விரும்பலாம். ஆனால், அதைப்பற்றி யாதொன்றும் உறுதியாகத் தெரியவில்லை. நெஸ்தோரியஸ் பிரிவினைக்காரர்கள் அங்கு வந்துற்றகாலை, குருக்களில்லாக் குறையால், அவர்களைப் பின்பற்றியிருக்கலாம். அப்படியாயின் அச் சபையினோரில் பெரும் பாலர் முஸ்லீம்களாகவும் அல்லது இந்துக்களாகவும் திரும்பினரென்று சொல்லக் கூடும். 

எது எப்படியாயினும் தோமையார் சிந்துவுக்கு வந்து சுவிசேஷத்தைப் போதித்து, பெருந் தொகையினோரை மனந்திரும்பியது மறுக்கப்படாது நிற்கின்றது.

சிந்துவிலிருந்து அப்போஸ்தலர் சென்ற வேறு இடங்களுக்கு நாமும் போவோமாக.