யூத இனம் செங்கடலைக் கடந்து அதன் மூலம் தங்களை மிகக் கொடூரமான முறையில் அடக்கி ஒடுக்கி வந்த தங்கள் விரோதிகளின் கரங்களிலிருந்து தப்பித்த பிறகும் கூட, இன்னமும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பெரும் சிரமம் இருந்தது. அவர்கள் ஒரு கடுமையான பாலைவனத்தில் தாங்கள் உணவும், தண்ணீருமின்றி இருக்கக் கண்டனர். அந்த முழு இனத்திற்கும் நம்பிக்கைக்கு இடமில்லாதது போலத் தோன்றியது. பட்டினியாலும், தாகத்தாலும், காட்டு விலங்குகளாலும் அது முழு அழிவுக்குக் குறிக்கப்பட்டு விட்டதாகத் தோன்றியது. ஆனால் கடவுள் தம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களுக்கு இத்தகைய பேரழிவு நிகழ்வதை ஒருபோதும் விரும்ப மாட்டார். அவர் ஒரு கூடாரம் அமைக்கும்படி மோயீசனிடம் கூறினார். சர்வ வல்லபரான அவர் இறங்கி வந்து, தமது மக்களின் மத்தியில் வாசம் பண்ணுவார். பரலோகங்களும், பரலோகங்களின் பரலோகமும் கொள்ள முடியாதவராய் இருந்தாலும், யூதர்கள் தமக்கென உருவாக்கிய ஒரு சிறு கூடாரத்தில் வந்து தங்கியிருக்க அவர் தயவுகூர்ந்தார். தாம் தெரிந்து கொண்ட மக்களை அவர்களது ஆபத்துக்களில் தேற்றவும், பாதுகாக்கவும், ஆதரிக்கவும், ஊக்கப்படுத்தவும், வழிநடத்தவும் அவர்கள் அருகில் இருக்க அவர் விரும்பினார். இது போன்ற ஒரு பயணம் எளிதானது அல்ல, அது பாதுகாப்பானதும் அல்ல. மனிதர் மத்தியில் வாசஞ் செய்வதே கடவுளின் மகிழ்ச்சியாக இருந்தது. தமது அருகாமையைக் கொண்டு தாம் அவர்களை நேசிப்பதை அவர் தம் மக்களுக்கு எண்பித்தார். ஆண்டவரின் இந்த ஆசாரக் கூடாரம் எப்போதும் பன்னிரு கோத்திரங்களுக்கும் மத்தியிலேயே அடிக்கப்பட்டது. பரிசுத்தத்திலும் அதிபரிசுத்த ஸ்தலத்திற்கு மேலாக நிற்கிற ஒரு சிறிய வெண் மேகத்தைக் கொண்டு கடவுள் தமது பிரசன்னத்தை ஒரு காணக்கூடிய வடிவத்தில் காட்டினார். மக்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்ட போது, மோயீசன் ஆண்டவருடைய ஆசாரக் கூடாரத்திற்குள் போய், ஆண்டவரோடு ஆலோசனை நடத்துவார். என்ன செய்ய வேண்டும், எப்போது புறப்பட வேண்டும், எதிரி இனங்களுக்கு எதிராக எப்படிப் போர்புரிய வேண்டும், மற்றும் இதுபோன்ற விவரங்களைக் கடவுள் அவருக்குக் கூறுவார்.
இந்தக் கூடாரத்தில் மூன்று பொக்கிஷங்கள் இருந்தன. அவை வேத சட்டத்தின் கற்பலகைகள், மன்னா நிரம்பிய ஒரு பொற்பாத்திரம், மற்றும் ஆரோனின் கோல் ஆகியவை. வேத சட்ட கற்பலகைகள், கல்லில் எழுதப்பட்ட கடவுளின் திருச் சித்தத்தை உள்ளடக்கியிருந்தது. ஏனென்றால் அவருடைய சித்தம் மாறாதது; அது கல்லைப்போல திடமானது, மாறாதது. எல்லா இனிமையையும் தன்னுள் கொண்டிருந்த உணவாக மன்னா இருந்தது. பசியால் வாடிய இஸ்ராயேலருக்கு அது ஒரு பரலோக விருந்தை அளித்தது. ஆரோனின் கோல் குருத்துவத்தின் அடையாளம். கடவுளால் அழைக்கப்பட்டால் ஒழிய யாரும் இந்தப் பணிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதுவே பாலைவனத்தில் இருந்த ஆசாரக் கூடாரமாயிருந்தது.
இப்போது, புதிய வேத சட்டத்தில் கடவுளின் அற்புதக் கூடாரத்தில் இந்த எல்லாக் காரியங்களினுடையவும் நிறைவேற்றத்தை நாம் பார்ப்போம். சேசுவின் திரு இருதயமே இந்தப் புதிய ஆசாரக் கூடாரம். அது இனியும் வெறும் மெல்லிய துணியாலும், தோல்களாலும் உருவாக்கபபடுகிற கூடாரமாகவோ, வசிப்பிடமாகவோ இல்லை, மாறாக, ஓர் உயிருள்ள கூடாரமாக இருக்கிறது. அது அனைத்திலும் அழகானது. கடவுளுக்கு முற்றிலும் தகுதியானது. அது மனித கரங்களால் அல்ல, மாறாக கடவுளாலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் ஆண்டவரின் ஆசாரக் கூடாரமானது எப்போதும் யூதர்களின் பாளையத்திற்கு நடுவிலேயே நிர்மாணிக்கப்பட்டது போல, ஆண்டவரின் மெய்யான கூடாரத்தை, அதாவது திவ்ய நற்கருணையில் சேசுவின் திரு இருதயத்தை, நாம் எப்போதும் நம் மத்தியில் கொண்டிருக்கிறோம். நமக்கு போதிப்பதற்காகவும், நம்மைத் தேற்றுவதற்காகவும், நம்மைப் பாதுகாப்பதற்காகவும், நம்மைப் போஷிப்பதற்காகவும், வாழ்வின் ஆபத்துக்கள் நிறைந்த வனாந்தரத்தின் வழியாக நம்மை வழிநடத்தும்படியாகவும் அவர் எப்போதும் நம் அருகில் இருக்கிறார். பழைய ஆசாரக் கூடாரத்தில் காணப்பட்ட மூன்று பொக்கிஷங்களினுடையவும் நிறைவேற்றத்தை அவருடைய திரு இருதயம் உள்ளடக்கியுள்ளது. அவருடைய பரலோகப் பிதாவின் திருச்சித்தம் நம் இரட்சகரின் திரு இருதயத்தில் பதிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், “என் சொந்த சித்தத்தையல்ல, என் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவே நான் வந்தேன்” என்று அவரே சொல்லி யிருக்கிறார். எல்லா இனிமையையும் தனக்குள் கொண்டிருக்கிற மன்னா, நாம் ஒவ்வொரு நாள் காலையிலும் திவ்ய நற்கருணை உட்கொள்ளும்போது அவர் நமக்குத் தருகிற சம்மனசுக்களுக்குரிய திருவிருந்தாக இருக்கிறது. ஆரோனின் கோலும் கூட அங்கே பிரசன்னமாயிருக்கிறது, ஏனென்றால் அவரே நித்திய குருவாக இருக்கிறார். அன்றாட திவ்ய பலியில் அவரே பிரதான குருவாக இருக்கிறார். ஆரோனைப் போல கடவுளால் அழைக்கப்பட்ட எல்லாக் குருக்களும் அவருடைய கருவிகளாக இருக்கிறார்கள்.
ஆனாலும் வனாந்தரத்தில் யூதர்களின் ஆசாரக் கூடாரத்திற்கும், நம்முடைய உயிருள்ள திருக் கூடாரத்திற்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. முதல் கூடாரத்திற்குள் பிரவேசிக்க மோயீசனைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. பின்னாட்களில்தான் பிரதான குரு அந்த சலுகையைப் பெற்றுக் கொண்டார். ஆனால் இழிந்த பாவிகளாகிய நாம், பெரியவரோ, சிறியவரோ, கற்றவரோ, கல்லாதவரோ, குருவோ, பொது விசுவாசியோ, நாம் எல்லோருமே, அதிபரிசுத்த ஸ்தலத்தை அணுகிச் செல்லலாம். சேசுவின் திரு இருதயம் நம் எல்லோருக்குமானது: அது நம் எல்லோருக்காகவும் திறந்திருக்கிறது. “சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, நீங்கள் எல்லோரும் என்னண்டையில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று சேசுநாதர் கூறுகிறார். நாம் பயப்படத் தேவையில்லை, ஏனென்றால் அவர் நம்மைத் துரத்திவிட மாட்டார். இல்லை, நாம் நமது துன்பங்களோடும், நோய்களோடும் அவரைத் தேடி வரும்போது அவர் மகிழ்ச்சியடையவும் செய்கிறார். இந்தக் காரணத்திற்காகவே அவர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார். பரலோகப் பொக்கிஷங்களால் நம்மை நிரப்பவும், நரகத்திலிருந்து நம்மை மீட்டு இரட்சிக்கவுமே ஈனப் பாவிகளாகிய நம்மைத் தம்மிடம் ஈர்த்துக் கொள்ள அவர் விரும்புகிறார்.
அங்கே மற்றொரு வித்தியாசமும் இருக்கிறது. அதிபரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரதான குரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பிரவேசிக்கலாம். ஆனால் நாம் விரும்பினால், ஒவ்வொரு நாளும் கூட அவரிடம் வரலாம். மேலும் பண்டைய கூடாரத்தின் மன்னா உடலுக்கு அற்புதமானதாகவும், ஆனால் ஆத்துமத்திற்கு பயனற்றதாகவும் இருந்தது. சேசு நமக்குத் தருவதும், பரலோகத்திலிருந்து இறங்கி வந்த உயிருள்ள அப்பமாகிய மன்னாவோ, ஒரு சுவையுள்ள ஆன்ம விருந்தை நமக்குத் தருவது மாத்திரமல்ல, மாறாக, “மன்னாவைப் புசித்தவர்கள் வனாந்தரத்தில் மடிந்தார்கள். ஆனால் “இந்த அப்பத்தைப் புசிப்பவனோ, என்றென்றைக்கும் மரணத்தைச் சுவை பார்க்க மாட்டான்” என்று அவர் வாக்களித்தது போல, அது நம்மை நித்திய சாவிலிருந்து காப்பாற்றுகிறது.
நம் இரக்கமுள்ள சர்வேசுரன் நம் மத்தியில் தம் கூடாரத்தை அடித்திருப்பதற்காகவும், நமக்கு இவ்வளவு அருகாமையில் ஜீவிப்பதற்காகவும் அவருக்கு நாம் நன்றி கூறுவோமாக. அவர் தம் ஆட்டுக் குட்டிகளிடையே நல்ல மேய்ப்பராக இங்கிருக்கிறார். போர்க்களத்தில் தம் ஊழியர்களோடு தோளோடு தோளாக நின்று போர்புரிகிற தலைவராக இருக்கிறார். அடிக்கடி தைரியமூட்டும் வார்த்தைகளை அவர்களுடைய செவிகளுக்குள் மென்மையாக உச்சரிக்கிறார். அவர் ஒரு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், தேற்றுகிறவராகவும், தந்தையாகவும் இங்கே இருக்கிறார். நாம் அவரை போற்றி ஸ்துதித்து, அவருக்கு நன்றி கூறுவோமாக.
அதியுன்னத ஆண்டவரின் வாசஸ்தலமாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!