யாரிடமும் அவனைப் பற்றி மற்றொருவன் தவறாகப் பேசினான் என்று ஒருபோதும் சொல்லாதபடி கவனமாயிரு; ஏனெனில் இவ்வகையாக கோள் சொல்வது சில சமயங்களில் நீண்ட காலம் நீடிக்கும் சண்டை சச்சரவுக்கும், வெறுப்புகளுக்கும் இடமளிக்கிறது. ஓ! கோள் சொல்பவர்கள் கடவுளுக்கு எவ்வளவு பயங்கரமான கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்! சண்டை சச்சரவை விதைப்பவர்கள் அவருடைய பார்வையில் அருவருப்புக்கு உரியவர்களாயிருக்கிறார்கள். ""ஆண்டவருக்கு அருவருப்பான காரியங்கள் ஆறு; ஏழாவது காரியம் கூட அவருடைய ஆத்துமத்துக்கு அருவருப்பாயிருக்கும் . . . பொய்களைச் சொல்கின்ற கள்ளச்சாட்சியும், தன் சகோதரருக்குள் பிரிவினைகளை விதைக்கிறவனும் (அவருக்கு அருவருப்பானவர்கள்)'' (பழ.6:16,19). கோபத்தில் வெளிவரும் பிறர்சிநேகமற்ற ஒரு வார்த்தை மன்னிக்கப் படக் கூடியதாக இருக்கலாம். ஆனால் பிரிவினையை விதைப்பவனும், ஒரு சமூகத்தின் அமைதியைக் குலைப்பவனுமான மனிதனை சர்வ வல்லவர் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? பரிசுத்த ஆவியானவரின் அறிவுரையைக் கேள்: ""உன் பிறனுக்கு எதிரான ஒரு வார்த்தையை நீ கேட்டாயாகில், அது உனக்குள்ளேயே இறந்து போகக்கடவது'' (சீராக்.19:10). மற்றொருவனுக்கு எதிராக நீ கேட்கும் வார்த்தைகளை நீ உனக்குள் வைத்துக் கொள்ளக் கூடாதது மட்டுமல்ல, மாறாக, அவை உனக்குள் இறந்து புதைக்கப்பட்டு விடவும் வேண்டும். ஆகவே, நீ கேட்ட காரியத்தின் மிகச் சிறிய குறிப்பைக் கூட ஒருபோதும் பிறருக்குத் தராதபடி நீ கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில் ஒரே ஒரு வார்த்தை, ஒரு தலையசைப்பு, ஒரு சிறு குறிப்பும் கூட, உன்னிடம் சொல்லப்பட்ட பாவங்களைப் பற்றிய ஒரு வித அறிவை மற்றவர்களுக்குத் தரக் கூடும், அல்லது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி விடக் கூடும்.
சிலர் தங்களுக்குச் சொல்லப்பட்ட இரகசியங்களை மற்றவர்களுக்கு உடனே வெளிப்படுத்தாவிடில் தலையே வெடித்து விடும் என்பது போலத் தோன்றுவார்கள்; இந்த இரகசியங்கள் ஏராளமான முட்கள் என்பதுபோலவும், அவற்றைத் தங்கள் இருதயத்திலிருந்து பிடுங்கி எறியாவிடில், அவை அதைக் காயப் படுத்தி விடும் என்பதுபோலவும் நடந்துகொள்வார்கள். மடத்து அதிபர்களைத் தவிர வேறு யாருக்கும் மற்றவர்களின் மறைவான குறைபாடுகளை நீ ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது. இவர்களிடமும் கூட, மடத்திலுள்ள மற்றவர்களுக்கு இதனால் ஏற்படும் தீங்கைத் தவிர்க்கும் நோக்கத்தோடு மட்டுமே சொல்ல வேண்டும். அல்லது அந்தப் பாவத்தைச் செய்தவனின் ஆன்ம நன்மைக்காக இதை மடாதிபரிடம் சொல்வது அவசியமாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு இதை வெளிப்படுத்த வேண்டும்.
மேலும், உன் உரையாடல்களில், ஒரு சைகையாலும் கூட மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி விடாதபடி நீ கவனமா யிருக்க வேண்டும். ஓர் அயலானின் மனதை நோகச் செய்யும் சைகைகள் பிறர்சிநேகத்திற்கும், ""மனிதர் உங்களுக்கு எதெதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்'' (மத்.7:12) என்ற சேசுநாதரின் வார்த்தைகளுக்கும் எதிரானவை. உன் தோழர்களுக்கு முன் ஒரு கேலிப் பொருளாக ஆக நீ நிச்சயமாக விரும்ப மாட்டாய். ஆகவே, மற்றவர்களைக் கேலி செய்வதையும் நீ தவிர்க்க வேண்டும்.
எல்லா சச்சரவுகளையும் கூட முடிந்த வரை தவிர்த்து விட முயற்சி செய். சில சமயங்களில் அற்பக் காரியங்கள் பெரும் வாக்குவாதங்களாகி, சச்சரவுகளுக்கும், காயப்படுத்தும் வார்த்தைகளுக்கும் இடங்கொடுத்து விடும். சிலர் தங்கள் முரண்பாட்டு உணர்வால், பயனற்ற சச்சரவுக்கு வழிவகுக்கும் ஏதாவது ஒரு விவாதப் பொருளை முன்வைப்பதன் மூலம் பிறர்சிநேகச் சட்டத்தை மீறுகிறார்கள். ""உனக்கு சம்பந்தமில்லாத காரியத்தில் தலையிடாதே' (சீராக்.11:9) என்று ஞானியானவர் கூறுகிறார்.
ஆனால் ஒவ்வொரு விவாதத்திலும் பிரச்சினையின் சரியான பக்கத்தையே தாங்கள் ஆதரிப்பதாகவும், முற்றிலும் ஆதாரமற்ற வாதங்களை வாய்மூடி மவுனமாகக் கேட்டுக் கொண்டிருக்கத் தங்களால் முடியாது என்றும் சிலர் சொல்வார்கள். இதற்கு அர்ச். ராபர்ட் பெல்லார்மினின் வார்த்தைகளில் நான் பதில் தருகிறேன்: ""ஒரு அவுன்ஸ் அளவு பிறர்சிநேகம் ஒரு நூறு வண்டியளவு அறிவைக் காட்டிலும் அதிக மதிப்புள்ளது.'' இத்தகைய வாக்குவாதங்களில் பணிந்து போய்விடுவது வெற்றி கொள்வதற்கு சமம் என்று முத். எஜிடியுஸ் வழக்கமாகக் கூறுவார். ஏனெனில் பணிதல் புண்ணியத்தில் மேலோங்கச் செய்து மனச் சமாதானத்தைப் பாதுகாக்கிறது. நிச்சயமாக சமாதானம் பாதுகாக்கப்படுவது, வார்த்தையளவிலான வெற்றியின் வீண் மகிமையை விட எவ்வளவோ மடங்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இதனாலேயே அர்ச். எஃப்ரேம் தமது மனச் சமாதானத்தைக் காத்துக் கொள்வதற்காக வாக்குவாதங்களில் தம் எதிரிக்கு எப்போதும் விட்டுக்கொடுத்து விடுவார். ஆகவே, அர்ச். ஜோசப் காலாசாங்க்´யுஸ் என்பவர் ""சமாதானத்தை விரும்பும் அனைவரும் யாரோடும் ஒருபோதும் சச்சரவில் ஈடுபடக் கூடாது''என்று சொல்வது வழக்கம்.
ஆனால், நீ பிறர்சிநேகத்தை நேசித்தால், எல்லோரிடமும் அன்பாகவும், சாந்தத்தோடும் இருக்க முயற்சி செய். சாந்தம் என்பது செம்மறிக்குட்டியின் தனிப்பட்ட புண்ணியமாகும். சேசுநாதரின் அன்பிற்குரிய புண்ணியமாகும். அவர் சாந்தத்தின் மீது தமக்குள்ள அன்பின் காரணமாக, செம்மறிப் புருவை என்னும் பெயரைத் தம்முடையதாக்கிக் கொண்டார். மற்றவர்களுடனான உன் உரையாடலில், உனக்கு மேற்பட்டவர்களிடம் மட்டுமல்ல, மாறாக அனைவரிடமும், குறிப்பாக உன்னை நோகச் செய்தவர்களிடமும், உன் விருப்பங்களை எதிர்ப்பவர்கள் அல்லது தங்கள் முரட்டு சுபாவத்தாலோ, நீ செய்த கடந்த கால நன்மைகளை மறப்பதாலோ உனக்கு வருத்தம் வருவிப்பவர்களிடமும் இணக்கமாக இரு. ""தேவசிநேகம் பொறுமையுள்ளது... சகலத்தையும் தாங்கிக் கொள்ளும்'' (1கொரி.13:4,7). ஆகவே, தன் அயலானின் குறைகளைத் தாங்கிக் கொள்ளாதவன் உண்மையான பிறர் சிநேகத்தைக் கொண்டிருக்க முடியாது. மிக உத்தமமான ஆன்மாக்களும் கூட எல்லாக் குறைபாடுகளிலிருந்தும் விடுபட்டிருப்பதில்லை. நீயே கூட தவறுதல்களுக்கு உட்பட்டிருக்கிறாய்; உன் பலதரப்பட்ட குறைபாடுகளையும் மீறி மற்றவர்கள் உன்னை நேசத்தோடும், தயவோடும் நடத்த வேண்டுமென நீ எதிர்பார்க்கிறாய். ஆகவே, அப்போஸ்தலரின் அறிவுரைப்படி நீ பிறருடைய குறைகளில் தயவோடிருக்க வேண்டும்: ""ஒருவர் பாரத்தை ஒருவர் தாங்கிக் கொள்ளுங்கள்'' (கலாத்.6 :2). ஒரு தாய் தன் குழந்தைகளை நேசிப்பதால், அவர்களது ஆணவத்தைப் பொறுமையோடு சகித்துக் கொள்கிறாள். மற்றவர்கள் உன் மீது சுமத்தும் சுமைகளை நீ எப்படித் தாங்கிக் கொள்கிறாய் என்பதன் அடிப்படையிலேயே நீ உன் அயலானை உண்மையான பிறர்சிநேகத்தோடு நேசிக்கிறாயா என்று கண்டுபிடிக்க வேண்டும்.
ஓ! நம் இரட்சகர் தம் சீடர்களோடு வாழ்ந்த காலம் முழுவதும் அவர்களுடைய முரட்டுத்தனத்தையும், குறைபாடுகளையும் எத்தகைய பிறர்சிநேகத்தோடு தாங்கிக் கொண்டார்! எத்தகைய சிநேகத்தோடு அவர் துரோகியான யூதாஸின் பாதங்களைக் கழுவினார். இன்றளவும் கூட அவர் எப்படி உன் பாவத் தன்மையையும், நன்றியற்றதனத்தையும் சகித்துக் கொண்டு வருகிறார்! அப்படியிருக்க, நீ மட்டும் உன் அயலாரின் குறைகளைப் பொறுத்துக்கொள்ள மறுப்பாயா? மருத்துவன் நோயாளியை நேசிக்கும் அதே வேளையில் நோயை வெறுக்கிறான். உன்னிடம் உண்மையான பிறர்சிநேகம் இருக்குமானால் நீ உன் அயலாரை நேசிக்கும் அதே வேளையில் அவர்களுடைய தவறுதல்களை வெறுக்க வேண்டும். ஆனால், ""நான் என்ன செய்வது? இத்தகைய ஒருவனை எனக்கு இயல்பாகவே பிடிக்கவில்லை, அவனோடு நட்புக் கொள்வதை நான் வேதனையானதாக உணர்கிறேன்'' என்று நீ சொல்வாய். இதற்கு என் பதில்: அதிக பக்தியார்வமும், அதிகப் பிறர் சிநேகமும் கொண்டிரு, அப்போது இத்தகைய வெறுப்புகள் எல்லாம் மறைந்துபோகும்.