பத்து குஷ்டரோகிகள்

தாம் பூமியிலிருந்தபோது, நமதாண்டவர் தமது பக்திக்குரிய சத்தியங்களைப் போதித்தபடி எங்கும் சுற்றித் திரிந்தார். தமது மட்டற்ற நன்மைத்தனத்தால் ஏராளமான இருதயங்களைக் கொள்ளை கொண்டார், நோயாளிகளைக் குணமாக்கினார், துயருற்றோரைத் தேற்றினார், சகலருக்கும் நன்மை செய்தார். அவருடைய தயாளத்தைக் கண்டு மக்கள் கூட்டங்கள் பரவசப்பட்டன; வசீகரிக்கப்பட்டன. அவர் பேசியபோது, அவர்களுடைய இருதயங்கள் அவர்களுக்குள் பற்றியெரிந்தன.

ஒரு நாள் பத்துக் குஷ்டரோகிகள் தொலைவில் இருந்து அவரைக் கூவியழைத்தார்கள். ஏனெனில் மனிதர்களை நெருங்கி வராதபடி யூதச் சட்டம் அவர்களைத் தடை செய்திருந்தது. “சேசுவே, ஆண்டவரே, எங்கள் மீது இரக்கம் வையும்!'' என்று அவர்கள் கூக்குரலிட்டார்கள். தங்களைக் குணமாக்கும்படி அவர்கள் அவரை மன்றாடினார்கள்.

சேசு அவர்களுக்குப் பதில்மொழியாக: “நீங்கள் போய் குருக்களிடம் உங்களைக் காண்பியுங்கள்'' என்றார் (லூக். 17:14).

வேறு யாருடைய தலையீடுமின்றி அவர் அவர்களை மிக எளிதாகக் குணமாக்கியிருக்க முடியும். அப்படியிருக்க, அவர் ஏன் அவர்களைக் குருக்களிடம் அனுப்பினார்?