நாகப்பட்டினம் - பங்கு

நாகப்பட்டினம் வேளாங்கண்ணியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பழமையான நகர், இப்பகுதியை நாக வம்ச அரசர்கள் ஆண்டு வந்திருக்கக் கூடும். நாகையிலும், அதனை அடுத்தும் வாழ்ந்த கிறிஸ்தவ மக்களைக் கண்காணிக் கவும், மற்ற மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியை அறிவித்திடவும், பிரான்சிஸ்கு சபையினரும், அகுஸ்தீன் சபையினரும், பின்னர் இயேசு சபையினரும் வந்து பொறுப்பேற்றனர்.

போர்த்துக்கீசியர் நாகப்பட்டினத்தைத் தங்களது வணிகத் துறைக்கு முக்கியமான இடமாகக் கருதினர். இந்நகர் விஜய நகரப் பேரரசைச் சார்ந்த இடமாகும். சிறிய ஊராயிருந்த இந்நகர், நாளாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கத் தொடங்கியது. போர்த்துக்கீசியர் வாழ்ந்த பகுதிகள் வனப்பு மிக்கனவாயிருந்தன. பல செல்வந்தர்களின் இல்லங்களும் அங்கு இருந்தன, அவர்களைக் கண்காணிக்கும் பொருட்டு, தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். 

இவர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படுவார். போர்த்துக்கீசியரிடையிலும், இந்திய கிறிஸ்தவர்களிடையிலும் எழும் வழக்குகளை இவரே தீர்த்து வைப்பார் என்று 'சவேரியாரின் நினைவுச் சின்னங்கள் ' என்னும் நூல் குறிப்பிட்டுள்ளது. போர்த்துக்கீசியரின் கண்காணிப்பில் அங்கு வாழ்ந்த மக்கள் ஒரு நூற்றாண்டுக் காலம் வரை -செல்வாக்குடன் இருந்ததாக இயேசு சபை அருள் திரு ஆன் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். [Madure Tom // poet IV Pg. 115]

நாகை நகரிலும், மக்களின் உள்ளங்களிலும் அமைதி நிலவியதால், அவர்களது ஆன்மீக வாழ்வும் உயர்ந்திருந்தது. 'இந்தியாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் சரிதை' என்னும் நூலில், "1534-ஆம் ஆண்டில் அகுஸ்தீன் சபைக் குருக்களும் பணிபுரியும் பொருட்டு நாகப்பட்டினம்'' வந்ததாக அருள் திரு ம. டீசா குறிப்பிட்டுள்ளார். புனித சவேரியார், இந்தியாவில் ஏறத்தாழ 10 ஆண்டுகள் மறைப்பணியாற்றி மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தவர். 

1545-ஆம் ஆண்டு அவர் நாகப்பட்டினம் வந்தார். அப்போது இயேசு சபை அருள் திரு பீரிஸ் அங்கு ஊக்கத்துடன் உழைத்து வந்தார். புனித சவேரியார் அங்கிருந்து மைலாப்பூர் சென்றார். அங்கு புனித தோமையாரின் கல்லறையருகில் மனமுருக மன்றாடினார். வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் பங்கைச் சார்ந்ததாய் இருந்ததால், அங்கும் இச்சபைகளின் மறைப் பணியாளர்கள் தங்களது உழைப்பை நல்கினர்,