இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நீ செய்த பாவத்தை வெளிப்படுத்தத் தொடங்கினாலே போதும், உன் வீணான குழப்பம், பயம் எல்லாம் கண நேரத்தில் மறைந்துபோகும்

ஐயோ, என் தேவனே, எத்தனை ஆத்துமங்கள் சபிக்கப்பட்ட ஒரு போலியான வெட்கத்தின் காரணமாக, இன்று நித்திய நரகத்தின் அடியாழங்களுக்குள் என்றென்றைக்குமாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறார்கள்! சில கிறீஸ்தவர்கள் முகத்தாட்கணியத்தின் காரணமாகவும், மற்றவர்களின் மதிப்பை இழந்து விடும் அச்சத்தாலும் பல மாதங்களாகவும், பல ஆண்டுகளாகவும் தொடர்ந்து தேவத் துரோகமான முறையில் பாவசங்கீர்த்தனம் செய்து, திவ்ய நன்மை உட்கொண்டு வருகிறார்கள். பாதணிகள் அணியாத கார்மெல் சபையினரின் காலப் பதிவேடுகளில், பெரும் புண்ணியவதியாயிருந்த ஓர் இளம் பெண்ணைப் பற்றி எழுதி யிருக்கிறது. இவள் கற்புக்கு எதிரான ஒரு பாவத்திற்கு மனம் பொருந்தி சம்மதித்தாள்; அதன்பின் மூன்று முறை பாவசங்கீர்த்தனத்தில் இந்தப் பாவத்தை ஒளித்து, திவ்ய நன்மை வாங்கினாள். மூன்றாம் முறை நன்மை வாங்கிய பின் திடீரென அவள் கீழே விழுந்து இறந்துபோனாள். அவள் ஓர் அர்ச்சியசிஷ்டவளாகக் கருதப்பட்டதால் அவளது உடல் சேசு சபையினரின் ஆலயத்தின் ஒரு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அடக்கச் சடங்குகள் முடிந்து, கோவில் மூடப்பட்ட பிறகு, இரு தேவதூதர்கள் அவளது பாவசங்கீர்த்தன குருவுக்குத் தோன்றி, அவரை அந்தப் பெண் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து வந்தனர். இதோ, அவள் கல்லறையிலிருந்து வெளியே வந்து, முழந்தாளில் விழுந்து, ஆயத்தம் செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு நற்கருணைப் பாத்திரத்தினுள் மூன்று திவ்ய அப்பங்களைத் தன் வாயினின்று துப்பினாள். அவை தேவத் துரோகமான முறையில் அவள் உட்கொண்டிருந்த தேவ நற்கருணை அப்பங்கள்தான். புதுமையான முறையில் அவை அவளுடைய நெஞ்சினுள் பாதுகாக்கப் பட்டிருந்தன. தேவதூதர்கள் அவளை மூடியிருந்த போர்வையை அகற்றியபோது, அந்தப் பரிதாபத்திற்குரிய பெண் அதே கணத்தில் கடும் அச்சம் தரும் தோற்றத்திற்கு மாறினாள். உடனே அங்கு தோன்றிய பசாசுக்களால் அவள் இழுத்துச் செல்லவும்பட்டாள்.

ஆனால் ஒரு கிறீஸ்தவன், ஒரு குருவிடம் தான் செய்யும் பாவசங்கீர்த்தனத்தில், தான் செய்த ஒரு குறிப்பிட்ட பாவத்தை வெளிப்படுத்துவதால் உண்டாகும் அற்பமான, கண நேர வெட்கத்தையும், அவமான உணர்வையும் தவிர்ப்பதற்காக, அதைப் பாவசங்கீர்த்தனத்தில் மறைப்பதற்குக் கடவுளுக்கு முன்பாக ஒரு சாக்குப்போக்கை எப்படி கண்டுபிடித்துச் சொல்ல முடியும்? இவ்வாறு அவன் எப்படி தேவ மகத்துவத்திற்கு எதிராக ஒரு கனமான பாவம் கட்டிக் கொண்டு, அதைப் பாவசங்கீர்த்தனத்தில் மறைப்பதன் மூலம் ஒரு தேவத் துரோகத்தையும் செய்து, நித்திய நரகத்தின் நித்திய வெட்கத்திற்கும் அவமானத்திற்கும் உட்பட எப்படி மனம் துணிய முடியும்? தான் கடவுளால் மன்னிக்கப்படவும் தனக்குத் தகுதியுள்ள நரகத்திலிருந்து தான் விடுவிக்கப்படவும் அவன் விரும்பினால், தன் பாவத்தை சங்கீர்த்தனம் செய்வதால் அவனுக்கு உண்டாகும் வெட்கம் தேவ மன்னிப்பைப் பெற அவனைத் தகுதியுள்ளவனாக்குகிறது. தன் பாவத்தால் கடவுளை நிந்தித்த ஒருவன் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வதும், அந்த வெட்கத்திற்குத் தன்னை உள்ளாக்கிக் கொள்வதும் நியாயமானதே. பாவியாகிய அடிலெய்ட் என்பவள் பசாசுக்கு ஓர் அழகிய பதிலைத் தந்தாள். வாழ்க்கை மாற்றத்திற்குக் கடவுளால் அழைக்கப்பட்ட அவள் மனந்திரும்பி, உடனடியாக ஒரு நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யப் பிரதிக்கினை செய்தாள்; அவள் தன் பாவங்கள் அனைத்தையும் சங்கீர்த்தனம் செய்வதில் எதிர் கொள்ள வேண்டி யிருந்த அவமான உணர்வைப் பசாசு அவளது கண்களுக்கு முன்பாக வைத்து, ""அடிலெய்ட், எங்கே போகிறாய்?'' என்று கேட்டது. அவள் தைரியமாக, ""அசுத்த மிருகமே, நான் எங்கே போகிறேன் என்றா கேட்கிறாய்? என்னை நானே வெட்கத்திற்கு உள்ளாக்கிக் கொள்வதன் மூலம் உன்னை நான் வெட்கத்திற்கு உள்ளாக்கப் போய்க் கொண்டிருக்கிறேன்'' என்று பதிலளித்தாள்.

இந்தப் போலியான அவமான உணர்வால் மட்டுமின்றி, பல மாயத் தோற்றங்களாலும் வீண் பயங்களாலும் பாவிகளின் மனதை நிரப்பப் பசாசு பாடுபடுகிறது. இப்படிப்பட்ட ஒரு பாவி: என் பாவசங்கீர்த்தன குருவிடம் இந்தப் பாவத்தை நான் சொன்னால், அவன் என்னைக் கடுமையாகக் கடிந்து கொள்வார் என்று சொல்கிறான். அவர் ஏன் உன்னைக் கடிந்து கொள்ள வேண்டும்? எனக்குப் பதில் சொல்: நீ ஒரு பாவசங்கீர்த்தன குருவாக இருந்தால், வீழ்ச்சியுற்ற தன் நிலையிலிருந்து எழுப்பப்படும் நம்பிக்கையில் உன்னிடம் தன் நிர்ப்பாக்கியங்களை வெளிப்படுத்த முன்வரும் ஒரு பரிதாபத்திற்குரிய பாவியிடம் நீ கடுமையாகப் பேசுவாயா? அப்படியிருக்க, தமது பதவியின் காரணமாக, பச்சாத்தாபமாகிய நீதிமன்றத்திடம் வருபவர்களுக்குப் பிறர்சிநேகம் காண்பிக்க கடமைப்பட்டுள்ள ஒரு பாவசங்கீர்த்தன குரு, பாவசங்கீர்த்தனத்தில் உன்னை முரட்டுத்தனமாகவும், கடுமையோடும் கடிந்துகொள்வார் என்றுநீ எப்படி கற்பனை செய்ய முடியும்?

மற்றொருவன் இப்படிச் சொல்கிறான்:ஆனால் அவர் குறைந்த பட்சம் என் பாவத்தைக் கேட்டு அதிர்ச்சியாவது அடைவார், அதனால் அவர் என்னை வெறுக்கத் தொடங்குவார் என்று! முற்றிலும் தவறு! பாவத்தை வெளிப்படுத்துவது தனக்கு வருவிக்கும் அவமானத்தையும் பொருட்படுத்தாது, நல்ல மனநிலையோடு ஒரு பாவி தம்மிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய வருவதைக் கண்டு அவர் பெருமிதம் கொள்வார். மேலும் இதே விதமான, அல்லது இவற்றை விட அதிக கனமான பாவங்களை மற்ற பாவிகளிடமிருந்து அவர் கேட்டிருக்க மாட்டாரா? ஓ, நீதான் உலகத்தில் உள்ள ஒரே ஒரு பாவி என்று எண்ணிக் கொள்ளாதே! தம்மிடம் தங்கள் பாவங்களை வெளிப்படுத்துவோரை அவர் வெறுக்கத் தொடங்குவார் என்பதும் உண்மையல்ல. அதற்கு மாறாக அவர் அவர்களை இன்னும் அதிகமாக மதிக்கத் தொடங்குவார், தம்மில் அவர்கள் வைத்துள்ளதும், தம்மிடம் தங்கள் நிர்ப்பாக்கியங்களை அவர்கள் வெளிப்படுத்தச் செய்வதுமான நம்பிக்கையை அவர் காணும்போது, அவர்களுக்கு உதவுவதற்காக இன்னும் அதிகமான பக்தியார்வத்தோடு அவர் உழைப்பார்.

அந்தோ, இன்னும் சில பாவிகள் என்ன சொல்கிறார்கள்? நான் பாவசங்கீர்த்தனம் செய்வேன், ஆனால் வேறு ஒரு பாவசங்கீர்த்தன குரு வரும் வரை தாமதிப்பேன் என்கிறார்கள். இவர்கள் வெட்கத்தைத் தவிர்ப்பதற்காக, இடைப்பட்ட காலத்தில் கடவுளுக்குப் பகைவர்களாக வாழ்வார்களா, அதன் மூலம் என்றென்றும் இழக்கப்படும் ஆபத்துக்கு உட்படத் தயாராக இருக்கிறார்களா? ஆத்துமத்தைக் குத்திக் கிழித்துப் புண்ணாக்கி, அல்லும் பகலும் அவர்கள் எந்த சமாதானத்தையும் அனுபவிக்க முடியாமல் செய்து விடும் மன உறுத்தலால் உருவாக்கப்படும் நரகத்திலும், அதன்பின் நித்திய நரகத்திலும் வாழ அவர்கள் விரும்புகிறார்களா? அவர்கள் பாவத்தில் நிலைத்திருக்கப் போகிறார்களா, அல்லது தாங்கள் கட்டிக்கொண்டுள்ள பாவங்களோடு இன்னும் பல தேவத் துரோகப் பாவங்களைச் சேர்க்கப் போகிறார்களா? தேவத் துரோகம் பயங்கமான பாவம் என்பது அவர்களுக்குத் தெரியாதா? பச்சாத்தாபமாகிய தேவத் திரவிய அனுமானத்தில், சேசுநாதர் தமது திரு இரத்தத்தால் அவர்களுக்காக ஆயத்தம் செய்திருக்கிற நித்திய ஜீவியத்திற்குரிய தெய்வீக மருந்தை அவர்கள் நித்திய மரணத்திற்குரிய விஷமாக மாற்றிக் கொள்வார்களா? பிற்பாடு நாங்கள் பாவசங்கீர்த்தனம் செய்து கொள்வோம் என்கிறார்கள். ஆனால் இன்று திடீர் மரணங்கள் வெகுவாக அதிகரித்திருக்கிற இந்தக் காலத்தில், இவர்கள் ஒரு திடீர் மரணத்தைச் சந்திக்க நேரிட்டால், இவர்களுடைய நித்திய கதி என்ன?

ஆகவே உன் மனதில் பசாசு மிகப் பெரிதாக்கிக் காட்டுகிற இந்த அவமான உணர்வுக்கு எதிராக நீ தைரியம் கொண்டு, அதன் மீது வெற்றி பெற வேண்டும். நீ செய்த பாவத்தை வெளிப்படுத்தத் தொடங்கினாலே போதும், உன் வீணான குழப்பம், பயம் எல்லாம் கண நேரத்தில் மறைந்துபோகும். நீ உலகம் முழுவதற்கும் அரசனாக முடிசூட்டப்பட்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்வாயோ, அதை விட அதிகமாக, உன் பாவங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி விட்டதற்காக நீ மகிழ்ச்சி கொள்வாய். மகா பரிசுத்த கன்னிகைக்கு உன்னை ஒப்புக்கொடு. இந்த வெட்கம் மற்றும் அவமான உணர்வு முழுவதையும் மேற்கொள்ள அவர்கள் உனக்கு பலத்தைப் பெற்றுத் தருவார்கள். உன் பாவங்களை நேரடியாக குருவிடம் வெளிப்படுத்த உனக்கு தைரியம் இல்லை என்றால், அவரிடம்: ""சுவாமி, எனக்கு உதவி செய்யுங்கள், ஏனெனில் எனக்கு உதவி தேவைப்படுகிறது; ஒரு குறிப்பிட்ட பாவத்தை நான் செய்து விட்டேன், ஆனால் அதை வெளிப்படுத்த என்னால் முடியவில்லை'' என்று சொல். அப்போது, அவர் உன்னை விழுங்கும் காட்டு மிருகத்தின் குகையிலிருந்து அதை வெளியே இழுப்பதற்கான எளிதான வழி ஒன்றைப் பயன்படுத்துவார். அவருடைய கேள்விகளுக்கு ""ஆம்'' அல்லது ""இல்லை'' என்று பதில் சொல்வது உனக்குப் போதுமானதாக இருக்கும். ஒருவன் தன் பாவத்தை வார்த்தைகளில் சொல்ல மனமின்றி இருந்தால், அவன் அதை ஒரு காகிதத்தில் எழுதி குருவிடம் அதைக் காட்டி, ""நீர் வாசிக்கும் இந்தப் பாவத்தை நான் செய்தேன்'' என்று சொல்லலாம். அதன்பின் இதோ பார்! நித்திய நரகமும், அநித்திய நரகமும் மறைந்து போயின. கடவுளின் வரப்பிரசாதத்தையும், அதனோடு மனச்சான்றின் சமாதானத்தையும் அவன் மீண்டும் பெற்றுக்கொண்டான். வெட்கத்தை மேற்கொள்ள ஒருவன் எந்த அளவுக்குத் தன்னைத் தானே வலுவந்தம் செய்கிறானோ, அந்த அளவுக்கு அதிக வாஞ்சையோடு கடவுள் அவனை அரவணைத்துக் கொள்வார். சிறியவரான சுவாமி பவுல் செஞ்ஞேரி ஒரு பெண்ணைப் பற்றி விவரிக்கிறார். இவள் தன் குழந்தைப் பருவத்தில் செய்த சில பாவங்களை சங்கீர்த்தனம் செய்ய எவ்வளவு பெரிய முயற்சி எடுத்தாள் என்றால், தன் ஆன்ம குருவிடம் அவற்றை வெளிப்படுத்தியபோது, அவள் வெட்கத்தால் மயக்கமடைந்தாள். ஆனால் அவள் தனக்குத்தானே செய்துகொண்ட பலவந்தத்திற்குப் பிரதிபலனாக ஆண்டவர் எத்தகைய பக்தியார்வம் உள்ள உத்தம மனஸ்தாபத்தை அவளுக்குத் தந்தார் என்றால், அன்று முதல் அவள் உத்தமதனத்தில் வளரத் தொடங்கினாள். கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்டாள், இறுதியில் ஓர் அர்ச்சியசிஷ்டவளாக மதிக்கப்பட்ட பாக்கியமான மரணமடைந்தாள்.