வரலாறு பேசுகிறது!

கிறீஸ்தவ மக்களினங்கள் அனைத்தும், எல்லாக் காலங்களிலும் பாவசங்கீர்த்தனம் கிறீஸ்துநாதராலேயே ஏற்படுத்தப்பட்டது என்று உறுதியாக ஏற்று, நம்பி வந்துள்ளன.

இந்த நம்பிக்கை மிகவும் ஆணித்தரமான தாகவும், அசைக்கப்பட முடியாததாகவும் இருந்தது. திருச்சபையின் வரலாற்றின் ஏதாவது ஒரு கால கட்டத்தில் பதிதர்கள் ஏதாவது ஒரு சத்தியத்தை மறுதலித்துத் தப்பறை யைப் பரப்பிய போது, திருச்சபையானது அதை மறுத்து எண்ணற்ற வேத சத்தியப் பிரகடனங்களை அல்லது மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் விளக்கங்கள், வரையறைகளை வெளியிட்டது.

இதன் மூலம் அது தப்பறைகளை விலக்கி, விசுவாச சத்தியங்களைப் பாது காத்தது. ஆனால் பாவசங்கீர்த்தனம் தொடர்பான ஒரு பிரகடனத்தையோ, விளக்கத்தையோ, வரையறையையோ தர வேண்டிய கட்டாயம் அதற்கு ஒருபோதும் ஏற்படவேயில்லை.

திருச்சபையால் இன்னும் வரையறுக்கப்பட்டு, பிரகடனம் செய்யப்படாத சத்தியங்களைப் பற்றிப் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வேதசாஸ்திரிகள் மிக தாராளமாக விவாதிப்பது திருச்சபையின் வரலாற்றில் மிக அடிக்கடி நிகழ்ந்துள்ளது.

அதன்பின் மிகச் சரியான நேரத்தில் திருச்சபை தலையிடும், அந்தக் குறிப்பிட்ட சத்தியத்தைத் தெளிவான வார்த்தைகளில் வரையறுத்து, அதை விசுவாசசத்தியமாகப் பிரகடனப்படுத்தும். அத்துடன், ''உரோமை பேசிவிட்டது, காரியம் முடிந்துவிட்டது'' (Roma locuta est; causa finita est.) என்ற அர்ச். அகுஸ்தீனாரின் வார்த்தைகளுக்கேற்ப, அந்த சத்தியத்தைப் பற்றிய எல்லா விவாதங்களும் நின்றுபோகும்.

ஆனால் பாவசங்கீர்த்தனத்தைப் பொறுத்த வரை, வேத சாஸ்திரிகளின் கருத்து எப்போதுமே ஏகமனதாகத்தான் இருந்து வந்துள்ளது. திருச்சபையின் தவறாவரமுள்ள அதிகாரம் அதில் தலையிட வேண்டிய அவசியம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை.