சீரேனே சீமோனாக சேசுவும் வெரோணிக்கம்மாளாக மாமரியும்!

 செப்டம்பர் 1, 1943

சேசு கூறுகிறார்:

என் திருப்பாடுகளின் துயரமான மணித்தியாலங்களில் எனக்கு உதவி தேவையாயிருந்தது என்பதை நான் நினைவுகூர்கிறேன். என்னைப் போல் இருப்பவர்கள் நான் எனக்கென ஆசைப்பட்டதைத் தாங்களும் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் என்னைப் போல் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் சீடர்கள்; அவர்கள் என்னைப் போல் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் கடுந்துன்பங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், சிலுவையில் அறையப்படுகிறார்கள்.

நீ தனியாக இல்லை. நீ சீரேனேயனாக என்னையும், வெரோணிக்கம்மாளாக என் தாயாரையும் கொண்டிருக்கிறாய். மாமரி அநாதைகளுக்கு மாதிரிகையாக இருக்கிறார்கள். நான் என் மரண அவஸ்தையில் என் வாதைகளை நினைவுகூர்வது போலவே, அவர்களும் தான் ஒரு அநாதையாக இருந்ததில் அனுபவித்த வாதைகளை நினைவுகூர்கிறார்கள்.

பரிசுத்ததனம் வேதனையை நீக்கி விடுவதில்லை. மாமரி, தன் அமல உற்பவப் பரிசுத்ததனத்தில், தன் பெற்றோரின் மரணத்தின் காரணமாக கடுமையாகத் துன்பப்பட்டார்கள். தன் முத்தங்களைக் கொண்டு தன் பெற்றோருக்கு ஆறுதல் தர அவர்களால் இயலவில்லை. நீ அவர்களுக்கு எப்படி ஒப்பானவளாக இருக்கிறாய் என்பதைப் பார்க்கிறாயா? மாமரி, மிகவும் உத்தமமானதாகவும், கடவுளுக்கு மட்டுமே தாழ்ந்ததாகவும் இருந்த தனது பரிசுத்த தனத்தில், வேறு யாரையும் விட அதிகமாக நேசிக்கவும், துன்புறவும் கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில், பரிசுத்ததனமானது, இருதயத்தின் அனைத்து நல்ல உணர்வுகளையும் உத்தமமான நிலைக்கு உயர்த்தும்படி, அதிகமாக நேசிக்கவும் துன்பப்படவும் கூடியதாக இருக்கிறது - ஆன்மா எவ்வளவுக்கு அதிக பரிசுத்தமுள்ள தாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அதன் நேசம் மற்றும் துன்புறுதலின் திறன் அதிகரிக்கப்படுகிறது.

ஆகவே, எந்த வேதனையிலிருந்தும் பாதுகாக்கப்படாதவர் களாயிருந்த இந்த ஸ்திரீ, வேதனைப் புலம்பலுக்குரிய மிக அதிகமான இழப்புகளின் காரணமாக, ஏராளமாகக் கண்ணீர் சிந்திய வர்களும், மரணத்தின் மூலம் தன் தந்தையும், தாயும், கணவரும், தன் திருக்குமாரனும் தன்னிடமிருந்து பிடுங்கியெடுத்துக் கொள்ளப்படு வதைக் கண்டவர்களுமான இந்த ஸ்திரீதான் உனக்கு நான் தருகிற வெரோணிக்கம்மாளாக இருக்கிறார்கள், ஒரு தாயாக நான் உனக்கு அவர்களைத் தருகிறேன். அவர்களைப் போல வேதனையிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் வேறு யாருமில்லை, ஏனெனில் அவர்கள் மாசற்றவர்களாக இருந்தார்கள், இதன் காரணமாக, ஆதாமின் பாவத்தால் விளைவிக்கப்பட்ட வேதனையின் பாரத்திலிருந்து அவர்கள் விடுபட்டிருக்க வேண்டிய வர்களாக இருந்தார்கள்.

இது மாமரியின் குத்தித் துளைக்கப்பட்ட இருதயத்தின் மாதமும், என் திருச்சிலுவை உயர்த்தப்பட்ட மாதமுமாக (செப்டம்பர்) இருக்கிறது. நீ குத்தித் துளைக்கப்பட்ட ஸ்திரீயைப் போலவும், மாசற்ற மனிதராகிய சேசுவைப் போலவும் இருக்க மறுக்காதே.''


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...