மனிதாவதாரமும், மரணமும், திவ்விய நற்கருணையும்!

70. இறுதியாக, மனிதனை இன்னும் அதிகம் நெருங்கி வந்து, தமது அன்பைப் பற்றிய இன்னும் அதிக உறுதியான சாட்சியத்தை அவர்களுக்குத் தரும்படியாக, நித்திய ஞானமானவர் மனித னாகும் அளவுக்கும், ஒரு சிறு குழந்தையாகும் அளவுக்கும், தரித்திரத்தை அரவணைத்துக் கொள்ளும் அளவுக்கும், அவர் களுக்காக ஒரு சிலுவையில் மரிக்கும் அளவுக்கும் தம்மைத் தாழ்த்திக் கொள்கிறார்.

அவர் இந்தப் பூலோகத்தில் இருந்த போது. "என்னிடம் வாருங்கள், நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள், பயப்படாதீர்கள். இது நான்தான். ஏன் பயப்படுகிறீர்கள். நான் உங்களைப் போன்றவன்தான்; நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் பாவிகள் என்பதால் அஞ்சு கிறீர்களா? ஆனால் இவர்களைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் பாவிகளின் நண்பன். உங்கள் சொந்தக் பாவத்தின் காரணமாக நீங்கள் ஆட்டுப்பட்டியை விட்டு வழிதவறிச்சென்று விட்டீர்கள், சேற்றில் அமிழ்ந்தியிருக்கிறீர்கள், முற்றிலுமாக மனச்சோர்வடைந் திருக்கிறீர்கள் என்றால், இந்தக் காரணத்தினாலேயே நீங்கள் என்னிடம் வர வேண்டும், ஏனெனில் நான் உங்கள் சுமைகளி லிருந்து உங்களை விடுவித்து, உங்களைப் பரிசுத்தப்படுத்தி, உங்களுக்கு ஆறுதல் தருவேன்" என்று எத்தனை முறை அவர் தங்களைக் கெஞ்சுவதை மனிதர்கள் கேட்டிருக்கிறார்கள்! 

71. ஒருபுறம், நித்திய ஞானமானவர் மனிதனை இரட்சிப்பதற் காக, அவனுடைய இடத்தில் தாம் மரிப்பதன் மூலம், அவன் மீது தமக்குள்ள அன்பை எண்பிக்க விரும்பினார் என்றாலும், மறு புறத்தில், அவனை விட்டு விலகிச் செல்லும் எண்ணத்தை அவரால் தாங்க முடியவில்லை . ஆகவே ஒரே சமயத்தில் மரிக்கவும், உயிர் வாழவும், உலகம் முடியும் வரை மனிதனோடு தங்கி வாழவும் ஓர் அதியற்புதமான வழியை அவர் கண்டுபிடித் தார். ஆகவே, தமது அன்பைப் பூரணமாகத் திருப்திப்படுத்தும் படியாக அவர் தேவ நற்கருணையாகிய திருவருட்சாதனத்தை ஏற்படுத்தி, இயற்கையையே மாற்றும் அளவுக்கும் சென்றார்.

மின்னித் துலங்கும் ஒரு வைரத்தின் கீழோ, அல்லது ஏதாவது ஒரு விலையுயர்ந்த மணிக்கல்லின் கீழோ அவர்தம்மை மறைத்துக் கொள்ளவில்லை, ஏனெனில் வெறும் வெளித் தோற்றத்தில் மட்டும் மனிதனோடு தங்கியிருப்பதை அவர் விரும்பவில்லை. மாறாக, அவர் ஒரு சிறு அப்பத்துண்டின் - மனிதனின் வழக்கமான உணவின் - தோற்றத்திற்குள் தம்மை மறைத்துக் கொள்கிறார். இவ்வாறு, தாம் உட்கொள்ளப்படும் போது, மனிதனுடைய இருதயத்திற்குள் பிரவேசித்து, அங்கே தமது இன்பத்தைக் காண்பதை சாத்தியமாக்குகிறார். 

ஆர்தெந்ததெர் அமாந்தஸியும் ஹோக் எஸ்த் - நேச ஆர்வமுள்ளவர்கள் இப்படித்தான் செயல்படுகிறார்கள். 

''ஓ நித்திய ஞானமானவரே, மனிதனோடு இருக்கும் தம் ஆசையில் மெய்யாகவே தம்மைத் தாராளமாக மனிதனுக்குத் தரும் மெய்யங்கடவுளே!" என்று ஒரு புனிதர் கூறுகிறார்.