இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறுதிக்கால யுகம் - நூலைப் படிக்குமுன்...

“இறுதிக்கால யுகம்” என்ற இந்நூலை ஆரம்பிக்குமுன் இந்நூலுக்கு உயிர்நாடி போல் விளங்கும் பாத்திமா காட்சிகளைப் பற்றி சுருக்கமாக விளக்குவோம். “நானே ஜெபமாலை மாதா” என்றும், மனிதர்கள் உலகச் சார்பு உடையவர்களாயிராமல் தங்களைப் படைத்த அன்புக் கடவுளை நினைப்பவர்களாய் மாற வேண்டும் என்றும் பாவிகள் நரகில் விழாதபடி அவர்களுக்காக ஜெபமும்--சிறப்பாக ஜெபமாலையும் ஜெபித்து, பரித்தியாகங்களும் செய்ய வேண்டும் என்றும் இதுவே பரலோக சமாதானத் திட்டம், இது தவறினால் கம்யூனிஸ்ட் ரஷ்யா உலகில் தன் தவறான கொள்கைகளைப் பரப்பி பல யுத்தங்களும் ஆன்ம சரீர சேதங்களும் ஏற்படும் என்றும் நம் தேவ அன்னை பாத்திமா நகரில் வேண்டுகோள் விடுத்தார்கள். தீர்க்கதரிசனமாக பல உண்மைகளை உரைத்தார்கள். அவற்றில் பல ஏற்கெனவே அணுப் பிசகாமல் நிறை வேறியுள்ளன. இறுதியில் தன் மாசற்ற இருதயமே வெற்றி பெறும் என்றும், நாம் அவர்களுடைய நேசப் பிள்ளைகள், அம்மாசற்ற இருதயத்தை நேசித்து, மனிதருடைய பாவங்களால் நொந்து போயிருக்கும் அவ்விருதயத்துக்கு நிந்தைப் பரிகாரம் செய்வதன் மூலம் சேசுவின் நேச இருதயத்துக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

தேவதாயின் இச்செய்திகளை நல்மனமுள்ள யாவரும் ஏற்கக் கூடிய நல்ல முறையில் ராபர்ட் பெர்கின் என்பவர் வீஜுஷ்வி புஸ்ரீலிஉழியிதீஸ்ரீமிஷ்உ புஆe என்ற உலகெங்கும் பிரசித்தி பெற்றுள்ள தம் நூலில் எழுதியுள்ளார். மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு ஒவ்வொரு கிறீஸ்தவனும் தன்னையும் தன்னை சார்ந்த யாவற்றையும் அன்புடன் ஒப்புக்கொடுத்து விட்டு, தாயின் மடியில் பிள்ளை கவலையற்றிருப்பது போல நம் தேவ அன்னையின் மடியில் நிம்மதியாய் இவ்வுலக வாழ்வை நடத்தி, முடிவில் அவர்களுடைய திருக்குமாரனின் அரசில் நித்திய காலமும் வாழ வழி கூறும் இந்நூல், கிறீஸ்தவர்களும், கிறீஸ்தவர் அல்லாதாரும் அவசியம் படித்து நடைமுறையாக்க வேண்டிய காலத்துக்குரிய கருத்துச் செறிந்த அரிய திரவியமாகும்.

இந்நூலின் முழுக் கருத்தையும் புரிந்து கொள்வதற்கு பாத்திமா காட்சிகளைப் பற்றி ஓரளவேனும் அறிந்திருப்பது அவசியமாதலால், அக்காட்சிகளைப் பற்றிச் சுருக்கமாக இங்கே கூறுவோம்.

பாத்திமா காட்சிகளுக்கு ஆயத்தம்

போர்த்துக்கல் நாட்டில் பாத்திமா என்னும் சிற்றூர் இருக் கின்றது. அங்கு கோவா தா ஈரியா என்ற மலைச்சாரல் உள்ளது. லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா என்ற மூன்று சிறுவர்களுக்கும் 1917-ம் ஆண்டு மாதா காட்சி அருளுமுன் கடவுள் தம் தூதனை அனுப்பி அக்குழந்தைகளை அதற்குத் தயாரித்து வந்தார். இத்தயாரிப்பு 1915-ம் ஆண்டு முதலே ஆரம்பமாயிற்று.

அவ்வாண்டில் லூஸியா மற்ற சில தன் வயதுச் சிறுமியருடன் கபேசோ என்ற ஓர் இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கையில் ஒரு சிறுமி, “அதோ, கிழக்கிலிருந்து ஏதோ ஓர் வெண் உருவம் போல் தோன்றி வருகிறதே” என்று அறிவித்தாள். அவ்வுருவம் வந்து ஆகாயத்தில் சற்று தங்கி நின்றது. “வெண் பனியால் செய்யப்பட்ட உருவம்போல் அது இருந்தது. சூரிய ஒளி அதை ஊடுருவிச் சென்றது போலிருந்தது” என்று லூஸியா அதை விவரித்தாள். ஏறக்குறைய ஒரு மனித உருவமாக அது காணப்பட்டது. அச்சிறுமிகள் அந்நேரம் (அவர்கள் வழக்கப்படி) ஜெபமாலை செய்து கொண்டிருந்தார்கள். ஜெபமாலை முடியவும் அவ்வுருவம் கரைந்து மறைந்து போயிற்று.

லூஸியா இதுபற்றி எதுவும் யாரிடமும் கூறவில்லை. ஆனால் மற்றச் சிறுமிகள் கூறிவிட்டார்கள். லூஸியாவின் தாய் மரிய ரோஸா இதுபற்றிக் கேட்டபோது, “அம்மா, ஏதோ ஒரு ஆள் போர்வை போர்த்தியது போல் அவ்வுருவம் இருந்தது” என்று கூறினாள்.

“சீ! புத்தி கெட்ட சிறுமிகள் எதையோ பார்த்து விட்டு என்னத்தையோ உளறுகிறீர்கள்” என்று மரிய ரோஸா அதைப் பற்றி அலட்சியமாகப் பேசி முடித்து விட்டாள்.

இக்காட்சி மீண்டும் இருமுறை நிகழ்ந்தது. ஆனால் முதலில் கண்டதையே தன் தாய் அலட்சியப்படுத்தி விட்டதால் லூஸியா அவை பற்றி எதையுமே கூற விரும்பவில்லை. கூறவுமில்லை.

1916-ம் ஆண்டில், 9 வயதுச் சிறுமி லூஸியா, 8 வயதுச் சிறுவன் பிரான்சிஸ், 6 வயதுச் சிறுமி ஜஸிந்தா இம்மூவரும் வழக்கம்போல் ஆடு மேய்த்துக் கொண்டும், கீழேயுள்ள ஆழமான பள்ளத்தாக்கில் கற்களை வீசி எறிந்து விளையாடிக்கொண்டும் இருந்தார்கள். திடீரென எங்கிருந்தோ பலத்த காற்றடித்தது. அங்கு நின்ற உயர்ந்த மரங்களுக்கும் மேலே ஒரு ஆண்டிற்கு முன் லூஸியா மூன்று முறை கண்ட அதே வெண் உருவம் தோன்றி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது இப்போது அதிக ஒளியுடையதாகவும், 15 அல்லது 16 வயதுடைய இளைஞனின் தோற்றமாகவும் சொல்ல முடியாத தெய்வீக அழகுடனும் காணப் பட்டது. அவ்விளைஞனின் உருவத்தைப் பார்த்துக் கொண்டே மூவரும் நின்றார்கள். அந்த வானதூதன் பேசினார்: “பயப்படாதீர்கள், நான் சமாதானத் தூதன், என்னோடு சேர்ந்து ஜெபியுங்கள்” என்று கூறிவிட்டு தரையில் முழந்தாட்படியிட்டு, தலை தரையில் படும்வரை பணிந்தவாறு,

“என் தேவனே, உம்மை விசுவசிக்கிறேன்; உம்மை ஆராதிக்கிறேன்; உம்மை நம்புகிறேன்; உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதியாதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர் களுக்காகவும் உமது மன்னிப்பைக் கேட்கிறேன்” 

என்று மும்முறை கூறி ஜெபித்தார். அம்மூன்று குழந்தைகளும் தூதனுடன் சேர்ந்து அவ்வாறே செய்தார்கள்.

“நீங்கள் இவ்வாறு ஜெபியுங்கள். நீங்கள் மன்றாடும் குரலை சேசு மரியாயின் இருதயங்கள் செவியுற்றுக் கேட்கிறார்கள்” என்று கூறி தூதன் மறைந்தார். வெகு நேரம் வரை இம்மூவரும் அதே ஜெபத்தை சாஷ்டாங்கமாக விழுந்த நிலையிலேயே சொல்லிச் சொல்லிக் களைத்துப் போனார்கள்.

இதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு, இச்சிறுவர்கள் முன்பு போல் விளையாடிக் கொண்டிருக்கையில் அதே சம்மனசானவர் தோன்றி: “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஜெபியுங்கள். அதிகமதிகமாக செபஞ் செய்யுங்கள். ஜெபங்களையும், ஒறுத்தல் முயற்சி களையும் உந்நதருக்கு ஒப்புக்கொடுங்கள்” என்றார்.

“ஒறுத்தல் முயற்சிகளை நாங்கள் எப்படிச் செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் லூஸியா.

“பாவிகளுக்காக உங்கள் முழு வலிமையோடு பரித்தியாகம் செய்து பாவிகள் மனந்திரும்பும்படியாக ஒப்புக்கொடுங்கள். பாவி களுக்காக மன்றாடி உங்கள் நாட்டிற்கு சமாதானம் பெற்றுக் கொடுங்கள். போர்த்துக்கல் நாட்டின் தூதன் நான். ஆண்டவர் உங்களுக்கு அனுப்பும் துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக் கொள்ளுங்கள்”என்று கூறி தூதன் மறைந்து விட்டார்.

இவ்விரு காட்சிகளுக்குப் பின் அக்குழந்தைகளின் பேச்சு குறைந்து போயிற்று. இப்பரலோகக் காட்சிகள் அவர்களுடைய உடல் வலுவையும் குறைத்து விட்டன.

ஏறக்குறைய செப்டம்பர் மாதம் 1916-ம் ஆண்டில் இக்குழந் தைகள் மூவரும் தங்கள் ஜெபமாலையை வழக்கம் போல் ஜெபித்த பின் முதற்காட்சியில் சம்மனசு கற்பித்த ஜெபத்தை ஜெபிக்கத் துவக்கி னார்கள். “என் தேவனே, உம்மை விசுவசிக்கிறேன்; உம்மை ஆராதிக் கிறேன்; உம்மை நம்புகிறேன்; உம்மை நேசிக்கிறேன்; உம்மை விசுவசியாதவர்களுக்காகவும், உம்மை ஆராதியாதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை நேசியாதவர்களுக்காகவும் உமது மன்னிப்பைக் கேட்கிறேன்” --இச்செபத்தைச் சில தடவைகள் ஜெபித்து முடியுமுன், அதே தேவதூதன் ஒரு கையில் பூசைப் பாத்திரமும், மறு கையில் நற்கருணை அப்பத்தையும் ஏந்தியவாறு காட்சியளித்தார். பின் அப்பாத்திரத்தையும், நற்கருணை அப்பத் தையும் ஆகாயத்தில் அப்படியே விட்டு விட்டு கீழே வந்து தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, 

“மகா பரிசுத்த தமதிரித்துவமே, பிதாவே சுதனே இஸ்பிரீத்துசாந்துவே, உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகெங்கிலுமுள்ள தேவ நற்கருணைப் பேழைகளில் இருக்கும் சேசுகிறீஸ்துநாதருடைய திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத் தையும், தெய்வீகத்தையும் அவருக்கு எதிராகச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியத்துக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். சேசுவின் திரு இருதயத் தினுடையவும், மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து நிர்ப்பாக்கியப் பாவிகளை மனந்திருப்பும்படி உம்மை மன்றாடுகிறேன்” என்ற ஜெபத்தை அத்தூதன் மும்முறை ஜெபித்தார்.

பின்னர் எழுந்து எதிரிலிருந்த பாறையில் முழங்காலிருந்தபடி, பாத்திரத்தையும், திவ்விய நற்கருணை அப்பத்தையும் கையில் மீண்டும் ஏந்திக் கொண்டு, “சகிக்கக் கூடாத விதமாய் மனிதரால் அவசங்கைப் படுகிற சேசுகிறீஸ்துநாதரின் திருச்சரீரத்தையும் இரத்தத்தையும் அருந்தி பானஞ் செய்யுங்கள். இவர்களுடைய அக்கிரமங்களுக்குப் பரிகாரம் செய்து, உங்கள் கடவுளை ஆறுதல்படுத்துங்கள்” என்றார்.

திவ்விய அப்பத்திலிருந்து துளித்துளியாய் பாத்திரத்தினுள் இரத்தம் விழுவதை மூன்று சிறுவர்களும் கண்டனர். தூதன் லூஸியாவுக்கு திவ்விய நற்கருணை அப்பத்தையும், பிரான்சிஸுக்கும், ஜஸிந்தாவுக்கும் திரு இரத்தத்தையும் உண்ணக் கொடுத்தார். (பிரான்சிஸுக்கும், ஜஸிந்தாவுக்கும் அதுவே புதுநன்மையாயிருந்தது.) 

அதன்பின் தூதன் மீண்டும் தரையில் பணிந்து அதே ஜெபத்தை ஜெபித்தார். பின் மறைந்தார். மூன்று குழந்தைகளும் அதே ஜெபத்தை பல முறை ஜெபித்து களைத்துப் போனபின் எழுந்து ஆடுகளை ஓட்டிக் கொண்டு வீடு சேர்ந்தார்கள்.

மேற்கூறிய காட்சிகள் பின்வரும் தேவ அன்னையின் காட்சி களுக்கு முன்தயாரிப்பாக அமைந்தன.

பாத்திமாவில் தேவதாயின் காட்சிகள்

1917-ம் ஆண்டு. முதல் உலக மகாயுத்தம் பயங்கரமாக நடந்து கொண்டிருந்தது. இரத்தம் பெருகி ஓடியது. மரணம் எல்லா நாடு களிலும் புகுந்தது. ஏற்பட்ட அழிவுக்கோ அளவில்லை. 15-ம் ஆசீர் வாதப்பர் என்னும் பாப்பரசர், உலகத்திலுள்ள எல்லாச் சிறுவர் சிறுமியரும் தேவதாயிடம் சமாதானத்துக்காக மன்றாடும்படி கேட்டுக் கொண்டார். யுத்தக் கொடுமையைத் தாங்க மாட்டாமல் அநேகர் வானத்தை நோக்கி அபயமிட்டார்கள். சமாதானத்தை அருளும்படி யாக, தேவ அன்னையை மன்றாடினார்கள்.

இப்போது லூஸியாவின் வயது 10, பிரான்சிஸ் வயது 9, ஜஸிந்தா வயது 7. மூன்று பேரும் கோவா தா ஈரியா மலைச்சாரலில் வழக்கம்போல் ஆடு மேய்த்து வந்தார்கள். லூஸியாவின் அண்ணன் யுத்தத்துக்கு அழைக்கப்பட்டிருந்ததால், அவனுக்கு எதுவும் நேரிட்டு விடக் கூடாதே என்று அவளுக்குக் கவலை.

முதற் காட்சி

அன்று 1917, மே மாதம் 13-ம் நாள். பகலில் இந்தக் குழந்தைகள் மூவரும் ஜெபமாலை சொல்வது வழக்கம். அப்போது நடுப்பகல் வேளை. மேகமில்லாத நீல வானத்திலிருந்து ஒரு இடி இடித்தது. அதைக் கேட்ட சிறுவர்கள் பயந்து நடுங்கி விட்டார்கள். ஆடுகள் சிதறி ஓடின. அச்சத்தோடு ஆடுகளை ஓட்டிக் கொண்டு மலையடிவாரத்திற்கு வந்து ஒதுங்கிக் கொள்ள அவர்கள் விரைந்தார்கள். ஆனால் அவர்கள் இறங்கி ஓடி வருகையில் ஒரு அழகிய பெண் அவர்களுக்கு எதிர்ப்பட்டார்கள். அவர்கள் சூரியனைப் போல் ஒளியுடன் திகழ்ந்தார்கள். அவர்கள் முகம் மிகவும் இனிமை வாய்ந்திருந்தது. அவர்களுடைய கரங்களில் ஒரு ஜெபமாலை தொங்கிக் கொண் டிருந்தது. அவர்களுடைய உடை ஒளிமயமாயிருந்தது. இவ்விதமாய்க் காட்சியளித்த தேவதாய், “நான் மோட்சத்திலிருந்து வருகிறேன். உங்களையும் ஒரு நாள் அங்கு அழைத்துச் செல்வேன்” என்றார்கள். அன்றிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு 13-ம் தேதியும் தவறாமல் ஆறு மாதங் களுக்கு அதே இடத்திற்கு அக்குழந்தைகள் வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

லூஸியாவும், ஜஸிந்தாவும் மோட்சத்திற்குச் செல்வார்கள். பிரான்சிஸும் அங்கு செல்வான். அவன் அநேக ஜெபமாலைகள் சொல்ல வேண்டும் என்றார்கள் தேவ அன்னை. மேலும், “பாவிகள் மனந்திரும்பும்படியாக அவர்கள் அதிகமாக ஜெபிக்க வேண்டுமென்றும், பல ஒறுத்தல் முயற்சிகள் செய்து ஒப்புக்கொடுக்க வேண்டும்” என்றும் கூறினார்கள்.

சிறுவர் மூவரும் அதிக துன்பங்கள் பட நேரிடும் என்றார்கள். ஒருநாள் கூட தவறாமல் ஜெபமாலையை ஜெபிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் மாதாவின் கரங்களிலிருந்து ஒளி வெள்ளம் புறப்பட்டு அம்மூன்று குழந்தைகளையும் பரலோக வெளிச்சத்தால் நிரப்பிற்று. தேவதாய் மறைந்தார்கள். இக்காட்சியின் பிரமிப்பில் மூழ்கியிருந்த அம்மூன்று சிறார்கள் ஆச்சரியத்தோடு திரும்ப வீடு வந்து சேர்ந்தார்கள். தாங்கள் கண்ட காட்சியைப் பற்றி ஒரு வார்த்தை முதலாய் யாரிடமும் கூறவில்லை. ஆனால் சிறுமி ஜஸிந்தாவால் இந்த இரகசியத்தை அதிக நேரம் காப்பாற்ற முடியவில்லை. அவள் வாய் திறந்ததும் பிரான்சிஸும் அடக்க முடியாத இருவரும் நடந்த சம்பவங்களை வீட்டில் கூறிவிட்டார்கள். லூஸியாவின் பெற்றோரும், மற்ற குழந்தைகளின் பெற்றோர்களும் அடைந்த அதிர்ச்சி கொஞ்சமல்ல. லூஸியாவின் தாய் அவளைக் கூப்பிட்டு, “நீ காட்சி கண்டேன் என்று கயிறு திரிக்கிறாயோ? எச்சரிக்கை! அது இது என்று ஏதாவது உளறினால் உன்னை என்ன செய்கிறோம் பார்” என்று பயமுறுத்தி வைத்தாள். மாதம் ஒன்று கடந்தது. ஜூன் மாதம் 13-ம் நாள் வந்தது.

இரண்டாம் காட்சி

அன்று பாத்திமா ஊரில் ஒர் வேடிக்கைக் கண்காட்சி வந்திருந்தது. ஊர் முழுவதும் ஒருவித குதூகலம். கோவா தா ஈரியாவுக்கு மாதா கேட்டுக் கொண்டபடி போய்வர பங்குக் குரு அனுமதி அளித்திருந்ததால், லூஸியாவின் தாயும் அரைமனதோடு அனுமதி தந்தாள்.

லூஸியாவுடன் 14 சிறுமிகள் சேர்ந்துகொண்டனர். தெய்வ நம்பிக்கையில்லாத ஒரு மனிதன் லூஸியாவுக்கு பணம் கொடுத்து கோவாவுக்குப் போக வேண்டாம் என்று தடுத்துப் பார்த்தான். லூஸியா அதை வாங்க மறுத்து, குறிப்பிட்டபடி காட்சி நிகழும் இடம் போய்ச் சேர்ந்தாள். நடுப்பகலில் ஓர் ஒளிவீச்சு காணப்பட்டது. லூஸியா அதைக் கண்டாள். உடனே மாதா வருவதையும், ஹோம் ஓக் மரத்தின் மீது நிற்பதையும் மூன்று குழந்தைகளும் கண்டார்கள். மூன்று குழந்தை களிடமும் தேவ அன்னை பேசி அடுத்த மாதமும் 13-ம் தேதி அங்கு வரும்படி கேட்டுக்கொண்டார்கள். மேலும், “ஒவ்வொரு நாளும் ஜெபமாலையைச் சொல்லுங்கள். ஒவ்வொரு பத்து மணி முடிந்ததும், “ஓ என் சேசுவே, எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா ஆத்துமங்களையும், விசேஷமாய் உமது இரக்கம் யார் யார் அதிக தேவையில் இருக்கிறார்களோ அவர்களையும் மோட்சத்தில் கொண்டு சேர்த்தருளும்” என்று ஜெபியுங்கள்” என்றும் கற்றுக் கொடுத்தார்கள்.

லூஸியாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாததால், அவள் அதைக் கற்றுக்கொள்ளும்படி மாதா கூறினார்கள். மேலும் ஜஸிந்தாவும், பிரான்சிஸும் சீக்கிரம் மோட்சம் செல்வார்கள் என்றும், லூஸியா உலகில் அதிக நாள் வாழ்ந்து தன்னுடைய மாசற்ற இருதயத்தின்மீது பக்தியைப் பரப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்கள். லூஸியாவின் சகல துன்பங்களிலும் தேவதாய் அவளுடன் இருப்பதாகவும் உறுதி யளித்தார்கள். இதன்பின் மூன்று சிறுவர்களும் ஓர் ஒளிக் கதிரின் மூலம் தேவதாயின் மாசற்ற இருதயத்தைக் கண்டார்கள். அதைச் சுற்றிலும் கூரிய முட்கள் காணப்பட்டன. மனிதர்களின் பாவங்களை அந்த முட்கள் சுட்டிக் காட்டின.

இந்த இரண்டாம் காட்சி பற்றிய செய்தி காட்டுத் தீ போல் ஊரெங்கும் பரவியது. எல்லோரும் அதுபற்றி ஏதாவது அறிய ஆவலா யிருந்தார்கள். அக்குழந்தைகளிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டார்கள். ஊரே கலவரப்பட்டது. பங்குக் குருவுக்கும் கவலை. அவர் அக்குழந்தைகளையும், அவர்களுடைய பெற்றோர்களையும் கூப்பிட்டு விசாரித்தார். இந்தக் காட்சிச் செய்திகள் எல்லாம் ஒரு வேளை பசாசின் வேலையாயிருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் எழும்பியது. பங்குக் குரு இவ்வாறு சந்தேகம் தெரிவித்ததால் லூஸியா, “நான் அடுத்த மாதம் 13-ம் தேதி காட்சியின் இடத்திற்குப் போக மாட்டேன், பிரான்சிஸும், ஜஸிந்தாவும் போகட்டும்” என்று கூறி விட்டாள்.

மூன்றாம் காட்சி

ஜூலை 13-ம் நாள் காலையில் லூஸியா வர மாட்டேன் என்றதால் பிரான்சிஸும், ஜஸிந்தாவும் அழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் அழுகையைப் பார்த்த லூஸியா தானும் கோவாவுக்கு வருவதாகப் புறப்பட்டாள். ஆனால் இதற்குள்ளாக ஹோம் ஓக் மரத்தைச் சுற்றி ஒரு பெருங்கூட்டமே கூடி விட்டது.

காட்சி தோன்றியது. “பிள்ளைகளே, ஜெபமாலையை விடாது தினமும் ஜெபியுங்கள்” என்று தேவ அன்னை கேட்டார்கள். “அம்மா, உங்கள் பெயரையும் எங்களுக்குச் சொல்லுங்கள். இக்காட்சிகளை நம்பாதவர்கள் நம்பும்படி ஒரு புதுமையையும் செய்யுங்கள்” என்று லூஸியா கேட்டுக்கொண்டாள். பரலோக அன்னை அதற்கு மறுமொழியாக, அக்டோபர் மாதம் அவ்வாறு செய்வதாகக் கூறினார்கள். அக்குழந்தைகள் தொடர்ந்து ஜெபமும் ஒறுத்தல் முயற்சிகளும் செய்ய வேண்டுமென்றும், அவர்கள் எதைச் செய்தாலும், “ஓ சேசுவே, உமது அன்பிற்காகவும், பாவிகள் மனந்திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இதைச் செய்கிறேன்” என்று ஜெபிக்கும்படியாகவும் மாதா கூறினார்கள்.

இந்த மூன்றாம் காட்சி மறைந்ததும் அக்குழந்தைகளின் முகம் வேறுபட்டிருந்ததை மக்கள் கவனித்தார்கள். பயமும் நடுக்கமும் அவர் களுடைய முகங்களில் காணப்பட்டன. “ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள்? என்ன நடந்தது? எதைக் கண்டீர்கள்?” என்று கூட்டத்தில் பலர் அச்சிறுவர்களைக் கேள்வி கேட்டு நெருக்கினார்கள். ஆனால் மூவரும் அதுபற்றி எந்த வார்த்தையும் கூற மறுத்து விட்டார்கள். மூன்று பாகங்கள் அடங்கிய ஒரு மாபெரும் இரகசியம் அவர்களுக்கு வெளிப் படுத்தப்பட்டிருந்தது.

இக்காட்சியில் அவர்கள் கண்ட முக்கியமான ஒன்று நரகம். தேவ தாயின் கரங்களிலிருந்து கதிரொளிகள் புறப்பட்டு, பூமியைத் திறந்து காட்டின. அங்கு நரகம் காணப்பட்டது. மானிடர்கள் பசாசுக்களுடன் முழுவதும் நெருப்பில் நெருப்பாக மாறி வாதைப் படுவதை அவர்கள் கண்டார்கள். இந்தக் காட்சியின் பயங்கரம்தான் அவர்கள் முகத்தில் விகாரத்தைத் தோற்றுவித்தது.

தேவ அன்னை வேறொரு முக்கிய காரியத்தையும் அறிவித் தார்கள். அதாவது, உலகம் அழிவிலிருந்தும் பயங்கர யுத்தத்திலிருந்தும் காப்பாற்றப்பட வேண்டுமானால், மனிதர்கள் மரியாயின் மாசற்ற இருதயத்தை நேசித்து, அதற்கு எதிரான பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். அப்படியானால் கம்யூனிஸ்ட் ரஷ்யா மனந்திரும்பும், அது தவறினால் ரஷ்யா தன் தப்பறைகளை உலகமெங்கும் பரப்பும், போர்களையும்வேத கலாபனைகளையும் தூண்டி விடும், நல்லவர்கள் கொல்லப்படுவார்கள், பாப்பரசர் அதிகம் துன்பப்பட நேரிடும். பல நாடுகள் அழிக்கப்படும்... இதைத் தடுத்து நிறுத்த ரஷ்யாவை பாப்பரசர் உலகின் சகல மேற்றிராணிமாரோடு சேர்ந்து, மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று மாதா கேட்டுக் கொண்டார்கள். மேலும் கிறீஸ்தவர்கள் மாதத்தின் முதல் சனிக்கிழமைகளை பக்தியுடன் அனுசரித்து வருவார்களானால், அது உலக சமாதானத்தைப் பெற்றுத் தரும் என்றும் தேவதாய் கூறினார்கள்.

போர்த்துக்கல் நாடு முழுவதும் ஒரே பரபரப்பு அடைந்திருந்தது. மாதா காட்சி கொடுத்ததாக நம்பிய மக்களை நாட்டின் நாஸ்தீகப் பத்திரிகைகள் கேலி செய்து எழுதிக் கொண்டிருந்தன. பாத்திமா நகர் அதிகாரிக்கு நாஸ்தீக தலைமையிடத்திலிருந்து கடுமையான உத்தரவுகள் வந்தன, இந்தக் காட்சிகளைப் பற்றிய மூட நம்பிக்கையை உடனே நசுக்கி அழித்துவிட வேண்டும் என்று.

நான்காம் காட்சி

ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வந்தது. காட்சிகளைப் பற்றிய செய்தி எவ்வளவு தூரம் பரவி விட்டதென்றால், அன்று கோவா தா ஈரியாவில் 20,000 மக்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் அங்கு காத்து நிற்க, அக்குழந்தைகளை நகர அதிகாரி தன் குதிரை வண்டியில் தந்திரமாக ஏற்றி வேறு ஓர் இடத்திற்குக் கொண்டு போய் விட்டார். மத்தியான வேளையில் காட்சி நடைபெறும் இடத்தில் ஓர் இடிமுழக்கம் கேட்டது. ஒரு வெண்மேகம் மெதுவாக அம்மரத்தின் மீது இறங்கி, பின் அப்படியே காற்றோடு கலந்து போய்விட்டது.

இதற்கிடையில் அம்மூன்று சிறுவர்களையும் ஒரு இரகசிய அறையில் கொண்டுபோய்க் குறுக்குக் கேள்விகள் கேட்டுக்கொண் டிருந்தார் நகர அதிகாரி. மூவரையும் சேர்த்து மிரட்டிப் பார்த்தார். பயனில்லை. தனித்தனியாக அவர்களைப் பிரித்து, கடுமையாகப் பேசி எச்சரித்தார். “நீ இக்காட்சிகள் உண்மையல்ல என்று கூறு. கூறா விட்டால் கொதிக்கும் எண்ணெய்க்குள் தூக்கி எறிந்து விடுவேன்” என்று பயமுறுத்தினார். தங்கள் உயிர் போனாலும் போகட்டும், மாதா காட்சி தந்தது உண்மையே என்று அம்மூவரும் வேதசாட்சிகளைப் போன்ற உறுதியுடன் கூறினார்கள். அவர்களை மாற்ற முடியாதென்று கண்டு அதிகாரி அவர்களை விடுதலை செய்து அனுப்பி விட்டார்.

ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி தடைப்பட்ட காட்சியைத் தேவ தாய் அம்மாதம் 19-ம் நாளில் அருளினார்கள். குழந்தைகள் மூவரும் வாலினோஸ் என்னுமிடத்தில் வழக்கம்போல் ஆடு மேய்த்துக் கொண் டிருந்தபோது, அன்னை அவர்களுக்குத் தோன்றி, அடுத்த மாதம் 13-ம் நாளிலும் அவர்கள் அங்கு வர வேண்டும் என்று கூறினார்கள். அதற் கடுத்த மாதம் 13-ம் தேதி எல்லா மக்களும் விசுவசிக்கும்படியான ஒரு மாபெரும் அதிசயம் நிகழும் என்றும் கூறினார்கள். காட்சி மறையும் தருணத்தில் ஒரு சுகந்த வாசனை ஆகாயத்தை நிரப்பிற்று. தேவதாய் நின்று கொண்டிருந்த மரக்கிளைகளில் சிலவற்றை அவர்கள் ஒடித்துக் கொண்டுபோய் தங்கள் வீடுகளில் வைத்தார்கள். அந்தக் கிளைகளும் நறுமணம் வீசிக் கொண்டிருந்தன.

ஐந்தாம் காட்சி

மாதத்திற்கு மாதம் கூட்டம் பெருகிக் கொண்டே வந்தது. செப்டம்பர் மாதம் 13-ம் தேதி கூடிவந்த கூட்டம் சமுத்திரம்போல் தோன்றியது. இச்சிறுவர்களைக் காணவும், அவர்களுடன் பேசவும் எல்லோரும் விரும்பினார்கள். போர்த்துக்கல் நாட்டின் பல பகுதிகளி லிருந்தும் எல்லா வகையான மக்களும், குறிப்பாக ஏராளமான நோயாளி களும் அங்கு வந்திருந்தார்கள். நடுப்பகலில் ஒரு ஒளித்திரள் உருண்டை வடிவமாய் வானத்திலிருந்து இறங்கி அம்மரத்தின்மீது வந்து தங்கியது. “அந்த அம்மா வந்து விட்டார்கள்” என்று அறிவித்தாள் லூஸியா. தேவ அன்னை ஒவ்வொரு நாளும், பாவிகள் மனந்திரும்பும்படியாக ஜெபமாலையை விடாமல் ஜெபிக்குமாறு கூறினார்கள்.

லூஸியா தேவதாயிடம் பேசி அங்கு கூடியிருந்த நோயாளிகளைக் குணமாக்க வேண்டும் என்றும், பற்பல ஆசீர் வாதங்களைப் பொழிந்தருள வேண்டுமென்றும் கேட்டாள். தேவதாய் இவ்விண்ணப்பத்திற்கு அளித்த பதில் சற்று புதிரானதாயிருந்தது. எல்லோரையும் சுகப்படுத்த முடியாது, சிலரே சுகம் பெறுவார்கள். அக்டோபர் மாதம் அற்புத அதிசயம் நிகழும் என்று மீண்டும் கூறி மறைந்தார்கள். 

இச்செய்திகளையெல்லாம் வந்திக்கத்தக்க மேற்றிராணியாண்ட வர் வெகு நுணுக்கமாகக் கவனித்தே வந்தார். அவருக்கு இவைகளை நம்புவதற்குரிய போதிய சான்றுகள் இருப்பதாகவே தோன்றியது. ஆயினும் இவ்விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

இறுதிக் காட்சி - அக்டோபர் 13, 1917.

6-வது தடவையாக அன்னை காட்சி தந்த அற்புத நாள் அக்டோபர் 13-ம் புலர்ந்தது. அதற்கு முன்தினம் லூஸியாவின் தாய் அவளிடம், “நீ பங்குக் குருவிடம் சென்று நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, மரிப்பதற்கு ஆயத்தம் செய்து கொள். நீ அறிவித்துள்ளபடி நாளை அதிசயம் எதுவும் நடைபெறாவிட்டால், ஜனங்கள் உன்னை உயிரோடு பிய்த்து எறிந்து விடுவார்கள்” என்று கூறினாள். அக்டோபர் 13-ம் நாள் சனிக்கிழமை. முந்தின நாள் இரவிலிருந்தே மழை பொழியத் துவக்கிற்று. பலத்த புயலும் வீசிக் கொண்டிருந்தது. எங்கும் வெள்ளக் காடு. எதையும் பொருட்படுத்தாமல் கோவா தா ஈரியா மலைச்சாரல், சமவெளி எங்கும் ஒரே மக்கள் திரள். நேரம் ஆக, ஆக, கூட்டம் அதிகரித்துக் கொண்டே வந்தது. குடைகளும், மழை உடைகளும் எங்கும் காட்சியளித்தன. காட்சி நடைபெறும் ஹோம் ஓக் மரத்தின் பக்கத்தில் மூன்று குழந்தைகளும் வந்து சேருவதே மிகக் கடினமா யிருந்தது. அவ்வளவு நெரிசல். பலத்த மனிதர் சிலர் குழந்தைகளுக்கு வழி உண்டாக்கி, பாதுகாப்பாக அம்மரத்தடிக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். ஜெபமாலை ஆரம்பிக்கப்பட்டது. பலர் ஜெபமாலை சொன்னார்கள்.

மத்தியானம் ஆகி சில நேரம் ஆயிற்று. ஒரு குருவானவர் லூஸியாவிடம் “மதியம் கடந்து விட்டதே, மாதா காட்சியைக் காணோம்” என்று ஞாபகமூட்டினார். “அம்மா எப்படியும் தோன்று வார்கள்” என்று அமைதியோடு பதிலளித்தாள் லூஸியா. சிறிது நேரத்தில் பளிச்சென்று ஒரு மின்னல் வெட்டியது. அச்சிறு மரத்தை ஒரு மேகம் மூடிக் கொண்டது. தேவ அன்னையின் காட்சி தோன்றியது. இவ்விறுதிக் காட்சியிலே தேவதாய் தான் யாரென அறிவித்தார்கள். “நானே ஜெபமாலை மாதா” என்று கூறினார்கள். அந்த இடத்தில் தன் மாசற்ற இருதயத்துக்கு வணக்கமாக ஒரு கோவில் கட்டப்பட வேண்டும் என்றும், மனிதர்கள் தங்கள் வாழ்வைத் திருத்த வேண்டும், அவர்கள் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும், ஏற்கெனவே நொந்து போயிருக்கிற நமதாண்டவரை இனியும் நோகச் செய்யக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்கள். சிறுவர்களுடன் இவ்வாறு சற்று நேரம் பேசிவிட்டு, தன் இரு கரங்களையும் விரித்த படியே அன்னை மறைந்தார்கள். ஆனால் உடனே லூஸியா, “அதோ, சூரியனைப் பாருங்கள்” என்று சத்தமிட்டாள். எல்லோருடைய கண் களும் சூரியனை நோக்கின. சூரியனோ வேகமாகச் சுற்றும் இயந்திரச் சக்கரம் போல் சுழன்றது. பயங்கரமான நிறமுடைய கதிர்களை எல்லாப் பக்கமும் அள்ளி வீசியது. திடீரென்று தன் இடம் பெயர்ந்து நடுங்கித் தடுமாறியது. அங்குமிங்கும் திடீர் திடீரென்று அசைந்து பூமியை நோக்கி அதன் மேல் விழுந்து நசுக்குவது போல் கீழே பாய்ந்து, வேகமாய் வந்தது.

கூட்டத்திலிருந்தவர்கள் அத்தனை பேரும் அஞ்சி நடுங்கிக் கதறிப் புலம்பி ஓலமிட்டார்கள். எல்லோரும் கலவரமடைந்து குழம்பித் தவிக்கவும், சிதறித் தடுமாறவும் தொடங்கினார்கள். பாவங் களுக்காக மன்னிப்புக் கேட்டு மார்பில் அறைந்துகொண்டு இன்றோடு எல்லாம் அழிந்ததாக எண்ணி கதிகலங்கிப் போனார்கள். கூட்டமோ 70,000 மக்களுக்கும் அதிகமான மாபெரும் ஜனத்திரள். இந்த அற்புத சூரிய அதிசயம் 10 நிமிடங்கள் நீடித்தது. அதன்பின் சூரியன் தன் இடத்திற்கு ஏறிச் சென்று, மீண்டும் தன் இயல்புப்படி ஒளி வீசியது. ஒரு துளி தண்ணீர் கூட இல்லாமல் எங்கும் காய்ந்த தரையும், உலர்ந்த ஆடைகளும் காணப்பட்டன. இப்போதுதான் மக்கள் சுயநிலைக்கு வந்து நீண்ட பெருமூச்சு விட்டார்கள். நாஸ்திகர்கள் உட்பட எல்லோரும் பாத்திமா காட்சிகளை உண்மை என ஏற்றார்கள். பரிசுத்த திருக்குடும்பத்தின் காட்சியையும் குழந்தைகள் கண்டார்கள். அர்ச்சிஷ்ட சூசையப்பரும், தேவதாயும், சேசுபாலனும் சேர்ந்து காணப்பட்டார்கள்.

காட்சிகள் முடிந்து பிள்ளைகள் வீடு வந்து சேர இரவாகி விட்டது. அவர்களை யாரும் விடுவதாயில்லை. அவர்களை அக்கூட்டத்திலுள்ள அனைவரும் தொட முயற்சித்தார்கள். பலர் அவர் களுடைய ஆடையையும், தலைமுடியையும் கத்தரித்து எடுத்தார்கள். லூஸியாவின் தலைமுடியும், உடைகளும் சிதைக்கப்பட்டு விட்டன. மிகுந்த களைப்போடு குழந்தைகள் வீட்டில் கொண்டு சேர்க்கப் பட்டார்கள்.

அன்று முதல் ஆயிரமாயிரம் குடும்பங்கள் ஜெபமாலை செய்யத் தொடங்கினர். ஒவ்வொரு வீட்டிலும் பல ஜெபமாலைகள் சொல்லப் பட்டன. மக்கள் பரலோக சிந்தனை கொண்டு, தேவ காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டார்கள்.

ஜெபமும் தவமும்

காட்சி கண்ட சிறுவர்கள் பாவிகள் மனந்திரும்பும்படியாகவும், உலக சமாதானத்திற்காகவும் ஏராளமான ஜெபங்களும், தவ ஒறுத்தல் முயற்சிகளும் மேற்கொண்டார்கள். யாரும் காணாத இடத்தில் சென்று காட்டுச் செடிகளால் கால்களில் இரத்தம் வரும்வரை தங்களையே அடித்து தபசு செய்தார்கள். ஜெபமாலையை மிகவும் உருக்கமாக அடிக்கடி செய்தார்கள்.

பிரான்சிஸ், ஜஸிந்தா

காட்சி கண்ட சிறுவர்களில் இளையவர்களான பிரான்சிஸும், ஜஸிந்தாவும் தேவதாய் கூறியபடி சீக்கிரம் பரலோகம் சென்றார்கள். பிரான்சிஸ் நோயுற்று மிகவும் துன்பப்பட்டு முதலில் இறந்தான். சில மாதங்களுக்குள் ஜஸிந்தாவும் வியாதிப்பட்டு மிகவும் கொடிய வேதனை அடைந்தாள். இரண்டு விலா எலும்புகளை மயக்க மருந்து எதுவுமின்றி அறுத்தெடுக்கும் அளவுக்கு நோய் முற்றியது. அந்தக் கொடூர வேதனையையும் பாவிகள் மனந்திரும்புமாறு அவள் தாங்கிக் கொண்டாள். அவள் இறந்ததும், அவள் முகத்தில் ஒரு தெய்வீகப் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

லூஸியா

தன் மாசற்ற இருதய பக்தியை உலகில் பரப்பும்படி லூஸியா நீண்ட காலம் உலகில் வாழ வேண்டும் என்று தேவதாய் கூறியது போலவே சகோதரி லூஸியா கொயிம்பிரா நகரில் கார்மேல் மடத்துக் கன்னிகையாக எளிய, மறைந்த வாழ்வு வாழ்ந்து வந்தாள். இடைக் கிடையே ஜெப தவமும், மிகவும் முக்கியமாக ஜெபமாலையும் தினம் தவறாமல் செய்து வரும்படியாகவும், தேவதாயின் மாசற்ற இருதயத் துக்கு நிந்தைப் பரிகாரம் செய்யவும், பாவிகள் மனந்திரும்ப வேண்டிக் கொள்ளவும் உலகிற்கு ஞாபகமூட்டி வந்தாள். 

“மக்கள் தங்கள் இச்சைப்படி வாழாமல், தங்கள் உலகப் போக்கை மாற்றி, கடவுள் பக்கமாய்த் திரும்பி வர வேண்டும்; அப்படி வராவிட்டால், உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் கம்யூனிசக் கொடுமை பரவி மிகுந்த நாசம் விளையும்” என்று லூஸியா எச்சரித்தாள். தான் உயிரோடு இருந்த காலம் வரையிலும் பரலோகச் செய்தியை நமக்கு அறிவிக்கும், தேவ அன்னையைத் தரிசித்த சகோதரி லூஸியாவின் குரல் வீணாகாதவாறு, நாம் ஒவ்வொருவரும் கடவுள் பக்கமாகத் திரும்பி, ஜெபமாலை ஜெபித்து பாவிகள் மனந்திரும்பும்படி வேண்டுவது நமது கடமை என்று உணர வேண்டும்.

நல்ல கிறீஸ்தவ வாழ்வு வாழ்வதில் ஏற்படும் கஷ்டங்களையே நாம் தவ முயற்சிகளாக ஒப்புக்கொடுக்கலாம் என்று தேவதாயே கூறி யுள்ளார்கள். ஜெபமாலையை எப்பொழுதும் நம் வசம் வைத்திருப் போமாக. உத்தரியம் எப்போதும் அணிந்திருப்போமாக. இவ்விரண்டு ஞானச் சின்னங்களும் நம்மை மாதாவின் மைந்தர்களாக இருக்க ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கட்டும்.

பாத்திமா செய்தி என்ன?

உலக மக்கள் உலக சிந்தனைகளிலேயே நோக்கமாயிருக் கிறார்கள். தங்களைப் படைத்த அன்புக் கடவுளை மறந்தே வருகிறார்கள். உலகத்தின் மாய்கைக்கும், தங்கள் சுகபோக சரீர ஆசாபாசங்களுக்கும் அதிகமாக உட்பட்டு, சுயநலக்காரர்களாக வாழ் கிறார்கள். கடவுளுடைய கட்டளைகளை மிக அலட்சியமாக எண்ணி மீறி நடக்கிறார்கள். சுருக்கத்தில், பாவம் மலிந்து விட்டது. உலகில் அடக்க ஒடுக்கமும் கெட்டு விட்டது. பாவத்தின் பலன் போர். இரண்டு உலக யுத்தங்களாலும், நித்தமும் உலகின் பல பாகங்களில் சிந்தப்படும் மானிட இரத்தத்தாலும் உலகம் கறைபட்டு தேவகோபத்துக்கு ஆளாகி உள்ளது. இந்த நிலையிலும் மக்கள் கடவுளை நினைப்பதாக இல்லை. கத்தோலிக்க மக்கள் முதலாய்த் தங்கள் வேத அனுசாரத்தை அலட்சிய மாய் ஒதுக்குகிறார்கள். ஒழுக்கக் கேடு விளைவிக்கும் நவீன கேளிக்கைகள் மலிந்து விட்டன. பசாசின் ஆதிக்கம் பூமியில் வரவேற்கப் படுகிறது. பாவம் செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது. இதனால் கடவுளின் நீதி உலகைத் தண்டிக்கக் காத்திருக்கிறது. இவ்வேளையில் மானிடரைத் தன் மக்களாக சிலுவையடியில் பெற்றெடுத்த மாமரி அன்னை நம்மேல்கொண்ட தாயன்பால் தூண்டப்பட்டு பற்பல இடங்களில் 19-ம் நூற்றாண்டிலும், சிறப்பாக 20-ம் நூற்றாண்டில் (1917) பாத்திமா பதியிலும் தோன்றி நம்மைக் கெஞ்சிக் கேட்கிறார்கள், எச்சரிக்கிறார்கள். தன் திருக்குமாரனின் திரு இருதயத்தை மேலும் பாவத்தால் நோகப் பண்ண வேண்டாம் என்று விண்ணப்பிக்கிறார்கள். இந்நிலை மாற மக்கள் ஜெபமாலை செய்ய வேண்டும், உத்தரியம் அணிந்திருக்க வேண்டும், தவ முயற்சிகளை விருப்பத்துடன் செய்ய வேண்டும், நல்ல கிறீஸ்தவ வாழ்க்கை வாழ்வதில் ஏற்படும் சிலுவைகளை நம் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டு, உத்தம மக்களாய் வாழ வேண்டும் என்று கேட்கிறார்கள். இதுவே தேவ நீதியின் கோபத்தைத் தடுத்து நிறுத்தும் ஒரே வழி. இல்லாவிட்டால் நாஸ்தீக கம்யூனிசம் தன் கொடுமைகளால் உலகை நிரப்பி, அழிவுகளும், நாசங் களும், ஆத்தும சேதங்களும் விளையும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

இச்செய்தியை உலகம் ஏற்றதா?

இதுவரையிலும் பாத்திமா நாயகியின் இச்செய்தி உலகின் காதில் படாதது போலவே இருந்து வந்திருக்கிறது. இதைக் கேள்விப்படுகிற நாமாவது இத்தாயின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து, பாவிகள் மனந்திரும்பும்படியாகவும், உலக சமாதானத்திற்காகவும் ஜெபமாலை, ஜெப தவம் செய்து, நம் வாழ்வைக் கடவுள் பக்கமாகத் திருப்ப வேண்டும். நம் கிறீஸ்தவக் கடமைகளைப் பிரியத்தோடு செய்ய வேண்டும்.

தேவதாயின் மூலமாக மோட்சத்திலிருந்து வந்துள்ள இவ்வுலக சமாதான நல்வாழ்வுத் திட்டத்தில் நாம் பங்கு பெற்றுக்கொள்ள உடனடியாகத் தீர்மானம் செய்வோமாக. நம்மையும் இவ்வுலகையும் காப்பாற்றிக் கொள்ள இப்பரலோகத் திட்டம் அன்றி வேறு மார்க்கம் இல்லை. ஜெபமாலையைக் கையில் எடுப்போம். ஜெயமடைவோம்.

தேவதாயின் கண்ணீர்

தேவதாய் பாத்திமாவில் காட்சி கொடுத்த பாவனையாக செதுக்கப்பட்டுள்ள முதல் சுரூபங்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று 1972 ஜூலை மாதத்திலிருந்து நியூ ஆர்லின்ஸ் நகரில் 16 தடவைகள் கண்ணீர் சிந்தி அழுது கொண்டிருந்ததாகவும், அந்த நீர் உண்மையான மானிடக் கண்ணீராக இருக்கிறதாகவும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் ஐயத்திற்கு இடமில்லாதபடி நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தேவ அன்னை ஏன் அழுகிறார்கள்?

ஒரு தாய் எதற்காக அழுவாள்? தன் பிள்ளைகளை நினைத்துத் தான் அழுவாள். நம்மை நினைத்தே நம் தேவ அன்னை அழுகிறார்கள். நாம் இத்தாய் கூறிய செய்திகளை அலட்சியம் செய்கிறோம். போதிய கவனம் காட்டுவதில்லை. நம் அன்னை கேட்டபடி கடவுள் பக்கம் திரும்பி ஜெபமாலை ஜெபித்து, உத்தரியம் அணிந்து தவ முயற்சிகள் செய்யவில்லை. இதனால் நமக்கு நேரிடவிருக்கும் துன்பங்களையும், விசேஷமாக ஆன்ம கேட்டையும், நரக ஆக்கினையையும் நினைத்தே நம் அன்னை அழ முடியும். இத்தாயின் கண்ணீரை நாமாவது துடைப்போம். நம் தாயை நாம் அழவிடக் கூடாது. அவர்கள் கூறும் செய்தியைக் கவனத்துடன் ஏற்று, அதன்படி நல்ல வாழ்வு வாழ இப்போதே துவக்குவோம்.


அருள் நிறைந்த மரியாயே,
வாழ்க!