இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சிலுவைகளைப் பொறுமையுடனும் மகிழ்ச்சியுடனும் சுமக்க வரப்பிரசாதம் தருவது மாமரியே

22. உண்மையான பக்தியின் மூலம் மரியாயைக் கண்டடைந்தவன் சிலுவைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுவான் என்பதல்ல! மாறாக மற்ற யாரையும் விட அவன் அவற்றால் அதிகம் தாக்கப்படுவான். 

ஏனென்றால் ஜீவியர்களின் அன்னையாகிய மாமரி, சேசுவின் சிலுவை என்னும் ஜீவிய மரத்தின் பாகங்களை தன் எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுக்கிறார்கள். ஆனால் நல்ல சிலுவைகளைத் தன் பிள்ளைகளுக்குச் செதுக்கிக் கொடுக்கும் போதே அவற்றைப் பொறுமையோடும், ஏன், மகிழ்ச்சியோடும் சுமந்து செல்வதற்குரிய வரப்பிரசாதத்தையும் வழங்குகிறார்கள். 

ஆகவே மாமரி தனக்குச் சொந்தமானவர்கள் மீது வைக்கும் சிலுவைகள் கசப்பிலல்ல, இனிமையில் தோய்ந்தவையா யிருக்கின்றன. அல்லது, கடவுளின் சிநேகிதனாயிருப்பதற்கு ஒருவன் பருக அவசியமான பாத்திரத்தின் கசப்பை அவர்கள் கொஞ்சத்திற்கு உணர்ந்தாலும், அத்துன்ப சோதனைக்குப் பின் இந் நல்ல தாய் அளிக்கும் ஆறுதலும், மகிழ்ச்சியும், இதை விட அதிக பாரமும் வேதனையுமுள்ள சிலுவைகளைச் சுமக்கவும் அவர்களுக்கு மிக அதிகமாய் ஊக்கமளிக்கின்றன.

முதல் பாகத்தின் முடிவுரை

23. ஆகவே புனிதம் அடைவதற்கு, நாம் மரியாயைக் கண்டடைய வேண்டும் -- வரப்பிரசாத மத்தியஸ்தியாகிய அவர்களிடம் உண்மையான பக்தி கொள்வதால். எல்லா மிகுதியான வரப்பிரசாதத்தையும் கண்டடைய வேண்டுமானால், உண்மையாகவும் எதார்த்தமாகவும் அர்ச். கன்னி மரியாயைக் கண்டடைய வேண்டியதே தேவையானது. 

கடவுள் முழு எஜமானாக இருப்பதால், தாம் வழக்கமாக மரியாயின் மூலமாக மட்டுமே வழங்கு கிறவைகளை நேரடியாக அவரே வழங்க முடியும். அவர் இவ்வாறு சில சமயங்களில் செய்கிறார் என்பதை நாம் மறுக்கவும் முடியாது. அது சிந்தனையற்ற செயலாகி விடும். 

ஆயினும் அர்ச். அக்வினாஸ் தோமையார் படிப்பிப்பதன்படி கடவுளின் ஞானமானவரால் ஏற்பட்ட வரப்பிரசாத ரீதியில், சாதாரணமாய்ப் பேசுவதானால், கடவுள் மரியாயின் வழியாகவே மனிதர்களுடன் உறவாடுகிறார்.  * (Part I a Qu. 25, art. 5)

ஆதலால் நாம் அவரிடம் செல்லவும், அவருடன் ஐக்கியமாயிருக்கவும் விரும்பினால், அவர் நம்மிடம் வருவதற்கும், மனிதன் ஆவதற்கும், தம் வரப்பிரசாதங்களை நமக்களிப்பதற்கும் எந்த வழியைக் கைக்கொண்டாரோ, அதே வழியையே நாமும் கைக்கொள்ள வேண்டும். 

அந்த வழி என்னவென்றால், நாம் மாதாவுக்குச் செலுத்தும் உண்மைப் பக்தியேயாம்.