இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உன் தேவனாகிய ஆண்டவரை சோதியாதிருப்பாயாக!

அப்போஸ்தலர் சொல்வது போல, "சகல மனிதர்களும் இரட்சிக்கப்பட ... வேண்டுமென்று கடவுள் சித்தமாயிருக்கிறார்'' (1 திமோ.2:4). ஆயினும், நம் எதிரிகளை வெற்றி கொள்ளும் வழிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், மனஸ்தாபத்திற்கு நம்மை அழைக்கும் அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் நம் இரட்சணியத்திற்காக நாம் உழைக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். சோதனைகளை வெல்ல எந்த முயற்சியும் செய்யாமல் பாவியானவன் பாவத்திற்குத் தன்னைக் கையளிக்கிறான்; வெற்றி கொள்ள கடவுளின் உதவியை அவன் கேட்பது கூடஇல்லை, ஒரு நாள் படுகுழியிலிருந்து கடவுள் தன்னை வெளியே இழுத்து விடுவார் என்று அவன் நம்புகிறான். இப்படிப்பட்டவன் புதுமைகள் செய்யும் படியாகவும், கிறீஸ்தவர்களுக்குப் பொதுவாக வழங்கப்படாத அசாதாரண இரக்கத்தைத் தனக்குக் காட்டும்படியாகவும் கடவுளை சோதிக்கிறான். ""உன் தேவனாகிய ஆண்டவரை நீ சோதியாதிருப் பாயாக'' (மத்.4:7).

தம்மைப் பாவத்தால் நோகச் செய்பவர்களைக் கடவுள் உடனே தண்டிப்பார் என்றால், இப்போது போல அவர் நிச்சயமாக அவமானப்படுத்தப்பட மாட்டார்; இதற்கு மாறாக, ஆண்டவர் உடனே தண்டிப்பதில்லை, அவர் தாமதிக்கிறார் என்பதால், அவரை இன்னும் அதிகமாக நோகச் செய்யப் பாவிகள் தைரியம் கொள்கிறார்கள்! ஆயினும், கடவுள் காத்திருக்கிறார், அவர் பொறுத்துக்கொள்கிறார் என்றாலும், அவர் என்றென்றும் காத்துக் கொண்டும், பொறுத்துக் கொண்டும் இருக்க மாட்டார் என்பதில் நாம் உறுதியாயிருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்நாளின் எண்ணிக்கையையும், அவன் மீது தான் பொழியத் தேர்ந்து கொள்ளும் தாலந்துகளையும் அவர் ஏற்கெனவே தீர்மானித்து விடுகிறார் என்பது அர்ச். பேசில், அர்ச். ஜெரோம், அர்ச். அம்புரோஸ், அர்ச். அலெக்சாந்திரியா சிரில், அர்ச். ஜான் கிறிசோஸ்தோம், அர்ச். அகுஸ்தீன், இன்னும் பல திருச்சபைத் தந்தையரின் கருத்தாக இருக்கிறது. ""தேவரீர் சகலத்தையும் அளவோடும் கணக்கோடும், நிறையோடும் நடத்தினீர்'' (ஞான.11:21); இவ்வாறே ஒவ்வொரு மனிதனிலும் தாம் மன்னிக்க இருக்கும் பாவங்களின் எண்ணிக்கையையும் அவர் தீர்மானித்து வைத்திருக்கிறார். இந்த எண்ணிக்கை நிரம்பும்போது, அவர் அதற்கு மேல் மன்னிப்பதில்லை. ""ஒரு குறிப்பிட்ட காலத்திற்குக் கடவுளின் பொறுமை ஒவ்வொருவரையும் சகித்துக் கொள்கிறது; அந்தக் காலம் முடிந்ததும், இனி அவன் மன்னிக்கப்படுவதில்லை. இதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் அர்ச். அகுஸ்தீனார். செசாரியாவின் யூஸேபியஸும் இதே காரியத்தைக் கூறுகிறார்: ""ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரை கடவுள் பொறுமையாக இருக்கிறார். அதன்பின் கைவிடுகிறார்''; மேலே குறிப்பிடப்பட்ட திருச்சபைத் தந்தையர்களும் இவ்வாறே பேசுகிறார்கள்.

இந்தத் தந்தையர் வாய்க்கு வந்தபடி பேசவில்லை, மாறாகப் பரிசுத்த வேதாகமத்தின்படியே பேசுகிறார்கள். ஓரிடத்தில், அமோறையர்களின் பாவங்களின் எண்ணிக்கை இன்னும் நிறைவு பெறாததால் அவர்களது அழிவைத் தாம் தாமதிப்பதாக ஆண்டவர் கூறுகிறார்: ""அமோறையர்களின் பாவ அக்கிரமங்களின் அளவு இன்னும் நிறைவாகவில்லை'' (ஆதி.15:16). மற்றோர் இடத்தில், ""இஸ்ராயேல் வீட்டாருக்கு இனி இரக்கம் காட்ட மாட்டோம்'' (ஓசே.1:6). ""யார் நம்மைப் பத்து முறையும் சோதித்து, நம் கட்டளைகளை மீறியிருக்கிறார்களோ, அம்மனிதரில் ஒருவனும் நாம்... வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தைக் காணமாட்டார்கள்'' (எண்.14:22-23). மற்றொரு இடத்தில், ""ஒரு பையில் இடுவது போல நீர் என் பாவங்களை இட்டு முத்திரையிட்டீர்'' என்று யோபு கூறுகிறார் (யோபு.14:17 ). பாவிகள் தங்கள் பாவங்களுக்குக் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் கடவுள் உண்மையாகவே கணக்கு வைத்துக் கொள்கிறார். இவ்வாறு, அறுவடை முற்றியதும் அவர் தண்டிக்கக் கூடும், அதாவது, எண்ணிக்கை நிறைவானதும்: ""பயிர் முற்றிவிட்டதால், அரிவாளை இடுங்கள்'' (யோவேல்.3:13). மற்றொரு இடத்தில்: ""மன்னிக்கப்பட்ட பாவங்களைப் பற்றி அச்சமற்றவர்களாய் இராதீர்கள்; பாவத்திற்கு மேல் பாவம் கட்டிக் கொள்ளாதீர்கள்'' என்று கடவுள் கூறுகிறார் (சர்வப். (சீராக்)5:5). அதாவது, அவர் பாவியிடம்: ""நான் உனக்கு மன்னித்து விட்ட பாவங்களுக்காகக் கூட நீ அஞ்ச வேண்டும், ஏனெனில் இன்னும் ஒரு பாவத்தை நீ அவற்றோடு சேர்த்தாய் என்றால், மன்னிக்கப்பட்ட பாவங்களோடு அந்தப் புதிய பாவம் எண்ணிக்கையை நிறைவு செய்வதாக இருக்கலாம். அதன்பின் உனக்கு இனி இரக்கம் கிடைக்காது'' என்று சொல்கிறார். மற்றோர் இடத்தில் வேதாகமம் இன்னும் அதிக அப்பட்டமாக, ""தீர்வையின் நாள் வரும்போது, தாம் அவர்களைத் தண்டிக்கும்படியாக, ஆண்டவர் பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்கிறார்'' என்கிறது (2 மக்.6:14). ஆக, பாவங்களின் அளவு முழுமை பெறும் வரை கடவுள் காத்திருக்கிறார், அதன் பின் அவர் தண்டிக்கிறார்.

ஆ, என் தேவனே, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; எத்தனை பேர் என்னை விட மிகக் குறைவான பாவங்களுக்காக இப்போது நரகத்தில் இருக்கிறார்கள்! இனி அவர்களுக்கு மன்னிப்பில்லை, நம்பிக்கையுமில்லை. நானோ இன்னும் உயிரோடு இருக்கிறேன்! நான் நரகத்தில் இல்லை. நான் ஆசைப்பட்டால், மன்னிப்படைவேன் என்றும் மோட்சத்தைப் பெற்றுக்கொள்வேன் என்றும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஆம், என் தேவனே, நான் மன்னிப்பை ஆசிக்கிறேன்; மற்ற எல்லாத் தீமைகளுக்கும் மேலாக, உம்மை நோகச் செய்ததற்காகவே நான் அதிகம் துக்கப்படுகிறேன், ஏனெனில் உமது அளவற்ற நன்மைத்தனத்தை நான் நோகச் செய்து விட்டேன். நித்திய பிதாவே, என் நிமித்தமாக சிலுவையின் மீது இறந்திருக்கிற உமது திருச்சுதனைப் பாரும். அவரது பேறுபலன்களின் வழியாக, என் மீது தயவாயிரும். மீண்டும் உம்மை நோகச் செய்வதை விட, சாவைத் தேர்ந்துகொள்வேன் என்று நான் உமக்கு வாக்களிக்கிறேன். 

இத்தகைய தண்டனைக்கு வேதாகமத்தில் பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக, சவுலின் உதாரணம்: அவன் தன் இறுதி கீழ்ப்படியாமைக்காகக் கடவுளால் கைவிடப்பட்டான். தனக்காகப் பரிந்து பேசும்படி அவன் சாமுவேலிடம் மன்றாடினான். ""என் பாவத்தைப் பொறுத்துக் கொண்டு, ஆண்டவரை நான் ஆராதிக்கத் தக்கதாக, என்னோடு திரும்பி வாரும்'' என்று அவன் மன்றாடிய போது, சாமுவேல் பதிலுக்கு, ""நான் உன்னோடு திரும்பி வர மாட்டேன், ஏனெனில் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து விட்டாய், ஆண்டவரும் உன்னைப் புறக்கணித்து விட்டார்'' என்றார். (1 அரசர்.15:25). அடுத்து, பல்தசாரின் உதாரணம்: அவன் பந்தியில் தேவாலயத்தின் புனிதப் பாத்திரங்களை அவசங்கை செய்தான். அப்போது ஒரு கரம் தோன்றி, சுவரின் மீது, "மானே, தெக்கேல், பாரேஸ்' என்ற வார்த்தைகளை எழுதுவதை அவன் கண்டான். தானியேல் வந்தார். இவ்வார்த்தைகளை விளக்குகையில் அவர் அவனிடம் மற்ற காரியங்களோடு சேர்த்து, ""நீ தராசில் நிறுக்கப்பட்டாய், அப்போது எடை குறைவாகக் காணப்பட்டாய்'' என்ற வார்த்தைகளையும் அவர் சொன்னார் (தானி.5:27). இதன் மூலம், அவனது பாவங்களின் பாரம் ஏற்கெனவே தேவ நீதியின் தராசைத் தாழச் செய்து விட்டதை அவன் புரிந்து கொள்ளச் செய்தார். அன்றிரவே அவன் கொலை செய்யப்பட்டான். ஓ, இதே காரியம் எத்தனை பரிதாபத்திற்குரிய பாவிகளுக்கு நிகழ்கிறது! அவர்கள் தங்கள் பாவங்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அமிழ்ந்திக் கிடக்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய பாவங்களின் எண்ணிக்கை நிரம்பும்போது, அவர்கள் மரணத்தால் வெற்றி கொள்ளப்பட்டு, நரகத்திற்குத் தீர்ப்பிடப்படுவார்கள். ""தங்கள் வாழ்நாளெல்லாம் செல்வ சுகத்தில் கழித்து, ஒரு கணப் பொழுதில் நரக பாதாளத்தில் இறங்குகிறார்கள்'' (யோபு.21:13). சிலர் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை, அல்லது சம்மனசுக்களின் எண்ணிக்கையை, அல்லது ஒரு சம்மனசானவரின் ஆண்டுகளைக் கண்டுபிடிப்பதில் வாழ்நாளைப் போக்குகிறார்கள்; ஆனால் நம்மில் ஒவ்வொருவருக்கும் கடவுள் மன்னிக்கும் பாவங்களின் எண்ணிக்கையை யாரால் கண்டுபிடிக்க முடியும்? ஆகவே, நாம் அஞ்சி நடுங்க வேண்டும். பாவகரமான அந்த இன்பத்திற்குப் பிறகு, நீ சம்மதித்த அந்த முதல் நினைவுக்குப் பிறகு, நீ கட்டிக்கொள்ள இருக்கும் அந்த முதல் பாவத்திற்குப் பிறகு, கடவுள் உன்னை மீண்டும் மன்னிப்பாரா இல்லையா என்று யாருக்குத் தெரியும்?

சர்வேசுரா, நான் கட்டிக் கொண்ட பாவங்களையும், நீர் என்மீது பொழிந்தருளிய வரப்பிரசாதங்களையும் நான் நினைக்கும்போது, மேலும் ஒரே ஒரு பாவம் செய்வேன் என்றால், பாவங்களின் அளவு முழுமை பெற்று, நான் இழக்கப்படலாம் என்று நான் மிகவே அஞ்சுகிறேன். ஆ, உமது வரப்பிரசாதத்தால் எனக்கு உதவியருளும். உமக்குப் பிரமாணிக்கமாய் இருக்கும்படி உம்மிடமிருந்தே ஒளியும் பலமும் பெற்றுக்கொள்வேன் என்று நம்பியிருக்கிறேன். ஒருவேளை நான் மீண்டும் உம்மைப் பாவத்தால் நோகச் செய்வேன் என்று நீர் காண்கிறீர் என்றால், உமது வரப்பிரசாதத்தில் இருப்பதாக நான் நம்புகிற இந்தக் கணமே நான் சாகச் செய்தருளும். என் தேவனே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் நேசிக்கிறேன், மரணத்தையும் விட அதிகமாக, உமது கோபத்தை மீண்டும் சம்பாதித்துக் கொள்வேன் என்று நான் அஞ்சுகிறேன். உமது இரக்கத்தில் அதை அனுமதியாதிரும். மரியாயே, என் தாயாரே, உங்கள் தயவிரக்கத்தால் எனக்கு உதவுங்கள்; பரிசுத்த நிலைமை வரத்தை எனக்குப் பெற்றுத் தாருங்கள்.