அர்ச். தோமையார் வரலாறு - பாலையூர்

கடவுளுடைய அரசை எங்கும் நிலை நாட்டுவதில் இடைவிடாது கண்ணுங் கருத்துமாயிருந்த தோமையார் புது ஊர் ஒன்றிற்குப் புறப்பட்டார். அது தான் பாலையூர். அவ்வூரில் சிறந்த உயர்ந்த கோபுரங்கள் பல இருந்தன ஊருக்குள் நுழையும் முன் பொன் முலாம் பூசப்பட்டு, மாலைச் சூரியனில் ஒளி வீசிக் கொண்டிருந்த கோபுரச் சிகரங்கள் அவர் கண்களுக்குப் புலப்பட்டன. 

மெய்யங் கடவுளுக்குக் கோவில்கள் இவ்வளவு அழகாக அமைக்கப்பட வில்லையே என்று கவலையுற்ற இதயத்தோடு ஊரினுள் சென்றார். தென்பாகத்தில் யூதரும் அவர்கள் செபக்கூடமும், வட பாகத்தில் செட்டிமாரும் அவர்கள் கோவிலும், வேறொரு பகுதியில் சூத்திரரும் இருந்தார்கள். தோமையார் முதன் முதல் யூதர் மத்தியில் தமது வேலையை ஆரம்பித்தார். ஓய்வு நாள்களில் யூதர் கூடியபோது, செபக்கூடத்திற்குப் போய் வேதவாக்கியங்களைச் சரியான முறையில் விளக்கம் செய்வது அவர் வழக்கமாய் இருந்தது. இதைக் கேட்டு நன்கு அறிந்த பலர் மனந்திரும்பினார்கள்.

சூலை மாதத்தின் அமாவாசை நாளன்று பிராமணர் வசிக்கும் அக்ரஹாரத்திற்குள் புகுந்தார். போகும் வழியில் ஒரு குளம் இருந்தது. அதில் சில பிராமணர்களும், பிராமணர் அல்லாதாரும் குளித்து முழுகிக் கொண்டிருந்தனர். அச் சமயம் சிலர் கையில் தண்ணீரை யெடுத்துத் தலைக்குமேல் ஆகாயத்தில் எறிந்தனர். இதைக் கண்ட தோமையார், "ஏன் அப்படித் தண்ணீரை ஆகாயத்தில் எறிகின்றீர்கள்?'' என்று ஒரு பிராமணனைக் கேட்க, அவருக்கும் பிராமணனுக்கும் பின் வருமாறு உரையாடல் தொடங்கிற்று :

பிராமணன் : தேவர்களுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறோம்.

தோமை- அப்படியானால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாதது போல் தோன்றுகிறதே! 

பிராமணன் : அது உமக்கு எப்படித் தெரியும்?

தோமை : நீங்கள் சமர்ப்பிக்கின்ற தண்ணீர்த் துளிகள் திரும்பவும் கீழே விழுந்து விடுகின்றனவே, மேலே செல்ல வில்லையே!

பிராமணன் : தண்ணீரின் இயற்கையே அப்படி; மேலே போட்டால் கீழே தான் விழும்.

தோமை ; அப்படியா! சரி. என் கடவுள் மெய்யங் கடவுள்;'' நீரையும் நிலத்தையும், மற்றும் எல்லாவற்றையும் படைத்தவர் அவர் ஒருவரே. அவருக்கு எல்லாம் கீழ்ப்படியும் இந் நீர்த்துளிகள் கீழ்ப்படிவதையும் நீங்களே பாருங்கள்'' என்று சொல்லிக் குளத்தில் இறங்கிக் கைகளில் தண்ணீரை வாரி, ஆகாயத்தில் எறிந்தார்.

அப்பொழுது ஒரு துளியேனும் கீழே வீழாமல் ஆகாயத்திலேயே அசையாது வைரக்கற்கள் போல பிரகாசித்துக் கொண்டு நின்றன. சற்றுப் பின்னர் அவை கமகமவென மணங்கமழும் மலர்களாக மாறித் தோமையார் பாதத்தில் வந்து விழுந்தன. அதைக்கண்ட மக்கள் வியப்புற்றனர்.

அவர்களில் பெரும்பாலார் குளத்தினின்று வெளியேறித் தத்தம் ஆடைகளை அணிந்து கொண்டு, தோமையாரைப் பின் பற்றினர். பலர் அவரிடமிருந்து சத்தியவேதக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மந்திரம் ஞானோபதேசம் முதலியவற்றையும் ஐயந்திரிபறக் கற்றபின் கிறிஸ்துவர்களாயினர்.

தோமையார் இன்னும் சில காலம் அங்கிருந்து, தமது போதகத்தாலும், புண்ணிய வாழ்க்கையாலும் பலரை இயேசுவிடம் கொண்டுவந்தார். புதிய கிறிஸ்தவர்களாயினும், அவர்கள் வேதத்தில் உறுதி கொண்டு தங்கள் பழைய ஆலயங்களை உடைத்துத் தகர்த்து விட்டனர். அவைகளில் பிரமாண்டமாக நின்ற ஒன்றைமாத்திரம் அழிக்காமல் அதன் கோபுரத்தின் சிகரத்தில் திருச்சிலுவையை நாட்டினர்.

கடவுளின் அருளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கிறிஸ்துவர்களைத் தொலைக்க முடியாததால், தாங்களே ஊரைவிட்டு வெளியேறத் தலைப்பட்டதோடு, அந்த ஊரில் இனிமேல் தண்ணீர்க் கூட குடிப்பதில்லை என்று வைராக்கியம் கொண்டார்கள். அவ்வூரையும் பழித்துப் பாலையூர் என்பதை மாற்றிச் 'சவக்காடு' என்று ஏளனமாய் அழைக்கத் தலைப்பட்டார்கள். பிராமணர், இன்று முதலாய் அவ் வூருக்குப் போனால் ஒன்றும் சாப்பிடாதிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்,

அப்போஸ்தலரோ, தமக்குத் துவக்கத்தில் சீடர்களான சங்காபுரி, பாக்காத்தோ மட்டம் என்போருக்குக் குருப் பட்டம் அளித்து, அங்கேயே அவர்கள் சர்வேஸ்வரனுக்காக உழைக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டுப் பாரூருக்குப் பயணமாயினார்.