இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இருதயங்களுக்கெல்லாம் அரசரும், அவைகளின் மத்திய ஸ்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயம்!

இருதயங்களின் அரசராகிய சேசுநாதர்! என்ன ஒரு அற்புதமான சிந்தனை! நம் இரட்சகரின் பிரமாணிக்கமுள்ள அவருடைய நேச மணவாளி, தன் இருதயத்தில் ஒரு சிறு சிங்காசனத்தை ஸ்தாபித்து, அதை மிக உத்தமமான புணணியங்களின மலர்களால் - நேசத்தின் பிரகாசமுள்ள சிவப்பு ரோஜாக்களாலும், கற்பின் வெண் லீலிகளாலும், தாழ்ச்சியின் அழகிய சின்ன வயலட் மலர்களாலும் - அதை அலங்கரிக்கிறாள். ஜெபமாகிய தூபம் அந்தச் சிறு சிங்காசனம் உள்ள அறைக்கு ஒரு இனிய நறுமணத்தைத் தருகிறது. அந்த அறை மிகச் சிறியதாக இருப்பதால், உன்னதமான அரசருக்கு இடம் தரும்படியாக, சகல உலகக் காரியங்களும் வெளியே வீசப்படுகின்றன. எல்லாம் தயாராக இருக்கும்போது பிரமாணிக்கமுள்ள மணவாளி தன் அரசரைச் சந்திக்கவும், அவரது சிங்காசனத்திற்கு அவரை அழைத்து வரவும் போகிறாள். நம் இருதயங்களில் சேசுவை அரசராகக் கொண்டிருப்பது எத்தகைய மகிழ்ச்சி! அவரை நம் வாழ்வுகளின் மையப் புள்ளியாக ஆக்குவது அப்போது கடினமாக இருப்பதில்லை. அவர் அருகில் இருக்கும்போது மிகக் கடினமான வேலைக்கு மத்தியிலும் கூட நம் நேசரிடம் நம்மால் மெல்லிய குரலில் பேச முடியும். சில நேரங்களில் சற்று நேரத்திற்கு நாம் அவரை மறந்து விடும்போது, அவர் திடீரென்று பேசுகிறார். அப்போது அந்தச் சின்ன இருதயம் நேசத்தில் உருகுகிறது. அவர் ஓர் அற்புதமான நேசர். அவர் பேசுவதற்கு முன் சிற்றாலயத்திற்கு நாம் வரும் வரையில் தாம் காத்திருப்பது பற்றி அவர் கவலைப்படுவதில்லை. நாம் மிகவும் மனதூன்றிச் செய்யும் வேலையின் போது அவர் நம் சிந்தனைகளுக்குள் வலுவந்தமாகப் பிரவேசிக்கிறார். தற்செயலாக ஒரு சிருஷ்டியை நோக்கி நம் கவனத்தை சற்றுத் திருப்பும்படி நம் இருதயங்கள் சோதிக்கப்படும்போது, அவர் உடனே வந்து, நாம் மனித ஆசாபாசத்தின் வலைகளில் சிக்கிக் கொண்டு, அவரை விட்டு விலகிச் சென்று விடாதபடி, நம்மைத் தம்மிடம் இழுத்துக் கொள்கிறார். சிருஷ்டிகள் நம்மை முரட்டுத்தனமாக நடத்தும்போது, நம்மைத் தேற்றும்படி அவர் அருகில் இருக்கிறார். ஓ! அவருடைய ஆறுதல் எவ்வளவு வலிமையுள்ளதாக இருக்கிறது! அவருடைய ஒரு வார்த்தை கசப்புணர்வை உடனடியாக ஆத்துமத்திலிருந்து அகற்றி விடுகிறது. வியாதி வரும்போது, வல்லமையுள்ள பாதுகாவலராக அவர் நம் அண்டையில் பிரசன்னமாயிருக்கிறார். பிரமாணிக்கமுள்ள ஆத்துமம் தனக்கு நிஜமான தீங்கு எதுவும் வர முடியாது என்றும், அந்த வியாதி ஒரு பெரிய ஆதாயமாகவும், ஒரு பெரிய அனுகூலமாகவும் மட்டுமே இருக்கும் என்றும் அறிந்து கொள்கிறது. சோதனையின் பயங்கரத்துக்குரிய இருண்ட மேகங்கள் ஆத்துமத்தின் மேல் வந்து பரவும் போது - கண்கள் பயனற்றவையாக இருக்கும் அளவுக்கு எல்லாம் மிகவும் இருட்டாக இருக்கும்போது - அப்போதுதான் இருளில் அவருடைய குரல் அச்சவசப்பட்ட ஆத்துமத்திற்கு தைரியத்தையும் சமாதானத்தையும் கொண்டு வருகிறது. என் சர்வேசுரா! அது எத்தகைய ஒரு ஆறுதல்! பரலோக வரப்பிரசாதத்தின் பிரகாசமான சூரிய ஒளியுள்ள நாட்கள் வரும்போது, அவர் ஒரு சிறு குழந்தையைப் போல நம் இருதயங்கள் களிகூரும்படி செய்கிறார். என்ன ஒரு பரம இரகசியம்! பிரபஞ்சத்தின் மாபெரும் சர்வேசுரன், ஒரு குழந்தையைப் போல இவ்வளவு சிறியவராக, தம் சிருஷ்டிகளில் ஒன்றோடு விளையாடிக் கொண்டிருப்பது! இத்தகைய நேசத்தின் ஆழத்தை யாரால் அளக்க முடியும்? இது சாத்தியமென்று யாரும் கனவு கண்டிருக்கக் கூட முடியாது! சிருஷ்டியின் இருதயத்தில் கடவுளின் மீதான பெரும் நேசத்தைத் தூண்டியெழுப்பும்படியாக, அந்த சிருஷ்டியோடு சர்வேசுரன் விளையாடிக் கொண்டிருப்பது! இது சாத்தியம்தானா? ஓ, இந்த வகையில் சர்வேசுரனுடைய நன்மைத்தனத்தை அறிந்திருக்கிற ஆத்துமம் பாக்கியமுள்ளது! உண்மையாகவே அது பூமியின் மீதுள்ள மோட்சமாயிருக்கிறது! அந்தப் பரலோகப் பேரானந்தத்தின் ஒரேயொரு நிமிடம், கடும் உழைப்பின் ஒரு வாழ்நாளின் மதிப்பைக் கொண்டுள்ளது.

இருதயத்தின் மையமான சேசுநாதர்! ஆம், நாம் நம் இருதயங்களை அவருக்கு அர்ப்பணித்தோம் என்றால், - அவரை அரசராக ஏற்படுத்தினோம் எனறால் - அவரே இருதயத்தின் உயிராகவும், மையமாகவும் இருக்கிறார். அவர் நிந்தித்து வெறுப்பவற்றை நாமும் நிந்தித்து வெறுத்து, அவர் நேசிப்பதை நாமும் நேசித்து, அவருக்காக அன்றி வேறு எதையும் திட்டமிடாமல், அவருடைய நிமித்தமாக அன்றி எதையும் நினைக்காமல், அவருடைய பரிசுத்த சித்தத்தைச் செய்வதைத் தவிர வேறு எதையும் ஆசிக்காமலிருந்து, நம் சிந்தனைகளின் மீதும், ஆசாபாசங்களின் மீதும் அவர் அரசாள நம் அவரை அனுமதிப்போமென்றால், அவர் அரசராக இருக்கிறார். நாம் செய்கிற எல்லாக் காரியங்களும், நாம் கொண்டிருக்கிற எல்லாக் காரியங்களும், நாமாக இருக்கிற எல்லாக் காரியங்களும், சாப்பிடுவது, உறங்குவது போன்ற தாழ்மையான காரியங்களும் கூட அவருக்காகவும், அவருடைய மகிமைக்காகவும் அர்ப்பணிக்கப்டுகின்றன என்றால், அப்போது உண்மையாகவே நாம் அவரை நம் இருதயங்களின் அரசராக ஏற்படுத்தியிருக்கிறோம். அவரும் தம்மையே நம் ஜீவியங்களின் மையமாக ஆக்கிக் கொள்வார். எல்லாம் சேசுவுக்காக, எல்லாம் சேசுவில், எல்லாம் சேசுவோடு! இதுவே நம் விருதுவாக்காக, நம் ஜீவியத்தின் கொள்கையாக இருக்கக்கடவது!


இருதயங்களுக்கெல்லாம் அரசும், அவைகளின் மத்திய ஸ்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே!
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!