இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சிலுவையின் மீது சேசுநாதர்

சிலுவையின் மீது சேசுநாதர்! ஒரு சர்வேசுரனுடைய அன்பின் நிரூபணத்தைப் பாருங்கள்! அவதரித்த வார்த்தையானவர் இந்த உலகின் மீது தம்மைப் பற்றி நமக்குத் தருகிற அவருடைய கடைசி வெளிப்பாட்டைப் பாருங்கள்! உண்மையில் அது துன்பத்தின் வெளிப்பாடாகவும், ஆனால், இன்னும் அதிகமாக, நேசத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. அர்ச். பவுலா பிரான்சிஸ் ஒரு முறை சிலுவையில் அறையுண்ட சேசுநாதரின் ஆளுமையில் தேவசிநேகத்தைப் பற்றித் தியானித்துக் கொண்டிருந்தபோது, பரவச நிலையில் பொதியப்பட்டவராக மூன்று முறை உரத்த சத்தமாக: ""ஓ சர்வேசுரா--நேசமே! ஓ சர்வேசுரா--நேசமே! ஓ சர்வேசுரா--நேசமே!'' என்று வியந்தபடி கூறினார். இதன் மூலம் நம் மீதுள்ள அன்பிற்காக மரிக்கத் திருவுளம் கொண்டதில் நமக்குக் காட்டப்பட்ட தேவசிநேகம் எவ்வளவு பெரியதாக இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது என்று குறித்துக் காட்ட அவர் விரும்பினார்.

ஓ என் நேச சேசுவே, இந்தச் சிலுவையின் மீது உமது திருச் சரீரத்தை நான் பார்த்தால், காயங்களையும், இரத்தத்தையும் தவிர வேறு எதையும் நான் பார்க்கவில்லை. அதன்பின் நான் உமது திரு இருதயத்தை நோக்கி என் கவனத்தைத் திருப்பினால், அது முழுமையாகத் துன்பத்திலும், துயரத்திலும் மூழ்கியுள்ளதை நான் காண்கிறேன். ஆனால் நீர் இன்னும் உம்முடையதாகக் கொண்டிருக்கிற உமது மகத்துவத்தின் அடையாளங்கள் என்ன? அந்த அவமான மரத்தைத் தவிர வேறு எந்த இராஜரீக சிங்காசனத்தையும் நான் காணவில்லை ; காயப்பட்டும், இரத்தம் சிந்திக்கொண்டும் இருக்கிற உமது மாம்சத்தைத் தவிர வேறு எந்த அரச இரத்தாம்பர உடையையும் நான் காணவில்லை; உம்மை வாதிக்கும் அந்த முட்களின் தொகுதியைத் தவிர வேறு எந்த அரச மகுடத்தையும் நான் காணவில்லை. ஆ, இவையெல்லாம் நீர் அன்பின் அரசராக இருப்பதை எவ்வளவு தீவிரமாக அறிக்கை யிடுகின்றன! ஆம், ஏனெனில் இந்தச் சிலுவையும், இந்த ஆணிகளும், இந்த முள்முடியும், இந்தக் காயங்களுமான அனைத்தும் அன்பின் அடையாளங்களாக இருக்கின்றன.

சேசுநாதர் சிலுவையிலிருந்து நமது தயவிரக்கத்தை விட அதிகமாக நமது அன்பையே கேட்கிறார். அவர் நமது தயவிரக்கத்தையே கேட்டாலும் கூட, அது அவரை நாம் நேசிக்க நம்மைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே அதைக் கேட்கிறார். அளவற்ற நன்மைத்தனமாக இருக்கிற அவர் ஏற்கெனவே நம் முழு அன்பிற்கும் தகுதியுள்ளவராக இருக்கிறார்; ஆனால் சிலுவையின் மீது வைக்கப்பட்டபோது, நாம் அனைவரும், குறைந்த பட்சம் தயவிரக்கத்தினாலாவது, தம்மை நேசிக்க வேண்டுமென்று அவர் தேடுவதாகத் தோன்றுகிறார். ஆ என் சேசுவே, நீரே மெய்யான சர்வேசுரன் என்று விசுவாச அறிக்கையிட்டுக் கொண்டும், உம்மைச் சிலுவையின் மீது கண்டுதியானித்துக் கொண்டும் இருக்கும் எந்த மனிதன்தான் உம்மை நேசிக்காமல் இருப்பான்? அந்த அன்பின் சிம்மாசனத்திலிருந்து ஆன்மாக்களை நோக்கி எத்தகைய நெருப்பாலான அம்புகளை நீர் எய்து கொண்டிருக்கிறீர்! ஓ எத்தனை இருதயங்களை உம்முடைய அந்தச் சிலுவையிலிருந்து நீர் உம்மிடம் ஈர்த்திருக்கிறீர்! ஓ என் சேசுவின் திருக்காயங்களே! ஓ அன்பின் அழகிய தீச்சூளைகளே! நரக நெருப்பால் அன்றி, வாதைகளால் எரிக்கப்பட்டு எனக்காக மரிக்க சித்தங்கொண்டவராகிய சர்வேசுரன் மீது எனக்குள்ள பரிசுத்த அன்பின் சுவாலைகளால் நானும் பற்றியெரியும்படியாக, உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஓ என் பிரியமுள்ள மீட்பரே, உம்மை நோகச் செய்ததற்காகத் துக்கப்பட்டு, உம்மை நேசிக்க ஏக்கம் கொண்டு உம்மிடம் திரும்பி வரும் ஒரு பாவியை ஏற்றுக்கொள்ளும். நான் உம்மைநேசிக்கிறேன், நான் உம்மை நேசிக்கிறேன், ஓ அளவற்ற நன்மைத்தனமே, ஓ அளவற்ற சிநேகமே! ஓ மரியாயே, அழகிய நேசத்தின் மாதாவே, என்மீதுள்ள அன்பினால் சுட்டெரிக்கப்பட்டு மரிதத சர்வேசுரன் மீதுள்ள நேசத்தால் நானும் சுட்டெரிக்கப் படும்படியாக, எனக்கும் நேசத்தை அதிகமாகப் பெற்றுத் தாரும்.