மரியாயும் எலிசபெத்தம்மாளும் தங்கள் குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறார்கள்.

2 ஏப்ரல்  1944.

காலை வேளை, அடித்தள அறை ஒன்றில் மாதா அமர்ந்து தையல் வேலை செய்கிறார்கள்.  வீட்டு அலுவலில் எலிசபெத்தம்மாள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்கிறாள்.  மாதாவின் அறைக்குள் வரும்போதெல்லாம் தவறாமல் அவர்களின் இளம் பொன் சிரசை சீராட்டுகிறாள்.  மாதாவின் தலை சற்று மங்கிய சுவர்களின் பின்னணியில் துலக்கமாகத் தெரிகிறது.  தோட்டப் பக்கமாய்த் திறந்திருக்கிற கதவின் வழியாக  வருகிற அழகிய சூரிய ஒளியில் அது இன்னும் துலங்கிக் காணப்படுகிறது.

மாதா நாசரேத்தில் செய்திருந்த பூவேலையைப் பார்க்க எலிசபெத் குனிகிறாள்.  அதன் அழகைப் பாராட்டுகிறாள்.

“நெய்ய வேண்டிய கொஞ்சம் லினனும் இருக்கிறது” என்று மாதா கூறுகிறார்கள்.

“உம் பிள்ளைக்கா?” 

“இல்லை.  நான் நினையாதிருக்கும் போதே அது என்னிடம் இருந்தது...” என்று கூறி நிறுத்துகிறார்கள்.

ஆனால் எனக்கு விளங்குகிறது.  “நான் கடவுளின் தாயாயிருக்க வேண்டும் என்று நினையாதிருக்கும் போதே” என்பது.

“ஆனால் இப்பொழுது நீர் அதை அவருக்கு உபயோகிக்க வேண்டியிருக்குமே.  அது நல்ல சரக்கா?  மெல்லியதா?  சிசுக்களுக்கு மிக மெல்லிய பொருள்கள் தேவைப்படும்.” 

“ஆமாம்.” 

“நானும் தொடங்கினேன்... பிந்தித்தான்.  ஏனென்றால் இது தீயவனின் ஏமாற்றுதலில்லை என்று நிச்சயமாயிருக்க விரும்பினேன்.  சாத்தானிடமிருந்து வர முடியாத மகிழ்ச்சியை நான் என்னுள் உணர்ந்தேன்தான்.  அப்படியென்றாலும் நான் அதிக வேதனையடைந்தேன்.  இந்த நிலையில் நான் இருப்பதற்கு என் வயது மிக அதிகம் மரியா.  நான் அதிகக் கஷ்டப்பட்டேன்.  உமக்குக் கஷ்டமாயில்லையா?...” 

“இல்லை.  எனக்குக் கஷ்டமாயில்லை.  இப்போதிருப் பதைப்போல் இவ்வளவு நலமாக நான் இருந்ததில்லை.” 

“அது சரி.  அது அப்படித்தான் இருக்கும்.  உம்மிடம்... உம்மிடம் எந்த மாசும் இல்லை - கடவுள் உம்மைத் தம் தாயாகத் தெரிந்து கொண்டதால்.  அதனால்தான் நீர் ஏவாளின் வேதனைகளுக்கு உட்படவில்லை.  நீர் தாங்கியிருப்பவர் பரிசுத்தர்.”

“என் இருதயத்தில் பாரமல்ல.  ஓர் இறக்கை இருப்பது போல் உணருகிறேன்.  எல்லா மலர்களையும், வசந்தகாலத்தில் பாடும் எல்லாப் பறவைகளையும், எல்லாத் தேனையும், எல்லா சூரிய ஒளியையும் என்னுள் கொண்டிருப்பது போல் உணருகிறேன்... ஓ! நான் எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறேன்!” 

“ஆசீர்வதிக்கப்பட்ட மரியா!  உம்மை நான் கண்டதி லிருந்து, பாரத்தையோ, சோர்வையோ, வேதனையையோ நானும் உணரவில்லை.  புதிதாக, இளமையாக, ஸ்திரீயின் மாம்ச துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றதுபோல் காணப்படுகிறேன்.  உம்முடைய குரல் சத்தத்தில் மகிழ்ச்சியுடன் என் குழந்தை துள்ளியது.  இப்பொழுது தன் ஆனந்தத்தில் அமைதியாயிருக்கிறான்.  ஓர் உயிருள்ள தொட்டிலில் இருப்பது போல் என்னில் அவன் இருப்பதாக உணருகிறேன்.  அவன் திருப்தியோடும் சந்தோஷத்தோடும் உறங்குவதைக் காண்கிறேன்.  தாய்ப் பறவையின் இறக்கைக்கடியில் சிறு பறவை சுவாசிப்பதுபோல் மூச்சு விடுகிறான்... இனி நான் வேலை செய்யத் தொடங்குவேன்... அவன் எனக்குப் பாரமாயிருக்கமாட்டான்.  எனக்குப் பார்வை தெளிவாயில்லை.  ஆயினும்...” 

“கவலைப்படாதிருங்கள்.  உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சேர்த்து நானே நூல் நூற்று நெசவும் செய்வேன்.  என் பார்வை நன்றாக உள்ளது.  நான் துரிதமாகச் செய்துவிடுவேன்.”

“ஆனால் மரியா, உமது குழந்தைக்கு...” 

“ஓ! அதற்குப் போதிய காலம் உள்ளது... முதலில் உங்களுக்கு வேண்டியவற்றை நான் கவனிக்கிறேன்.  ஏனென்றால் உங்கள் குழந்தை விரைவில் பிறப்பான்.  சேசுவுக்குத் தேவையானதை அதற்குப் பிறகு கவனிப்பேன்.” 

மாதாவின் பேச்சும் குரலும் எவ்வளவு இனிமையா யிருக்கின்றன என்பதைச் சொல்ல யாராலும் இயலாது.  அவர்களின் கண்கள் இனிய மகிழ்ச்சியான கண்ணீர்களுடன் எவ்வளவு பிரகாசமாயிருக்கின்றன!  “சேசு” என்ற பெயரை தெளிந்த நீல வானத்தை நோக்கியபடி எப்படிப்பட்ட புன்முறுவலுடன் அவர்கள் சொல்கிறார்கள்!  “சேசு” என்று செல்வதிலேயே அவர்கள் மெய்மறந்து போகிறார்கள்.

“ஆ!  என்ன அழகான பெயர்!  கடவுளின் குமாரனுடைய பெயர்!  நம் இரட்சகருடைய பெயர்!” என்று ஆச்சரியத்தோடு சொல்கிறாள் எலிசபெத்தம்மாள்.

அப்போது மாதா துயரமடைந்து எலிசபெத்தம்மாளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டு:  “ஓ எலிசபெத்!  நான் இங்கு வந்தபோது பரிசுத்த ஆவியினால் ஒளிபெற்ற நீங்கள், இந்த உலகம் அறியாததை தீர்க்கதரிசனமாய்க் கூறிய நீங்கள் சொல்லுங்கள், உலகத்தை இரட்சிக்க என் குமாரன் என்ன பாடுபட வேண்டியிருக்கும்?  தீர்க்கதரிசிகள்... ஓ! தீர்க்கதரிசிகள் இரட்சகரைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள்?  இசையாஸ்... இசையாஸ் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா?  “துயர மனிதன் அவர்.  அவருடைய காயங்களால் நாம் குணமாக்கப்படுகிறோம்.  நமது குற்றங்களுக்காக அவர் ஊடுருவப்பட்டார்.  நம் பாவங்களுக்காக அவர் நசுக்கப்பட்டார்.  அவரை துன்பங்களால் நொறுக்க யாவே சித்தங்கொண்டார்.  அவர் தீர்ப்பிடப்பட்டபின் உயர்த்தப்பட்டார்.” என்ன உயர்த்தப்படுதலை இங்கே அவர் குறிப்பிடுகிறார்?  அவரை செம்மறி என்கிறார்கள்.  பாஸ்காவின் செம்மறியை, மோயீசனின் செம்மறியை என்னால் நினைக்காதிருக்க முடியவில்லை.  மோயீசனால் ஒரு சிலுவையில் உயர்த்தப்பட்ட சர்ப்பத்துடன்தான் நான் இதை இணைக்கிறேன்.  எலிசபெத், எலிசபெத்!... என் மகனுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்?  உலகத்தை இரட்சிக்க அவர் என்ன துன்பம் அனுபவிக்க இருக்கிறாரோ?” என்று கூறியபடி மாதா அழுகிறார்கள்.

எலிசபெத்தம்மாள் மாதாவுக்கு ஆறுதல் கூறுகிறாள்:  “மரியா அழாதீர்.  அவர் உம்முடைய குமாரன்.  ஆயினும் அவர் தேவகுமாரனாகவும் இருக்கிறார்.  கடவுள் தம் குமாரனைப் பார்த்துக் கொள்வார்.  அவருடைய தாயாகிய உம்மையும் பராமரிப்பார்.  அநேகர் அவர் மட்டில் குரூரமாயிருந்தாலும் எத்தனையோ பேர் அவரை நேசிப்பார்கள்.  ஏராளமான பேர்... நித்திய காலத்திற்கும் அவரை நேசிப்பார்கள்.  உலகம் உமது குமாரனை உற்றுப் பார்த்து அவரோடு உம்மையும் ஆசீர்வதிக்கும்.  அவர்கள் உம்மை ஆசீர்வதிப்பார்கள்.  ஏனென்றால் இரட்சண்யம் பொங்கிப் பாயும் சுனை நீரே. உமது குமாரனின் கதி எப்படிப்பட்டது!  சிருஷ்டிப்புகள் யாவற்றிற்கும் அரசனாக அவர் உயர்த்தப்படுவார்.  அரசர்!  அதை எண்ணிப் பாரும் மரியா.  ஏனென்றால் சிருஷ்டி யாவற்றையும் அவர் இரட்சிப்பார்.  அதனால் அவர் யாவற்றிற்கும் இராஜாவாயிருப்பார்.  உலகத்திலும், அது இருக்கிற காலத்தில் அவர் நேசிக்கப்படுவார்.  என்னுடைய குமாரன் அவருக்கு முன் சென்று அவரை நேசிப்பான்.  சம்மனசு சக்கரியாஸிடம் அதைச் சொன்னார்.  அதை அவர் எனக்கு எழுதிக் காட்டினார்.  சக்கரியாசை ஊமையாகப் பார்ப்பது எவ்வளவு வேதனையாயுள்ளது!  ஆனால் குழந்தை பிறந்தபின் அதன் தந்தையும் தன் தண்டனையிலிருந்து விடுதலை பெறுவார் என நம்புகிறேன்.  நீரும் மன்றாடுவீரா?  ஏனென்றால் கடவுளின் வல்லமையின் ஆசனமும், உலகத்தினுடைய மகிழ்ச்சியின் காரணமும் நீரே.  இவ்வரத்தை அடைவதற்காக நான் என்னால் முடிந்த அளவு ஆண்டவருக்கு நேர்ந்துள்ளேன்.  என் குழந்தையை அவருக்கு அர்ப்பணம் செய்கிறேன்.  ஏனெனில் அது அவருக்கே சொந்தமாயிருக்கிறது.  அவரோ தம் ஊழியக்காரிக்கு “தாய்” என்றழைக்கப்படும் மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காக இக்குழந்தையைக் கடனாகத் தந்துள்ளார்.  இக்குழந்தை கடவுள் எனக்கு என்ன செய்துள்ளார் என்பதற்கு ஒரு சாட்சியாக இருக்கிறது.  அவன் பெயர் “அருளப்பன்” என்றிருக்க ஆசைப்படுகிறேன்.  என் மகன் ஒரு அருட்பிரசாதமல்லவா?  அதை கடவுள் எனக்குத் தரவில்லையா?” என்று கூறுகிறாள்.

மாதா அதற்குப் பதிலாக: “நிச்சயம் உங்களுக்கு கடவுள் அதை அளிப்பார்.  உங்களுடன் நானும் மன்றாடுவேன்...” என்கிறார்கள்.

“அவர் ஊமையாயிருப்பதைப் பார்த்து நான் அதிக வேதனைப்படுகிறேன்... ” எலிசபெத்தம்மாள் அழுகிறாள்.  “அவர் என்னிடம் பேச முடியாதிருப்பதால் எழுதிக் காட்டும்போது, அவருக்கும் எனக்குமிடையே மலைகளும் சமுத்திரங்களும்  இருப்பதாகத் தோன்றுகிறது.  இத்தனை ஆண்டுகளாக இனிய உரையாடலுக்குப் பின் இப்போ அவருடைய வாயில் மவுனமே உள்ளது.  அதுவும் இப்போது, பிறக்க இருப்பது யார் என்பது பற்றிப் பேசுவது எவ்வளவு நன்றாயிருக்கும்.  அவர் எனக்குப் பதில்கூற சயிக்கினைகளால் முயற்சித்து சங்கடப்படுவதைத் தவிர்க்க நான் அவருடன் பேசுவதைக் கூட தவிர்க்கிறேன்.  நான் அதிகம் அழுதிருக்கிறேன்.  உமக்காக எவ்வளவு ஆவலாயிருந்தேன்!  ஊர் ஜனங்கள் கவனிக்கிறார்கள், பேசுகிறார்கள், குறை கூறுகிறார்கள்.  உலகம் அப்படி இருக்கிறது.  ஆனால் ஒருவனுக்கு வேதனையோ மகிழ்ச்சியோ உள்ளபோது குறை கூறப்படுவதல்ல, கண்டுபிடிக்கப் படுவதே தேவை.  ஆனால் இப்பொழுது என் வாழ்க்கை முழுவதும் முன்னேறியிருப்பதாகத் தெரிகிறது.  நீர் இங்கு வந்ததிலிருந்து என்னில் ஒரு மகிழ்ச்சியை நான் உணருகிறேன்.  என்னுடைய சோதனை சீக்கிரம் முடிவடைந்து நான் விரைவிலேயே முழு மகிழ்ச்சியுடன் இருப்பேன் என உணருகிறேன்.  அது அப்படித்தான்.  நான் கூறுவது சரிதானே?  நான் எல்லாவற்றிற்கும் என்னைக் கையளித்துவிட்டேன்.  என் கணவரை ஆண்டவர் மன்னித்தாலே போதும்.  அவர் மீண்டும் ஜெபிப்பதை நான் கேட்டாலே போதும்!”

மாதா, எலிசபெத்தம்மாளைத் தேற்றுகிறார்கள்.  அவளுடைய கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக அவளை சூரியன் பிரகாசிக்கிற தோட்டத்தில் சற்று உலாவ அழைக்கிறார்கள்.  இருவரும் ஒரு நன்கு பராமரிக்கப்பட்ட செடிப் பந்தலின் கீழ் நடக்கிறார்கள்.  அங்கே ஒரு பழைய கோபுரம் போன்ற அமைப்பில் உள்ள துவாரங்களில் புறாக்கள் உள்ளன.  மாதா கொஞ்சம் தானியம் ஒரு பையில் எடுத்து வந்து புறாக்களுக்குப் போடுகிறார்கள்.  அவை அவர்களுடைய தலையிலும் தோள், கைகளிலும் சுற்றிச் சுற்றி வந்து அமர்ந்து மகிழ்ச்சியால் இறக்கையடித்துக் கூவுகின்றன.  அவர்களுடைய உதட்டிலும், பற்களிலும் கொத்துகின்றன.  அவர்களின் கையிலிருந்து தானியத்தை எடுக்க அலகை நீட்டுகின்றன.  புறாக்களின் பேராசையைக் கண்டு அவர்கள் சிரிக்கிறார்கள்.

“இந்தப் புறாக்கள் உம்மை எப்படி விரும்புகின்றன!” என்கிறாள் எலிபெத்தம்மாள்.  “நீர் இங்கு வந்து சில நாட்கள்தான் ஆகின்றன.  அதற்குள் அவை என்னை விட உம்மேல் அதிக பாசமாயிருக்கின்றனவே.  இவ்வளவிற்கும் நான் எப்போதும் அவைகளைக் கவனித்துக் கொண்டு வருகிறேனே” என்று சொல்கிறாள்.

அவர்கள் இருவரும் அப்படியே நடந்து பழத் தோட் டத்தின் அற்றத்திலிருக்கிற ஆட்டுப்பட்டிப் பக்கம் வருகிறார்கள்.  அங்கே சுமார் இருபது வெள்ளாடுகள் தங்கள் சிறு குட்டிகளுடன் காணப்படுகின்றன.

“மேய்ச்சலிலிருந்து திரும்பி விட்டாயா?” என்று சின்ன இடையனிடம் மாதா அன்பாகக் கேட்கிறார்கள்.

“ஆம்.  அப்பா சொன்னார்கள் மழை வரப் போகிறது, வீட்டுக்குப் போ, சில ஆடுகள் ஈனப் போகின்றன, அவைகளுக்கு உலர்ந்த தழையும், காய்ந்த இடமும் இருக்கும்படி கவனித்துக் கொள் என்று சொன்னார்கள்” எனப் பதிலளிக்கிறான் சிறுவன். பின் “அதோ அப்பா வருகிறார்கள்” என்று காட்டுப் பக்கமாய்ச் சுட்டிக் காட்டுகிறான்.  அங்கே நடுங்கும் குரலில் கத்திக் கொண்டே வருகிற ஓர் ஆட்டின் குரல் கேட்கிறது.

ஒரு குழந்தையைப் போல் அழகான ஓர் ஆட்டுக் குட்டி மாதா மேல் வந்து உராய்கிறது.  மாதா அதைத் தடவிக் கொடுக்கிறார்கள்.  பின் அந்தச் சின்ன இடையன் கொடுக்கிற புதுப் பாலை எலிசபெத்தம்மாளும் மாதாவும் பருகுகிறார்கள்.

அப்போது ஆடுகளுடன் இடையன் வருகிறான்.  அவன் உடல் முழுவதும் கரடிபோல் முடியாயிருக்கிறது.  ஆனால் அவன் நல்ல மனிதனாகக் காணப்படுகிறான்.  கத்துகிற ஓர் ஆட்டைத் தோளில் சுமந்து கொண்டிருக்கிறான்.  அதை மெல்ல கீழே இறக்கி விட்டுச் சொல்கிறான்:  “இந்த ஆடு ஈனப் போகிறது.  கஷ்டப் பட்டுத்தான் நடக்கிறது.  நேரத்தோடு இங்கு வரும்படியாக இதைத் தோளில் போட்டுக் கொண்டு வேகமாக வந்தேன்” என்கிறான்.  நொண்டியபடி நடக்கிற அந்த ஆட்டை சிறுவன் ஆட்டுப்பட்டிக்கு நடத்திக் கொண்டு போகிறான்.

மாதா ஒரு கல்லில் அமர்ந்து ஆட்டுக் குட்டிகளுக்கும் செம்மறிக் குட்டிகளுக்கும் கிளாவர் தழையைக் கொடுத்து விளையாடுகிறார்கள்.  ஒரு வெள்ளையும் கறுப்புமான ஆட்டுக் குட்டி அவர்கள் தோள்மேல் தன் சின்னக் கால்களைப் போட்டு தலைமுடியை முகர்ந்து பார்க்கிறது.  “இது ரொட்டியல்ல.  நாளைக்கு உனக்குக் கொஞ்சம் ரொட்டித் துண்டுகள் கொண்டு வருகிறேன்.  இப்போது சமர்த்தாயிரு” என்கிறார்கள்.

எலிசபெத்தம்மாளும் மகிழ்ந்து சிரிக்கிறாள்.  

செடிப் பந்தலில் படர்ந்துள்ள திராட்சைக் காய்கள் பருமனாகி வருகின்றன.  சிலகாலம் ஆகியிருக்க வேண்டும்.  ஏனென்றால் ஆப்பிள் காய்கள் சிவக்கத்தொடங்கியுள்ளன.  தேனீக்கள் அத்திமர முதிர்ந்த மலர்களில் ரீங்காரமிடுகின்றன.  அந்தப் பந்தலடியில் மாதா அமர்ந்து வேகமாய் நூல் நூற்கிறார்கள்.

எலிசபெத்தம்மாளின் நடை கனத்திருக்கிறது.  மரியா அவளைக் கவனத்துடனும் பட்சத்துடனும் பார்க்கிறார்கள்...  மாதாவின் நங்கை முகம் மாறி ஸ்திரீயின் தோற்றமாகியிருக்கிறது.

நேரம் இருட்டி விட்டதால் அவர்கள் வீட்டிற்குட் செல்கிறார்கள்.  அறையில் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.  இராவுணவிற்கு இன்னும் இருக்கிற நேரத்தில் மரியா நெசவில் ஈடுபடுகிறார்கள்.  

“இந்த வேலை செய்வதில் உமக்கு சலிப்பே ஏற்படுவதில்லையா?” என்று கேட்கிறாள் எலிசபெத்.

“எனக்கு சலிப்பாக இல்லை.” 

“இந்த வெப்பம் எனக்குத் தளர்வைக் கொடுக்கிறது.  நான் இப்பொழுது வேதனைப்படவில்லை.  என் முதுவயதிற்குத்தான் இது பாரமாயிருக்கிறது.” 

“திடமாயிருங்கள். உங்களுக்கு சீக்கிரம் விடுதலை கிடைக்கும்.  அப்போது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைவீர்கள்!... என் குமாரன், என் சேசு எப்படியிருப்பார்?” 

“உம்மைப் போல் அழகாயிருப்பார் மரியா.” 

“இல்லை, அதிக அழகாயிருப்பார்.  அவர் கடவுள்.  நான் அவருடைய பணிப்பெண்.  நான் என்ன கேட்டேனென்றால் அவர் சிவப்பாயிருப்பாரா கறுப்பாயிருப்பாரா?  அவருடைய கண்கள் தெளிந்த வானத்தைப் போலிருக்குமா மலைமானின் விழிகளைப் போலிருக்குமா?  ஒரு கெருபினைவிட அதிக அழகுடன் அவர் இருப்பாரென நினைக்கிறேன்:  பொன்னிற சுருள் முடியோடும், ஆகாயத்தில் நட்சத்திரங்கள் தோன்றும் போது கலிலேயாக் கடல் கொண்டிருக்கும் நிறத்தைப் போன்ற கண்களுடனும், சூரிய ஒளியில் விளைந்து வெடித்த மாதுளை போல் சிவந்த சிறு வாயுடனும், இந்த வெளிறிய ரோஜாக் கன்னங்களுடனும் இருப்பார்.  ஒரு லீலியின் கிண்ணத்திற்குள் அடங்கிவிடக் கூடிய,  இரு சிறு கைகளுடன் என் உள்ளங்கையில் நான் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு மலரின் இதழைவிட அதிக மென்மையும் மிருதுவுமான பாதங்களுடன் இருப்பார்.  அவரைப் பற்றிய என் ரூபிகரம் இயற்கை எனக்குக் காட்டுகிற எல்லா நல்ல பொருள்களிலுமிருந்து உண்டாகிறது.  அவருடைய குரலையும் என்னால் கேட்க முடிகிறது.  அவர் பசியாயிருக்கையிலும் அவருக்கு உறக்கம் வரும்போதும் அவர் அழுவார்.  அவர் அழும் ஒவ்வொரு தடவையும் என் இருதயம் துளைக்கப்படும்.  அது எப்போதும் எனக்கு பெரிய வேதனையாக இருக்கும்.  அவர் அழும்போது அவருடைய குரல், பிறந்து சில மணி நேரமே ஆன ஆட்டுக்குட்டி தன் தாயின் மடியைத் தேடியும் உறக்கத்திற்கு அதன் உஷ்ணமான மயிர்க் கம்பளியைத் தேடியும் கூப்பிடுவது போலிருக்கும்.  அவர் சிரிக்கும்போது ஒரு ஆனந்தமான நிறைவோடு தன் சின்னக் கூட்டிலிருக்கும் சின்னப் புறா, மகிழ்ச்சியோடு கூவுவது போலிருக்கும்.  அப்போது என் மகன் மீதுள்ள அன்பினால் என் இருதயம் மோட்சத்தால் நிரம்பியிருக்கும்.  அவரை நான் என் நேசராகக் கொள்வேன்.  ஏனென்றால் அவர் என் கடவுளாயிருக்கிறார்.  அப்படி அவரை நேசிப்பது அர்ப்பணிக்கப் பட்டுள்ள என் கன்னிமைக்கு எதிராயிராது.  அவர் தன் முதல் நடை பயிலும் போது... ஒரு சிறு பறவை, மலர் நிரம்பும் மேட்டு நிலத்தில் தத்துவது போலிருக்கும்.  அந்த மேட்டு நிலம் அவருடைய தாயின் இருதயமாயிருக்கும்.  அவர் பாதங்கள் ஊறு செய்யும் எதிலும் நடவாதபடி அந்த ரோஜா நிற பாதங்களுக்கடியில் அவளுடைய இருதயம் எல்லா அன்போடும் வைக்கப்படும்.  ஓ!  நான் அவரை எப்படி நேசிப்பேன்!  என் மகனை, என் பிள்ளையை!   சூசையும் அவரை நேசிப்பார்.” 

“சரி. நீர் அதை சூசையிடம் சொல்ல வேண்டுமே.” 

மாதாவின் முகம் வாடுகிறது.   பெருமூச்சு விடுகிறார்கள்.  “ஆம்.  அவரிடம் நான் இதைச்சொல்ல வேண்டியதுதான்... மோட்சமே அவரிடம் இதை அறிவித்து விடாதா?  இதைச் சொல்வது எளிதல்லவே.” 

“நான் சொல்லட்டுமா?  அருளப்பனுடைய விருத்தசேதனத் திற்கு வரும்படி அவரை அழைக்கலாம்...” 

“வேண்டாம்.  தேவ குமாரனின் தந்தையாக எண்ணப்படும் மகிழ்ச்சிக்குரிய அவருடைய பாக்கியத்தைப் பற்றி அவருக்கு அறிவிக்கும் அலுவலை நான் ஆண்டவரிடம் ஒப்படைத்துள்ளேன்.  அவர் அதைச் செய்வார்.  அந்த மாலையில் ஆவியானவர் என்னிடம்:  “நீ மவுனமாயிரு.  உன் நீதியை வெளிப்படுத்தும் அலுவலை என்னிடம் விட்டுவிடு” என்றுரைத்தார்.  அவர் அவ்வாறே செய்வார்.  கடவுள் பொய் கூறமாட்டார்.  இது ஒரு பெரிய துன்ப சோதனை.  ஆயினும் நித்திய பிதாவின் உதவியுடன் அது மேற்கொள்ளப்படும்.  ஆண்டவருடைய தயாளம் எனக்குச் செய்துள்ளதை யாரும் என் வாயினால் அறியக் கூடாது.  தேவ ஆவியானவர் உங்களுக்கு அதை வெளிப்படுத்தியதால் நீங்கள் இதற்கு விதிவிலக்காயிருக்கிறீர்கள்” என்கிறார்கள் மரியா.

“இதை நான் யாரிடமும், சக்கரியாஸிடம் கூட கூறவில்லை.  அவர் இதைப் பற்றி அதிக மகிழ்ச்சியடைந்திருப்பார்.  சுபாவப்படியே நீர் தாயாயிருப்பதாகவே அவர் எண்ணிக் கொண்டிருக்கிறார்” என்கிறாள் எலிசபெத்தம்மாள்.

“அது எனக்குத் தெரிகிறது.  நான் விவேகத்தினிமித்தமே இத்தீர்மானத்திற்கு வந்தேன்.  சர்வேசுரனுடய இரகசியங்கள் புனிதமானவை.  ஆண்டவரின் சம்மனசானவர் என் தெய்வீகத் தாய்மையை சக்கரியாசுக்கு அறிவிக்கவில்லை.  கடவுள் விரும்பியிருந்தால் அவர் அதை அறிவித்திருப்பார்.  ஏனென்றால் என்னிடத்தில் தமது வார்த்தையானவரின் மனிதாவதாரத்திற்குரிய காலம் மிக அண்மையிலிருந்தது அவருக்குத் தெரியும்.  ஆனால் உங்களுடைய காலம் கடந்த தாய்மை நடக்க முடியாததென ஒதுக்கிற சக்கரியாசிடமிருந்து தேவன் இந்த மகிழ்ச்சியின் ஒளியை மறைத்து விட்டார்.  நீங்கள் தெரிந்துள்ளபடி நான் தேவ சித்தத்துக்கு இணங்கினேன்.  என்னுள் வாழ்கிற இரகசியத்தை நீங்கள் கண்டு கொண்டீர்கள்.  சக்கரியாஸ் ஒன்றையும் காணவில்லை.  கடவுளுடைய வல்லமைக்கு முன்னால் அவருடைய விசுவசியாமை என்னும் திரை அகலும் வரை அவர் சுபாவத்திற்கு மேலான வெளிச்சங்களிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்.” 

எலிசபெத்தம்மாள் பெருமூச்சு விட்டு மவுனமாகிறாள்.

சக்கரியாஸ் உள்ளே வருகிறார்.  சில பார்ச்மென்ட் காகிதங்களை மாதாவிடம் கொடுக்கிறார்.  மாலை உணவிற்கு முன் ஜெபிக்கும் நேரம் அது.  சக்கரியாசுக்குப் பதிலாக மாதா சத்தமாக ஜெபிக்கிறார்கள்.  பின் உணவருந்த அமருகிறார்கள்.

“நீர் இங்கிருந்து சென்றபின் எங்களுக்கு செபிக்க ஆளில்லாமல் நாங்கள் துயரப்படப் போகிறோம்” என்று கூறி ஊமையான சக்கரியாசைப் பார்க்கிறாள் எலிசபெத்.

மாதா சக்கரியாசைப் பார்த்து: “அப்பொழுது நீங்கள் ஜெபிப்பீர்கள்” என்று கூறுகிறார்கள்.

சக்கரியாஸ் தலையை அசைத்து, காகிதத்தில் இவ்வாறு எழுதுகிறார்:  “மற்றவர்களுக்காக இனி ஒருபோதும் என்னால் ஜெபிக்க முடியாது.  என் தேவனை நான் சந்தேகப்பட்ட போது, நான் அபாத்திரனாகி விட்டேன்.” 

“இல்லை.  நீங்கள் ஜெபிப்பீர்கள்.  கடவுள் மன்னிக்கிறார்” என்கிறார்கள் மரியா.

சக்கரியாஸ் தன் கண்ணீரைத் துடைத்தபடி பெருமூச்செறிகிறார்.

உணவு முடிந்தபின் மாதா நெசவுத் தறிக்குப் போகிறார்கள்.

“வேண்டாம் மரியா, உமக்குக் களைப்பு ஏற்படும்.” 

“உங்கள் குழந்தைக்கு, தாவீது வம்ச அரசனின் முன்னோடிக்குத் தகுதியான உடைகளைத் தயாரிக்க விரும்புகிறேன்.  உங்கள் காலம் நெருங்குகிறதே” என்கிறார்கள் மாதா.

அப்போது சக்கரியாஸ் இப்படி எழுதிக் கேட்கிறார்: “அவ்வரசர் யாரிடமிருந்து பிறப்பார்?  எங்கே பிறப்பார்?” 

“தீர்க்கதரிசிகள் கூறியபடியும், நித்திய பிதாவின் தெரிந்தெடுப்பின்படியும், உந்நத ஆண்டவர் செய்வதெல்லாம் நன்றாகவே செய்யப்படும்.” 

சக்கரியாஸ் மீண்டும் எழுதுகிறார்:  “அப்படியானால் யூதாவின் பெத்லகேமில்தான்!  எலிசபெத் நாம் போய் அவரை ஆராதிப்போம்.  நீயும் சூசையுடன் பெத்லகேமுக்கு வருவாயல்லவா?” 

மாதா நெசவுத் தறியில் தலை கவிழ்ந்தபடியே “நான் வருவேன்” என்று கூறுகிறார்கள்.

காட்சி முடிகிறது.