இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நல்ல ஆலோசனை மாதாவே!

எம்மனிதனும் பிறர் உதவியின்றி இவ்வுலகில் வாழ்க்கை நடத்துதல் அரிது. ஏதாவது ஒரு விஷயத்தில் பிறர் உதவி அவனுக்கு அவசியம். நமது அனுதின வாழ்க்கையைச் சற்று நோக்கினால், இதன் உண்மை விளங்கும்; பல விஷயங்களில் நாம் பிறர் உதவியை நாடுகிறோம். “ஆலோசனை கேட்டலும்” இவைகளில் ஒன்று.

வீடு கட்ட விரும்புமொருவன் மேஸ்திரி ஒருவனிடம் போய் ஆலோசனை கேட்கிறான்; தொழிலொன்று தொடங்க விரும்புமொருவன் அத்துறையில் அனுபவப்பட்டவனை நாடிச் சென்று ஆலோசனை கேட்கிறான்; பள்ளி மாணவர் தங்கள் ஆசிரியரை அண்டி அடிக்கடி ஆலோசனை கேட்கின்றனர். நோயாளி வைத்தியனிடம் ஆலோசனை கேட்கிறான்; நாமும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க, அனுபவ முதிர்ச்சி யடைந்தோர்களிடம் சென்று, ஆலோசனை கேட்டிருக் கிறோம்; கேட்டும் வருகிறோம்.

ஆலோசனை கேட்டல், படிப்பு வாசனையற்றோ ருக்கு மாத்திரம் தகும் என்று நினைப்பது தவறு. இவ்வுல கில் மானிடராய்ப் பிறந்த அனைவருக்கும் ஆலோசனை தேவை; ஏனெனில் மனிதன் தன் சுய புத்தியை மட்டும் நம்பிக் காரியங்களைச் செய்தால், அவன் தவறக் கூடும்.

ஒருவன் எவ்வளவு சிறந்த ஞானியாகவும், அறிவாளியாகவும் இருந்த போதிலும், அவனும் இன்னும் கற்றறிய வேண்டிய விஷயங்கள் கோடிக்கணக்காய் உள்ளன. இக்கருத்தைத்தான் நம் முன்னோர்: “கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு” என்னும் வார்த்தைகளால் குறித்துள்ளனர். இவ்வார்த்தைகளில் எவ்வளவு உண்மை அடங்கியுள்ளது! எனவே கற்றறிந்தோரும், அனுபவசாலிகளும், மற்றவர்களின் ஆலோசனையின் அவசியத்தை உணர்கின்றனர். முற்காலங்களில் அரசுபுரிந்த அரசர்களும், ஆலோசனையின் அவசியத்தை நன்குணர்ந்து, மந்திரிகளை நியமித்து, அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, அவைகளின் பிரகாரம் நடந்து வந்தனர். தற்காலத்திலும் தேசங்களை ஆள்பவர் களுக்கு ஆலோசனை கூற அநேக சபைகள் உண்டென்பது யாவரும் அறிந்ததே.

இவ்வுலகத்துக்கடுத்த காரியங்களில் நமக்கு பிறரின் ஆலோசனையும், அறிவுரையும் இவ்வளவு அவசியமானால், நமது ஆன்ம ஈடேற்றுக்கடுத்த விஷயங்களில், ஆலோசனை நமக்கு எத்துணை அவசியமென்பது சொல்லாமலே விளங்கும்.

நமது ஜீவியத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கும், தீராத பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு காண, நமக்கு ஆலோசனை தேவை; இவ்வித ஆலோசனைகளை நமக்களிப்பதில், கடவுளுக்குப் பிறகு மரியன்னைக்கு நிகரானவர் ஒருவருமில்லை. இக்காரணம் பற்றியே திருச்சபை அவர்களை “நல்ல ஆலோசனை மாதா” என்று அழைக்கிறது. ஞானத்துக்கு இருப்பிடம் அவர்கள்; ஞான ஒளியான இஸ்பிரீத்துசாந்து தேவனின் பிரிய பத்தினி அவர்கள். ஆகவே அவர்களது ஆன்மா தேவ ஞானத்தாலும், ஞான ஒளியாலும் சம்பூரணமாய் நிரம்பி இருந்தது.

இத்தகைய அன்னையின் ஆலோசனை கோரி, அவர்களிடம் சென்று அரும்பயனடைந்தவர்களுக்குக் கணக்கில்லை. தங்களது ஜீவியத்தின் அந்தஸ்தைத் தெரிந்துகொள்ள, அன்னையின் ஆலோசனையை நாடி, அதனால் தங்கள் பிற்கால வாழ்க்கை நலத்திற்கு அடிகோலியவர்கள் ஒரு சிலரோ? தங்கள் வாழ்க்கைத் துணைவனை அல்லது துணைவியைத் தெரிந்தெடுப்பதில் அன்னையின் ஆலோசனையை அடிக்கடி மன்றாடி அதனால் அளப்பரிய நன்மைகள் அடைந்த மணமக்களைத்தான் எண்ணித் தொலையுமோ? சந்தேகங்களினாலும், அச்சத்தாலும் பீடிக்கப்பட்டு, செய்வது இன்னதென்று அறியாது, அங்க லாய்த்து துயருறும் எத்தனை ஆத்துமங்கள் அன்னையின் ஆலோசனையை நாடியதால் மன அமரிக்கையும் ஞான ஒளியும் பெற்று உள்ளரங்க இன்பம் சுகித்திருக்கிறார்கள். வாழ்க்கைப் பாதையிலே சறுக்கி விழுந்து அவநம்பிக்கை யென்னும் அதல பாதாளத்தில் விழவிருந்த போது அன்னையின் ஆலோசனையால் அப்பெரும் ஆபத்துக்குத் தப்பித்துக் கொண்டவர்கள் எத்தனை பேர்!

இவர்களை நாமும் கண்டு பாவிப்போமாக. நமது சகல ஞான தேவைகளிலும் அன்னையின் ஆலோசனை யைக் கோரி அவர்களை அண்டிச் செல்லுவோமாக. விசேஷமாக, நம்மைத் தாக்கும் சோதனைகளிலும், நமது உள்ளத்தின் மன அமைதியைக் குலைக்கும் சந்தேகங் களிலும், வீண் அச்சங்களிலும் அன்னையை நம்பிக்கை யுடன் நாடிச் செல்லுவோமாக. இவ்வுலகம் ஓர் கண்ணீர்க் கணவாய்--துன்பங்கள், இடையூறுகள், ஏமாற்றம், அபகீர்த்தி, தோல்வி முதலியன ஏற்படுவது சகஜம். ஆனால் இவைகளின் மத்தியில் மனமுடைந்து சோர்ந்து போகாது, நமது நல்லாலோசனை மாதாவை அண்டிப் போய் அவர்களது உதவியை இரந்து மன்றாட வேண்டும்.

“ஓ மரியாயே! நல்ல ஆலோசனை மாதாவே! இஸ்பிரீத்து சாந்துவின் பிரிய பத்தினியே! எங்கள் ஞான ஜீவியம் என்றும் உமது ஆலோசனையால் நடத்தப் படுவதாக! எங்கள் சகல தேவைகளிலும் நீரே எங்களுக்கு ஆலோசனை கூறி வழிநடத்தும். பாவ இருளில் நாங்கள் நடக்கும்போது உம்முடைய நல்ல ஆலோசனை எங்களைப் புண்ணிய ஒளிக்கு இட்டுச் செல்லுவதாக. எங்கள் சந்தேகங்களிலும், துன்ப துயரங்களிலும் நாங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை எங்களுக்குக் கற்பித் தருளும். இன்றும், என்றும், எங்கள் மரண நேரத்திலும் உமது நல்ல ஆலோசனையை எங்களுக்கு அளித்தருளும். அவைகளை ஏற்று அவற்றின் பிரகாரம் நடக்கவும் அருள் பெற்றுத் தாரும்.” 


நல்ல ஆலோசனை மாதாவே!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!