இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திவ்ய நற்கருணைக்கு முன்பாக ஜெபம்

தியானம் எங்கு செய்யப்பட்டாலும், அது கடவுளை மகிழ்விக்கிறது. சேசுநாதர் குறிப்பாக மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்திற்கு முன்பாகச் செய்யப்படும் தியானத்தில் இன்பம் காண்கிறார். ஏனெனில் அங்கே அவர் தம்மைச் சந்தஅப்பவர்கள் மீது ஒளியையும், வரப்பிரசாதத்தையும் மிக அபரிமிதமாகப் பொழிகிறார் என்று தோன்றுகிறது. திவ்ய நன்மையில் தம்மை உட்கொள்ளும் ஆன்மாக்களுக்கு உணவாக இருக்கும்படியாக மட்டுமல்ல, மாறாக, எல்லாக் காலங்களிலும் தம்மைத் தேடும் ஒவ்வொருவராலும் சந்திக்கப்படும்படியாகவும் அவர் இந்தத் தேவத்திரவிய அனுமானத்தில் தங்கியிருக்கிறார். பக்தியுள்ள திருப்பயணிகள் சேசுநாதர் இவ்வுலகில் இருந்தபோது வாழ்ந்த லொரேட்டோ புனித இல்லத்திற்கும், அவர் சிலுவையின் மீது மரித்த ஜெருசலேமுக்கும் செல்கிறார்கள்; ஆனால் ஒரு தேவ நற்கருணைப் பேழையில் நமக்கு முன்பாக நாம் அவரைக் காணும்போது நம் பக்தி இன்னும் எவ்வளவு பெரிதாயிருக்க வேண்டும்! முன்பு நம் மத்தியில் வாழ்ந்தவரும், கல்வாரியின் மீது மரித்தவருமான அதே ஆண்டவர் இப்போது தம் ஆள்தன்மையில் தேவ நற்கருணைப் பேழையில் தங்கியிருக்கிறார்!

அரசர்களோடு எல்லோரும் சாதாரணமாகப் பேசுவது இவ்வுலகில் அனுமதிக்கப்படாத ஒன்று; ஆனால் பரலோக அரசராகிய சேசுகிறீஸ்துவுடனோ, மேற்குடியினரும், பாமரரும், செல்வந்தரும், ஏழைகளும் தங்கள் மனம் போல் இந்தத் தேவத் திரவிய அனுமானத்தில் அவரோடு உரையாடலாம், தாங்கள் விரும்பும் வரைக்கும் அவருக்கு முன்பாக இருந்து தங்கள் தேவைகளை அவருக்குத் தெரிவிக்கலாம், அவருடைய வரப்பிரசாதங்களைத் தேடலாம்; அங்கே சேசுநாதர் அனைவரையும் சந்திக்கிறார், அனைவர் சொல்வதையும் கேட்கிறார், அனைவரையும் தேற்றுகிறார்.

இவ்வுலகப் பொக்கிஷங்களைத் தவிர வேறு பொக்கிஷம் எதையும் அறியாத உலக மனிதர்கள் தேவ வசீகரம் செய்யப்பட்ட ஓர் அப்பம் இருக்கும் ஒரு பீடத்திற்கு முன்பாக நீண்ட நேரம் செலவழிப்பதில் என்ன இன்பத்தை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் கடவுளை நேசிக்கும் ஆன்மாக்களுக்கோ, திவ்ய சற்பிரசாதத்திற்கு முன்பாகக் கடந்து போகும் மணித் தியாலங்களும், நாட்களும், அங்கே ஆண்டவர் அவர்களுக்கு சுவைத்து அனுபவிக்கத் தரும் பரலோக இனிமையின் காரணமாக, சில கணங்களைப் போலத் தோன்றுகிறது.

ஆனால் உலகத்தன்மையான மனிதர்கள் தங்கள் இருதயங்களை இவ்வுலகத்தால் நிரப்பி வைத்திருக்கிறார்கள் என்றால், இந்த இனிமையை அவர்கள் எப்படி சுவைக்க முடியும்? தேவசிநேகம் நம் இருதயங்களில் ஆட்சி புரியும்படியாக, நாம் முதலில் உலகத்தை அவற்றிலிருந்து துரத்தியடிக்க வேண்டும்; இல்லாவிடில், தேவசிநேகம் ஒருபோதும் அவர்களுக்குள் நுழையாது, ஏனெனில் அது ஓய்வெடுக்க எந்த இடத்தையும் கண்டடையாது என்று அர்ச். பிரான்சிஸ் போர்ஜியா கூறுகிறார். ""நீங்கள் அசையாமல் அமர்ந்திருந்து, நாமே கடவுளாயிருக்கிறோமென்று பாருங்கள்'' (சங்.45:9). கடவுளின் அனுபவத்தைப் பெறுவதற்கும், அவரை நேசிப்பவர்களுக்கு அவர் எவ்வளவு இனியவராக இருக்கிறார் என்பதை எண்பிப்பதற்கும், நம் இருதயங்கள் வெறுமையாக இருக்க வேண்டும். அதாவது நம் இருதயங்கள் உலக நாட்டங்களிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். நீ கடவுளைக் கண்டடைய விரும்புகிறாயா? ""சிருஷ்டிகளிடம் உனக்குள்ள பற்றை விட்டு விலகு, அப்போது நீ அவரைக் கண்டடைவாய்'' என்று அர்ச். தெரேசம்மாள் கூறுகிறாள்.

தேவ நற்கருணையின் பிரசன்னத்தில் இருக்கும்போது ஓர் ஆத்துமம் என்ன செய்ய வேண்டும்? அது நேசிக்கவும், ஜெபிக்கவும் வேண்டும். இனிமையையும் ஆறுதலையும் உணர்வதற்காக அது அங்கே வரக்கூடாது, மாறாக, தேவசிநேக ஜெபங்களைச் சொல்வதாலும், தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தன்னையே முழுமையாகக் கடவுளுக்குக் கொடுப்பதாலும், தனது சொந்த சித்தத்தைத் தன்னிடமிருந்து உரிந்து அகற்றுவதாலும், ""ஓ என் தேவனே, நான் உம்மை நேசிக்கிறேன், உம்மையன்றி வேறு எதையும் நான் ஆசிக்கவில்லை. நான் எப்போதும் உம்மை நேசிக்க எனக்கு வரமருளும். அதன்பின் உமது பிரியப்படி என்னையும், எனக்குச் சொந்தமான அனைத்தையும் ஆண்டு நடத்தும்'' என்று சொல்லித் தன்னையே ஒப்புக்கொடுப்பதாலும் கடவுளை மகிழ்விப்பதற்காக மட்டுமே அது வர வேண்டும். அன்பின் செயல்கள் அனைத்திலும் இதுவே கடவுளுக்கு அதிகப் பிரியமானது. மோட்சவாசிகள் இதைத்தான், அதாவது கடவுளின் அளவற்ற மகிழ்ச்சியில் அக்களிப்பதைத்தான் தொடர்ந்து செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் மோட்சத்திலுள்ள பாக்கியம் பெற்ற ஆன்மா தன்னைத் தானே நேசிப்பதை வட அதிகமாகக் கடவுளை முடிவற்ற விதமாக நேசிக்கிறது, ஆகவே அது தனது சொந்த மகிழ்ச்சியை விடத் தன் அன்பரின் மகிழ்ச்சியையே அதிகமாக ஆசிக்கிறது. கடவுள் அளவற்ற மகிழ்ச்சியை அனுபவிக்கிறார் என்று காண்கிற ஆசீர்திக்கப்பட்ட ஆன்மா, அதிலிருந்து ஓர் அளவற்ற இன்பத்தைப் பெற்றுக்கொள்கிறது. ஒரு சிருஷ்டியாக, அளவற்ற இன்பத்தை அனுபவிப்பதற்கு அது திறனற்றதாக இருப்பதால், அது திருப்தியோடு இளைப்பாறுகிறது, இவ்வாறு கடவுளின் மகிழ்ச்சி அதன் மகிழ்ச்சியாகவும், அதன் மோட்சமாகவும் ஆகிறது. இந்த நேசச் செயல்கள் எந்த விதமான உணரக்கூடிய இனிமையும் இன்றி நம்மால் செய்யப்பட்டாலும், அவை கடவுளை மகிழ்விக்கின்றன. ஆயினும், கடவுள் தாம் யாரை நேசிக்கிறாரோ அந்த ஆன்மாக்களுக்கு இவ்வாழ்வில், அவரது ஆறுதல்களை நிரந்தரமாக அனுபவிக்கும் வரத்தைத் தருவதில்லை, மாறாக இடைவெளிகளில் மட்டுமே அவை அவற்றை அனுபவிக்கச் செய்கிறார். அவர் அந்த ஆன்மாக்கள் இவ்வுலக வாழ்வின் துன்பங்களையும், பிரச்சினைகளையும், குறிப்பாக தியானத்தில் பக்தியுள்ள ஆன்மாக்கள் அனுபவிக்கிற பராக்குகள் மற்றும் ஞான வறட்சி ஆகியவற்றையும் பொறுமையோடு தாங்கத் தேவையான பலத்தை அதிகமாகத் தருவது போல, நற்செயல்களுக்குப் பெரிய சம்பாவனையை வழங்குவதில்லை. (முழுமையான சம்பாவனையை அவர் மோட்சத்தில் அவர்களுக்கென ஒதுக்கி வைத்திருக்கிறார்.) 

பராக்குகளைப் பொறுத்த வரை, அவற்றைப் பற்றி நாம் அதிகமாகக் கவலைப்பட வேண்டியதில்லை. அவை வரும்போது அவற்றை விரட்டுவது போதுமானது. மேலும், புனிதர்களும் கூட தங்களையும் மீறிய பராக்குகளால் துன்பப்பட்டிருக்கிறார்கள். என்றாலும் இதன் காரணமாக அவர்கள் தியானத்தை விட்டு விடவில்லை. நாமும் இப்படித்தான் செயல்பட வேண்டும்: தியானத்தில் பராக்குகளை விரட்டுவதை, அல்லது அவற்றை விரட்டத் தேடுவதைத் தவிர நாம் வேறொன்றும் செய்யவில்லை என்றாலும், நம் தியானம் பெரும் நன்மை பயப்பதாகவே இருக்கும். ஞான வறட்சியைப் பொறுத்த வரை, தியானம் செய்யும் ஆன்மாக்களின் மிகப் பெரிய வேதனை, சில சமயங்களில் தாங்கள் பக்தியுணர்வு இல்லாதவர்களாகவும், அதைப் பற்றி சோர்வுற்றவர்களாகவும், கடவுளை நேசிப்பதற்கான உணரக்கூடிய ஆசை எதுவுமில்லாதவர்களாகவும் தாங்கள் இருப்பதைக் காண்பதுதான். இத்துடன் தங்கள் பாவங்களால் கடவுளின் கடுஞ்சினத்திற்கு உட்பட்டிருப்பது பற்றிய பயமும் அடிக்கடி சேர்ந்து கொள்கிறது. அவற்றின் காரணமாக ஆண்டவர் தங்களைக் கைவிட்டு விட்டார் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்தக் கலக்கம் தரும் இருளில் இருக்கும் அவர்கள் அதிலிருந்து தப்பக் கூடிய எந்த வழியையும் அறியாதிருக்கிறார்கள், ஏனெனில் ஒவ்வொரு வழியும் தங்களுக்கு எதிராக மூடப்பட்டு விட்டதாக அவர்களுக்குத் தோன்றுகிறது. அப்படியிருக்க, பக்தியுள்ள ஆத்துமம், பசாசு தனக்குக் கூறும் ஆலோசனையின்படி, தியானத்தை விட்டு விடாதிருப்பதில் தொடர்ந்து தீர்மானமாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு நேரத்தில், சேசுநாதர் சிலுவையின் மீது அனுபவித்த ஆறுதலற்ற நிலையோடு அது தன் ஆறுதலற்ற நிலையை இணைக்க வேண்டும்; ""என் தேவனே, நான் உம்மை நேசிக்க விரும்புகிறேன்; நான் முற்றிலும் உம்முடையவனாக இருக்க விரும்புகிறேன்! என் மீது தயவாயிரும்! ஓ என்னை விட்டு விலகாதிரும்'' என்று சொல்ல அதனால் இயலுமானால், குறைந்தபட்சம் முழு இருதயத்தோடும், சித்தத்தோடும் இப்படிச் சொல்ல அதனால் இயலுமானால், அதுவே அதற்குப் போதுமானதாக இருக்கும். மேலும், ஒரு பரிசுத்த ஆத்துமம் தனது ஆறுதலின்மையின் நேரத்தில் தன் கடவுளிடம் கூறியது போல, ""உம் பார்வையில் நான் ஓர் எதிரியாக இருப்பதாக எனக்கு நானே தோன்றினாலும், நான் உம்மை நேசிக்கிறேன். உமது சித்தப்படி என்னைத் துரத்தி விடும், நானே உம்மை எப்போதும் பின்செல்வேன்'' என்று அது சொல்வதாக.