இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜெபமாலை ஒரு தேவ இரகசிய ரோஜாச் செடி - பக்தியுள்ள ஆன்மாக்களுக்கு

பரிசுத்த ஆவியின் ஒளியில் வாழும் பக்தியுள்ள நல்ல ஆன்மாக்களே, பரலோகத்திலிருந்து நேரே வரும் இந்த தேவ இரகசிய ரோஜாச் செடியை உங்களுக்குக் கொடுக்கிறேன். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். இந்தச் செடியை உங்கள் ஆன்மா என்னும் தோட்டத்தில் நட வேண்டும். உங்கள் தேவ அன்பின் தியானம் என்னும் நறுமண மலர்களுக்கு இந்த ரோஜாச் செடியினால் எவ்வித கேடும் நேரிட முடியாது. ஏனென்றால் இது ஒரு பரலோகச் செடி அதன் வாசனை இனியது.

உங்கள் ஆன்மாவில் மிக்க கவனத்துடன் நீங்கள் ஒழுங்கு செய்திருக்கும் மலர்ப் பாத்திகளுக்கு ஒரு இடையூறும் இதனால் ஏற்படாது. ஏனென்றால் இந்தச் செடி தன்னிலே தூயதும் நல்ல ஒழுங்குடன் பண்பட்டதுமாக இருப்பதால் இது மற்ற யாவற்றையும் ஒழுங்குபடுத்தி தூய்மைப்படுத்தும் தன்மையுடையது. கவனமுடன் நீர் பாய்ச்சி தினமும் தக்க விதமாய் இச்செடி கவனிக்கப்படுமானால், வியத்தகுமளவு உயரமாய் வளரும். இதன் கிளைகள் எவ்வளவு அகன்று விரியுமென்றால், மற்ற எந்த பக்தி முயற்சியையும் தடை செய்யாதிருப்பதோடு அவற்றைப் பாதுகாத்து பூரணமாக்கி விடும்.

நீங்கள் ஞான நோக்குடன் இருப்பதால் நான் என்ன கருத்தில் இதைச் சொல்கிறேன் என்று நீங்கள் கண்டு பிடித்திருப்பீர்கள். இந்த தேவ இரகசிய ரோஜாச் செடி எது? சேசுவும், மரியாயுமே. வாழ்விலும் இறப்பிலும் நித்தியத்திலும் அவர்கள் இந்த ரோஜாச் செடியாக இருக்கின்றார்கள்.

அதன் பச்சை இலைகள். சந்தோஷ தேவ இரகசியங்கள்

அதன் முட்கள்: துக்க தேவ இரகசியங்கள்

அதன் மலர்கள்: மகிமைத் தேவ இரகசியங்கள்

அதன் மொட்டுகள்: சேசு, மரியாயின் பாலப் பருவம்

அதன் விரியும் மொட்டுகள் - சேசு மரியாயின் துன்பப்பாடுகள்.

அதன் விரிந்த மலர்கள் - சேசு மரியாயின் வெற்றியும் மகிமையும்.

ரோஜா மலர் நம்மை மகிழ்விக்கின்றது.

இதிலே சேசு மாமரி இவர்களுடைய வாழ்வின் சந்தோஷ நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். ரோஜாவின் முட்கள் கூர்மையாகவும் குத்துவனவாகவும் உள்ளன. இதிலே சேசு மாமரி வாழ்வின் துயர நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். ரோஜாவின் வாசனை எல்லோரும் விரும்புமளவிற்கு இனிமையாக உள்ளது. இதிலே நாம் சேசு மாமரி வாழ்வின் மகிமையான நிகழ்ச்சிகளைக் காண்கிறோம்.

ஆதலால், தயவு செய்து, இவ்வழகிய பரலோக செடியினைப் பரிகசிக்காதீர்கள். மாறாக, உங்களுடைய கையாலே உங்கள் ஆன்மாவென்னும் தோட்டத்தில் இதை நட்டு வையுங்கள். எவ்வாறு? ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்வோம் என்னும் தீர்மானத்தைச் செய்து கொள்வதால், தினமும் ஜெபமாலை செய்து நற்செயல்களைப் புரிவதால், நீங்கள் இச்செடியைக் கண்காணித்து நீர் பாய்ச்சி, சுற்றிலும் மண்ணைக் கிளறி விட்டு வருவீர்கள். இவற்றின் பயனாக உங்களிடம் நான் இங்கு கொடுத்துள்ள விதை, இப்பொழுது மிகச் சிறியதாய்த் தோன்றினாலும் ஒரு மரமாக வளரும். அதிலே வானத்துப் பறவைகள், அதாவது முன் குறிக்கப்பட்டனவும் அன்புத் தியானத்தில் ஆழ்ந்தனவுமாகிய ஆன்மாக்கள் வந்து தங்கி அதிலே தங்கள் கூடுகளை அமைப்பார்கள்.

அதன் நிழல் அவர்களை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். அதன் உயரமான கிளைகள் தரையிலுள்ள காட்டு மிருகங்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றும். யாவற்றிற்கும் மேலாக, அவர்கள் இம்மரத்தின் கனிகளை உண்பார்கள். அந்தக் கனி வேறு யாருமல்ல, ஆராதனைக்குரியவரான நம் சேசுதான். அவருக்கே மகிமையும் மாட்சியும் என்றென்றும் உரியதாகும். ஆமென். அப்படியே ஆகட்டும்.

- கடவுள் மட்டுமே -