இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மோட்ச மகிமை!

பாவிக்குக் கதி நரகமும், புண்ணியவானுக்குக் கதி மோட்சமும் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நரக வேதனையையும், மோட்ச சுகத்தையும் கண்டு, பாவக் கொடூரத்தை வெறுத்துப் புண்ணிய சம்பாவனையைத் தக்க பிரயாசத்தோடு தேடிக் கொள்ளக் கடவாய். நடுத்தீர்த்த பின்பு, பாவியைப் பசாசுகள் கட்டிக் கொண்டு வாதித்து, நரகத்திலே கொண்டு போகிற போது, புண்ணியவானைத் தேவதூதர் கலியாண ஆடை ஆபரணங்களை அணிவிப்பது போல் அலங்கரித்து, மோட்ச இராச்சியத்துக்குக் கூட்டிக் கொண்டு போவார்கள்.

அப்போது அவனுக்குள்ள சந்தோஷம் எப்படியிருக்குமென்றால், யாருமற்ற ஒரு எளியவளை ஒரு இராஜகுமாரனுக்குக் கலியாணம் செய்து கொடுக்க மணவாளனின் வீட்டிற்குக் கூட்டிப் போகிற போது அவள் எம்மாத்திரம் அக்களிப்பாயிருப்பாளோ அது போலவும், குற்றவாளியாய்த் தள்ளப்பட்டுத் தூரதேசத் திலே போயிருந்தவன் தனது இராச்சியத்துக்கு இராஜா வாகப் பட்டாபிஷேகம் பண்ணப் பெற்று, சகல பரிவாரங் களோடு மகிமையோடு மாடமாளிகைக்குள் நுழைகிற போது எம்மாத்திரம் சந்தோஷம் அடைவானோ, அப்படிப் போலவும், புண்ணியவானுடைய ஆத்துமம் தேவ குமாரனோடு நேசமாயிருந்து, மோட்ச முடி பெறத் சம்மனசுக்கள் கூட்டிக் கொண்டு போகையில், சொல்லிலடங்காத ஆனந்தத்தை அனுபவிக்கும்.

மண்ணோடு மண்ணாய் அழிந்து போன சரீரம் மறுபடி உயிர்த்துத் தன் ஆத்துமத்தோடு கூடுகிறபோது, அதற்குக் கிடைத்த நவமான அலங்கார மகிமைகளைக் கண்டு மோட்சவாசியாகிற அந்தப் புண்ணியவான் சர்வாங்கமும் புளகாங்கிதமாய் அகமலர்ந்த முகமாய்ச் சந்தோஷங் கொண்டாடிச் சொல்லுவான் : ஓஹோ, இந்தச் சரீரம் முன் அழிந்து போகிற குணமுள்ளதினால் வியாதி, நோய், பசி, தாகம், துன்பம், வெயில், குளிர், பனி, மிருகம், பாம்பு, கல்லு முள்ளு முதலான உபாதைகள் உயிரைக் கொல்லுகிற ஆயுதங்களாய் இருந்தனவே. இப்படிப்பட்ட துன்ப அச்சம் ஒன்றுமில்லாமல் எக்காலத்துக்கும் சுக சிரஞ்சீவியாயிருக்கிறோம். முன்னே இந்தச் சரீரம் நிர்வாணமும் குறைபாடு முள்ளதாயிருக்க, அதை மூடுகிறதற்கும், காப்பாற்றுகிறதற்கும் அன்ன வஸ்திரம் தேடிக் கொண்டிருந்தோம். இப்போது உணவு ஒன்றும் தேவையில்லாமல், சூரியகாந்தி வீசுகிற பளிங்கு பாத்திரம் போல சரீரமெல்லாம் பிரகாசிக்க, பொன், நவரத்தின ஆபரணங்களைப் பார்க்க அதிக அலங்காரங் கொண்டிருக்கிறோம்.

முன் எங்கே பார்த்தாலும் தடையாயிருந்த சரீரம் இப்போது ஒரு தடையுமில்லாமல், ஆகாயத்தில் ஏறவும், பாதாளத்தில் இறங்கவும் குறுக்கே தடையாயிருக்கிற கதவு, சுவர்களை ஊடுருவிப் போகவும், வரவும் வல்லமை கொண்டிருக்கிறோம். ஓஹோ, இப்படிப்பட்ட மகிமைகளுக்குச் சமமான மகிமை உண்டோ? இவையெல்லாம் பூலோகத்திலே கொஞ்ச நாள் பாடு பட்டதினா லே கிடைத்த தென்று ஆனந்த சந்தோஷத்துடனே கூறுவான். அடா , நிர்மூடனாகிய பாவீ! அற்ப கஷ்டம் பொறுக்க மாட்டாமல் இத்தனை நன்மையெல்லாம் இழந்து போகிறது எத்தனை புத்தியீனம் என்று பார்.

மோட்ச இராச்சியத்திலே பிரவேசிக்கிறவன் அதிலேயுள்ள அளவில்லாத விஸ்தாரத்தையும், பளிங்கு போல பளபளப்பாய் மின்னுகிற நிலத்தையும், இரத்தினங்களால் இழைத்திருக்கிற மாட மாளிகைகளையும் கண்டு ஓஹோ, இப்படிப்பட்ட இராச்சியமும், நகரமும், மாடமாளிகைகளும் உண்டாயிருக்கச் செய்தும், உலகத்திலே குச்சு வீட்டுக்கும், புல்காட்டு நிலத்திற்கும் எத்தனை சண்டை வழக்குச் செய்கிறார்கள். இதெல்லாம் எத்தனை புத்தியீனம் என்று அதிசயப்படுவான். அந்த நகரில் வாசமாயிருக்கிற மோட்சவாசிகள் ஒவ்வொருவரும் முடிதரித்த இராஜாக்களைப் போல மகிமையும், சூரியனைப் போல் பிரகாசிக்கிற ஆடை ஆபரணங்களுடைய அலங் காரத்தையும் கொண்டிருக்கிறதைக் கண்டு உலகத்திலுள்ள அலங்காரங்களெல்லாம் வீண் அலங்காரம் என்று வெறுப்பான்.

தேவதூதருடைய ஒன்பது விலாச சபைகளின் மகிமையையும், அவர்கள் சர்வேசுரனைப் புகழ்ந்து பாடுகிற இராகங்களுடைய மதுரத்தையும், வீணை வாசிக்கிற இன்பத்தையும், எங்கும் பிரகாசிக்கிற அலங்காரத்தையும் பற்றிப் பிரமித்து, பூலோகத்திலுள்ள ஆடல் பாடலெல்லாம் அவலட்சண கோலமென்று வெறுப்பான். அதற்கு மேலாகப் பரிசுத்த தேவமாதா பரலோக இராக்கினியாக முடி தரித்து, தயை விளங்குகிற மகிமையையும், சகல லோகமும் ஆண்டு இரட்சிக்கிற மகிமைப்பிரதாபத்தையும் கண்டு ஆனந்த வெள்ளத்திலே அமிழ்ந்தினவனாய்ச் முழுவதும் பூரித்து, பூலோகத்திலே பிரகாசிக்கிற வெளிச்சங்களெல்லாம் இருட்டுப் போலவும், செல்வங்கள் எல்லாம் சேறு போலவும், அழகுகளெல்லாம் அழுக்கு போலவும் சகலமும் வெறுத்து அருவருத்து, தனக்குக் கிடைத்த பாக்கியத்தை நினைத்து மகிழ்ச்சி கொண்டு அணைகடந்த ஆனந்த சந்தோஷத்தோடிருப்பான்.

பாவியான மனிதா! இப்படிப்பட்ட செல்வ பாக்கியம் நிறைந்த மோட்சத்தை அனுபவிக்க எப்போது போவேன், எப்போது போவேனென்று ஆசைப்படாமல் பூலோகத்திலே நீடித்திருக்க ஆசைப்படுகிறாய். இதைப் போல புத்தியீனமுண்டோ ? தான் பிறந்த சொந்த தேசத்திலே வாழப் போகாமல், பிற தேசத்திலே இருந்து குடியிருக்க ஆசைப்படுவார் உண்டோ ? சிரசிலே முடி தரிக்கக் கூப்பிடுகிற இடத்திற்குப் போகாமல், சுமை வைக்கிற இடத்திற்கு ஓடுவாருமுண்டோ ? தெளிந்த ஊற்றிலே குளியாமல், சேற்றிலே புரளுவாருண்டோ ? ஏன் இந்தப் புத்தியீனம்? கொஞ்சப் பிரயாசத்துக்குப் பயப்பட்டு இந்தப் பாக்கியத்தை இழக்கலாமோ? உலகம் நிறைய ஆயிரம் உடமை கொடுத்தாலும், மோட்ச இராச்சியத்தை அடைகிறதற்குப் போதுமான விலையல்ல. உலக வாதைகள் எல்லாம் ஏகமாய் அனுபவித்தாலும், மோட்ச சுகம் பெறப் போதாதே. அப்படியிருக்கச் சர்வேசுரன் உனக்கு வேறே கஷ்டமில்லாமல் பொன் பண மென்கிற பத்துக் கற்பனைக்கும் வெள்ளிப் பணமென்கிற பதினாலு தர்மங்களுக்கும் அந்த இராச்சியத்தைக் கொடுக்கச் சித்தமாயிருக்கச் செய்தும் அதை நீ கைக்கொள்ளாமல் இருக்கிறது பைத்திய நினைவல்லவோ? ஒரு நிலை வரம் இல்லாத இந்த உலகத்திலே எப்போதும் இருக்கவும், இங்கேயே சம்பாதித்து வைக்கவும் நினைக்கிறது அதிலும் புத்தியீனம் அல்லவோ?

ஒரு இராச்சியத்தில் வருஷத்துக் கொரு இராஜாவைப் முடிசூட்டி வைத்து, வருஷம் ஆனவுடனே அவன் தேடினதெல்லாம் பறித்துக் கொண்டு, குடிக்கக் கஞ்சி முதலாய் இல்லாமல் மறு தேசத்திற்குத் துரத்தி விடுவார்கள். இதற்கு உட்பட்டு மோசம் போகிறவன் புத்திசாலி யோ? புத்திசாலி என்ன செய்ய வேண்டுமென்றால், தான் இராச்சியபாரம் செய்கிற ஒரு வருஷத்திலே பணம், உடைமை, உற்பத்தி வெகுவாய்ச் சம்பாதித்து நாளுக்கு நாள் பிரதேசத்துக்கு அனுப்பி எல்லாம் பத்திரம் செய்து வைத்துக் கொண்டு தான் இராச்சியபாரம் செய்கிற இடத்திலே ஒரு காசும் வையாமல் எச்சரிக்கையோடிருப்பான். அவர்கள் குறித்த தவணையிலே இவனைப் பட்டம் மாற்றி, மறு தேசத்துக்குத் துரத்தி விடுகையில் இவன் அங்கே போய், தான் ஏற்கெனவே அவ்விடத்தில் பத்திரம் செய்து வைத்த திரவியங்களைக் கொண்டு பெரிய மாடமாளிகை கட்டிக் கொண்டு ஒரு குறையுமில்லாமல் சுகமாய் வாழ்ந்திருப்பான் அல்லோ?

அப்படியே ஒருவன் உலகத்திலே வாழ்ந்து, ஆயுள் முடித்தவுடனே மரணமென்கிற நடுவன் வந்து அவன் தேடினதில் அவனுக்கு ஒன்றும் கொடாமல் பிற தேசத்துக்குத் துரத்தி விடுகிறதைக் காண்கிறோம்.
இதை அநேக விசை கண்டிருந்தும், அந்தப் புத்தியீனன் பறிகொடுத்தாற் போல் எண்ணிறந்த பாவிகள் தேடின பொருளைப் பறிகொடுத்து மோசம் போகிறார்கள். இவ்வுலகத்திலே நம்பிக்கை வையாமல், பிச்சை, தான தர்மம் என்கிற புண்ணியங்களை எல்லாம் பரலோகத்திலே சேர்த்து வைத்துக் கொண்டிருந்தால். அதுதான் அந்த விவேகி பிற தேசத்தில் சேர்த்த ஆஸ்தி அவனுக்கு உதவினாற் போல், மரணத்திற்குப் பிறகு உதவியாயிருக்கும். பாவியே, இப்படிப்பட்ட நியாயங்களைக் கண்டும், இன்னும் புத்திமானாயிருக்க மாட்டாயோ? இம்மாத்திரம் அறிவு உனக்குச் சொன்னதும், இம்மாத்திரம் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு உன்னை எழுப்பிவிட்டதும் போதாதோ? இப்படிப்பட்ட கூக்குரலுக்குக் கண் விழிக்காவிட்டால் நீ செத்த பிணமேயன்றி உயிரோடிருக்கிறவன் அல்ல.

பாவ அந்தகாரத்தில் தூங்கியது போதும் என்று மயக்கத்தை விட்டு உடனே எழுந்திருந்து உன் பாவத்துக்காக துயரப்பட்டுப் பிரார்த்தித்துக் கொள்.