நித்திய ஞானமானவர் மோட்சத்தில் தொடர்ந்து சாந்தமுள்ளவராக இருக்கிறார்!

127. இப்போது வெற்றியாளராகவும், மகிமையுள்ளவராகவும் இருக்கும் சேசுநாதரின் அன்பும், தயவும் கொஞ்சமாவது குறைந் திருக்கிறது என்று நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பதற்கு மாறாக, அவருடைய மகிமை ஒரு வகையில் அவருடைய கருணையை அதிக உத்தமமானதாக ஆக்குகிறது என்று சொல்லலாம். கம்பீரமுள்ளவராகத் தோன்றுவதை விட மன்னிப்பவராகத் தோன்றவும், தமது மகிமையின் பொன்னைக் காட்டுவதை விட, தமது இரக்கத்தின் செல்வ வளங்களைக் காட்டவும் அவர் விரும்புகிறார். 

128. அவருடைய காட்சிகளின் விவரங்களை வாசித்துப் பாருங்கள், அப்போது அவதரித்தவரும், மகிமைப்படுத்தப்பட்ட வருமான ஞானமானவர் தம் நண்பர்களுக்குத் தம்மைக் காண்பிக்கும்போது, இடி மின்னலோடு அல்ல, மாறாக கருணை யோடும், சாந்தத்தோடுமே தோன்றுகிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள். ஓர் அரசர் அல்லது சேனைகளின் ஆண்டவரது மகத்துவத் தோற்றத்தை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, ஒரு மணவாளரின் கனிவோடும், ஒரு நண்பனின் கருணை யோடும் தான் அவர் தோன்றுகிறார். சில சந்தர்ப்பங்களில் திவ்விய நற்கருணையில் அவர் தம்மைக் காண்பித்திருக்கிறார். ஆனால், ஒரு மென்மையான, அழகுள்ள குழந்தையின் வடிவமாக அன்றி, வேறு விதமாக அவர் தோன்றினார் என்று வாசித்ததாக எனக்கு நினைவில்லை. 

129. சிறிது காலத்திற்கு முன், பரிதாபத்திற்குரிய ஒரு மனிதன் தன் பணத்தையெல்லாம் சூதாட்டத்தில் இழந்து விட்டு கோபவெறி கொண்டவனாகத் தன் வாளைப் பரலோகத்திற்கு எதிராக உருவிக் கொண்டு, தன் பண இழப்பிற்கு நம் ஆண்டவரே காரணம் என்று குற்றஞ்சாட்டினான். அப்போது, இடிமுழக்கங்களும், நெருப்பு மயமான அம்புகளும் அந்த மனிதனின் மீது சீறி வருவதற்குப் பதிலாக, ஒரு சிறு துண்டுக் காகிதம் வானத்திலிருந்து காற்றில் ஆடியசைந்தபடி இறங்குவதை அவன் கண்டான். திகைப்புற்றவ னாக, அந்தக் காகிதத்தைப் பிடித்து, அதைத் திறந்து, 'என் கடவுளே, என் மீது இரக்கமாயிரும்!" என்ற வார்த்தைகளை அதில் வாசித்தான். வாள் அவனுடைய கரங்களிலிருந்து கீழே விழுந்தது. தன் இருதயத்தின் ஆழம் வரை கடும் மனஸ்தாபத்தால் உலுக்கப் பட்ட அவன், முழந்தாளில் விழுந்து, இரக்கத்தைக் கேட்டுக் கதறியபடி மன்றாடத் தொடங்கினான். 

130. அரேயோப்பாகுவின் அர்ச். டெனிஸ் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார். கார்ப்பாஸ் என்னும் பெயருள்ள ஒரு மேற்றிராணி யார், மிகுந்த சிரமங்களுக்குப் பின் ஓர் அஞ்ஞானியை மனந் திருப்பினார். சிறிது காலத்திற்குப் பின், அவனுடைய சக அஞ்ஞானி ஒருவன் புதிதாக மனந்திரும்பியவன் மீண்டும் தன் விசுவாசத்தைக் கைவிட்டு விடும்படி அவனை ஓயாமல் நச்சரித்து வருவதாகக் கேள்விப்பட்ட அவர், இரவெல்லாம் கண்விழித்து. கடவுளின் உன்னத அதிகாரத்தைத் தாக்கிக் கொண்டிருந்த அந்தக் குற்றவாளியைப் பழிவாங்கும்படியாகவும், அவனைத் தண்டிக் கும்படியாகவும் கடவுளிடம் உருக்கமாக மன்றாடிக் கொண்டிருந் தார். திடீரென, அவருடைய பக்திப்பற்றுதலும், மன்றாட்டுக்களும் அவற்றின் உச்சநிலையை அடைந்தபோது, பூமி திறப்பதை யும், நரகத்தின் விளிம்பில், அந்தக் குற்றவாளியாகிய அஞ்ஞானி நிற்பதையும், பசாசுக்கள் அந்தப் பாதாளத்திற்குள் அவனை இழுத்துச் சென்றுவிட முயன்று கொண்டிருப்பதையும் அவர் கண்டார். அதன்பின் அவர் கண்களை ஏறெடுத்த போது, வானங்கள் திறப்பதையும், சேசுக்கிறீஸ்துநாதர் பெருந்திரளான சம்மனசுக்கள் புடைசூழ தம்மிடம் வருவதையும் அவர் கண்டார். ஆண்டவர் அவரிடம், ''கார்ப்பாஸ், நான் பழிவாங்கும்படி நீ என்னிடம் கேட்டாய். ஆனால் உனக்கு என்னைப் பற்றித் தெரிய வில்லை. நீ என்ன கேட்கிறாய் என்பதோ, பாவிகள் எனக்குத் தரும் கொடிய துன்பம் என்ன என்பதோ உனக்குப் புரியவில்லை. அவர்களுக்கு நான் தண்டனைத் தீர்ப்பிட வேண்டும் என்று நீ ஏன் விரும்புகிறாய் ? நான் எந்த அளவுக்கு அவர்களை நேசிக்கிறேன் என்றால், தேவையானால் அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் மீண்டும் சிலுவையில் மரிக்க நான் தயாராயிருப்பேன்" என்று அறிவித்தார். அதன்பின் நம் ஆண்டவர் கார்ப்பாஸ் மேற்றிராணி யாரை நெருங்கி, தம் திருத்தோள்களை அவருக்குத் திறந்து காட்டி, ''கார்ப்பாஸ், பழிவாங்க நீ விரும்பினால், இந்தப் பரிதாபத்திற்குரிய பாவிகளுக்குப் பதிலாக என்னை அடி!" என்றார். 

131. நித்திய ஞானமானவரைப் பற்றிய இந்த அறிவைப் பெற்றிருக்கிற நாம், நம்மைத் தம் உயிரையும் விட அதிகமாக நேசித்துள்ளவரும், இன்னும் நேசிப்பவரும், மோட்சத்திலும், பூமியிலும் உள்ள அனைத்திலும் அதிக அழகும், கவர்ச்சியுமுள்ள அனைத்தையும் விஞ்சும் அழகும், சாந்தமும் உள்ளவருமான அவரை இனியும் நேசிக்காமல் இருப்போமா?

முத். ஹென்றி சூசோவின் வரலாற்றில் நாம் வாசிப்பதாவது: ஒரு நாள் அவர் மிகுந்த ஏக்கத்தோடு ஆசித்துத் தேடிய நித்திய ஞானமானவர் அவருக்குத் தோன்றினார். அது நிகழ்ந்த விதமாவது: நம் ஆண்டவர் மனித வடிவமாகத் தோன்றினார். ஒரு மிகப் பிரகாசமான, ஊடுருவிக் காணக்கூடிய மேகத்தால் அவர் சூழப்பட்டிருந்தார். தந்தத்தாலான ஒரு சிங்காசனத்தில் அவர் வீற்றிருந்தார். நண்பகலில் நாம் காணும் சூரியக் கதிர்களைப் போன்ற ஒரு பேரொளி அவரது கண்களிலிருந்தும், முகத்திலிருந் தும் சுடர் வீசிக்கொண்டிருந்தது. அவர் அணிந்திருந்த கிரீடம் நித்தியத்தைக் குறித்தது அவருடைய ஆடை ஆசீர்வதிக்கப்பட்ட நிலையையும், அவருடைய வார்த்தை சாந்தத்தையும், அவருடைய அரவணைப்பு, மோட்சத்திலுள்ள பாக்கியவான்கள் அனைவரும் சொந்தமாகக் கொண்டிருக்கும் பேரின்பத்தின் முழுமையையும் குறித்தது. தேவ ஞானமானவரின் இந்தக் காட்சியை ஹென்றி கண்டு தியானித்தார். அவரை அனைத்திலும் அதிகமாக ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது என்னவெனில், ஒரு கணம் சேசுநாதர் ஒப்பற்ற பேரழகுள்ள ஓர் இளம் பணியாளைப் போலத் தோன்றியதும், அடுத்த கணம், அவர் ஓர் இளைஞனைப் போலத் தோன்றியதும்தான். அவருடைய முகத்தை வைத்துப் பார்க்கும் போது, கடவுளின் சிருஷ்டிப்பில் அழகாயிருக்கும் அனைத்தினுடையவும் மணவாளராக அவர் தோன்றினார். சில சமயங்களில், அவருடைய திருச்சிரசு வானங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டிருப்பதையும், அதே வேளையில் அவர் பூமியின் பெரும் பாதாளங்களின் மீது நடந்து கொண்டிருப்பதாகவும் ஹென்றி கண்டார். சில சமயங்களில் பூரண மகத்துவமுள்ளவ ராகவும், மற்ற சமயங்களில் தம்மிடம் வந்தவர்களிடம் தயவும், கனிவும், சாந்தமும், மென்மையும் நிரம்பியவராகவும் அவர் தோன்றினார். அதன்பின் அவர் ஹென்றியிடம் திரும்பி ஒரு புன்னகையோடு, "என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா" (பழ 23: 26) என்று கேட்டார். உடனே ஹென்றி அவர் பாதங் களில் சாஷ்டாங்கமாக விழுந்து, தம் இருதயத்தை எக்காலத் திற்குமாக அவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்.

இந்தப் பரிசுத்த மனிதரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி நாமும் எக்காலத்திற்குமாக நம் இருதயத்தை அவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுப்போமாக. அவர் நம்மிடம் கேட்பதெல்லாம் அது மட்டுமே!