40. (5) இப்பக்தி முயற்சியினால் நம் வரப்பிரசாதங்களையம் பேறு பலன்களையும் நம் புண்ணியங்களையும் பத்திரமான பாதுகாப்பில் வைக்கிறோம். ஏனென்றால் அவற்றையெல்லாம் நாம் சேகரித்து வைக்கும் இடமாக மரியாயைக் கொள்கிறோம்.
"என் அன்புள்ள தலைவியே! உங்கள் அன்புள்ள குமாரனின் வரப்பிரசாதத்தால் நான் செய்துள்ள நற்செயல்களைப் பாருங்கள். என்னுடைய பலவீனத்தாலும், நிலையற்ற தன்மையாலும் பல துஷ்ட எதிரிகள் இரவும் பகலும் என்னைத் தாக்குதல் செய்வதனாலும் அவைகளை என்னால் வைத்துக் காப்பாற்ற முடியவில்லை.
அந்தோ! லிபானின் சேதுரு மரங்கள் சகதியில் தாழந்து விழுவதை ஒவ்வொரு நாளும் காண முடிகிறது; சூரியன் வரையிலும் தங்களை உயர்த்திக் கொண்ட கழுகுகள் இரவின் பறவைகளாகியுள்ளன.
இதே போல் ஆயிரம் நீதிமான்கள் என் இடப்புறத்திலும், பத்தாயிரம் என் வலப்புறத்திலும் விழுகிறார்கள்.
வல்லமையுள்ள என் இராக்கினியே, நான் கீழே விழுந்து விடாதபடி என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள். என் உடமைகளெல்லாம் களவாடப்பட்டு விடாதபடி அவற்றை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் உள்ள சகலத்தையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்-- பொக்கி ஷத்தைக் காத்துக் கொள்ளும் " (2 திமோ. 1:14). நான் யாரை விசுவசித்திருக்கிறேனென்று எனக்குத் தெரியும் (2 திமோ. 1:12). நீங்கள் யாரென நான் நன்கறிவேன்.
ஆகவே என்னை முழுவதும் உங்களிடம் ஒப்படைக்கிறேன். கடவுளுக்கும் மனிதருக்கும் நீங்கள் பிரமாணிக்கத்துடன் இருக்கின்றீர்கள். நான் உங்களிடம் ஒப்படைக்கிறதில் எதுவும் சேதமாகும்படி நீங்கள் விடமாட்டீர்கள். நீங்கள் வல்லமையுடையவர்கள்; உங்களை எதுவுமே தாக்க முடியாது. நீங்கள் உங்கள் கையில் பிடித்திருக்கிற எதையும் அபகரிக்கவும் இயலாது.
"மரியாயைப் பின் சென்றால் பாதை தவற மாட்டாய். மரியாயிடம் மன்றாடினால் அவநம்பிக்கைப்பட மாட்டாய். மரியாயை நினைத்தால் தப்பறையில் விழ மாட்டாய். அவர்கள் உன்னைப் பிடித்திருக்கையில் நீ விழ மாட்டாய். அவர்கள் உன்னைப் பாதுகாக்கையில் நீ பயப்பட மாட்டாய். அவர்கள் வழிநடத்துகையில் நீ களைப்படைய மாட்டாய். அவர்கள் உனக்கு சகாயம் செய்யும்போது நீ பத்திரமாக வந்து சேருவாய்” என்கிறார் அர்ச். பெர்னார்ட் (Inter Flores. Cap. 135 de M.V.).
மீண்டும் அவர் கூறுகிறார்: "தன் திருக்குமாரன் நம்மை அடிக்காதபடி தடுக்கிறார்கள். சாத்தான் நமக்குத் தீங்கு செய்யாதபடி தடுக்கிறார்கள். புண்ணியங்கள் நம்மை விட்டு நீங்காதபடி தடுக்கிறார்கள். நம் பேறுபலன்கள் அழியாதபடி தடுக்கிறார்கள். வரப்பிரசாதங்களை இழந்து போகப்படாதபடி தடுக்கிறார்கள்.'' இவை அர்ச். பெர்னார்டின் வார்த்தைகள்.
நான் கூறியுள்ளதையெல்லாம் அவை கருப்பொருளாய்க் காட்டுகின்றன. இந்தப் பக்தி முயற்சியின் மீது எனக்கு விருப்பத்தை ஏற்படுத்த இந்த ஒரே ஒரு காரணம் இருந்தாலும் கூட போதும் -- அதாவது, என்னை தேவ வரப்பிரசாதத்தில் வைத்திருப்பதற்கும், அதை என்னில் அதிகரிக்கச் செய்வதற்கும் இப்பக்தி ஒரு நிச்சயமான வழி என்ற ஒரு காரணமே போதும். அதை விரும்பித் தேடும் ஆவலினால் என் இருதயம் பற்றி எரிவதற்கு.