வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு - மாதா குளம் - இடையர் குலச் சிறுவன்

கண்ணிலே கருணை பொங்கக்
காலிலே நிலவு தங்கப் 
பெண்மணி ஒருத்தி வந்து, 
பெருஞ்சுடர்க் காட்சி ஆனாள்!

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வேளாங்கண்ணி அண்ணாப் பிள்ளை வீதியில் ஒரு குளமும், அதன் கரையில் ஒரு பெரிய ஆலமரமும் இருந்தன. வெப்பப் பகுதியாகிய இந்நாட்டில் வழிப்போக்கர் சற்றுத் தங்கி இளைப்பாறுவதற்கு மிகவும் பயன்படுபவை அவை. வழிப்போக்கர்கள் நீர் பருகவோ, நீராடவோ; குளிர்ந்த நிழலில் அமர்ந்து இளைப்பாறவோ இக்குளத்தின் அருகில் தங்கிச் செல்வர். சிறுவன் ஒருவன் இக்குளத்தின் வழியாக நாகையில் இருக்கும் தன் பண்ணையார்க்கு நாள்தோறும் பால் கொண்டுபோவது வழக்கம். அச்சிறுவன் ஒருநாள் வழக்கம்போல பால் கொண்டு சென்றான். அன்று கதிரவனுடைய வெப்பம் கடுமையாக இருந்தது. சிறுவனோ இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிக்கப் பால் செம்பைச் சுமந்து போனான். களைப்பு மேலிட்டது. தாகத்தைத் தணித்த பின் மரத்தடியில் அமர்ந்து, தன் களைப்புத் தீரச் சற்று இளைப்பாறினான். அயர்வின் மிகுதியும், சிலுசிலுவென வீசிய காற்றும் அவனைக் கண்ணயரச் செய்துவிட்டன.

அப்போது.........................!

வானத்து நிலவு வையகத்திற்கு வந்தது போல சுடர் சூழ்ந்திருக்க சுந்தர மங்கை ஒருத்தி தன் கரங்களிலே ஞாயிறு போல ஒளி வீசும் குழந்தையொன்றைத் தாங்கிப் பால்காரச் சிறுவன் முன் தோன்றினாள். சிறுவன் திடுக்கிட்டு எழுந்தான். தன் முன் நிற்கின்ற அந்த அழகுப் பெண்மணியையும், அவள் கையிலிருந்த குழந்தையின் களங்கமற்ற திருமுகத்தையும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். பேசவோ நாவெழவில்லை . அச்சமும் திகிலும், ஆச்சரியமும், அன்பும் அச்சிறுவன் உள்ளத்தில் ஒருங்கே தோன்றின. ஏதுமறியாமல் கரங்களைப் பணிவோடு குவித்து வணங்கினான்.

எழுந்தனன், வியந்து விம்மி
இமைக்கவும் மறந்து நின்றான்; 
குழந்தையின் ஒளியும், தாயின்
கோமள அழகும் பார்த்தான். 

இன்பமும் பயமும் தன்னுள்
எய்தினான், மாறி மாறித் 
துன்பமும் துணிவும், கொண்டான்
திகைத்தனன், தொழுது தாழ்ந்தான்.

அத்தேவ மாது தேனினும் இனிய மொழியிலே, "என் குழந்தைக்குப் பருகிடக் கொஞ்சம் பால் தருகிறாயா?' என்று கேட்டாள். பால் கேட்ட அவ்வன்னையின் ஈர்ப்பிலே அவன் தன்னை மறந்தான். பதில் சொல்லத் தெரியாத பால்காரச் சிறுவன், பால் செம்பை எடுத்து அவ்வன்னையிடம் நீட்டினான். பவள வாய்ப் பாலகன், பால் அருந்திச் சிரிக்கக் கண்டான். வாயிலே முறுவலும், பாலும் தோய வான் மகன் பருகிய எழிலைக் கண்டான்.

மீதியை வாங்கினான், தலையில் ஏந்தினான்,
மெழுகென உருகினான், நிலைத்து நின்றனன்! 
மா தவப் பெண்மணி மகிழ்ந்து வாழ்த்தினாள்; 
மறுகணம் மெல்லவே மறைந்து நீங்கினாள்!

நாகப்பட்டினம் செல்ல நேரமாகிவிட்டபடியால், பால்காரச் சிறுவன் கடிது நடந்து நாகை அடைந்தான். வழியில் கண்ட காட்சியால் அவனது மனம் மகிழ்ச்சி நிறைந்து நின்றது. அது கனவா நனவா என்று அவன் வியந்தாலும், பால் குறைந்திருப்பது, அவனுக்கு மனக் கலக்கத்தை உண்டாக்கியது. பால் குறைந்திருப்பதற்குத் தக்க விடையளிக்க வேண்டுமே, என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று எண்ணிய வண்ணமே எசமானர் வீட்டையடைந்தான். 

பாத்திரத்தை ஒருபுறம் வைத்துவிட்டுக் குற்றவாளியைப் போல ஒதுங்கி நின்று, எசமானரைப் பார்த்த வண்ணம் விழித்துக் கொண்டிருந்தான். எசமானரோ, காலம் கடந்து வந்ததற்குக் காரணமென்னவென வினவி, மூடியைத் திறக்கப் போனார். அவர் மூடியைத் திறப்பதற்கு முன் சிறுவன் பாத்திரத்தில் பால் குறைந்திருக்கிற தென்றும், அப்படிக் குறைந்து இருப்பதற்குத் தன்னை மன்னிக்க வேண்டு மென்று மன்றாடினான். எவ்வளவு குறைந்திருக்கிறது என்று பார்க்க எசமானர் திறந்தார். 

என்ன ஆச்சரியம்..... ! திறக்கப்பட்ட செம்பிலிருந்து பால் பொங்கி வழிந்தோடியது. ஆச்சரியமும், அச்சமும் அவனை ஆட்கொள்ள அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் எல்லாரும் ஓடிவர, அதனைக் கண்ட அனைவரும் வியப்படைந்தனர். நடந்த நிகழ்ச்சியைப் பற்றி எசமானர் சிறுவனைக் கேட்டார். சிறுவனோ தான் கண்ட காட்சியையும் வழியில் ஆலமரத்தடியில் ஓர் அன்னை தோன்றியதையும், தான் குழந்தைக்குப் பருகப் பால் கொடுத்ததையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான். 

இப்புதுமையின் வியப்பினால் தூண்டப் பட்டு, அந்த இடத்தைத் தானும் பார்க்கவேண்டுமென்று ஆவல் கொண்டார் பண்ணையார். தன்னை அழைத்துப் போகும்படி அந்தப் பெருமகனார் சிறுவனைக் கேட்க இருவரும் வழிநடந்து குளத்தங்கரை வந்தார்கள். சிறுவன் அன்னையை வேண்டினான்.

அன்னை நீ வருக, அருள் நிதி வருக,
அடியனேன் காண மறுமுறை வருக, 
மின்னுமா மகுடம் சென்னியில் அணிந்த
வித்தகி,” என்று வேண்டினான் இளைஞன்.
பாவையும் வந்தாள்.

பசும்சுடர் படிந்த காட்சியாய் நின்றாள். பையனும் கண்டு மகிழ்ந்தான்; பண்ணையாரும் தரையில் வீழ்ந்து பணிந்து வணங்கினார்.

இவ்வதிசய நிகழ்ச்சியும், புதுமையும் நாலா பக்கங்களிலும் ஒளி போல விரைவில் பரவின. இதையறிந்த கிறிஸ்தவர்கள், தேவதாயும் அவளது திரு மைந்தனுமே காட்சியளிக்கக் கருணை கொண்டார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தார்கள். அக் குளத்திற்கு "மாதா குளம்" என்று பெயர் சூட்டினார்கள். அக்குளம் இப்பெயராலேயே இன்றளவும் அழைக்கப்படுகிறது; பரப்பளவிலே சிறியதாகி விட்டாலும், என்றும் வற்றாத திருக்குளமாய் பிணிகள் பல தீர்க்கும் பேரமுதத் தீர்த்தமாய் விளங்குகின்றது மாதா குளம்.