இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆதிக் கிறீஸ்தவர்களின் சுரங்கக் கல்லறைகள்!

அர்ச். இராயப்பர் ஏறக்குறைய கி.பி. 42-ம் ஆண்டில் உரோமாபுரியில் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடத்தை ஸ்தாபித்தார். அதனாலேயே நாம் “உரோமன் கத்தோலிக்கர்கள்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறோம். அன்று முதல் திருச்சபை உரோமாபுரியில் பரவி வளரத் தொடங்கியது. அந்த வளர்ச்சியைத் தடுக்க சாத்தான் உரோமைப் பேரரசின் சக்கரவர்த்தியான நீரோ என்கிற கொடுங்கோலனை ஏவினான். கிறீஸ்தவர்களுக்கெதிராக முதல் வேத கலாபனையை ஆரம்பித்தான். ஏராளமான கிறீஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். அர்ச். இராயப்பரும் சின்னப்பரும் கி.பி. 67-ல் வேதசாட்சிகளானார்கள். 

அஞ்ஞான மார்க்கத்தாரின் வழக்கம், இறந்தவர்களை எரித்துவிடுவது. ஆனால் ஆதி கிறீஸ்தவர்கள், விசுவாசத்தில் தங்கள் முன்னோடிகளான யூதர்களைப் பின்பற்றி இறந்தவர்களைக் கல்லறைகளில் சேமித்து வந்தார்கள். வேத கலாபனையின் காரணமாக, தினமும் அநேக கிறீஸ்தவர்களுக்குக் கல்லறைகள் தேவைப்படவே, அவர்கள் உரோமை நகருக்குக் கீழே சுரங்கங்களை இரகசியமாகத் தோண்டி கெட்டியான அதன் சுவர்களின் இருபக்கங்களிலும் மண்ணைப் பறித்து அதில் அடக்கப் பெட்டிகளை வைத்து மூடி வந்தார்கள். இப்படி ஏற்பட்ட சுரங்கப் பாதைகள், 300 ஆண்டு வேத கலாபனைகளின் காலமெல்லாம் பல நூறு மைல்கள் ஆகியிருந்தன. குறுக்கும் நெடுக்குமாய் அடுக்கடுக்காய் அவை விரிவடைந்தன. ஒரு கணிப்பின்படி அந்த 300 ஆண்டுகளாக 60 இலட்சம் கிறீஸ்தவர்கள் சுரங்கங்களில் அடக்கம் செய்யப்பட்டார்கள். 10-வது கடைசி வேத கலாபனையை நடத்தியவன் தியோக்ளேஷியன். இவன்தான் அர்ச். பிலோமினம்மாளை வதைத்துக் கொலைப்படுத்தினான்.

கி.பி. 313-ம் ஆண்டில் கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தியால் கிறீஸ்தவர்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டது. அதுமுதல் கிறீஸ்தவ விசுவாசிகள் இறந்தவர்களை சுரங்கங்களுக்குக் கொண்டு போய் அடக்கம் செய்ய வேண்டிய தேவை இல்லாமல் போனது. ஆகவே கிறீஸ்தவர்கள் சுரங்கங்களை விட்டு சுயாதீனமாய் மேலே வந்து தேவாலயங்களைக் கட்டினார்கள். இறந்தவர்களை பூமியிலே அடக்கம் செய்தார்கள். 

இதன் காரணமாக சுரங்கக் கல்லறைகள் கைவிடப்பட்டன. ஆயினும் விசுவாசத்திற்காக உயிரைக் கொடுத்த புனிதர்களின் கல்லறைகளை மக்கள் சென்று சந்தித்து ஜெபித்து வந்தார்கள். அது ஒரு திருயாத்திரை ஸ்தலமாக மாறியது.

இந்நேரத்தில் தான் லோம்பார்டியர்கள் என்ற காட்டு மிராண்டி இனத்தினர் உரோமாபுரியைத் தாக்கினர். இவர்கள் உரோமை சுரங்கக் கல்லறைகளில், நிறைய திரவியங்கள் கிறீஸ்தவர்களின் சரீரங்களுடன் புதைக்கப்பட்டதாக எண்ணி வேதசாட்சிகளின் சரீரங்களை தோண்டியெடுத்து சிதைத்துச் சிதறடித்தார்கள். 

இவ்வித அவசங்கைகளைக் கண்டு வருந்திய பாப்புமார்கள், சுரங்கக் கல்லறைகளில் சயனித்த புனித வேதசாட்சிகளின் திருப்பண்டங்களை விசுவாசிகளின் முன்மாதிரிகைக்காக, தேவாலய பீடங்களில் வைத்து வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்தார்கள். பாஸ்கால் என்கிற பாப்பரசர் ஏறக்குறைய 2000 வேதசாட்சிகளின் சரீரங்களை அர்ச். பிராக் ஸிடிஸின் கோவிலுக்கு இவ்வாறு கொண்டு சேர்த்தார். இதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால் அர்ச். கலிக்ஸ்டஸின் பெயரால் அழைக்கப்படுகிற சுரங்கக் கல்லறையில் மட்டுமே 1,74,000 கிறீஸ்தவர்களின் சரீரங்களும் ஐம்பது மேற்றிராணிமாரின் சரீரங்களும் அடக்கம் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு சுரங்கங்களிலிருந்து வேதசாட்சிகளின் சரீரங்கள் பெரும்பாலும் அகற்றப்பட்டதால் அங்கு யாரும் போவது நின்றுவிடவே அவை மண் தூர்ந்து மூடிப் போயின. கி.பி. 270-ம் வருடம் வேதசாட்சியாகி பிரிஸில்லா சுரங்கத்தில் அடக்கஞ் செய்யப்பட்ட அர்ச். பிலோமினம்மாளும் அவ்வாறே மறக்கப்பட்டாள் - இல்லை, இறைவன் திட்டப்படி மறைத்து வைக்கப்பட்டாள். பல நூறு ஆண்டுகளுக்குப் பின் 1578-ல் தற்செயலாக சுரங்கக் கல்லறைகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. பாப்புமார்கள் மீண்டும் அதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். சுரங்கங்களைப் பக்குவமாக அகழ்ந்து பார்த்து ஆய்வு செய்து, அகப்படும் வேதசாட்சிகளின் அருளிக்கங்களை எடுத்துச் சென்று தகுந்த வணக்கத்துடன் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டன.

இவ்வாறு கல்லறைச் சுரங்கங்களை அகழ்ந்து ஆராய்வதற்கு சில கண்டிப்பான விதிகள் கொடுக்கப்பட்டன. சுரங்கம் இருப்பதாகத் தோன்றும் நிலத்தைத் தோண்டும் போது வித்தியாசமான சத்தம் கேட்டாலோ அல்லது கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிந்தாலோ, உடனே தோண்டும் வேலை நிறுத்தப்படும்.  அகழ்வு ஆய்வுத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிடுவார்கள்.  பின் அவர்களின் முன்னிலையில் எந்த ஒரு சேதமும் ஏற்பட்டுவிடாதபடி வேலை தொடரப்படும். கல்லறைப் பெட்டி  கண்டு பிடிக்கப்பட்டு, அதில் ஒரு வேதசாட்சி அடக்கம் செய்யப்பட்டது உறுதியானால், உடனே எல்லாரும் முழங்காலிட்டு குறிப்பிட்ட ஜெபங்களைச் சொல்வார்கள். அதன்பின் அக்கல்லறையில் பொறிக்கப்பட்ட சின்னங்கள், உள்ளே காணப்படும் பொருட்கள் இப்படி அனைத்தையும் குறித்துக் கொண்டபின் அதை மிகப் பத்திரமாய் வேத சாட்சிகளின் சரீரங்களை வைத்துப் பாதுகாக்கும் இடத்துக்குக் கொண்டு போய், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, முத்திரையிட்டு, அங்கே வைப்பார்கள்.  பாப்பரசரின் உத்தரவு பெற்று அந்த சரீரங்கள் குறிப்பிட்ட ஆலயங்களுக்கோ, மேற்றிராணிமாருக்கோ அனுப்பப்படும் வரையிலும் அவை அங்கேயே இருக்கும்.